கொல்கத்தா பாலியல் வன்கொடுமை: மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?- கள நிலவரம்

- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி நிருபர், கொல்கத்தாவில் இருந்து
ஸ்ரீதாமா பானர்ஜி, கொல்கத்தாவின் மிகவும் பிரபலமான ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.
இதற்கு முன்னர் அவர் கல்லூரிக்குச் சென்றால், அவர் பத்திரமாக கல்லூரியை அடைந்துவிட்டாரா என்று அவரது குடும்பத்தினர் போன் மூலம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
"நான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டாலே, பாதுகாப்பான சூழலில்தான் இருப்பேன் என்று குடும்பத்தினர் இதுவரை நம்பிவந்தார்கள். என் பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் என எல்லோரும் இங்கே இருக்கிறார்கள் எனவே மருத்துவமனையை விட பாதுகாப்பான இடம் வேறேது என்ற நிம்மதியில் அவர்கள் இருந்தார்கள்.” என்கிறார் ஸ்ரீதாமா பானர்ஜி.
“ஆனால் இப்போது இங்கு இருப்பது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. என் குடும்பத்தினரும் பயப்படுகிறார்கள்.” என்று கூறுகிறார் அவர்.
ஆகஸ்ட் 9 அன்று ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஸ்ரீதாமா பானர்ஜிக்கு மட்டுமல்ல, அங்கு படிக்கும் அல்லது பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பிற பெண் மருத்துவ ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியே ஒரு பெண்மணி என்பதும், மருத்துவம் மற்றும் உள்துறை அவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியது மட்டுமின்றி, மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB- என்சிஆர்பி) அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 2022ஆம் ஆண்டில் 1111 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 34,738 வழக்குகள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
என்சிஆர்பி தரவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 71.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 65.4 சதவீதத்தை விட அதிகமாகும்.
வீதியில் இறங்கிய மருத்துவர்கள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி, கொல்கத்தா நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இருந்து வந்துள்ளார்.
இச்சம்பவம் நடந்த அன்று இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், களைப்பின் காரணமாக மருத்துவமனையின் கான்பரன்ஸ் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த ஒரு தன்னார்வலர். இவரது பணி, ஏறக்குறைய ஊர்க் காவல்படையினரைப் போல பாதுகாப்பு பணிதான்.
மருத்துவமனைக்கு வெளியே உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில்தான் இவர் பணிபுரிந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல், அந்த பகுதியின் உதவி காவல்துறை ஆணையரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கடந்து, மேற்கு வங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோபம் இப்போது மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த சம்பவத்தை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
மறுபுறம், திங்கள்கிழமை அன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார்.
மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?

இந்த விவகாரத்தில் மருத்துவ மாணவர்களின் கோபம் குறைவதாக தெரியவில்லை. இந்த வழக்கில் இதுவரையிலான காவல்துறையின் அணுகுமுறை மற்றும் விசாரணை குறித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எல்லாம் 'அவசரமாக' நடக்கிறது என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆர்.ஜி கர் மருத்துவமனையின் ‘மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர்’ மருத்துவர் ஹசன் முஷ்டாக் கூறுகையில், “பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல் மூத்த மருத்துவர்கள் வரை மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்றார்.
பிரேத பரிசோதனை அறிக்கையை தருவதில் காவல்துறை மிகுந்த தயக்கம் காட்டுவது, விசாரணையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மருத்துவமனை மாணவர் அமைப்பு கூறுகிறது.
பிபிசியிடம் மருத்துவர் ஹசன் முஷ்டாக் பேசுகையில், "மாணவியின் உடலில் பலத்த தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் இருப்பதும், அவர் கொடூரமாக கொல்லப்பட்ட விதத்திலிருந்து இது ஒரு நபரின் செயல் அல்ல என்றும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துவிட்டு, எங்கள் வேலையை முடித்துவிட்டோம் என்று சொல்வது எங்களின் கோபத்தை அதிகரிக்கிறது." என்கிறார்.
மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

இங்குள்ள மருத்துவமனை வளாகம், கிட்டத்தட்ட காவல்துறை முகாம் போல மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொல்கத்தா (வடக்கு) துணை காவல்துறை ஆணையர் அபிஷேக் குப்தா கூறுகிறார்.
இந்த குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அது குறித்து கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.
இங்கு மருத்துவம் பயிலும் மாணவரான அனுபம் ராய், இந்தச் சம்பவத்தை கண்டித்து, மேடையிலிருந்து மைக் மூலமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.
மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவரும் மேடையின் கீழ் அமர்ந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ஆகியோர் தங்களிடம் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மறுபுறம், நிர்வாகத்தின் மீது மாணவர்கள் மத்தியில் உள்ள கோபத்தை கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஷ்தாவையும், அந்தப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்கியுள்ளது. இருவருமே இந்த விவகாரத்தின் தீவிரத்தை குறைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த மருத்துவக் கல்லூரியில் நர்சிங், எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி படிக்கும் நிலையில், விடுதியில் வசிக்காதவர்கள் ஏராளமாக உள்ளனர். பல பெண்கள் செவிலியர்களாகவும் பணிபுரிகின்றனர்.
இந்த சம்பவம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கவலையடைய செய்துள்ளது. ஏனெனில் இந்த சம்பவத்திற்குப் பிறகு, வடக்கு பர்தமான் பகுதியில் பணியில் இருந்த காவல்துறை தன்னார்வலர் ஒருவர், மாவட்ட மருத்துவமனையின் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்தி வெளியானது.
ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நர்சிங் அதிகாரியாக உள்ள சுஷ்மிதா மஜும்தார், “கொல்கத்தாவின் மருத்துவமனைகள் அல்லது வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் என எங்கும் பார்த்தாலும் இதே நிலைதான். காவல்துறையினர் இருக்கிறார்கள், ஆனால் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதை நாங்களே சமாளிக்க வேண்டும். இப்போது தன்னார்வலர்களும் காவல்துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். ஒரு தன்னார்வலரே மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு கொலைக் குற்றத்தை வெளிப்படையாகச் செய்கிறார் என்றால், இங்கே யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார்.

