ராஜஸ்தான்: பள்ளியில் 2 மாணவர்களின் மோதல் மிகப்பெரிய வகுப்புவாத வன்முறையாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Mohar Singh Meena
- எழுதியவர், மோஹர் சிங் மீனா
- பதவி, ஜெய்பூரிலிருந்து, பிபிசி இந்திக்காக
நாடு முழுவதும் அறியப்பட்ட கன்ஹையா லால் கொலை வழக்குக்குப் பிறகு, ராஜஸ்தானின் உதய்பூர் மீண்டும் வகுப்புவாத பதற்றத்தால் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை உதய்பூர் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் பெரிதான நிலையில், அன்று மாலையில் தீ வைப்பு, கல் வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்கள் ஆகியவை நடைபெற்றன.
இதனால் எழுந்த அச்சத்தின் காரணமாக அந்நகரில் உள்ள பெரும்பாலான சந்தைகள் மூடப்பட்டன. இதற்கிடையில், நீண்ட வார விடுமுறை காரணமாக, பல மாநிலங்களில் இருந்து உதய்பூர் வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உதய்பூரை விட்டு வெளியேறிவிட்டனர்.
கடந்த கால வகுப்புவாத சம்பவங்களை கருத்தில்கொண்டு, நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவைகளையும் உதய்பூர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என, உதய்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதியில் 144 தடை விதித்துள்ளதுடன் வழிபாடு போன்ற மத நடவடிக்கைகளை வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்கியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் வீட்டை சட்டவிரோத கட்டுமானம் என்று கூறி, உதய்பூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை குழுவினர் புல்டோசர் மூலம் தகர்த்தனர். காவல்துறையினரின் முன்னிலையில் அம்மாணவரின் வீடு இடிக்கப்பட்டது.
மாணவரின் வீட்டில் இதுதொடர்பாக நோட்டீஸ் ஒன்றையும் அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
வீடு இடிக்கப்படுவதற்கு முன்பு, உள்ளே இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பிபிசியிடம் பேசிய உதய்பூர் நகர பாஜக எம்.பி. டாக்டர் மன்னா லால் ராவத், வீடு இருந்த பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
புல்டோசர் கொண்டு வீடு இடிக்கப்பட்டது குறித்து துங்கர்பூர்-பன்ஸ்வாரா எம்.பி. ராஜ்குமார் ரோட் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜ்குமார் ரோட் பிபிசியிடம் கூறுகையில், "உதய்பூர் நகரில் பள்ளி மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இன்று 18 வயதுக்குட்பட்ட சிறுவனின் வீட்டின் மீது புல்டோசரை இயக்கி பாஜக அரசு வகுப்புவாத விஷத்தைப் பரப்பியுள்ளது” என்றார்.
"சாதி மற்றும் மத அடிப்படையில் புல்டோசர்களை இயக்குவது நாட்டின் எதிர்காலத்தை வெறுப்புக்குள் தள்ளுகிறது." என தெரிவித்தார்.
என்ன நடந்தது?
உதய்பூரில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இரண்டு மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த மாணவரை சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பள்ளி ஆசிரியர்கள் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், இந்து அமைப்பினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நகரின் பல பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி கற்களை வீசத் தொடங்கினர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
படுகாயம் அடைந்த மாணவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானோர் திரண்டு வந்து கோஷங்களை எழுப்பினர். சனிக்கிழமை காலையிலும் ஏராளமானோர் மருத்துவமனை முன் திரண்டனர்.

பட மூலாதாரம், Mohar Singh Meena
காயமடைந்த மாணவருக்கு வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மாணவரிடம் நலம் விசாரித்தனர்.
உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மாணவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஜெய்ப்பூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மருத்துவர்கள் குழு உதய்பூர் வந்தடைந்துள்ளது. நகரில் தற்போது அமைதி நிலவுகிறது." என்றார்.
மாணவர்கள் மோதல் ஏன்?
ராஜஸ்தான் காவல்துறையின் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், மோதலுக்கான காரணத்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "இரு மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். அவர்களுக்கிடையே நோட்டுப் புத்தகங்கள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது." என்றார்.

