கொல்கத்தா விவகாரம்: மருத்துவர்கள் போராட்டத்தின் போது வன்முறை, மருத்துவமனை சேதம்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை & கொலை வழக்கு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆர்.ஜே. கர் மருத்துவமனையில் உள்ளே புகுந்த கலவரக்காரர்கள் அங்குள்ள பொதுமக்கள் உடைமையை அடித்து நொறுக்கினார்கள்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர்கள் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 14 நள்ளிரவில் அங்கே உள்ளே புகுந்த கலவரக்காரர்கள் வன்முறையில் இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்தின் போது, அடையாளம் தெரியாத கும்பல் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து போராட்ட மையத்தை அடித்து நொறுக்கினார்கள். வாகனங்கள் மற்றும் பொது மக்களின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இடமும் இந்த தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் கூறியுள்ளனர்.

ஆனால், இதை மறுக்கும் கொல்கத்தா காவல்துறை, குற்றம் நடந்த செமினார் அறை பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது. போலி செய்திகளை பரப்புவார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினித் குமார் பேசிய போது, ஊடகங்களில் செய்யப்பட்ட தவறான பிரசாரத்தின் காரணமாகவே இத்தகைய கலவரம் நடைபெற்றது என்று கூறினார். நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, இந்த மருத்துவமனையில் நடைபெற்ற வன்முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாக கூறினார்.

இந்த வன்முறையை நடத்தியவர்களை 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார் அபிஷேக்.

அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி வன்முறையில் ஈடுபட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வன்முறை குறித்து காவல்துறை கூறுவது என்ன?

இந்த வன்முறைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார், "இங்கு என்ன நடந்ததோ அதற்கு ஊடகத்தின் பொய்யான பிரசாரமே காரணம். இது மிகவும் தவறான பிரசாரம். இந்த விவகாரத்தில் காவல்துறை என்னதான் செய்யவில்லை. கொல்கத்தா காவல்துறையால் என்ன முடியுமோ அனைத்தும் செய்தோம். நாங்கள் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் வதந்திகள் பரவத் துவங்கிவிட்டன. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்," என்று கூறினார்.

"நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் இந்த பொய்யான ஊடக பிரசாரத்தால் கொல்கத்தா காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்த வழக்கில் ஒரே ஒரு குற்றவாளி தான் உள்ளார் என்று காவல்துறை கூறவே இல்லை. நாங்கள் அறிவியல் ஆதாரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது கிடைக்க நேரம் ஆகும்," என்றும் தெரிவித்தார் அவர்.

வெறும் வதந்திகளின் அடிப்படையில் ஒரு மருத்துவ மேற்படிப்பு மாணவரை எங்களால் கைது செய்ய முடியாது. அதற்கு என்னுடைய மனம் இடம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார் வினீத் குமார்.

இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்கள் அதிகம் அழுத்தம் தருகின்றன என்றும் கூறினார் அவர்.

நாங்கள் செய்தது அனைத்துமே சரிதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. பாராபட்சம் பார்க்காமல் அந்த விசாரணை நடத்தப்படும். நாங்கள் சி.பி.ஐ.க்கு முழுமையான ஆதரவை வழங்குவோம், என்று கூறினார் வினீத்.

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை & கொலை வழக்கு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது

நள்ளிரவு போராட்டத்தின் போது நடந்தது என்ன?

பிபிசி நிருபர் சல்மான் ரவி போராட்டம் நடந்த இடத்தில் இருந்த மக்கள் கூறியதை களத்தில் இருந்து வழங்கினார்.

அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் இறங்கியதும் நிலைமை மோசமானது என்று தெரிவித்தார் அவர்.

சில ஊடகவியலாளர்களும் இந்த தாக்குதலின் போது குறிவைக்கப்பட்டனர். ஒளிப்பதிவாளர்கள் தாக்கப்பட்டனர். நிறுத்திவைக்கப்பட்ட கார்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. சில மணி நேரம் அங்கிருந்து ஊடகவியலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர்.

