தொழில்நுட்ப வளர்ச்சியால் காணாமல் போகும் வேலைகளும் வேகமாக வளர வாய்ப்புள்ள 5 துறைகளும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஓலெக் கார்பியாக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தொழிலாளர் சந்தை முன்னெப்போதையும்விட வேகமாக மாறி வருகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேலைகள் நாளை இல்லாமல் போகலாம்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய ஆய்வுப்படி, தொழிலாளர் சந்தையில் இரண்டு முக்கியக் காரணிகள் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.
- புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
- பசுமைப் பொருளாதாரம் மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய இயக்கம்
மீப்பெரும் தரவு(Big Data), கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஏற்படும் விரைவான முன்னேற்றம் தொழிலாளர் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் நல்ல செய்தி என்னவென்றால், புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும். சில வேலைகளை அழித்து, பல வாய்ப்புகளை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வணிகம் குறைவான வளங்களைக் கொண்டு அதிக உற்பத்தியை அடையும் போது அது இயல்பாகவே விரிவடைகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உலகப் பொருளாதார மன்றத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போது இருக்கும் தொழில்களில் கிட்டத்தட்ட கால் பகுதி மாறிவிடும் என்று கூறுகிறார்கள்.
அதிக போட்டி நிலவும் தொழிலாளர் சந்தையில் நிலைத்திருக்க ஒருவர் தொடர்ந்து புதிய திறன்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். அதோடு, ஏற்கெனவே உள்ள திறன்களை மேம்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ள 5 துறைகளும் காணாமல் போகும் வேலைகளும் என்ன? அதற்காக வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் என்ன?
தலைசிறந்த திறன்கள்
தொழில்நுட்ப ரீதியான கல்வியறிவு என்பது புதிய வேகமெடுக்கும் தொழிலாளர் சந்தையில் போட்டியிடுவதற்கான முக்கியத் திறன்களில் ஒன்று.
அதற்காக எல்லோரும் நிரல் தொகுப்பு மொழி (Programming language) பயில வேண்டும் அல்லது இயந்திர கற்றலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் எதிர்காலத்தில், STEM சார்ந்த வேலைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
`STEM’ என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் தனித்துவமான, ஆனால் தொடர்புடைய தொழில்நுட்பத் துறைகளை ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். (Science, Technology, Engineering and Math - STEM)
எனவே, எதிர்காலத்துக்கு ஏற்றவாறு உங்கள் குழந்தை பள்ளியில் எந்தெந்தப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் யோசித்தால் இதோ அதற்கான பதில்: கணிதம், கணினி அறிவியல் மற்றும் அறிவியல்.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: பகுப்பாய்வு சிந்தனைத் திறன் (analytical thinking). அதை மேம்படுத்த, ஒருவர் அறிவாற்றல் திறன்களை மெருகூட்ட வேண்டும். வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்யும்போது அதன் வடிவங்களைக் கூர்ந்து கவனிக்கும் திறன் வேண்டும். நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தகவல்களை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்த, நீங்கள் கவனமாக எல்லாவற்றையும் உற்றுநோக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கேட்ஜெட்டுகள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்ந்து நம் கவனத்திற்காகப் போராடுகின்றன. மேலும் தகவல்களைத் தவறவிடும் பயத்தை ஒருவருக்குத் தூண்டுகின்றன. இதை FOMO, அல்லது "fear of missing out" என்பர்.
பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்த ஆர்வம் மற்றும் சுய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் முக்கியப் பங்கு வகிக்கும். தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆங்கிலத்தை உயர்மட்ட நிலைக்கு ஏற்றவாறு கற்றுக் கொள்வது மிகவும் மதிப்புமிக்க திறமையாகும்.
படைப்பாற்றல் மிகவும் முக்கியம். அறிவியல், பொறியியல், வடிவமைப்பு அல்லது கலை ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வி அறிவைப் படைப்பாற்றலுடன் இணைத்து நிர்வகிக்கும் நபருக்கு கண்டிப்பாக அசத்தலான பதவி உயர்வு கிடைக்கும்.

பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் தொடர்பு மற்றும் ஒத்துணர்வு (empathy) ஆகியவை இரண்டும் மிக உயர்ந்த மதிப்புமிக்க திறன்களாக இருக்கும்.
இயந்திரங்கள் எவ்வளவு வேகமாக மேம்பட்டாலும், மனிதர்களுக்கு எப்போதும் சக மனிதர்களின் தேவை இருக்கும். கவனம், குழுவாக இணைந்து பணி செய்யும் திறன், கேட்கும் திறன், கதை சொல்லும் திறன், ஆதரவு, அனுதாபம் ஆகிய பண்புகள் அதிகமாக மதிக்கப்படும்.
கடந்த 2020இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, தொழில் வல்லுநர்களுக்கான சமூக ஊடகமான LinkedInஇல், தகவல் தொடர்பு என்பது இன்றைய தொழிற்சந்தையில் மிகவும் தேவைப்படும் திறனாக மாறியுள்ளது.
"பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் பயன்பாடு, வளர்ந்து வரும் தொலைதூரப் பணியாளர் முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கின்றன. ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புகொள்வது, மற்றவர் சொல்வதைக் கேட்பது மற்றும் உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வது இதற்கு முன் எப்போதும் மிக முக்கியமானதாக இருந்ததில்லை. ஆனால் இனி இது அவசியம்” என்று பணியிடத் திறமை மற்றும் உரையாடல் நிபுணர் டான் நெக்ரோனி கூறுகிறார்.
புதிய தொழில்நுட்பங்கள்
தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய தொழில்களில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் வளர்ச்சி அதிக வேலை வாய்ப்புகளைக் கொண்டு வரும்.
இந்தத் துறையில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தொழில்களில் ஒன்று, ப்ராம்ட் இன்ஜினியரிங் (prompt engineer). இத்துறை நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் தொடர்புகொண்டு, அதன் தேவையானவற்றை சரியாக உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வகையான இடைத்தரகராகச் செயல்படவும் உதவுவார்கள்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான பிற சாத்தியமான வேலைகளில் நெறிமுறைவாதி (ethicists) பணியும் அடங்கும். அதாவது நெறிமுறைகள், பாதுகாப்பு பொறியியல் மற்றும் மனித-இயந்திர தொடர்புக்கான பயனர் நட்பு இடைமுகங்களை உருவாக்கும் பணிகளைச் செய்வது ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நபர்.

பட மூலாதாரம், Getty Images
செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, பிற தொழில்களைச் சேர்ந்தவர்கள் அதை ஒரு போட்டித் தொழிலாக கருதக் கூடாது. ஒரு கூட்டாளராக உணரவும், அதனுடன் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கியத்துவம் பெறும் மற்றொரு துறை, பெரிய தரவுகளின் பகுப்பாய்வு (analysis of big data), இது ஹாட்ரான் மோதல் (Hadron Collider) அல்லது கட்டுப்பாட்டு அமைப்புகளில் இருந்து நெட்ஃபிக்ஸ் போன்ற இணைய தளங்கள் வரையிலான தகவல்களின் தொகுப்பாகும்.
இணையப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு நிச்சயமாக வேலைக்குப் பஞ்சம் இருக்காது. ஏனென்றால் நம்மைச் சுற்றி மிகவும் முக்கியமான தகவல்கள் நிறைந்துள்ளன, அவற்றைப் பாதுகாப்பது முக்கியமான ஒன்று.
நிதி தொழில்நுட்பங்களில் வல்லுநர்கள், வணிக ஆய்வாளர்கள் மற்றும் பிளாக்செயின் அமைப்புகளை உருவாக்குபவர்களின் தேவையும் அதிகமாக இருக்கும்.
பசுமை வேலைகள் (Green jobs)
உலகப் பொருளாதார அமைப்பின் 2023 வேலை வாய்ப்பு அறிக்கைப்படி, பசுமை வேலைகளுக்கான தேவை, துறைகள் மற்றும் தொழில்களில் வேகமாக வளர்ந்து வருகிறது.
"உலகளவில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல், செயல்திறன் மற்றும் குறைந்த உமிழ்வு தொழில்நுட்பங்களில் 30 மில்லியன் வேலைகள் உருவாகலாம்" என்று அறிக்கை கூறுகிறது.
