மேட்டூர் அணை வரலாறு: திருமலை நாயக்கர் கோட்டையை மூழ்கடித்து கட்டப்பட்ட பிரமாண்ட அணை

மேட்டூர் அணை
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மேட்டூர் அணை நிரம்புவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாகக் கவனிக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய இந்த அணை எதற்காகக் கட்டப்பட்டது, இதன் வரலாறு என்ன?

மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டும்போதும் முழு உயரமான 120 அடியை எட்டும்போதும் அந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெறுகிறது.

ஒரு அணை இந்த அளவு கவனத்தைப் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மட்டுமல்ல; இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றும்கூட.

மேட்டூர் அணையின் வரலாறு

காவிரியில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் டெல்டா பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே விவசாயம் நடந்து வந்தது.

ஆனால், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியால் பாசனம் நடந்து வந்த பல இடங்களில் கால்வாய்கள் தூர்ந்து போயிருந்தன. இந்தக் கட்டத்தில்தான் அதாவது, 1801இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்தத் தருணத்தில் டெல்டா பகுதியில் பாசன வசதிகள் மிகவும் மோசமடைந்திருந்ததாக சேலம் மாவட்ட கெஸட்டியர் கூறுகிறது. கால்வாய்கள் தூர்ந்து போயிருந்ததால், பல இடங்களில் தண்ணீரின்றி விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது.

கிழக்கிந்திய கம்பெனி விவசாயத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுக்குப் பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், சென்னை மாகாணத்தில் நீர்ப்பாசன பொறியாளராகப் பணியாற்றி வந்த சர் ஆர்தர் தாமஸ் காட்டன், காவிரியின் மீது தனது கவனத்தைத் திருப்பினார்.

இவரது முயற்சியில் 1834இல் திருச்சிக்கு அருகில் முக்கொம்பில் மேலணை கட்டப்பட்டது. இதற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன. கல்லணையில் 1887-89இல் ரெகுலேட்டரும் பொருத்தப்பட்டது.

இதையடுத்து இந்த அணைக்குக் கிழக்கே உள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு, அந்தப் பகுதியில் இருந்த மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை உயர ஆரம்பித்தன.

இதைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு, காவிரியின் குறுக்கே ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டி நீரைத் தேக்கினால், அது பாசனத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என உணர்ந்தது.

மேட்டூர் அணை
படக்குறிப்பு, காவிரியின் குறுக்கே ஒரு அணையைக் கட்டலாம் என்ற யோசனை 1910 வாக்கில் ஏற்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக ஆங்கில அரசு உடனடியாக முடிவெடுக்கவில்லை. பல ஆண்டுகள் இது தொடர்பான வாத - பிரதிவாதங்கள் நடந்தன. முடிவில், ராயல் பொறியாளரான கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸ் மேட்டூரில் காவிரிக்குக் குறுக்கே ஒரு அணையைக் கட்டலாம் என முன்வைத்த யோசனை 1910வாக்கில் ஒரு வழியாக ஏற்கப்பட்டது.

ஆனால், அணையைக் கட்டும் பணிகள் துவங்குவதற்கு முன்பாக முதல் உலகப் போர் வெடித்தது. இதற்குப் பிறகு மைசூர் அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது.

மைசூருக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1924இல் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், 1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சென்னை மாகாண ஆளுநர் 2வது விஸ்கவுன்ட் கோஸ்சென் முன்னிலையில் பணிகள் துவங்கின.

மேட்டூர் அணை முதலில் திட்டமிடப்பட்டப்போது, தற்போது அணை இருக்கும் இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் தள்ளி இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

ஆனால், 1924ஆம் ஆண்டு காவிரியில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போதுதான், முன்பு திட்டமிட்டதைவிடக் கூடுதல் நீரைத் தேக்கும் வகையில் அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தற்போதுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடியே 37 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, வரி வருவாய் உயர்வதன் மூலம், செய்யப்பட்ட முதலீட்டிற்கு 6 சதவீதம் அளவுக்குப் பலன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த அணையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் உருவாகும் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது போன்றவற்றைக் கணக்கிடும்போது இந்த வருவாய் மிகக் குறைவுதான்.

இந்த அணைக்கான செலவைத் திட்டமிடும்போது, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிக்கான செலவு, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களின் வீடுகளுக்கான செலவு, கால்வாய்கள், இயந்திரங்கள், ஓய்வூதியம், இவ்வளவு ஏன் வரைபடம் உள்ளிட்ட காகிதங்களுக்கு ஆகும் செலவுகள்கூட துல்லியமாகக் கணக்கிடப்பட்டன.