போராட்டம் நடந்த இடத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், பல வாகனங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்கள் மோசமான நிலையில் இருப்பதை காண முடிந்தது.

வன்முறைக்குப் பிறகு, அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

"இந்த விவகாரத்திற்கு எதிராக சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இரவு 11 மணிக்கு அனைத்து பெண்கள்-ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. அனைவரும் அமைதியாக அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். திடீரென வெளியில் ஏராளமானோர் திரண்டுவிட்டனர்," என்றார் மருத்துவர் ஒருவர்.

"காவல்துறையினரால் அந்த கூட்டத்தை தடுக்க முடியவில்லை. மொத்த கூட்டமும் உள்ளே நுழைந்தது. நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடினோம். அவர்கள் எதிரில் வரும் அனைவரையும் அவர்கள் தாக்கினார்கள். மருத்துவர்களும் அதில் மோசமாக காயமடைந்தனர். அனைவரும் வெவ்வேறு இடங்களில் ஒளிந்து கொண்டோம். பெண் மருத்துவர்களையும் அவர்கள் தாக்கினார்கள்," என்றார் அவர்.

''போராட்டம் நடந்த இடத்தில் இருந்த மேடை, நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் என அனைத்தையும் கலவரக்காரர்கள் உடைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், பல்வேறு வார்டுகளுக்குள், பெண்கள் தங்கும் விடுதிகளுக்குள் அவர்கள் நுழைந்ததாக கேள்விப்பட்டோம். அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அங்கு எதுவும் மிச்சமில்லை. ஆனால் எங்களின் போராட்டம் முடிவுக்கு வராது. இது தொடரும்'' என்று தெரிவித்தார் மருத்துவர் ஒருவர்.

தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள்

வன்முறைக்கு பிறகு தீவிரமடையும் மேற்கு வங்க அரசியல்

இந்த வன்முறைக்கு பிறகு பேசிய அபிஷேக் பானர்ஜி, காட்டுமிராண்டித்தனம் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது என்று கூறினார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் கொல்கத்தா காவல் ஆணையரிடம் பேசினேன். அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்த வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் அந்த கட்சியோடு தொடர்பில் இருந்தாலும் சரி, நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினேன். போராட்டம் நடத்திய மருத்துவர்களின் வேண்டுகோள்கள் நியாயமானது. ஒரு அரசிடம் அவர்கள் எதிர்பார்க்க வேண்டிய மிகவும் அடிப்படையான தேவைகள் அவை. அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

கல்கத்தா மருத்துவ மாணவி பாலியில் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி

இந்த சூழலில், எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, மமதா பானர்ஜி தன்னுடைய கூலிப்படைகளை ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார். இந்த உலகில் அவர் மிகவும் புத்திசாலியான நபர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கே கூலிப்படையை அவர் எப்படி அனுப்பி வைத்தார் என்பது மக்களுக்கு தெரியப்போவதில்லை," என்று குறிப்பிட்டார்.

''கலவரக்காரர்கள் வந்து முக்கியமான ஆதாரங்களை அவர்கள் அழித்துச் செல்லும் வகையில் உள்ளே நுழைய அனுமதி வழங்கியுள்ளனர் காவல்துறையினர். தற்போது சி.பி.ஐ.யால் எந்த விதமான ஆதாரங்களையும் பெற முடியாது'' என்றும் குற்றம் சுமத்தினார் சுவேந்து அதிகாரி.

''போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குள் நுழைந்த கலவரக்காரர்கள் அந்த மேடையை சேதப்படுத்தினர். அது திரிணாமுல் காங்கிரஸின் கூலிப்படையினரால் மட்டுமே முடியும். போராட்டத்திற்கு ஆதரவு தர வருபவர்கள் ஏன் மேடையை உடைக்கப் போகிறார்கள்'' என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

மாநிலம் முழுவதும் அமைதியாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இங்கே மட்டும் வன்முறை நடந்தது எப்படி என்றும் அவர் வினவினார். இந்த விவகாரத்தில் மாநில முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் இந்த வன்முறை குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)