வக்ஃப் என்றால் என்ன? வக்ஃப் சட்டத்திருத்த மசோதா கூறும் மாற்றங்கள் என்ன?

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக, அதிகபட்ச சொத்துகளை அதன் கட்டுப்பாட்டில் வக்ஃப் வாரியம் வைத்துள்ளது.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்தி

மத்திய அரசு இன்று மக்களவையில் வக்ஃப் (திருத்த) மசோதா, 2024ஐ அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மசோதா குறித்து விவாதிக்க 8 மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், தேவைப்பட்டால் அதை நீட்டிக்கவும் முடியுமென்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் பெரும் எதிர்ப்புக்குப் பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 31 எம்.பி.க்களை கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

உண்மையில், மத்திய அரசு பல தசாப்தங்களாக பழமையான வக்ஃப் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. இந்தப் புதிய மசோதா வக்ஃப் சொத்துகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கானது என்று வாதிடுகிறது.

மறுபுறம், மசோதாவில் மாற்றங்களைச் செய்வதாகக் கூறி, வக்ஃப் சொத்துகளை அரசு கையகப்படுத்த விரும்புவதாக மசோதாவை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், வக்ஃப், வக்ஃப் வாரியம், வக்ஃப் சொத்துகள் மற்றும் இந்தப் புதிய மசோதா குறித்த தற்போதைய விவாதங்கள் பற்றிய ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும் இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

வக்ஃப் என்றால் என்ன?

வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் என்பது இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட எவராலும் அல்லாவின் பெயரால் அல்லது மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துகள்.

இந்தச் சொத்து இஸ்லாமிய சமூகத்தின் நன்மைக்காக சமூகத்தின் ஓர் அங்கமாகிறது. அல்லாவை தவிர வேறு யாரும் அதன் உரிமையாளராக இருக்க முடியாது.

வக்ஃப் வாரியத் தலைவர் ஜாவேத் அகமது கூறுகையில், "வக்ஃப் என்பது ஒரு அரபு வார்த்தை. இதன் பொருள் தங்குதல். அல்லாவின் பெயரால் ஒரு சொத்து வக்ஃப் செய்யப்படும்போது, ​​அது என்றென்றும் அல்லாவின் பெயரிலேயே இருக்கும். பின்னர் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது."

இந்திய உச்சநீதிமன்றம் 1998 ஜனவரியில் வழங்கப்பட்ட அதன் தீர்ப்பில் 'ஒரு சொத்து வக்ஃப் ஆனவுடன், அது என்றென்றும் வக்ஃப் ஆகவே இருக்கும்' என்று கூறியது. வக்ஃப் சொத்துகளை வாங்கவோ விற்கவோ அல்லது யாருக்கும் மாற்றவோ முடியாது.

வக்ஃப் வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் எவ்வளவு?

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் உள்ள ஜாமா மஸ்ஜித்

வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் “தொண்டு” என்ற கருத்தைக் குறைத்து மதிப்பிடச் செய்யும் முயற்சியாகவும், ஆக்கிரமிப்பாளர்களை சொத்தின் உரிமையாளர்களாக மாற்ற வழிவகுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வக்ஃப் சட்டம் "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயருக்கு ஏற்ப முன்மொழியப்பட்ட மாற்றங்கள், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையிலான சிறுபான்மை விவகார அமைச்சகம் வக்ஃபு வாரியம் தொடர்பான சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது. அந்த மசோதாவின் நகலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியது.

வக்ஃப் வாரியத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத் திருத்தங்கள் தேவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் தற்போது இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நாட்டில் அதிக நில உடைமைகளை வைத்திருக்கும் முதல் மூன்று தரப்பு: பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ரயில்வே மற்றும் வக்ஃப் வாரியம்.

