சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நியமன விதிகள் பொருந்துமா? நீதிமன்றங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், www.ugc.ac.in
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆசிரியர் நியமன விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று யுஜிசி கூறுகிறது.
அதன் விதிகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் கல்வி நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த விதி அரசியல் சாசனச் சட்டத்தின் படி தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையை மீறுவதாக உள்ளன என்று சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் வாதிடுகின்றன.
சில நேரங்களில் நீதிமன்றங்களுக்கு சென்று தங்கள் உரிமையை அவர்கள் நிலைநாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் உரிமை என்ன? யுஜிசியின் விதிகள் அரசியல் சாசனச் சட்டத்துக்கு உட்பட்டதா? என்று இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆசிரியர் நியமனம் தொடர்பான 2018 விதிகள் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளான மகளிர் கிறித்துவக் கல்லூரி, மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி, லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர்கள் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் ஆகியோரின் நியமனங்களை அனுமதிக்கக் கோரி, இந்த கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.
இந்த நியமனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நியமனங்கள் யுஜிசி 2018 விதிகள் கூறும் வகையிலான குழு அமைத்து நடைபெறவில்லை என்று சென்னை பல்கலைகழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தன. எனவே, இந்த நியமனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த நியமனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
- டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்வது கடினமாகிறதா?
- வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?
- தமிழ்நாடு: புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் - தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
- பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?
யுஜிசி 2018 விதிகள் என்ன கூறுகின்றன?
ஆசிரியர் நியமனங்கள் யுஜிசி வலியுறுத்தும் முறையிலான குழு அமைக்கப்பட்டு நடைபெற வேண்டும் என்று 2018 விதிமுறைகள் கூறுகின்றன. கல்வி நிறுவனத்துக்கு அப்பாற்பட்ட அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி அந்த குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்த விதி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று யுஜிசி வலியுறுத்துகிறது. இந்த விதிகளை தமிழக அரசு 2021-ம் ஆண்டு மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியது.
ஆனால், இந்த விதி அரசியல் சாசனச் சட்டம் 30(1) தங்களுக்கு வழங்கும் உரிமையை மீறுகிறது என்று சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் வாதிடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் சாசனச் சட்டம் பிரிவு-30 என்ன கூறுகிறது?
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 30 சிறுபான்மையினர் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் உரிமை அளிக்கிறது. இதன் படி, மதம் அல்லது மொழியின் அடிப்படையில் அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் உரிமை உண்டு. உதவி வழங்கும் போது எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் அதன் சிறுபான்மை அந்தஸ்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்ட முடியாது என்றும் அது கூறுகிறது.
பல்வேறு தீர்ப்புகளின் மூலம், பிரிவு 30 கூறியுள்ள இந்த உரிமைகள் என்னவென்று நீதிமன்றங்கள் விளக்கியுள்ளன.
செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி எதிர் குஜராத் மாநில அரசு (1974) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை அனுமதிக்கவும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் உரிமை உண்டு என்று தெளிவுப்படுத்தியிருந்தது. அதே நேரம், மாணவர் சேர்க்கை நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு தங்களுக்கான விருப்பமான ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது என, டிஏவி கல்லூரி ஜலந்தர் மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்கு இடையிலான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், ஆசிரியர்களின் தகுதியை பொருத்து இது அமையும் என்று கூறியது.
யுஜிசி விதிகள் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானதா?
யுஜிசி 2018 விதிகள் சிறுபான்மை நிறுவனங்களின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது, என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளார்.
அதில், ஏற்கெனவே யுஜிசியின் 2000, 2010 விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு 2011-ம் ஆண்டு சிறுபான்மை நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான வழக்கில் தீர்ப்பளித்துள்ளது என்பதையும், ஆசிரியர் நியமனங்களில் சிறுபான்மை நிறுவனங்களின் உரிமையை நிலைநாட்டிய பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டினார்.
2011-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றும் இதுவரை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை மறுதலிக்கும் வகையில், யுஜிசி ஆசிரியர் நியமன விதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதையும் வழங்கவில்லை என்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் காட்ஸன் தெரிவித்தார்.
யுஜிசியின் 2000, 2010 ஆகிய ஆண்டுகளில் வகுக்கப்பட்ட விதிகளை விட 2018 விதிமுறைகள் பெரிய வகையில் மாறாத போது, சிறுபான்மை நிறுவனங்கள் இந்த விதிகளை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டாம் என்றும் ஏற்கெனவே கொடுத்த தீர்ப்புகளே இந்த விதிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளும் இதே கருத்துகளை தெரிவித்துள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சிறுபான்மை கல்லூரிகளின் ஆசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாத போது, அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.
"தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் வெளியாட்களையும் கொண்டதாக உள்ளது. அவர்களை தேர்வுக் குழுவில் சேர்ப்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதாகும். ஆசிரியர் நியமனங்கள் நிர்வாகப் பணியாகும், சிறுபான்மை நிறுவனங்களுக்கு அதன் மீது சுய அதிகாரம் உண்டு. தேர்வுக் குழு என்ற பெயரில் வெளியாட்களிடம் அதை கொடுக்க முடியாது. நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாவும் செய்ய முடியாது" என்று நீதிபதி ஆர்.என். மஞ்சுளா தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
யுஜிசியின் வாதங்கள் என்ன?
யுஜிசி இந்த விதிகள் தேசிய அளவில் சீராக அனைவருக்கும் பொருந்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. தேசிய நலனை பாதுகாக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த விதிகள் சிறுபான்மையினருக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகவே இருக்கும் என்றும் கூறுகிறது. மேலும், கல்வி நிறுவனங்களில் தரத்தை சீராக பராமரிக்கவும் இது உதவும் என்று கூறுகிறது.
சிறுபான்மை நிறுவனங்களுக்கு கட்டற்ற உரிமை உண்டா?
சிறுபான்மை நிறுவனங்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 30 வழங்கும் உரிமை எந்த கட்டுப்பாடுகளுக்கும் உட்படாததா என்ற கேள்வி நீதிமன்றங்களின் முன்பு பலமுறை விவாதிக்கப்பட்டிருப்பதாகும்.
சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த முக்கியமான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் ஒன்றான 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு , டிஎம்ஏ பை ஃபவுண்டேஷன் நிறுவனம் (TMA Pai foundation) எதிர் கர்நாடக அரசு என்ற வழக்கில், "கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை என்பது, ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்கும் உரிமையை உள்ளடக்கியது. இந்த உரிமையில் அரசு தலையிட முடியாது. அடிப்படை தகுதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றாலோ முறைகேடுகள் நடைபெற்றாலோ மட்டுமே அரசு தலையிட முடியும். அரசு வகுக்கும் விதிமுறைகள் அளவாக இருக்க வேண்டும், அந்த நிறுவனங்களின் சிறுபான்மைத்தன்மையை இழக்காத வகையில் இருக்க வேண்டும்" என்று கூறியது.
ஆசிரியர்களின் குறைந்தபட்ச தகுதி என்னவாக இருக்க வேண்டும் என்று அரசு விதிக்கலாம், எனினும் ஆசிரியர் தேர்வு நடைமுறையில் அரசு தலையிடவோ, தான் கூறும் நபர்களை தேர்வுக் குழுவில் நியமிக்கவோ உத்தரவிட முடியாது என்றும் அதே நேரம் ஆசிரியர் தேர்வு நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்றும் அந்த தீர்ப்பு கூறியது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












