குரங்கம்மை நோய்க்கு என்ன சிகிச்சை? யாரை அதிகம் பாதிக்கும்? 5 கேள்விகளும் பதில்களும்

எம்பாக்ஸ் தொற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

எம்பாக்ஸ் (குரங்கம்மை) பரவல் எச்சரிக்கை மணியாக உருவெடுத்துள்ளது.

ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொடிய நோய்த் தொற்றான எம்பாக்ஸ் உலக சுகாதார அமைப்பால் சர்வதேச சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று, சுவீடன் நாட்டு சுகாதார அதிகாரிகள் ஐரோப்பாவில் முதல் எம்பாக்ஸ் தொற்று பதிவானதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் முதல் எம்பாக்ஸ் தொற்று பதிவானதும் உறுதியானது.

ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி 2024இல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 17,541 எம்பாக்ஸ் நோய்த்தொற்று பதிவாகி இருப்பதாகவும், 517 இறப்புகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனினும், காங்கோ ஜனநாயக குடியரசில் மட்டுமே 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதோடு இந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதன்படி, இதுவரை 548 பேர் எம்பாக்ஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக ஏ.பி செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனெரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இது மேலும் மோசமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும், ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச எதிர்வினை தேவை எனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரகடனத்துடன், ஐ.நா சபையுடன் இணைந்த அமைப்புகள் ஆராய்ச்சி மற்றும் நிதியுதவிகளைத் துரிதப்படுத்தவும், புதிய சர்வதேச பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது, அதனால் நாம் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டு வருகிறோம் என்பது குறித்து, மேலும் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

1. எம்பாக்ஸ் எவ்வளவு ஆபத்தானது?

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்பிரிக்கா முழுவதும் எம்பாக்ஸ் வைரஸ் பரவுவதால், இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு "சர்வதேச சுகாதார அவசரநிலையை" அறிவித்துள்ளது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, எம்பாக்ஸ் நோய் பெரியம்மையை ஏற்படுத்தும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடிய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

எம்பாக்ஸ் ஒரு விலங்குவழி நோய் (zoonotic disease). இது விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்குப் பரவக்கூடியது. தற்சமயம் இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் பரவி வருகிறது. இந்தப் பகுதிகளில்தான் இது உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதிகளில் வாழும் சிறிய கொறித்துண்ணிகள், குரங்குகள் மற்றும் பிற பாலூட்டிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று ஏற்பட்ட 21 நாட்களுக்குள் தடிப்புகள், காய்ச்சல், தொண்டை வறட்சி, தசை வலி, போதிய ஆற்றலின்மை போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.

மேலும், வலி மற்றும் எரிச்சலூட்டக்கூடிய சரும தடிப்புகளும் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடிப்புகள் மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் மறைந்துவிடும். இவை உள்ளங்கை, உள்ளங்கால், முகம், வாய், தொண்டை, பிறப்புறுப்பு, ஆசனவாய் போன்ற பகுதிகளில் தோன்றும்.

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்பாக்ஸ் நோயின் அறிகுறிகள் கோவிட்-19 மற்றும் சின்னம்மை அறிகுறிகளைப் போலவே இருப்பதால், அதைக் கண்டறிவது கடினம்.

எம்பாக்ஸ் பொதுவாக உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்ல என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. இருப்பினும், சில நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தானதாக அமையலாம்.

இதுவரை, க்ளேட் 1 மற்றும் க்ளேட் 2 என இரண்டு வகைகளை இந்த வைரஸில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில், க்ளேட் 2 குறைந்தளவு அபாயகரமானது, இதன் இறப்பு விகிதம் 0.1. அதாவது பாதிக்கப்படும் ஆயிரம் பேரில் ஒருவர் மரணிக்க வாய்ப்புள்ளதாக பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் செரில் வால்டர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்துள்ளார்.