பட மூலாதாரம், Mohar Singh Meena
"புத்தகத்தில் ஆரம்பித்த இந்த சண்டை, பின் இருவருடைய குடும்ப பின்னணி குறித்தும் வாக்குவாதமாக மாறியுள்ளது. பின்னர் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்கியுள்ளார்” என்றார்.
இரு மாணவர்களுக்கும் இடையே சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று பள்ளியில் மதிய உணவு நேரத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியுள்ளார்.
தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள்
இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், ஹாதிபோல், டெல்லி கேட், சேடக் சர்க்கிள் உள்ளிட்ட பல சந்தைகளை இந்து அமைப்புகள் மூடின.
அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது கற்கள் வீசப்பட்டு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைக்கப்பட்ட, குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தலங்களிலும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பான பல வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் பலர் கூட்டமாக திரண்டு கோஷங்களை எழுப்பி, பல்வேறு இடங்களை சேதப்படுத்துவதை காண முடிகிறது.
இந்த சம்பவம் குறித்து உதய்பூர் மூத்த பத்திரிகையாளர் உக்ரசென் ராவ் கூறும்போது, "மாணவர்களின் சண்டை, மத வெறியர்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. இச்சம்பவம் மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பட மூலாதாரம், Mohar Singh Meena
அவர் கூறும்போது, "அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் உதய்பூருக்கு தீங்கு விளைவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காவல்துறையிடம் அனைத்து சிசிடிவி காட்சிகளும் உள்ளன. பொதுமக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் யார் இதை செய்தார்களோ அவர்களுக்கு தனிப்பட்ட நலன்களோ அல்லது அரசியல் ஆதாயமோ இதில் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
உதய்பூரில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், "இந்த வன்முறையில் மக்கள் குறிவைக்கப்பட்டனர். சொத்துகள் நாசப்படுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டன" என்றார்.
ராஜஸ்தான் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) யு.ஆர். சாஹு பிபிசியிடம் கூறுகையில், "இப்போது நகரில் அமைதி நிலவுகிறது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. காழ்ப்புணர்ச்சி, தீ வைப்பு மற்றும் கல் வீச்சுகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
சேத விவரங்கள்
இந்நகரின் அழகை காண இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். ஏரிகளின் நகரம் என்றழைக்கப்படும் உதய்பூருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பண்டிகை நேரம் மற்றும் நீண்ட வார விடுமுறை காரணமாக, உதய்பூர் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீண்டும் திரும்பிச் செல்கின்றனர்.
கன்ஹையா லால் கொலை வழக்குக்குப் பிறகு, அந்நகரில் காலப் போக்கில் மத நல்லிணக்கம் ஏற்பட்டது. ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த நகரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
ஹோட்டல் தொழிலுடன் தொடர்புடைய ககன் ஷர்மா கூறுகையில், "நீண்ட வார விடுமுறை என்பதால், அனைத்து ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இச்சம்பவத்திற்கு பிறகு ஹரியானா, குஜராத், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான வாகனங்கள் உதய்பூரில் இருந்து வெளியேறின. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் உதய்பூரை விட்டு வெளியேறினர்” என்றார்.

பட மூலாதாரம், Mohar Singh Meena
இந்த சம்பவத்தையடுத்து நகரில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது.
ககன் ஷர்மா கூறும்போது, "இச்சம்பவத்தால் உணவகத் தொழில் அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. உணவகங்கள் அடுத்த சில நாட்களுக்கு மூடப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நீண்ட வார விடுமுறை நாட்களின் எதிர்பார்ப்புகள் தகர்க்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், 15 முதல் 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
மூத்த பத்திரிகையாளர் உக்ரசென் ராவும் இதுபோன்ற சம்பவங்களால் உதய்பூர் மக்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என நம்புகிறார்.
“உதய்பூர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த இழப்பை உதய்பூர் மக்களே ஏற்படுத்தியிருக்கின்றனர்” என்கிறார்.
