சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், நாசாவின் விண்வெளி வீராங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் தனது பயணத்தை ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப தயாராகி வருகிறார். எட்டு நாள் பயணமாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்ற அவர் எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கே மாதக்கணக்கில் தங்க நேரிட்டது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார்.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.
நாசா ஏற்கனவே அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தங்களது பயணத்தை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தொடங்கினார்கள்.
இதற்கிடையே அவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளியில் நிலையத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம், NASA
விண்வெளி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது, பூஜ்ஜிய ஈர்ப்பு விசை (Zero gravity) சூழலில் மிதப்பதுதான். ஆனால் அத்தகைய சூழலில் பல நாட்களுக்கு வாழ்வது எளிதல்ல.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள், பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழலில் எவ்வாறு உறங்குவார்கள், உணவு உண்பார்கள், கழிவறையை பயன்படுத்துவார்கள்? விண்வெளியில் அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் 1998இல் கட்டமைக்கப்பட்டது. 109 மீட்டர் நீளத்தில் (356 அடி) ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியதான இந்த நிலையம், இன்னும் ஏழு ஆண்டுகளில் (2031 இல்) தனது பணியை நிறுத்திக்கொள்ள இருப்பதாக கடந்தாண்டு நாசா அறிவித்திருந்தது.
அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் (Roscosmos), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA- Europe), ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் (JAXA) மற்றும் கனடிய விண்வெளி நிலையம் (CSA- Canada) ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிர்மாணம் தொடங்கப்பட்டது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்போது 26வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விரைவில் அதன் இடத்தில் மற்றொரு மையம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, 23 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 280 நபர்கள் மற்றும் ஐந்து சர்வதேச பங்குதாரர்கள் வருகை தந்துள்ளனர் என்றும் இயற்பியல், உயிரியல், வானிலை, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றும் நாசாவின் இணையதளம் கூறுகிறது.

பட மூலாதாரம், NASA
விண்வெளி வீரர்கள் சந்திக்கும் பிரச்னைகள்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உட்பட, 1959 முதல் இதுவரை 360 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது நாசா.
“விண்வெளிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. காரணம் இந்த பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழல் என்பது மனித உடலில் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
“விண்வெளி வீரர்களுக்கு பூஜ்ஜிய ஈர்ப்புவிசை நிலையில் அதிக நாட்கள் இருக்கும்போது அவர்களது தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும். அதுமட்டுமல்லாது உடல் எடை குறைவது, பார்வைத்திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் பல நாட்களுக்கு விண்வெளியில் தங்குபவர்களுக்கு ஏற்படும்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
நாசா இணையதளத்தின் படி, விண்வெளியில் தங்கியுள்ள வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர்.
- குறுகிய காலம் (Short)- 3.5 மாதங்களுக்கும் குறைவான நாட்கள் தங்குபவர்கள்.
- ஸ்டாண்டர்ட் (Standard)- 3.5 முதல் 8 மாதங்கள் வரை தங்குபவர்கள்.
- நீண்ட காலம் (Extended)- 8 மாதங்களுக்கும் மேல் விண்வெளி நிலையத்தில் தங்குபவர்கள்.
விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர், ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.
(அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% வரை மட்டுமே எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.)
இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது.

பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.
அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ செப்டம்பர் 21, 2022, ஆறு மாத பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவரால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இறுதியாக, 371 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகுதான் அவரால் பூமிக்கு திரும்ப முடிந்தது. நீண்ட காலம் விண்வெளியில் தங்கியதால் அவரின் உடலில் ஏற்பட்ட விளைவால், கேப்ஸ்யூலில் இருந்து அவர் மீட்புக்குழுவினரால் தூக்கிக் கொண்டு வரப்பட்டார்.
“சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே அவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதற்காக அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சோதனைகள் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என்று சிவன் பிபிசி தமிழிடம் கூறினார்.
விண்வெளி வீரர்களுக்கான உணவு

பட மூலாதாரம், NASA
ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் இணையதளத்தின் படி, சர்வதேச விண்வெளி நிலைய வீரர்களுக்கு 300 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
அவை விண்வெளி வீரர்களுக்குச் சிறிய பாக்கெட்டுகளில் வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் சிறப்பு உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.
தயாரிக்கப்பட்ட உணவுகள் உறைய வைக்கப்பட்டு, அதிலிருக்கும் நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இவ்வாறு நீர் வெளியேற்றப்படுவதற்கு காரணம், அதை எளிதாக சேமித்து வைக்கலாம் என்பதால். விண்வெளி வீரர்கள் உணவுகளை மீண்டும் தண்ணீரில் சூடாக்கி அல்லது குளிர்வித்து சாப்பிடுவார்கள்.
தேநீர், காபி, ஆரஞ்சு சாறு மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் இந்த முறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நட்ஸ், பிஸ்கெட்டுகள், பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழங்கள்) போன்ற அப்படியே உண்ணக்கூடிய உணவுகளும் வீரர்களுக்கு அளிக்கப்படும்.