நீதிமன்றத்தில் தாக்கல் ஆன வக்ஃப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்

வக்ஃப் சட்ட திருத்த மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வக்ஃப் தொடர்பான சுமார் 120 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாகத் தற்போது இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களில், ஜெயின், சீக்கியர் மற்றும் பிற சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது என்று வக்ஃப் சட்டத்தின் நியாயத்தன்மையைக் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "மத அடிப்படையில் எந்தத் தீர்ப்பாயமும் செயல்பட முடியாது. ஒரு விஷயத்தில் இரண்டு வெவ்வேறு சட்டங்கள் உள்ள நாடாக இந்தியா இருக்க முடியாது. ஒரு தேசம், ஒரு சட்டம் என்பதுதான் சரி. நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 120 மனுக்களில் 15 மனுக்கள் முஸ்லிம்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளைகள் ஒருபோதும் மத அடிப்படையிலானதாக இருக்கக்கூடாது” என்று விவரித்தார்.

அரசியல் ஆய்வாளர் குர்பான் அலி இந்தச் சட்டத் திருத்தத்தை "பிரதான நிலங்களை அரசு கையகப்படுத்தும் முயற்சி” என்று கருதுகிறார்.

"இது இந்து வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தில் சில முரண்பாடுகள் இருப்பது உண்மைதான். மேலும் வக்ஃப் அமைப்புகளில் நிறைய ஊழல்கள் உள்ளன. முறையான நிர்வாகமும் இல்லை" என்று அவர் விவரித்தார்.

வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டதற்கு முன்னதாக, பல சிறு நகரங்களில், குறிப்பாக வட இந்திய மாநிலங்களில், வக்ஃப் வாரியத்தை ஒழிக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன.

முக்கிய திருத்தங்கள் என்னென்ன?

வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையிலான சிறுபான்மை விவகார அமைச்சகம் வக்ஃபு வாரியம் தொடர்பான சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது

`வக்ஃப்’ என்பது இஸ்லாத்தை நம்பும் எந்தவொரு நபரும் அல்லாவின் பெயரில் அல்லது மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடை அளிக்கும் அசையும் அல்லது அசையாச் சொத்து ஆகும்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'நோக்கங்கள் மற்றும் காரணங்களின்’படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை பின்பற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையுள்ள எந்தவொரு நபரும் வக்ஃபுக்கு தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம்.

முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு தற்போது மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தங்களின் கீழ், போஹ்ரா மற்றும் அககானி சமூகத்தினருக்கென (Boharas, Aghakhanis) தனி வக்ஃப் வாரியம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

வக்ஃப் சொத்துக்கான பதிவு மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த போர்ட்டல் மூலம், முத்தவல்லிகள் (Mutawalli) அதாவது வக்ஃப் சொத்தைக் கவனிப்பவர்கள் சொத்துக் கணக்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். இதனுடன், ஆண்டு வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள சொத்துக்கு வக்ஃப் வாரியத்திற்கு முத்தவல்லி (Mutawalli) செலுத்த வேண்டிய தொகையும் ஏழு சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு சொத்து வக்ஃப்-க்கு கீழே வருமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டது. புதிய முன்மொழிவின்படி, தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயமும் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் இறுதியானதாகக் கருதப்படாது, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

வரம்பு சட்டத்தை (Limitation Act) அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கப் புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும்.

தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகள் என்ன?

வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது

கே ரஹ்மான் கான் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் `1995ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டம்’, 2013இல் மாற்றியமைக்கப்பட்டது.

இதுவொரு கூட்டு நாடாளுமன்றக் குழு (Joint Parliamentary Committee), மாநிலங்களவையின் தேர்வுக் குழு ஆகியோரால் விவாதிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்தக் குழுவுக்கு தற்செயலாக, பாஜக உறுப்பினர் தலைமை தாங்கினார்.

வக்ஃபு வாரியத்தின் செயல்பாட்டைத் தூய்மைப்படுத்த உழைக்கும் ஆர்வலர்களுடன், பல வழக்கறிஞர்களும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இந்தக் கருத்தைச் சுருக்கமாக விளக்குகிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரவூப் ரஹீம்.