இந்த அணையைக் கட்ட 2,16,000 டன் சிமென்ட் தேவைப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிமென்ட்டை எடுத்துவர, சேலத்தில் இருந்து மேட்டூர் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. அந்த ரயில் பாதைக்கான செலவின் ஒரு பகுதி மேட்டூர் திட்டச் செலவிலிருந்தே அளிக்கப்பட்டது.

குக்கிராமமாக இருந்து மாவட்டமாக உருவெடுத்த மேட்டூர்

அணை கட்டப்படுவதற்கு முன்பாக மேட்டூர் ஒரு குக்கிராமம். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 37 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து மேட்டூரை வந்தடைய மண் சாலைதான் இருந்தது.

அணை குறித்த நேரத்தில் கட்டப்பட வேண்டுமென்றால், அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தங்கும் அளவுக்கு ஒரு சிறிய நகரத்தையாவது மேட்டூரில் உருவாக்க வேண்டியிருந்தது.

இதையடுத்துதான் பொருட்களை எடுத்துவர, சேலத்தில் இருந்து ஒரு ரயில் பாதையும் தார் சாலையும் போடப்பட்டது. இதற்குப் பிறகு, அணையின் பணியாளர்களுக்காக வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டது. மொத்தமாக 10,000 பேர் தங்கும் அளவுக்கான வீடுகள் இதற்காகக் கட்டப்பட்டன. ஒரு குக்கிராமம், ஒரு சிறு நகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது.

மேட்டூர் அணையின் வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது (கோப்புப்படம்)

மேட்டூர் டவுன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளுடன் இந்தச் சிறுநகர் உருவாக்கப்பட்டது. மைசூர் அரசுக்கு உட்பட்டிருந்த சிவசமுத்திரத்தில் இருந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இங்கு வசித்த மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் மிகப்பெரிய வாரச் சந்தை கூடியது.

நிலம் எடுக்கும் பணிகளுக்காக, மேட்டூர் ஒரு தனி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணை அமையும் இடம், அணையின் நீர் தேங்கும் இடம், தொழிலாளர்களின் கேம்ப், மின் நிலையம், ஒர்க் ஷாப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால், இந்த அந்தஸ்து நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நில எடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, 1929 ஜூலையில் மேட்டூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது.

நீரில் மூழ்கிய திருமலை நாயக்கர் கோட்டை

அணை கட்டப்படும் இடத்தில் காவேரிபுரம் என்ற ஊர் ஒன்று இருந்தது. அணை கட்டப்பட்ட தருணத்தில் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர்.

சிதிலமடைந்த நிலையில் ஒரு கோட்டையும் ஒரு சிவன் கோவிலும் இந்தக் கிராமத்தில் இருந்தன. மைசூருக்கு செல்லும் கணவாயின் துவக்கத்தில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது.

மைசூரிலிருந்து வரும் படையெடுப்பைக் கண்காணிக்க, திருமலை நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 1768இல் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஹைதர் அலி அதைக் கைப்பற்றினார்.

மைசூர் போர் நடந்த காலம் நெடுகவே இந்தக் கோட்டை வியூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முடிவில், இந்தக் கோட்டை ஊரோடு சேர்ந்து மேட்டூர் அணையில் மூழ்கியது.

மேட்டூர் அணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேட்டூர் மாவட்டம், 1929 ஜூலையில் சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது (கோப்புப்படம்)

சோழப்பாடி, நெருஞ்சிப்பேட்டை, சம்பள்ளி ஆகிய கிராமங்களும் அணையின் நீரில் மூழ்கின.

பணிகள் இடைவிடாமல் நடந்ததில், 1934இல் அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணையால் உருவாகும் நீர்த்தேக்கத்திற்கு, அப்போதைய சென்னை மாகாண ஆளுநரான கர்னல் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லியின் பெயர் சூட்டப்பட்டு, அணை பயன்பாட்டிற்கு வந்தது.

மேட்டூர் அணையின் உயரம் 120 அடி. நீளம் 1,700 மீட்டர். 59.25 சதுர மைல் பரப்பிற்கு இந்த அணையில் நீர் தேங்குகிறது. தற்போதும் மேட்டூர் அணை, இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்று. 93.5 டி.எம்.சி. நீரை இந்த அணையில் தேக்க முடியும். இது கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவைவிட இரு மடங்கு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)