பட மூலாதாரம், NASA
சில சமயங்களில் அவர்கள் வீட்டிலிருந்து உணவையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். (ஆனால் இது மிகக்கவனமாக தயாரிக்கப்படுகிறது). சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்வதற்கு முன் அளித்த பேட்டியில், “நிச்சயம் இந்திய உணவுகளை எடுத்துச் செல்வேன், குறிப்பாக சமோசா” என்று கூறியிருந்தார்.
“விண்வெளி வீரர்களுக்கு உணவு என்பது வெறும் ஊட்டச்சத்துக்காக மட்டுமல்ல, குடும்பத்தையும் நண்பர்களையும் மாதக்கணக்கில் பிரிந்திருப்பவர்களுக்கு குழுவுடன் நல்ல உணவுகளை உண்ணும்போது மனநிலையும் மேம்படும்” என்கிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்.
விண்வெளி நிலையத்தின் கழிவறைகள் மற்றும் குளியலறைகள்

பட மூலாதாரம், JAXA/NASA
ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் இணையதளத்தின் படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியில் உள்ளதைப் போன்ற கழிப்பறை இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை இருப்பதால், அதில் அமரும்முன் அந்த இருக்கையில் இருக்கும் பெல்ட்டுகளை மாட்டிக்கொள்ள வேண்டும்.
கழிவுகளைக் கையாள நீருக்கு பதில் காற்று பயன்படுகிறது. அதாவது ஒரு வேக்யூம் கிளீனர் (Vaccum cleaner) செயல்படுவது போல. கழிவுகள் மிதக்கக்கூடாது என்பதற்காக அவை உடனடியாக உறிஞ்சப்படும். இந்தக் கழிவுகள் பின்னர் மொத்தமாக அப்புறப்படுத்தப்படும்.
இந்தக் கழிவுகள் கவனமாக சேகரிக்கப்பட்டு, விண்கலங்களில் ஏற்றப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது அவை விடுவிக்கப்படும். வளிமண்டல வெப்பம் அவற்றை முழுமையாக எரித்துவிடும்.

பட மூலாதாரம், NASA
இதேபோன்ற முறையில் சிறுநீரும் உறிஞ்சப்படும். ஆனால் அவை அப்புறப்படுத்தப்படுவதில்லை. கழிவு நீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர் பூமியில் கிடைக்கும் குடிநீரை விட சுத்தமானது என நாசா கூறுகிறது.
இங்கிருக்கும் கழிப்பறைக்கு கதவுகள் கிடையாது, ஒரு திரைச்சீலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டும் மின்விசிறிகள், கழிப்பறை மோட்டார் மற்றும் விண்வெளி நிலையத்தின் பல இயந்திரங்களின் செயல்பாடுகள் காரணமாக, கழிப்பறையில் எழும் ஒலிகள் வெளியே கேட்பது தவிர்க்கப்படுகிறது.
குளிப்பது என்பது இங்கே சாத்தியமில்லை, திரவ சோப் கொண்ட ஈரமான துண்டைப் பயன்படுத்தி உடலைத் துடைக்க முடியும். தலைமுடியைக் கழுவ, தண்ணீர் இல்லாமல் வேலை செய்யும் ஷாம்பூவைப் பயன்படுத்திவிட்டு, உலர்ந்த துண்டு கொண்டு துடைக்கலாம். கைகள், முகத்தை சுத்தப்படுத்த திரவ சோப் கொண்ட டிஷ்யூக்கள் அல்லது ஈரமான துண்டு மூலம் துடைக்க வேண்டும்.
விண்வெளி வீரர்கள் தூங்குவது எப்படி?

பட மூலாதாரம், JAXA/NASA
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையால், தூங்கும் வீரர்கள் அங்குமிங்கும் மிதந்து சென்று, காயமடையக்கூடிய அபாயம் உள்ளதால், விண்வெளி வீரர்கள் தங்கள் உடலை, விண்வெளியில் தூங்குவதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறிய பெட்டிகள் அல்லது பைகளுடன் இணைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்.
விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் ஒரு நாளில் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களைக் காண முடியும்.
அதுமட்டுமல்லாது அங்கு நிறைய உபகரணங்கள் இருப்பதால், குளிரூட்டும் மின்விசிறிகள் மற்றும் இயந்திரங்களின் ஒலி எப்போதும் இருக்கும். இந்த சுற்றுப்புற இரைச்சல்களால் தூங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க விண்வெளி வீரர்கள் கண் கவசங்கள் மற்றும் காது அடைப்பான்களை (Ear plugs) பயன்படுத்துகிறார்கள்.
விண்வெளியில் உடற்பயிற்சி

பட மூலாதாரம், NASA
தசை வலிமை மற்றும் எலும்பின் அடர்த்தி குறைவதைத் தடுக்க, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் ஒருநாளைக்கு 2 முதல் 2.5 மணிநேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகளும், டிரெட் மில் மற்றும் சக்கரங்கள் இல்லாத ஒரு உடற்பயிற்சி சைக்கிளும் உள்ளது என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் இணையதளம் கூறுகிறது.
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக சில மாத்திரைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
“பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தான் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியுள்ளார்கள். விண்வெளி ஆராய்ச்சி மனித குல வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதால் பல நாடுகள் தொடர்ந்து வீரர்களை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்தியாவிற்கும் அத்தகைய திட்டங்கள் உள்ளன. அவை வரும்காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