"இருப்பினும் க்ளேட் 1பி தான் (க்ளேட் 1இன் திரிபு) இப்போதைய பரவலுக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. இதன் இறப்பு விகிதம் மூன்று முதல் நான்கு சதவீதம்" என ஹல் ஆங்கிலப் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவ அறிவியல் பேராசிரியர் எச்சரிக்கிறார். இவர் கோவிட்-19இன் மதிப்பிடப்பட்ட இறப்பு விகிதம் 1.2 சதவீதம்தான் என நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் மேலும் மோசமாக இருக்கிறது. "அதன் தரவுப்படி, மக்களிடையில் எம்பாக்ஸ் தொற்றுரீதியிலான இறப்பு விகிதம் 0.1% முதல் 10% வரை இருக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி இருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி பிரச்னைகளின் அடிப்படை போன்ற காரணிகள் ஒரு தீவிர நோய் பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன என்று ஐ.நா. சுட்டிக்காட்டுகிறது.

2. எம்பாக்ஸ் பாதிக்கப்படும் ஆபத்து யாருக்கு அதிகம்?

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் எச்.ஐ.வி அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இடையே இந்நோய் பரவும் அபாயம் அதிகம்.

ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதன்படி, இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. விலங்குகள் மூலம் ஏற்படும் சிராய்ப்பு, கடி அல்லது முறையாகச் சமைக்கப்படாத இறைச்சி ஆகியவற்றால் இது பரவலாம்.

மேலும், இது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. உதாரணமாக, பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது அல்லது சுவாசிப்பது, அவர்களைத் தொடுவது, முத்தமிடுவது மற்றும் உடலுறவு கொள்வதன் மூலமும் இது பரவுகிறது.

"இந்த வைரஸ் கோவிட் போலவே பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமாகவும் பரவுகிறது. உதாரணமாக, தொற்று ஏற்பட்ட நபர் தொடுவது அல்லது பயன்படுத்திய பொருட்கள், தட்டு அல்லது துண்டைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் பரவும்" என விவரிக்கிறார் வால்டர்.

"கடந்த 2022இல் தொடங்கிய உலகளாவிய பரவலின்போது, இந்த ​​​​வைரஸ் முக்கியமாக பாலியல் தொடர்பு மூலம் பரவியதாக" உலக சுகாதார அமைப்பு நினைவு கூர்ந்துள்ளது.

“எதிர்பால் ஈர்ப்பு உறவு அல்லது தன்பால் ஈர்ப்பு உறவு என எந்த வேறுபாடும் இல்லை. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் இரு பிரிவினருக்கும் ஒரே அளவிலான அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக” ஐ.நா சபையுடன் இணைந்த அமைப்பு எச்சரிக்கிறது.

இந்த வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளில், கூட்டுப் பாலியல் உறவு மற்றும் முன்பின் பரிட்சயம் இல்லாத நபருடன் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்த நோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் அடுத்த 12 வாரங்களுக்கு உடலுறவின்போது ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.

அடுத்ததாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள மக்கள், புற்றுநோய் அல்லது எச்.ஐ.வி சிகிச்சை மேற்கொண்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இடையே எம்பாக்ஸ் பரவல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதோடு, உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.

3. எம்பாக்ஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சை இருக்கிறதா?

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

பெரியம்மையைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், எம்பாக்ஸ் நோய்த்தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படும்.

கடந்த 2022 ஜனவரியில், ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சி ஒப்புதல் வழங்கிய டெகோவிரிமாட் (Tecovirimat) எனும் வைரஸ் தடுப்பு மருந்து விதிவிலக்கான சூழல்களில் எம்பாக்ஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நோய் குறித்துப் போதுமான அளவுக்குத் தரவுகள் இல்லாததால், மருந்துகள் பரிசோதனை அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பு மோசமான அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் அபாயகரமான நிலையில் உள்ளவர்களுக்கு டெகோவிரிமாட்-ஐ (Tecovirimat) சிகிச்சைக்குப் பயன்படுத்தி வருகிறது. எம்பாக்ஸ் நோய்க்கு எதிராக நல்ல பலன்களைப் பெற பெரியம்மைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் மூன்று தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தலைவலி மற்றும் தசை வலிகளைச் சமாளிக்கக்கூடிய வலி நிவாரணிகள் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆன்டிபிரைடிக் மருந்துகள் போன்ற எளிமையான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்றாக ஓய்வெடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும், நன்றாகச் சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