“இதனால் சுற்றுலாத் துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு வரவிருந்தவர்கள் தங்கள் வருகையை ரத்து செய்துவிட்டனர். சந்தையிலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது” என்றார் அவர்.
காவல்துறை கூறியது என்ன?
உதய்பூர் பிரிவின் கோட்ட ஆணையர் ராஜேஷ் பட் கூறும்போது, "உதய்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகர் குறித்த நல்ல பிம்பத்துடன் வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தற்போது நகரில் அமைதி நிலவுகிறது. மேலும் சில சந்தைகளும் திறக்கப்பட்டுள்ளன." என்றார்.
பிபிசியிடம் பேசிய அவர், "நேற்றிரவுக்குப் பிறகு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அமைதியான சூழல் நிலவுகிறது" என்றார்.
ராஜேஷ் பட் கூறுகையில், “காயமடைந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணிநேரமும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வருகின்றன. அவரது உடல்நிலை முன்பை விட சிறப்பாக உள்ளது. மாநில அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் (சிறுநீரக மருத்துவர்) அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.

பட மூலாதாரம், Mohar Singh Meena
மேலும் அவர் கூறுகையில், “மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரு தரப்பினரிடமும் பேசினோம். அனைத்து மதத் தலைவர்களிடமும் பேசினோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என அனைவரும் விரும்புகின்றனர்." என்றார்.
ராஜஸ்தான் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) யு.ஆர். சாஹு பிபிசியிடம், "அருகிலுள்ள பகுதிகளில் இருந்து போலீஸ் படைகள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கத்தியால் குத்திய மாணவர் தடுப்பு காவலில் உள்ளார், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். நாச வேலை மற்றும் தீ வைப்பு சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த சம்பவம் நடந்ததில் இருந்து உதய்பூர் பிரிவு ஐ.ஜி. அஜய் பால் லம்பா நகரின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். சனிக்கிழமை காலை அவர் மீண்டும் நகரின் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.
“தற்போது மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் அமைதி நிலவுகிறது, சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் போலீசார் தடுப்புகளை அமைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
நிலைமை மோசமடைவதைக் கண்டு, மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலைக்குள் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இணையதள சேவையை நிறுத்தியது.
சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரு தரப்பு மக்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் காவல் துறையினர் கூட்டம் நடத்தி அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர்.
காயமடைந்த மாணவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஜெய்பூரில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு உதய்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Mohar Singh Meena
உதய்பூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. உதய்பூர் நகரில் 144 (புதிய திருத்தப்பட்ட சட்டப் பிரிவு 163) தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் இடைநிலைக் கல்வி இயக்குநர் ஆஷிஷ் மோதி, பள்ளிகளில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு வருவதற்குத் தடை விதித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
அரசியல் கட்சியினர் கூறுவது என்ன?
மக்கள் அமைதி காக்குமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் பஜன் லால் சர்மாவின் அறிக்கையை அவரது ஊடக குழுவைச் சேர்ந்த ஆனந்த் சர்மா பிபிசிக்கு அனுப்பினார்.
அந்த அறிக்கையில், "அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை உறுதி செய்யவும் உதய்பூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஐந்து ராஜஸ்தான் ஆயுதக் காவல் படைகள் (ஆர்.ஏ.சி) உதய்பூர் மாவட்டத்திற்கு விரைய காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், உதய்பூர் பிரிவு ஐஜியுடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து தகவல் பெற்றார்.
அமைதியை நிலைநாட்டுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், "உதய்பூரில் நிலவும் வகுப்புவாத பதற்றம் காரணமாக நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும்.” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திக்காராம் ஜூலி பேசுகையில், "வதந்திகளைப் பரப்பும் தீய சக்திகளைக் கட்டுப்படுத்தி, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட அரசு மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்" என்றார்.
உதய்பூர் நகர எம்.பி. மன்னா லால் ராவத் பிபிசியிடம் தொலைபேசியில் கூறுகையில், "இச்சம்பவம் மிக தீவிரமானது. இரு மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அந்த மாணவர்களில் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், நகரின் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