ரஹீம் பிபிசியிடம் பேசியபோது, "அடிப்படையில், தற்போதுள்ள சட்டத்தில் சில பிரிவுகளைச் சேர்ப்பது மற்றும் வக்ஃப் வாரியத்தின் ஊழல் செய்யும் உறுப்பினர்களைச் சிறைக்கு அனுப்புவதைத் தவிர வேறு எந்த மாற்றமும் தேவையில்லை" என்றார்.

ஆனால் வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் தாக்கல் செய்த 119 மனுதாரர்களும் இந்தச் சட்டத்தின், மேலும் சில குறைபாடுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் புண்டியை சேர்ந்த ஷாசாத் முகமது ஷா என்பவர், "ஃபக்கீர் சமூகத்துக்குச் சொந்தமான 90 பிகாஸ் நிலம் (பிகாஸ்-நிலத்தை அளவிடப் பயன்படுத்தும் அளவீடு) வக்ஃப் வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தை நாடினார்.”

இந்த நிலம் 400 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஜாவால் ஃபக்கீர் சமூகத்திற்கு வழங்கப்பட்டது. அதற்கான தாம்பரா பத்திரமும் (Tampra patra) வழங்கப்பட்டது. ஒரு சட்டம் உள்ளது, ஆனால் அது மீறப்படுகிறது,” என்று ஷா பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

ராஜஸ்தானின் கோட்டா மற்றும் பாரான் மாவட்டங்களில் வசிக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் இதேபோன்ற மனுக்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

"மத்திய பிரதேசத்தில் உள்ள முஜாவர் சேனாவும் வக்ஃப் வாரியத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக” ஷா விவரித்தார்.

"இதனால்தான், உயர்நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனங்களுக்கும், அறங்காவலர்களுக்கும் ஒரே மாதிரியான குறியீடு தேவை என்று நாங்கள் மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளோம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தன்னிச்சையாக மத அடிப்படையிலான வக்ஃப் சட்டத்தை இயற்றியுள்ளன, இது அரசியலமைப்பின் 14 மற்றும் 15வது பிரிவுகளை மீறுவதாக” ஷா கூறினார். ஷா பாஜகவின் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் உறுப்பினர்.

அஷ்வினி உபாத்யாய் கூறுகையில், "அரசாங்கம் கோவில்கள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை பெறுகிறது. ஆனால் எந்த தர்கா, மசூதியில் இருந்தும் நிதி பெறவில்லை. வக்ஃப் அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கும்போது, அனைத்து மத சொத்துகள் மீதும் சிவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளோம். இது சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டும், வக்ஃப் தீர்ப்பாயம் மூலம் அல்ல” என்றார்.

புதிய சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் மாநிலங்களவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் பிபிசி ஹிந்தியிடம், "முதலில், முன்மொழியப்பட்ட இந்த சட்டத் திருத்தம் வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்வதற்கு சிக்கலான செயல்முறையை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் ஆட்சியர் அல்லது துணை ஆணையரின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பொறுப்புகளுக்குக் கூடுதல் சுமை" என்று விளக்கினார்.

"வாரியம் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இரண்டு பதவிகளை ஒதுக்குவது நல்லதுதான். ஆனால் இந்து கோவில்களின் வாரியத்திலும் முஸ்லிம்களுக்கு இதேபோன்ற இடஒதுக்கீடு கிடைக்குமா? சட்டத் திருத்தத்தில் மிக மோசமான அம்சம் `வரம்பு சட்டம்’ பற்றியதுதான். வக்ஃப் சட்டத்தில் இருந்து வரம்பு சட்டத்தின் விதிகள் மாற்றப்பட்டுள்ளன” என்றார்.

இந்த விதிகளைச் சட்டமாக்கினால், வக்ஃப் சொத்துகளில் 99 சதவீதம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால், வக்ஃப் சொத்துகள் பெருமளவில் குறைந்துவிடும். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில், வக்ஃப் சொத்துகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பாளர்கள் வைத்துள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளின் உரிமையாளர்களாக மாறுவார்கள்.