இவற்றோடு வைரஸ் பரவுவதைத் தடுக்க தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள், தங்களது மனநலத்தைப் பாதுகாத்துக் கொள்ள இளைப்பாறுதல் மற்றும் மனதுக்கு நிறைவான செயல்களில் ஈடுபடவும், தங்கள் அன்பிற்கு உரியவர்களுடன் தொழில்நுட்ப உதவியோடு தொடர்பில் இருக்குமாறும் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

சரும தடிப்புகள் மூலம் ஏற்படும் வடுக்களைத் தவிர்க்க, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சருமத்தைச் சொரிய வேண்டாம் என்றும், புண்களைத் தொடுவதற்கு முன்னரும், பின்னரும், கைகளை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியும், சருமத்தை வறண்டும், மூடாமலும் வைத்துக் கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.

4. எம்பாக்ஸ் தடுப்பூசி பெரியளவில் இல்லாதது ஏன்?

கோவிட்-19 காலகட்டத்தில் நடத்தப்பட்டதைப் போன்ற பெருமளவிலான நோய்த்தடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டிய சூழல் இப்போதைக்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கருதவில்லை.

மேலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் அல்லது அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

முதலாவதாக, இந்த எம்பாக்ஸ் நோய் ஏற்கெனவே 12 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை அடைந்துள்ளது. இரண்டாவதாக, அந்த ஆண்டில் ஏற்பட்ட பரவலைத் தடுக்க துல்லியமாக 2022இல் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், பேராசிரியர் வால்டர் போன்ற நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பின் நிலைப்பாட்டுக்கு, தற்சமயம் உலகில் போதுமான தடுப்பூசி இல்லை என விளக்கமளித்துள்ளார்.

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

"நாங்கள் இப்போது பெரியம்மைக்கான தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகிறோம். இது எம்பாக்ஸ் நோய்க்கு எதிராகப் போதுமான எதிர்ப்பு சக்தியை (Cross -immunity) வழங்குகிறது. ஆனால், பெரியம்மை 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்டதால் குறைந்த அளவிலான தடுப்பூசி மட்டுமே இருக்கிறது. மேலும் தற்சயம் தேவைப்படும் அளவிலான தடுப்பூசியைத் தயாரிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும்" என்று விவரிக்கிறார்.

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்க மையம், இந்த நெருக்கடியைச் சமாளிக்க 10 மில்லியன் டோஸேஜ் தேவைப்படும் என மதிப்பிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கணக்கின்படி, உலக சுகாதார நிறுவனம் அதன் 72வது பொதுக்குழுவில் (2019 இல்) சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின்படி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள அதன் தலைமையகத்தில் 2.6 மில்லியன் டோஸ்களை கையிருப்பில் வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.

அதே அறிக்கையில், அதன் உறுப்பினர்கள், இத்தகைய பரவல் வந்தால் அதைச் சமாளிக்க கையிருப்பை 27 மில்லியனாக உயர்த்தும் படி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தனது பங்கிற்கு லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினை சேர்ந்த பிரிட்டிஷ் பேராசிரியர் மைக்கேல் மார்க்ஸ், இந்த நோய்ப் பரவலை நிறுத்த "நிறைய தடுப்பூசிகள்" தேவை என வாதிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பு அவசர நிலை பிரகடனம் செய்துள்ள நிலையில், "தற்போதைய வியூகங்கள் எதுவும் எம்பாக்ஸ் நோயைக் கட்டுப்படுத்த பயனளிக்கவில்லை" என்று நினைக்கத் தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

5. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எம்பாக்ஸ் மீண்டும் தொற்றுமா?

எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 4 முக்கிய கேள்வி பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் எம்பாக்ஸ் குறித்து குறைந்தளவே அறிந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பிடம் இந்தக் கேள்விக்கான பதில் இல்லை.

"எம்பாக்ஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது.

முந்தைய நோய்த்தொற்று எதிர்கால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறதா? அப்படியானால், எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை," என்று ஐ.நா. இணையதளத்தில் உள்ள தகவல்கள் கூறுகின்றன.

"சிலருக்கு இரண்டாவது முறையாக நோய்த்தொற்று" ஏற்பட்டிருந்த தகவல் பெறப்பட்டிருப்பதால், மக்கள் மீண்டும் தொற்று ஏற்படாமல் தவிர்க்க, முடிந்த வரையிலும் எல்லாவற்றையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)