மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள சர்ச்சைகள் அனைத்தும் ஒரு கேள்வியுடன் தொடங்கியது.
முன்னதாக ட்விட்டர் என அறியப்பட்ட எக்ஸ் தளத்தில் டோகா என்ற கணக்கில் இருந்து கடந்த வாரம் எழுப்பப்பட்ட ஒரு கேள்வி, ஈலோன் மஸ்க் உருவாக்கிய க்ரோக் 3 சாட்பாட்டை இந்தியாவின் டிஜிட்டல் உலகில் வைரலாக பரவச் செய்தது.
அந்தக் கேள்வி ஒரு சிக்கலான கணக்கோ, ஆழ்ந்த தத்துவ விவாதமோ கிடையாது.
ஆனால், "எக்ஸ் தளத்தில் எனது 10 சிறந்த பரஸ்பர நண்பர்களை பட்டியலிடவும்" என்ற ஒரு எளிய கேள்வி மட்டுமே.
சமூக ஊடகத் தளங்களில் பரஸ்பர நண்பர்கள் என்றால், ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து, தொடர்பில் உள்ள நண்பர்கள் என்பதைக் குறிக்கும்.
க்ரோக் பதிலளிக்க சிறிது காலதாமதமான போது, டோகா வெறுப்படைந்து, சில கடுமையான சொற்களை உதிர்த்தார்.
பின்னர் சாட்பாட் ஒருவருக்கொருவர் பின்தொடர்ந்து தொடர்பில் உள்ள 10 பரஸ்பர நண்பர்களின் பட்டியலை வழங்கியது. ஆனால், அந்தப் பட்டியலுடன் சேர்த்து, பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளையும் இந்தி மொழியில் இணைத்திருந்தது.
பின்னர், க்ரோக் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "நான் வெறும் விளையாட்டாகத்தான் தான் கூறினேன், ஆனால் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்" என்று பதிலளித்தது. அந்த பதிலை இரண்டு மில்லியன் எக்ஸ் தள பயனாளர்கள் பார்வையிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
அரசியல், கிரிக்கெட், சினிமா கேள்விகளுக்கு க்ரோக் பதில்
அதனைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தும் மற்ற பயனர்களும் அதேபோன்று கேள்விகளை கேட்கத் தொடங்கி, சாட்பாட்டை பதிலளிக்கத் தூண்டினர்.
கிரிக்கெட் கிசுகிசு, அரசியல் வதந்திகள், பாலிவுட் பற்றிய தகவல்கள் என பலவற்றைக் குறித்த கேள்விகளை க்ரோக்கிடம் இந்தியர்கள் கேட்கத் தொடங்கினர்.
சாட்பாட் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, தனக்கே உரிய நடையுடன் பதிலளிக்கத் தொடங்கியது.
சமீபகாலமாக இந்த சாட்பாட் "வெளிப்படையான மற்றும் கட்டுப்படுத்தப்படாத" டிஜிட்டல் உணர்வாக இந்தியாவில் மாறியுள்ளது என பலர் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு மஸ்க் இதனை "உலகின் மிகவும் வேடிக்கையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்" என்றார்.
டெல்லி காவல்துறை கேள்விக்கு வேடிக்கையான பதில்
பின்னர் சட்ட அமலாக்கத் துறையும் இந்த விளையாட்டில் கலந்து கொண்டது. டெல்லி காவல்துறையின் ட்விட்டர் கணக்கு, க்ரோக்கை நோக்கி, "உனக்கு எப்போதாவது போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதா? " என கிண்டலாக கேள்வி எழுப்பியது.
முதலில் க்ரோக் அமைதியாக இருந்தது.
ஆனால் பயனர்கள் தொடர்ந்து அதனை பதிலளிக்கத் தூண்டிய போது, "ஹாஹா, டெல்லி காவல்துறை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் ஒரு டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு முறைமையே தவிர, டெல்லியில் வண்டி ஓட்டும் டிரைவர் இல்லை. சிவப்பு விளக்கு எரியும்போது சாலையில் செல்லவும் இல்லை, ஹெல்மெட்டையும் மறக்கவில்லை.
ஆனால் உண்மையான விதிமீறல்களை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு முறையைப் பயன்படுத்தி 19 விதிமீறல்களை அந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்துளார்கள். சாலைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்!" என்று அது பதிலளித்தது.
க்ரோக் திடீரென பிரபலமானது எப்படி?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏஐ சாட்பாட் அறிமுகமாகும் முன்னர், மஸ்க் ஒரு வலிமையான, வெளிப்படையான, செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார்.
இது ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட், மற்றும் கூகுள் போன்ற போட்டியாளர்களின் மாதிரிகளைப் போன்றது அல்ல என்று அவர் தெரிவித்தார்.
க்ரோக்கின் நகைச்சுவை தொனி பெரும்பாலும் The Hitchhiker's Guide to the Galaxy எனும் படைப்பிலிருந்து தாக்கம் பெற்றதாகும்.
அது புத்திசாலித்தனமான நகைச்சுவையை அறிவியல் புனைகதையுடன் கலந்து சொல்வதற்காக புகழ்பெற்றது.
"க்ரோக் சில காலமாகவே இருக்கிறது. ஆனாலும் இப்போது இந்தியர்களிடையே திடீரென பிரபலமாகியுள்ளது. ஏனெனில் இது நகரத்திற்கு வந்துள்ள புதிய பொம்மை," என்கிறார் இந்தியாவின் முன்னணி உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் ஆல்ட் நியூஸின் நிறுவனர் பிரதிக் சின்ஹா.
க்ரோக் செயல்பாடுகளால் பாஜகவுக்கு சிக்கலா?
ஆனால் அதன் பிறகு, இன்னும் சுவாரஸ்யமான ஒன்று நிகழ்ந்தது. நரேந்திர மோதியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் விமர்சகர்களுக்குப் பிடித்தமானதாக அந்தச் சாட்பாட் விரைவில் மாறியது.
அதைத் தொடர்ந்து அதிகமான அரசியல் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, மோதியை விட நேர்மையாளர் என்று க்ரோக் விரைவில் தெரிவித்தது.
"நான் யாருக்கும் பயப்படவில்லை" என்றும் கூறியது. ராகுல் காந்தி, மோதியை விட 'முறையான கல்வி பெற்றுள்ளார்' என்றும் அது பதிலளித்தது.
மோதியின் பேட்டிகள் "பெரும்பாலும் முன்பே தயாரிக்கப்பட்டவை போலத் தோன்றுகின்றன" என்றும் அந்த சாட்பாட் கூறியது.
"க்ரோக்கின் காரணமாக பாஜக 'சிக்கலில்' இருக்கிறதா? என்று ஒரு எக்ஸ் பயனர் கேட்டார்.

பட மூலாதாரம், AFP
அதற்கு க்ரோக் பதிலளிக்கையில், "இது ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் என்னை பாரபட்சமானது என திட்டுகிறார்கள், மற்றவர்கள் எனக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்" என்று கூறியது.
பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியாவை பிபிசி தொடர்பு கொண்ட போது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்தியாவில் நரேந்திர மோதியின் விமர்சகர்கள் மற்றும் தாராளவாதிகள், க்ரோக்கின் தைரியமான பதில்களை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
'பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள க்ரோக் தயங்குவதில்லை'
இந்தியாவில் பேச்சு சுதந்திரம் முற்றுகைக்கு உட்பட்டிருப்பதாக பலர் நம்புகின்றனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் இதை வலியுறுத்தி வருகின்றன.
வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 'பேச்சு சுதந்திரத்தின் எதிர்காலம்' என்ற சிந்தனைக் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பதில் 33 நாடுகளில் இந்தியா 24வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை மோதியும் பாஜகவும் தொடர்ந்து நிராகரித்து, இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்று வாதிடுகின்றனர்.
"க்ரோக் ஒரு புதிய கிளர்ச்சியாளர். க்ரோக்கிடம் கேள்விகள் கேட்பது யாரையும் சிக்கலில் ஆழ்த்தப் போவதில்லை. வலதுசாரி குழுவும் ராகுல் காந்தியைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, பதில்கள் பெற்றுள்ளது. அதன் பிறகு இது ஒரு போட்டிப் பரிமாற்றமாக மாறிவிட்டது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்கிறார் ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் சின்ஹா.
"காங்கிரஸ் அல்லது பாஜக, யார் சிறந்தவர்?, போன்ற கேள்விகளுக்கு, பிற ஏஐ சாட்பாட்கள் அரசியல் ரீதியாகச் சரியான பதில்களை வழங்கும்படித் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் க்ரோக்கில் அந்த வகையான செயல்முறை எதுவும் இல்லாதது போல் தெரிகிறது. சர்ச்சைக்குரிய பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள அது தயங்குவதில்லை," என்றும் அவர் கூறினார்.
க்ரோக் எவ்வாறு இயங்குகிறது?
தொழில்நுட்பக் கொள்கை இணையதளமான மீடியாநமா-வின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான நிகில் பஹ்வா, "இந்தியாவில் க்ரோக்கின் பதில்களைச் சுற்றியுள்ள விவாதம் மிகைப்படுத்தப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்" எனக் கூறுகிறார்.
