இஸ்ரேல் - இரான் பகை மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் பதற்றத்திற்கு வித்திட்டது எப்படி?

இஸ்ரேல் இரான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மஹ்மூத் அல் நாகர்
    • பதவி, பிபிசி அரபிக்

இஸ்ரேல் மற்றும் பாலத்தீன அமைப்பான ஹமாஸ் இடையிலான போர் காரணத்தால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இப்போது இந்த மோதலில் இரான் மற்றும் அதனால் ஆதரவளிக்கப்படும் ஆயுதக்குழுக்களும் இணைந்துள்ளன.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இரான் தனது தலையீட்டை தெளிவாக மறுத்தாலும், ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் இரான் ஆதரவளிக்கவில்லை.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை “பேரழிவுகரமான பூகம்பம்” என இஸ்ரேல் விவரிக்கிறது.

இப்போது வரையிலும் இரான் இஸ்ரேலுடன் எந்தவொரு நேரடி மோதலிலும் ஈடுபடவில்லை. ஆனால், இஸ்ரேல் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரான் ஆதரவு குழுக்களின் இலக்காகவே இருந்து வருகிறது.

இரான் "எதிர்ப்பின் அச்சு" என்று அழைக்கும் இந்த குழுக்களில் லெபனானின் ஹெஸ்பொல்லா, ஏமனின் ஹூதி மற்றும் இராக்கில் உள்ள பல ஆயுதக் குழுக்களும் அடங்கியுள்ளன.

பெரும்பாலான இந்த குழுக்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகளால் தீவிரவாத அமைப்புகள் என கருதப்படுபவை ஆகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காஸா

பட மூலாதாரம், Reuters

ஹெஸ்பொல்லாவின் பங்கு

காஸாவில் நடந்து வரும் சண்டை, இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கு பின், “ஹமாஸுக்கு ஆதரவாக” ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை குறிவைக்க துவங்கியது.

அக்டோபர் 8 அன்று, ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில், ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் ஷெபா ஃபார்ம்ஸ் பகுதியின் மீது தாக்குதல் நடத்தியது.

இதன் பிறகு உடனடியாக, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஹெஸ்பொல்லா தனது ஆதரவை அறிவித்தது.

ஷெபா ஃபார்ம்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் ஹெஸ்பொல்லா கூடாரங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் நடத்திய இந்த பதிலடி தாக்குதலில் லெபனான் குடிமக்கள் காயமடைந்ததாக லெபனான் ராணுவம் கூறியது.

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமனின் ஹூதி குழுவின் உறுப்பினர் ஒருவர்

ஹூதி குழு

காஸா போர் துவங்கிய ஒரே மாதத்தில் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையில் ஏமனின் ஹூதி குழுவும் இணைந்தது.

நவம்பர் 14 அன்று, ஹூதி தலைவர் அப்துல் மாலிக் இஸ்ரேலிய நிறுவனங்களின் கப்பல்களை குறிவைத்து தாக்குவோம் என்று அறிவித்தார்.

பின்னர் ஹூதி குழு செங்கடலில் இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் குறிவைப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் உண்டானது. இதனால், கப்பல்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் சுற்றி மாற்று வழியில் பயணிக்க வேண்டி இருந்தது.

டிசம்பர் 2023 இல், இரண்டு இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி குழு கூறியிருந்தது.

இந்த இரண்டு கப்பல்களும் தங்கள் கடற்படையின் எச்சரிக்கையை புறக்கணித்ததாகவும் இதன் பின்னர் இஸ்ரேலிய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான கப்பலை கைப்பற்றியதாகவும் ஹூதிக்கள் கூறினர்.

இந்த ஆண்டு ஜனவரியில், ஏடன் வளைகுடாவில் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்கா ஏமன் மீது வான்வழி விமானத் தாக்குதல் நடத்தியது.

ஏமனின் மேற்கு மாகாணமான அல் ஹுதைதாவில் உள்ள ராஸ் இசா எண்ணெய் வயல் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் குறிவைத்ததாக ஹூதிக்கள் கூறினர். பிராந்தியத்தில் கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக இது இருந்தது.

ஹமாஸின் துணைத் தலைவர் சலே அல்-அரூரியின் இறுதி ஊர்வலம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹமாஸின் துணைத் தலைவர் சலே அல்-அரூரியின் இறுதி ஊர்வலம்

லெபனான் மீது தாக்குதலை துவங்கிய இஸ்ரேல்

லெபனான் மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ஜனவரி 2, 2024 அன்று, பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி கொல்லப்பட்டார்.