இப்போதைக்கு, பசுமை ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சியில் புதிய வேலை வாய்ப்புகளில் முன்னணியில் இருப்பது மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பான். சீனாவும் படிப்படியாக இத்துறையில் வளர்ந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வேலைகள் வணிகம், அறிவியல், அரசியல் அல்லது நேரடியாக சுற்றுச்சூழலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது புதிய எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பேட்டரிகளின் வளர்ச்சியில் பணிபுரியும் துறைகளுக்குள் இருக்கலாம். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாத்தல், வணிக ஆலோசனை கொடுப்பது ஆகிய துறைகளும் இதில் அடங்கும்.
நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள், கட்டடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகளை உருவாக்குபவர்களின் தேவையும் அதிகமாக இருக்கும்.
மருத்துவப் பணியாளர்கள்
உலக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. மக்களுக்கான கவனிப்பும் சிகிச்சையும் இன்னும் அதிகமாகத் தேவைப்படும். எனவே, எதிர்காலத்தில் மருத்துவ நிபுணர்களுக்கும் தேவை அதிகமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நோயாளிக்கு மருந்து மட்டுமல்ல, தார்மீக ஆதரவையும் வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மதிப்பு மிக்கவர்களாகப் பார்க்கப்படுவார்கள்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து புதிய நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு செயற்கை நுண்ணறிவும் உதவியாக இருக்கும்.
உளவியலாளர்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பல்வேறு வழிகாட்டிகள் அல்லது ஆன்மீக நடைமுறைகளைப் பயிற்றுவிப்பவர்களுக்கும் தேவைகள் இருக்கும்.
உடல் உழைப்பு தொழில்துறை
மெக்கானிக், ரிப்பேர்மேன், எலக்ட்ரீஷியன் அல்லது பில்டர்கள் போன்ற கைத்தொழில் செய்பவர்களுக்கான தேவை இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
வெவ்வேறு சூழ்நிலைகளில் சிறிய மற்றும் துல்லியமான பணிகளைச் செய்வது அவசியமானால், இயந்திரங்களைக் காட்டிலும் மனிதர்களின் தேவை ஈடுசெய்ய முடியாததாக இருக்கும்.
ஆனால் இந்த வல்லுநர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் மற்றும் புதிய ஸ்மார்ட் கருவிகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
விவசாயத்தில் புதிய தொழில்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, எல்லோரும் சாப்பிட வேண்டும். ஆனால் விவசாயிகளைவிட திறமையான பொறியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
முக்கியத்துவம் இழக்கும் வேலைகள்
தொழில் சந்தையில் இருந்து விரைவில் மறையத் தொடங்கும் பல வேலைகள் இருக்கின்றன.
தொழிலாளர் சந்தையில் இருந்து விரைவில் மறைந்துவிடக் கூடிய சாத்தியமான வேலைகளின் பட்டியல் இதோ:
- வாடிக்கையாளர் சேவை (காசாளர்கள், விற்பனையாளர்கள், ஆலோசகர்கள் முதலியன)
- அலுவலக மேலாண்மை (தொலைநிலைப் பணியின் அதிகரிப்பு காரணமாக)
- தரவு உள்ளீடு (புள்ளியியல் துறையில் எழுத்தர்கள், நிதி, தட்டச்சு செய்பவர்கள், தொழில்நுட்ப மொழிபெயர்ப்பாளர்கள்)
- கணக்கியல்
- ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் ஆலைத் தொழிலாளர்கள்
கதை சொல்லி
எதிர்கால தலைமுறையினரால் அரிதாகவே குறிப்பிடப்படும், ஆனால் எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி தேவைப்படும் மற்றொரு தொழில் கதைசொல்லுதல்.

பட மூலாதாரம், Getty Images
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்பட்டது போலவே, மனித அனுபவத்தைக் கடத்துவது தொடர்பான எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு இந்தத் துறைகளில் புதிய சவால்களைக் கொண்டு வந்தாலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் தேவை இருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