ஓய்வுபெற்ற புனே தலைமை வருமான வரி ஆணையரும், தற்போது சமூக ஆர்வலருமான அக்ரமுல் ஜப்பார் கான், ஆக்கிரமிப்பாளர்கள் வக்ஃப் சொத்துகளின் உரிமையாளர்களாகும் அபாயம் இருப்பதாக ரஹ்மான் கான் சொல்வதற்கு உடன்படுகிறார்.

அவர் பிபிசி ஹிந்தியிடம், "இந்த மாற்றம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், இதுபோன்ற நிலங்களை வைத்திருக்கும் பல பெரிய தொழிலதிபர்களுக்கும்கூடப் பலனளிக்கும். இந்தத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள ஒரே உள்நோக்கம் இதுதான் என்று தெரிகிறது" என்றார்.

ஆனால் ஜப்பார் கான் புதிய திருத்தங்களின் சில சாதகமான அம்சங்களைப் பட்டியலிடுகிறார், "மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ஏகபோகத்தை மத்திய அரசு உடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் ஏகபோகவாதிகளாகிவிட்டனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த வாரியங்களில் ஊழல் நடந்திருக்கிறது. சாமானியர்களுக்குப் பலன் அளிக்கவில்லை.

மொத்தத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு மாற்றப்படாவிட்டால் வக்ஃப் சொத்துகளுக்கு கணிசமான சேதம் ஏற்படும் என ஜப்பார் கான் கூறினார். வக்ஃப் சொத்தை, முறையாக உருவாக்கினால், பல கடைகளைக் கட்டுவது மட்டுமின்றி, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் அளிக்க முடியும் என உதாரணம் காட்டுகிறார்.

"உங்களிடம் கடைகள் இருக்கும்போது, அத்தகைய வணிகங்கள் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கும் வரி செலுத்துகின்றன" என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், அஜ்மீரை சேர்ந்த அகில இந்திய சஜ்ஜாதன்ஷின் சங்கத்தின் தலைவர் சையத் நசீருதீன் சிஷ்டி பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், தனி தர்கா வாரியத்தை உருவாக்கும் சங்கத்தின் ஆலோசனையை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்கும் என்று சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.

நசீருதீன் சிஷ்டி மேலும் கூறுகையில், "இது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. தர்காக்கள் வக்ஃப் சொத்துகளில் முக்கியப் பங்குதாரர்கள். புதிய திருத்த மசோதா மீதான விவாதத்தில் தர்கா வாரியத்தையும் அரசு சேர்க்கும் என நம்புகிறோம்" என்றார்.

தமிழக வக்ஃப் வாரிய தலைவர் கூறியது என்ன?

வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு மாற்றப்படாவிட்டால் வக்ஃப் சொத்துகளுக்கு கணிசமான சேதம் ஏற்படும் எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான், "வக்ஃப் சட்டம் 1995, முழுமையான சட்டமாக இருக்கிறது. அதற்கு சட்டத் திருத்தம் தேவையில்லை. வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்கும் அதிகாரம் உள்ள வக்ஃப் வாரியத்தைப் பலவீனமாக்கக் கூடியதாக, புதிய சட்டத் திருத்தங்கள் அமைந்துள்ளன," என்று தெரிவித்தார்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, முஸ்லிம் செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளை பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் ஆரோக்கியமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

"வக்ஃப் சொத்துகளில் முறைகேடு நடந்தால் அதைத் தடுப்பதற்கு வக்ஃப் வாரியமும் வக்ஃப் தீர்ப்பாயமும் உள்ளது. மேல் முறையீடுகளுக்கு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளன. இதில், தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது, அந்தந்த அமைப்புகளின் பொறுப்பு.

முந்தைய சட்டத்தில், வக்ஃப் சொத்துகளை தனிநபர்கள் வளைத்துப் போடுவதற்கு வாய்ப்பில்லை. தற்போது அதற்கான வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தருகிறது. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது விரைவில் தெரியவரும்," என்றும் மேற்கோள் காட்டினார் ரகுமான்.

கூடுதல் தகவல்கள்: விஜயானந்த் ஆறுமுகம், பிபிசி தமிழ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு