தமிழ்நாடு: புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் - தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுக்க உருவாக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் என்ன சொல்கின்றன? கல்வியாளர்கள் என்ன கருதுகிறார்கள்?

கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் அளித்துள்ளது.

இந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னணி, அதில் ஏற்பட்ட சர்ச்சைகள், தற்போது அளிக்கப்பட்ட முக்கியமான பரிந்துரைகள், கல்வியாளர்களின் கருத்துகள் ஆகியவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கேள்வி: தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கையை வகுக்க குழு அமைக்கப்பட்டது எப்படி?

பதில்: மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை 2020ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்தக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், 2021இல் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை உருவாக்கப் போவதாகத் தனது முதல் பட்ஜெட்டில் அறிவித்தது.

"தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்" என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இதற்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு 2022இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

புதிய கல்விக் கொள்கை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது?

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், ANBIL MAHESH

கேள்வி: இந்தக் குழு சந்தித்த சர்ச்சை என்ன?

பதில்: புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கான குழுவில் உறுப்பினராக இருந்த ஜவஹர் நேசன், 2023ஆம் ஆண்டு மே மாதம் குழுவின் செயல்பாடுகள் குறித்துப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். தேசியக் கல்விக் கொள்கையைப் பல அதிகாரிகள் இந்தக் குழுவின் மூலமாகத் திணிக்க முற்படுவதாக அவர் கூறினார். ஆனால், அவரது குற்றச்சாட்டுகளை குழுவின் தலைவரான நீதிபதி த. முருகேசன் மறுத்தார். குழுவின் மற்ற உறுப்பினர்களும் இதை மறுத்தனர். இதன் பிறகு அந்தக் குழுவிலிருந்து ஜவஹர் நேசன் வெளியேறினார்.

கேள்வி: புதிய கல்விக் கொள்கை எவ்விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது?

பதில்: புதிய கல்விக் கொள்கைக்கான குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஜூலை 1ஆம் தேதி அளித்தது. இந்தக் குழுவின் முழுமையான பரிந்துரைகள் வெளியிடப்படவில்லை. முக்கிய அம்சங்கள் மட்டும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதன்படி, பள்ளிக் கல்வியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், பள்ளிக்கூடங்களின் கட்டமைப்புகளில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள், நுழைவுத் தேர்வுகள், கற்பிக்கும் மொழி, கல்லூரிக் கல்வியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பள்ளிக் கல்வி தொடர்பான பரிந்துரைகள்

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: பள்ளிக் கல்வி தொடர்பாக கல்விக் கொள்கைக் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் என்ன?

  • கல்வியை மீண்டும் மாநிலப் பட்டிலுக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
  • பள்ளிக் கல்வியில் தமிழே முதல் மொழியாக இருப்பது அவசியமானது. ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக் கழக மட்டம்வரை தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். தமிழ் பல்கலைக் கழகத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதோடு, தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்படும் கல்லூரியை மேம்படுத்த வேண்டும்.
  • முறைப்படியான பள்ளிக்கூடங்களுக்கு முந்தைய 'விளையாட்டுப் பள்ளிகளில்' (Play Schools) சேர்க்க ஒரே மாதிரியான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். மூன்று வயது நிரம்பிய குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதை வரம்பாக நிர்ணயிக்கலாம்.
  • ஜூலை 31ஆம் தேதி 5 வயது நிரம்பிய குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம். ஒன்றாம் வகுப்பே முறைப்படியான கல்வியின் ஆரம்பக்கட்டமாகக் கருதப்படும்.
  • சாதியை ஒழிப்பதை சமூக இலக்காகக் கொண்டு, சமத்துவத்தை நோக்கி நகரச் செய்வதாக பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
  • மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறையை நீக்கிவிட்டு, தம் அறிவைப் பயன்படுத்தி, யோசித்து தேர்வெழுதும் முறையை ஊக்குவிக்க வேண்டும். தரவரிசைப்படுத்தி, ஒப்பீடு செய்வதற்குப் பதிலாக எல்லா மாணவர்களும் சிறந்து விளங்க ஊக்கப்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு வரை தேர்வுகள் பள்ளிக்கூட மட்டத்திலேயே நடத்தப்பட வேண்டும். முந்தைய வகுப்புகள் எதிலும் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் கூடவே கூடாது.
  • மொழி ரீதியான, மதரீதியான சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழிகளை அதாவது உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைத் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