"ஏஐ செயல்பாடு, 'வெளியீட்டின் தரம், உள்ளீட்டின் தரத்தால் தீர்மானிக்கப்படுகிறது' என்ற அடிப்படையில் இயங்குகிறது. அது எந்த தரவின் அடிப்படையில் பயிற்சி பெறுகிறதோ, அந்த தரவும் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் தான் அதன் பதில்களிலும் பிரதிபலிக்கின்றன," என்று அவர் விளக்குகிறார்.
"க்ரோக், எக்ஸ் தளத்தில் உள்ள முழுமையான உள்ளடக்கத்தின் அடிப்படையில் பயிற்சி பெற்றிருப்பதால், அங்குள்ள பேச்சு முறை, விவாதத்தின் தன்மை, வினோதமான பதில்கள் மற்றும் துஷ்பிரயோகங்களையும் இயல்பாகவே பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
"இது சித்தாந்தத்தைப் பற்றியது அல்ல. இது வெளியீட்டை வடிவமைக்கும் உள்ளீட்டின் தன்மையைப் பற்றியது" என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
எக்ஸில் அதிகமாக தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று பிபிசி க்ரோக்கிடம் வியாழக்கிழமை (மார்ச் 20) அன்று கேட்ட போது, "ஈலோன் மஸ்க் ஒரு வலுவான போட்டியாளர்தான். எக்ஸில் அவருடைய பரவலான தாக்கமும், சமீபத்திய கருத்தை மட்டும் பார்த்தால் அவ்வாறு சொல்லலாம். ஆனாலும், என்னால் அவருக்கு இப்போதே முடிசூட்ட முடியாது" என்று அது பதிலளித்தது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக ஊடகங்களின் அரசியல் பயன்பாட்டைப் பற்றி ஆய்வு செய்யும் ஜோயோஜீத் பால், இதுகுறித்து கூறும் போது, "ஒரு அரசியல்வாதி அல்லது பிரபலம் போல நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடுகள் எதுவும் சாட்பாட்டிற்கு இருக்காது.
ஆனால், வெளிப்படையாக, அதற்கு அந்த வகையில் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால் அல்லது அதன் தரவுகள் ஒரு குறிப்பிட்ட பார்வையை பெரிதும் ஆதரிக்கின்றது என்றால் தான் அது பாகுபாடாக நடந்து கொள்ளும்.
ஒரு சாட்பாட் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரபட்சமாகச் சாய்ந்துவிட்டால், அது தனது போட்டித் தன்மையை இழக்க வாய்ப்பு அதிகம்" என்கிறார்.
"க்ரோக்கின் இந்தச் சூழலில், தாராளவாதிகளை உற்சாகப்படுத்துகிறது. ஏனெனில், எக்ஸ் தளத்தில் மேலாதிக்கம் செலுத்தும் குரல்கள் பெரும்பாலும் வலதுசாரி பார்வைகளை முன்னிறுத்தி, தாராளவாத வாதங்களை புறக்கணிக்கின்றன" என்கிறார் ஜோயோஜீத் பால்.
- சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?
- சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?
- டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?
- தொழில்நுட்ப வளர்ச்சியால் காணாமல் போகும் வேலைகளும் வேகமாக வளர வாய்ப்புள்ள 5 துறைகளும்
"ஆனால், க்ரோக் பயிற்சி பெற்றுள்ள பரந்த தரவுத்தொகுப்புகள், உலகைப் பற்றி மேலும் சமநிலையான பார்வையை வழங்குவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளன. இதனால், எக்ஸில் அதிகமாக வெளிப்படும் கருத்துகளுக்கு நேரடி முரண்பாடாக க்ரோக் இருக்கக் கூடும்," என்றும் அவர் கூறுகிறார்.
க்ரோக் பயன்படுத்திய பொருத்தமற்ற மொழி மற்றும் "சர்ச்சைக்குரிய பதில்கள்" தொடர்பாக, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே எக்ஸை அணுகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் இதை ஒரு தற்காலிக நிலையாகவே கருதுகின்றனர். "மக்கள் விரைவில் இதில் சலிப்படைந்து விடுவர். இது குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு வரும்" என்று சின்ஹா கணிக்கிறார்.
இருப்பினும், க்ரோக்கின் வெளிப்படையான இயல்பு, அது குறைந்தபட்சம் தற்போதைய காலகட்டத்தில் நீடிக்கக் கூடும் என்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