இஸ்ரேலின் கூற்றின்படி, சலே அல்-அரூரி ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருந்தார்.

ஒரு சில நாட்களுக்கு பின்னர், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருக்கும் மெரோன் விமான தளம் மீது ஹெஸ்பொல்லா 40 ராக்கெட்டுகள் ஏவி தாக்குதல் நடத்தியது. இது அரூரியின் கொலைக்கான ஆரம்பக்கட்ட பதிலடி என கூறப்பட்டது.

ஜனவரி 8 அன்று, இஸ்ரேல் நடத்திய மற்றுமொரு வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் ரத்வான் படையின் துணை தளபதி விஸ்ஸாம் அல்-தவில் கொல்லப்பட்டார். மெரோன் விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக விஸ்ஸாம் அல்-தவில் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பாதுகாப்புப் பணியாளர்கள் (கோப்புக்காட்சி)

ஜனவரி மாத இறுதியில், வடகிழக்கு ஜோர்டானில் சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த “டவர் 22” எனும் அமெரிக்கா ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமாடைந்தனர்.

இருப்பினும், ஜோர்டான் பிராந்தியத்தில் நடந்த டிரோன் தாக்குதலை ஜோர்டான் திட்டவட்டமாக மறுத்தது. ஜோர்டானின் கூற்றின்படி, இந்த தாக்குதல்கள் சிரியாவின் எல்லைப்பகுதிக்குட்பட்டு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சிரியாவில் செயல்பட்டு வரும் இரான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் மற்றும் இராக் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது என கூறியிருந்தார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமான அனைத்து குழுக்களுக்கும் தக்க பாடம் கற்பிக்கப்படும் என்றும் பைடன் உறுதியளித்திருந்தார்.

இந்த தாக்குதலுக்கு கதாயிப் ஹெஸ்பொல்லா மற்றும் சில இராக்கிய ஆயுத குழுக்கள் பொறுப்பேற்றன. அமெரிக்காவின் கூற்றின் படி, இதே இராக்கிய குழுக்கள்தான் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பாதுகாப்பின் கீழ் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த குழுக்கள் மீது இரான் எந்தளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பது பற்றி எதுவும் தெளிவாக கூற முடியாது.

இந்த தாக்குதலுக்கு காரணமான குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுவதை இரான் மறுத்தது.

டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

இரான் உடனான நேரடி மோதல்

ஒருபுறம், இஸ்ரேலின் இருப்பை இரான் மறுத்துவந்தாலும், இஸ்ரேலுடனான நேரடி மோதலை இரான் தவிர்த்து வந்தது.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில், இஸ்ரேல் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அம்மாதத்தின் இறுதியில், இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தனது முதல் நேரடி தாக்குதலை நடத்தியது இரான்.

இருப்பினும், பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையை அடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

காஸா முனை தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் ஒரு காட்சி

பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஆரம்பித்து ஜூலை மாத தொடக்கம் வரையிலும் ஹெஸ்பொல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது.

ஹெஸ்பொல்லா அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இதில் அதன் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

ஜூலை 7 அன்று ஹெஸ்பொல்லா மெரோன் விமான தளம் உட்பட வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் கடுமையான ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

அந்த மாதத்தின் பிற்பகுதியில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஹெஸ்பொல்லா பொறுப்பேற்கவில்லை. ஆயினும், இஸ்ரேல் பதிலடி அளிக்கும் வகையில் லெபனானில் ஏழு ஹெஸ்பொல்லா பகுதிகளில் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஜூலை மாதத்தில் ஏமனில் ஹூதி கட்டுப்பாட்டில் இருந்த செங்கடல் துறைமுகத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதன் மூலம், இரான் ஆதரவு ஹூதி உடன் இஸ்ரேல் தனது நேரடி தாக்குதலை துவக்கியது.

இந்த தாக்குதலில் 9 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல், இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு, 8 பேர் காயமடைந்த மறுநாளே நடந்தது ஆகும்.

ஜூலை மாதத்தில் மட்டுமே இரண்டு படுகொலைகள் நடந்தன. முதலாவது, பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் ராணுவ தளபதி ஃபுவாட் ஷுகர் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில், இரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கெடுக்க டெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

இதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் பதற்ற நிலையானது, பெரிய அளவில் நேரடி மோதலாக உருவெடுக்கலாம் என்ற விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவுகள் முழு பிராந்தியத்திலும் காணப்படுகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)