பிரிட்டனில் ஆசியர், கருப்பின மக்கள் மீது வெள்ளையினத்தவர் கோபம் ஏன்?

பிரிட்டன், இனவெறி, போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முகமது ஹனிஃப்
    • பதவி, பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்

சுமார் 70-75 ஆண்டுகளுக்கு முன்பு, நமது முன்னோர் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் போராட்டம் நடத்தினர்.

இப்போது, பிரிட்டனில் வெள்ளை இன மக்கள், குழுக்களாகத் தெருவில் இறங்கி, நம்மிடம் இருந்து விடுதலை கோருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

பிரிட்டனில் ஹோட்டல்கள், கடைகள், மற்றும் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

பல பத்தாண்டுகளுக்கு முன்பு, பாதி உலகத்தை ஆண்ட வெள்ளையினத்தவர் இப்போது நம்மைப் போன்றவர்களிடம், ‘நீங்கள் இங்கு வந்து எங்கள் வேலையைப் பறித்துவிட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள்.

‘நீங்கள் சிறிய படகுகளில் இங்கு வந்து, பிறகு எங்கள் அரசாங்கத்தின் செலவில் நான்கு நட்சத்திர ஹோட்டல்களில் உங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்கிறீர்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். ‘எங்கள் பிரிட்டனை எங்களிடமிருந்து பறித்துவிட்டீர்கள்’ என்கிறார்கள்.

இந்தக் குழுக்களை எப்படி அழைப்பது என பிரிட்டிஷ் ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் புரியவில்லை.

பிரிட்டன் பிரதமர் இவர்களை அயோக்கியர்கள் என்று கூறுகிறார். அங்குள்ள ஊடகங்களோ இவர்கள் பிரிட்டனுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் என்று கூறுகின்றன.

ஏழை வெள்ளையினத்தவரின் கோபம்தான் வெளிவருகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிற நாட்டு வெள்ளையினத்தவர் மீது ஏன் கோபம் இல்லை?

பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறிய வெள்ளையினத்தவர் மீது இந்தக் கோபம் ஏன் இல்லை என்பதை யாரும் இன்னும் விளக்கவில்லை.

யுக்ரேனில் போர் நடக்கிறது. மக்கள் அங்கிருந்து தப்பி பிரிட்டனுக்கு வருகிறார்கள்.

அவர்களை அரசாங்கமும் வெள்ளையின குடிமக்களும் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வைத்து வரவேற்கிறார்கள். அதுதான் சரியும் கூட.

ஆனால் சுமார் 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பிரிட்டனும் பங்காற்றியது. அங்கிருந்து ஒருவர் தப்பித்து பிரிட்டன் வந்தால் மட்டும் வெள்ளையர்களின் கலாசாரத்துக்கு ஆபத்து வருகிறது.

இதனை, இனவெறி அல்லது வெள்ளைத் தோல் இல்லாத ஒருவரை மனிதனாகவே கருதாத வெள்ளையினத்தவரின் பழைய நோய் என்று சொல்லலாம்.

பிரிட்டன், இனவெறி, போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நடந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டம்

முழு சுமையும் கருப்பு மற்றும் ஆசிய மக்கள் மீது, ஆனால்…

ஒரு வெள்ளையருக்குப் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற பிறகு, அவர் தன்னை உயர்வாக எண்ணத் தொடங்குவார். ஆனால் இந்தியா, பாகிஸ்தானில் இருந்து அறுவை சிகிச்சை நிபுணராக ஒருவர் பிரிட்டன் வந்தாலும், பல வெள்ளையினத்தவருக்கு அவர் குடியேறியாகவும், சட்டவிரோதமானவராகவும் தெரிகிறார்.

பிரிட்டனில் உள்ள ஒரு ஏழை வெள்ளையினத்தவர், காலையில் வீட்டை விட்டு வெளியேறும் போது, ​படேல் கடையில் முட்டை மற்றும் ரொட்டி வாங்குகிறார் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ரயிலில் ஏறினால் அங்கு நடத்துநர் இந்தியராகவும், ஊபர் டாக்சியில் ஏறினால் ஓட்டுநர் லூதியானாவைச் சேர்ந்தவராகவும் இருப்பார்.

ஒரு தாபா உணவகத்தில் சிக்கன் டிக்கா மசாலா சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டால், குஜராத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரே அவருக்கு சிகிச்சை அளிப்பார். அங்கிருக்கும் செவிலியர் ஜமைக்காவைச் சேர்ந்தவராக இருப்பார். பின்னர், அவர் மருந்து வாங்க மருந்தகத்திற்குச் செல்வார், அங்கேயும் நம் சகோதர சகோதரிகளில் ஒருவர் நின்று கொண்டிருப்பார்.

பிரிட்டன், இனவெறி, போராட்டம்
படக்குறிப்பு, பிரிட்டனில் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராகவும் சிலர் வீதிகளில் இறங்கியுள்ளனர்

ராஜ்ஜியம் பறிக்கப்பட்டதா?

பிரிட்டனின் அரசியல்வாதிகள் தங்கள் திறமையின்மையின் சுமையை கருப்பின மக்கள் மற்றும் ஆசியாவிலிருந்து குடியேறிய மக்களின் மீது சுமத்துகின்றனர்.

பிரிட்டன் ஒரு தொழில்சார் நாடாக இருந்தது. அங்கு தொழிற்சாலைகளும் ஆலைகளும் இயங்கி வந்தன. யாரோ ஒருவர் எதையாவது தயாரித்து, அதை உலகுக்கு விற்று வந்தார்.

இப்போது அது ஐரோப்பாவிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளது. வயல்களில் வேலை செய்யக் கூலி ஆட்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே அங்கு வெளியூர்களில் இருந்து மருத்துவர்களும், செவிலியர்களும் வந்துகொண்டு தான் இருந்தனர்.

இப்போது வெள்ளையினத்தவர், “முன்னர் நாம் உலகின் அரசர்களாக இருந்தோம். ஆனால், இப்போது வெளியில் இருந்து வந்தவர்கள் நமது ராஜ்ஜியத்தைப் பறித்து விட்டனர்,” என்கின்றனர்.

ராஜ்ஜியத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதே உண்மை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், முன்பு பிரிட்டன் அரசர் அல்லது ராணியின் ஆட்சி உலகின் பாதி வரை வியாபித்திருந்தது. இப்போது அரசரின் மகன் ஹென்றி கூட அரசரது கட்டளைகளைக் கேட்பதில்லை.

பிரிட்டன் இந்தியாவைப் பல நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்தது. அவர்கள் ஒரே ‘ஃபார்முலாவைக்’ கொண்டிருந்தனர், அது ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ என்று அழைக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை திருப்பிவிடுவது.

இப்போது அதே ஃபார்முலாவைத் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

இங்கும் ஏழைகளின் உரிமைகளை வெளியில் இருந்து வரும் ஏழைகள் பறிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இருந்தும், பல பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி, ‘மதத்தின் பெயராலும், நிறத்தின் பெயராலும் சண்டையிட வேண்டாம்’ என்றும், ‘பாதி உலகிற்குச் சொன்ன அறிவையும் சட்டத்தையும் சொந்த வீட்டிலும் நடைமுறைப்படுத்துங்கள்’ எனவும் சொல்கின்றனர்.

ஒருவேளை உங்கள் பழைய நோயிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

(இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்துகள். இதில் உள்ள தகவல்களும் கருத்துகளும் பிபிசியின் கருத்துகள் அல்ல. பிபிசி அவற்றிற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)