  • இங்கேயே பிறந்து, முப்பது ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பு மாநிலத்தைச் சார்ந்தது. அவர்களுக்கு கல்வி வாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு, குறிப்பாக உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கலாம்.
  • தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, அவர்களது குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் குழந்தைகளின் சமூகப் பின்னணி, மொழி ஆகியவற்றைப் புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
  • அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களை அரசுப் பள்ளிகளுக்கு இணையாகக் கருத வேண்டும். ஆனால், அந்தப் பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர்களைச் சேர்ப்பது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற புகார்கள் குறித்து அறிய சிறப்பு ஆய்வு நடத்த வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளுக்கு அரசு போதிய அளவில் நிதி ஒதுக்காததால்தான் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். பொதுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பள்ளி, கல்லூரிகளுக்கு இணையாக தனியார் நடத்தும் கோச்சிங் வகுப்புகளைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவர்கள் கல்வியை ஒரு பொருளைப் போல விளம்பரமும் செய்கின்றனர். இது தொடர்ந்தால் பள்ளி, கல்லூரிகள் தேவையற்றுப் போய்விடும் நிலை ஏற்படலாம்.
  • பள்ளிக் கூடங்களில் சேர்வதற்கு எவ்விதமான நுழைவுத் தேர்வையும் நடத்தக்கூடாது. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை 11ஆம் வகுப்பில் செயல்படுத்தப்படுவதற்குப் பதிலாக, 9ஆம் வகுப்பில் செயல்படுத்தலாம்.
  • கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளில் கூடுதல் முதலீடுகளை அரசு செய்ய வேண்டும்.

கல்லூரிக் கல்வி தொடர்பான பரிந்துரைகள்

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: கல்லூரிக் கல்வி தொடர்பாக புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

  • கல்லூரிச் சேர்க்கையைப் பொறுத்தவரை 11வது, 12வது வகுப்பு மதிப்பெண்களை வைத்தே உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். எவ்வித நுழைவுத் தேர்வுகளும் கூடாது.
  • கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் 3 ஆண்டு, முதுகலை படிப்புகளில் 2 ஆண்டு என்ற நிலையே தொடரும். ஆனால், யுசிஜியின் பாடத்திட்ட விதிகள் சிக்கலானவையாக இருப்பதால், மாணவர்கள் விரும்பினால் நான்கு ஆண்டு ஹானர்ஸ் படிப்பையும் தேர்வு செய்து படிக்கலாம்.
  • ஒரு படிப்பில் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து, எப்போது வேண்டுமானாலும் விலகும் முறை பல்கலைக்கழகப் படிப்பிற்கே எதிரானது என்பதால் அந்த முறை நடைமுறைப் படுத்தப்படமாட்டாது. பல்கலைக்கழக பட்டத்தைப் பெற 3 ஆண்டுப் படிப்பை முடிக்க வேண்டும். பாதியில் விட்டுச் சென்றுவிட்டு, டிப்ளமோ சான்றிதழ் கேட்டால் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது.
  • உயர்கல்வியில் அரசின் பங்களிப்பு குறைந்து தனியாரின் பங்களிப்பு அதிகரிக்கிறது. இது எல்லாப் பிரிவினரும் குறிப்பாக சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பைக் குறைக்கும். உயர் கல்வியில் அரசு கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.
  • தனியார் கல்வி நிலையங்கள் பாரம்பரியமான படிப்புகளுக்குப் பதிலாக சந்தைக்குத் தேவைப்படும் படிப்புகளை வழங்குகின்றன. இதனால், பல தருணங்களில் மாணவர்கள் சரியாகத் தயார் செய்யப்படாமல் வெளியில் அனுப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைப்பதும் கடினமாகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

வரவேற்பவர்களும் விமர்சிப்பவர்களும் கூறுவது என்ன?

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: இந்த அறிக்கையை வரவேற்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பதில்: சமமான கற்றல் வாய்ப்பை எல்லோருக்கும் தர இந்த அறிக்கை பயன்படும் என்பதால் இதை வரவேற்பதாகச் சொல்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்க முக்கியக் காரணம், அந்தக் கொள்கை பொதுக் கல்வி நிலையங்களை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வலுவான பொதுக் கல்வி அமைப்புகள் இருக்கின்றன. அவை பலவீனமாகும் என்ற அச்சத்தில்தான் அவை எதிர்க்கப்பட்டன.

மேலும் தேசிய கல்விக் கொள்கை, அரசின் கல்வி நிலையங்களைப் பற்றியும் தனியார் கல்வி நிலையங்களைப் பற்றியுமே பேசியது. அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் பற்றி எதையும் சொல்லவில்லை. இந்தக் கொள்கை அது குறித்தும் பேசுகிறது."

மேலும், "தேசிய கல்விக் கொள்கை பள்ளிக் கல்விக்கும் உயர் கல்விக்கும் தொடர்பே இல்லாமல் செய்தது. பள்ளிக் கல்வியை முடித்த பிறகு தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்றார்கள். மாநில கல்விக் கொள்கை அதை எதிர்க்கிறது. தமிழ்நாட்டிற்கு என்னவிதமான தேவை இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்தக் கொள்கையை உருவாக்கியிருக்கிறார்கள். சமமான கற்றல் வாய்ப்பைத் தர இது பயன்படலாம். அந்த வகையில் இது வரவேற்கத்தக்கது" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
படக்குறிப்பு, பிரின்ஸ் கஜேந்திரபாபு

கேள்வி: இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவில் போதாமை இருப்பதாகச் சொல்பவர்களின் வாதம் என்ன?

பதில்: இந்தப் புதிய கல்விக் கொள்கை பரிந்தரையில் பல விஷயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பல போதாமைகள் இருப்பதாகச் சொல்கிறார் குழந்தைகள் நலன் தொடர்பாகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன்.

