வங்கதேசத்தில் இந்தியா செய்துள்ள பெரும் முதலீடுகள் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி நிருபர்
மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தார், அவர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை யூகிப்பது சுலபம் தான்.
வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, ஷேக் ஹசீனா இந்தியாவுடனான தனது உறவை பெரிதும் வலுப்படுத்தினார். அதே சமயம் பல துறைகளில் வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்தது.
வங்கதேசம் உணவுப் பொருட்கள் முதல் மின்சாரம் வரை அனைத்தையும் இந்தியாவிலிருந்து பெறுகிறது.
இந்தியா வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ரயில் பாதைகள் உள்ளன. மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எல்லையைக் கடந்து எளிதாக பயணிக்க முடிகிறது.
இந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த போது, ஷேக் ஹசீனா அவரின் முதல் வெளிநாட்டு விருந்தினராக இருந்தார்.
கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் 10 முறை சந்தித்துள்ளனர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா 2009ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியா அங்கு பெரிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சியில் இல்லாதது, அவர் மீதான மக்களின் கோபம், அந்நாட்டில் அதிகாரம் மாறிவரும் விதம் என அனைத்தும் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன.
குறிப்பாக இருதரப்பு ஒப்பந்தங்கள், எதிர்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உட்பட அனைத்தும் பாதிக்கப்படும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடு

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக வங்கதேசத்திற்கான இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா உள்ளது.
2023-24ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 13 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில், இரு நாட்டு பிரதமர்களும் இந்தியாவின் ஆதரவுடன் மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். அகௌரா-அகர்தலா ரயில் இணைப்பு, குல்னா-மங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரி வெப்ப ஆலை ஆகிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
வடகிழக்கு இந்தியாவை வங்கதேசத்துடன் இணைக்கும் முதல் ரயில் சேவை அகௌரா-அகர்தலா திட்டம். ``லைன் ஆஃப் கிரெடிட்’’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே சுமார் 1000 கோடி ரூபாயை வங்கதேசத்தின் ரயில்வே உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது.
அதானி குழுமத்தின் பெரும் பங்குகள்
அதானி குழுமம் வங்கதேசத்தில் பெரிய முதலீட்டைக் கொண்டுள்ளது. `அதானி பவர்’ நிறுவனம் 2017 இல் `வங்கதேச பவர் டெவலப்மெண்ட்’ நிறுவனத்துடன் 25 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதில் அதானி பவர் நிறுவனம் ஜார்கண்டில் உள்ள கோடா ஆலையில் இருந்து 1,496 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
கோடா பவர் ப்ராஜெக்ட் என்பது நாட்டின் முதல் பரிமாற்ற மின் உற்பத்தி நிலையமாகும். அதன் 100 சதவீத ஆற்றல் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலை 2023 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்துக்கு மின்சாரத்தை அனுப்புகிறது.
அதானி மட்டுமின்றி டாபர், மரிகோ, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கும் வங்கதேசத்தில் முதலீடுகள் உள்ளன.
2007-2010 வரை வங்கதேசத்துக்கான இந்திய உயர் ஆணையராக இருந்த பினாக் சக்ரவர்த்தி கூறுகையில், “2007ல் நான் வங்கதேசத்தை மிகவும் கடினமான காலகட்டத்தில் பார்த்திருக்கிறேன், தற்போது நிர்வாக அமைப்பு சீர்குலைந்த காலகட்டம். ஆனால், வங்கதேசத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை புறக்கணிக்க முடியாது.” என்றார்.
இந்தியாவை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வங்கதேசத்தின் சார்பு அதிகமாக உள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான திட்டங்கள் சில காலம் மட்டும் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இந்தியாவின் முதலீடு ஆபத்தில் உள்ளது என்று கூறுவதும் புரிந்து கொள்வதும் சரியல்ல” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவைச் சார்ந்திருக்கும் வங்கதேசம்
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு அக்டோபர் 2023 இல் தொடங்கியது. இதனால் இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி நீக்கப்படும்.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இதன் மூலம் இந்தியாவுக்கான வங்கதேசத்தின் ஏற்றுமதி 297 சதவீதமும், இந்தியாவின் ஏற்றுமதி 172 சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டிவிஎஸ் ஆகியவை வங்கதேசத்தில் இருசக்கர வாகனங்களுக்கான அசெம்பிளி ஆலைகளைக் கொண்டுள்ளன.
இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் வங்கதேச தொலைத்தொடர்பு நிறுவனமான ராபி ஆக்சியாட்டாவில் 28 சதவீத முதலீட்டைக் கொண்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரபீர் டே கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் தொழில் முக்கியம். இது முதலீட்டாளருக்கும் அந்த நாட்டிற்கும் பயனளிக்கிறது, இந்தியாவுடன், சீனாவும் வங்கதேசத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் வங்கதேசம் இந்தியாவை சார்ந்திருப்பது மிக அதிகம். இந்தியாவில் இருந்து அன்றாட தேவைக்கான பொருட்களும் அங்கு செல்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு வந்தவுடன் இந்தியாவில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடு நன்றாக இருக்கும்.” என்றார்.
இந்திய எல்லைகளில் புலம்பெயர்ந்தோர் வரவு அதிகரிக்கும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், அங்கு வாழும் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து, சிறுபான்மை இந்துக்களின் சொத்துகள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினரின் வணிக நிறுவனங்கள், கோயில்கள் பல இடங்களில் தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்த தாக்குதல்கள் எந்த மட்டத்தில் நடைபெறுகின்றன, அவற்றின் முழு நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வங்கதேசத்துடன் 4 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பது இந்தியா எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்று என்கிறார் பிரபீர் டே.
"வங்கதேசத்துடனான வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆபத்து இல்லை. ஏனெனில் நிலைமை மாறும்போது அது மாறும், ஆனால் அகதிகளின் அழுத்தம் இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