வேறு மாநிலத்திலிருந்து வந்த காரணத்தால், கல்லூரி விடுதியில் தங்கி, பணிபுரியும் பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம் பேசினார்.
"கொல்கத்தா வருவதற்கு முன்பு, மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்பதால், அங்கு செல்லுங்கள் என்று எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு, அந்த எண்ணமே மாறிவிட்டது." என்று அவர் கூறுகிறார்.
மருத்துவர் பிப்லவ் சந்திரா 1998ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்தார். நீண்ட காலமாக மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவச் சேவைகளை கவனித்து வருகிறார்.
‘இதுவரை எங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பு மோசமாக உள்ளது’ என்பதை ஒரு மூத்த மருத்துவர் என்ற முறையில் தெரிவிக்கிறார் பிப்லவ் சந்திரா.
“இந்த மருத்துவமனையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி எங்கே, குற்றம் தொடர்பான காட்சிகள் எங்கே? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையின் நிலையே இப்படி என்றால், சிறிய அரசு மருத்துவமனைகளின் நிலையை என்னவென்று சொல்வது.” என்று கேள்வியெழுப்புகிறார் பிப்லவ் சந்திரா.
மருத்துவமனை நிர்வாகம் இதிலிருந்து எளிதில் தப்பிக்க முடியாது என்றும், பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இது அவர்களின் அப்பட்டமான தோல்வி என்றும் கூறினார் அவர்.
‘ஆளும் கட்சி நபர்களின் கட்டுப்பாட்டில் மருத்துவமனைகள்’

ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் கொதிப்படைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
ராஜ்யசபா எம்பியும், மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான ஷமிக் பட்டாச்சார்யா, ‘அரசு மருத்துவமனைகளின் கட்டுப்பாடு அரசின் கையை விட்டுப் போய்விட்டதாகவும், தற்போது அவை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுவதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய பட்டாச்சார்யா, "அனைத்து அரசு மருத்துவமனைகளும் வெளி நபர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசு அமைத்துள்ள ‘ஜன் கல்யாண் சமிதி’ எனும் குழுதான் இந்த மருத்துவமனைகளை நடத்துகின்றன." என்று கூறினார்.
“இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலானவர்கள் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தங்கள் விருப்பப்படி அரசு மருத்துவமனைகளை நடத்துகிறார்கள். இதனால், மருத்துவமனைகளின் நிலை மோசமாகி, இங்கு பணிபுரியும் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.” என்று பட்டாச்சார்யா கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கூறுவது என்ன?

கொல்கத்தா மருத்துவமனை சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் தௌசிப் அகமது கான் கூறுகையில், “சம்பவம் குறித்த செய்தி கிடைத்தவுடன், காவல்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்தது, அதனால் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மம்தா பானர்ஜி மரண தண்டனைக்கு ஆதரவானவர் இல்லை. ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புக் குழுவின் அதிகாரிகளுக்கு முழு உண்மையைக் கண்டறிய ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்." என்று கூறினார்.
இது தவிர, கொல்கத்தா காவல்துறை ஆணையர் மற்றும் நகரின் அனைத்து உயர் அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கொல்கத்தா காவல்துறை ஆணையர் மருத்துவமனையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார் தௌசிப் அகமது கான்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை வரை கூட, காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் ‘காவல்துறை விசாரணையில் எந்த அலட்சியமும் இருக்காது’ என்று உறுதியளித்ததைக் காண முடிந்தது.
ஆனால் கொல்லப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையைக் கொடுப்பதில் கொல்கத்தா காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆனால், காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.
"பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்களில் காணப்படும் காயங்கள் குறித்து தடய அறிவியல் நிபுணர்களின் கருத்தையும் கேட்டுள்ளோம். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் நாங்கள் விசாரிப்போம்." என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் கொல்கத்தாவில் இருந்து சிறிது தொலைவில் வசிக்கிறார்கள். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், பேச முடியாத நிலையில் குடும்பத்தினர் உள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்ணுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து பிரேத பரிசோதனை அறிக்கையை அளித்துள்ளார். இது தவிர, முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசியுள்ளார். ஆனால், மருத்துவ மாணவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