"பொதுவாக மிகச்சிறிய குழந்தைகளின் நலன் குறித்துப் பேசும்போது, பராமரிப்பு பற்றி மட்டும்தான் பேசுவார்கள். இந்தக் கல்விக் கொள்கை ஆரம்பக்கால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது. இதில் வளர்ச்சி என்பது கல்வியைக் குறிக்கும். அந்த வகையில் இது கவனிக்கத்தக்கது. மேலும், தற்போதுள்ள 10 + 2+ 3 என்ற நிலையைத் தொடர வேண்டும் என்றே இது கூறுகிறது. அதுவும் வரவேற்கத்தக்கது," என்கிறார் தேவநேயன்.

இவைதவிர, "தாய்மொழிக் கல்வி, நிலவியல் ரீதியாகவும் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கக்கூடிய குழந்தைகள் என விரிவாகப் பார்த்து கொள்கைகளை வகுத்திருப்பதும் நகர்ப்புற வறுமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்துப் பேசுவதும் கவனிக்கத்தக்கது," என்று கூறும் தேவநேயன், ஆனால் வேறு சில பிரச்சனைகள் இந்தப் புதிய கல்விக் கொள்கையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

"உதாரணமாக, அருகமைப் பள்ளி குறித்தும், மாநில நிதி நிலை அறிக்கையில் கல்விக்கென எத்தனை சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த அறிக்கை எதுவும் சொல்லவில்லை. மேலும், பள்ளிக் கூடங்களில் குழந்தைநேய பள்ளிச் சூழல் எந்த அளவுக்கு இருக்கிறது. அதை எப்படி இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசியிருக்க வேண்டும்."

"ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்போது உயர்கல்வித் துறையின்கீழ் இருக்கிறது. ஆனால், அது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருக்க வேண்டும். அதைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்.

இவையெல்லாம் தவிர, ஒரு கொள்கையை வகுக்கும்போது ஓர் இலக்கை முன்வைக்க வேண்டும். அப்படி எந்த இலக்கையும் இந்தக் கொள்கை முன்வைக்கவில்லை" என்கிறார் தேவநேயன்.

புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகள் பற்றி கல்வியாளர்கள் கூறுவது என்ன?

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை சொல்வதென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: பிரபல கல்வியாளர்கள் இந்தப் பரிந்துரைகள் குறித்து என்ன சொல்கிறார்கள்?

பதில்: புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார் பிரபல கல்வியாளரான வசந்தி தேவி. ஆனால், முக்கியமான ஓர் அம்சம் கவனிக்கப்படாமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் மிகச் சிறப்பாக உள்ளன. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கான பரிந்துரைகள், கல்விக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது ஆகியவை குறித்துப் பேசியிருப்பது மிக முக்கியமானது," எனக் கூறுகிறார் வசந்தி தேவி.

மேலும், அரசின் நிதி ஒதுக்கீடு குறைவதால் தனியார் கல்வி நிலையங்கள் எப்படி வளர்கின்றன என்பதைச் சொல்லியிருப்பதைக் குறிப்பிடும் அவர், பொதுவாகவே கல்வியில் தனியார் மயம், வணிகமயம் நிலவுவது குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நிறைய பேசியிருப்பதாகக் கூறினார்.

குறிப்பாக, "கோச்சிங் மையங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்தக் கொள்கை குறிப்பிடுவது முக்கியமானது. பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி, தமிழுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது, தேசிய கல்விக் கொள்கைக்கு மாறாக, பத்தாம் வகுப்பு வரை மையப்படுத்தப்பட்ட தேர்வு தேவையில்லை எனச் சொல்லியிருப்பதெல்லாம் வரவேற்கத்தக்கது."

ஆனால், "தற்போதைய கல்வியில் மிகப் பெரிய பிரச்சனை, அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஒரு வகுப்பில் பெற்றிருக்க வேண்டிய கற்றல் திறனைப் பெறாமல் இருக்கிறார்கள். தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு அரசு சலுகைகளை அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், கற்றல் திறன் பற்றிய அறிக்கைகளைப் பார்த்தால், தமிழகம் மிகவும் பின்னால் இருக்கிறது. இப்படிப் பின்தங்கியவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருக்கலாம்," என்கிறார் வசந்தி தேவி.

மேலும், "அறிக்கை எந்த அடித்தட்டுக் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அந்தக் குழந்தைகள் முழுக் கற்றல் திறன்களைப் பெற, பள்ளிகளில்தான் கூடுதல் கற்பித்தல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அவர்களுக்குக் கூடுதல் கற்பித்தல் குடும்பங்களில் இயலாது. அடித்தட்டுப் பெற்றோர்கள் மிகவும் குறைந்த கல்வி கற்றவர்களே. தனிப் பயிற்சி (tuition) பெறுவதற்கு அந்தக் குழந்தைகளுக்குச் செலவிட இயலாது. மனிதனை மனிதன் விழுங்கும் போட்டியுள்ள உலகில் இவர்கள் தலை எடுக்க முடியாது," எனவும் குறிப்பிட்டார்.

பி

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)