பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரையாமல் மாதக்கணக்கில் சுழன்று வருவது எப்படி?

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ

பட மூலாதாரம், Chris Walton/BAS

படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
    • எழுதியவர், ஜோனதன் அமோஸ் & எர்வான் ரிவால்ட்
    • பதவி, பிபிசி செய்திகள்

ஏ23ஏ (A23a) என்பது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை. அன்டார்டிக் பெருங்கடலில் நீண்டகாலமாக நகராமல் இருந்த இந்தப் பாறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழலில் சிக்கிச் சுழன்ற வண்ணம் இருக்கிறது.

பெரிய நீர் சுழற்சியின் மையப் பகுதியில் லண்டனை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய அளவில் உள்ள இந்தப் பனிப்பாறை சிக்கிக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தப் பனிப்பாறையின் அளவு சென்னையைப் போல 4 மடங்கு என்று கூறலாம்.

டெய்லர் காலம் (Taylor Column) என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்தச் சுழலில் இருந்து ஏ23ஏ பனிப்பாறை அவ்வளவு விரைவில் வெளியேறாது என்றும் தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"பொதுவாக மக்கள், பனிப்பாறை உருமாறிக் கொண்டே இருக்கும் என்று நினைப்பார்கள். அவை சிறிது சிறிதாக உடைந்து உருகிவிடும். ஆனால் இந்தப் பனிப்பாறையின் நிலைமை அப்படியல்ல," என்று கூறுகிறார் துருவப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பேராசிரியர் மார்க் பிராண்டன்.

பிபிசி செய்தியிடம் பேசிய, அவர், "A23a பனிப்பாறை அழிய மறுப்பதாக," கூறினார்.

இந்தப் பனிப்பாறையின் பயணம் நீண்ட காலமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அன்டார்டிக் கடற்கரையில் இருந்து 1986ஆம் ஆண்டு பிரிந்த இந்தப் பனிப்பாறை உடனடியாக வேடெல் கடல்தரை மணலில் சிக்கிக் கொண்டது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாகச் செயல்பட்டது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாக இருந்தது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை. ஆனால் 2020ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத் துவங்கியது இந்தப் பனிப்பாறை. வெப்பமான காற்று மற்றும் நீர் உள்ள வடக்குப் பகுதியை நோக்கி நகர்வதற்கு முன் அது மிகவும் மெதுவாகவே நகர்ந்தது.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், A23a அன்டார்டிகாவின் துருவவட்ட நீரோட்டப் பகுதியில் நுழைந்தது. உலகிலுள்ள நதிகளில் இருக்கும் நீரைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக நீரைக் கொண்ட மிகவும் வலிமையான நீரோட்டம் இது.

இது பொதுவாக டிரில்லியன் டன் எடை கொண்டுள்ள பனிப்பாறையை அட்லான்டிக் பகுதியில் சேர்ப்பதற்கான ஊக்கியாகச் செயல்பட வேண்டும்.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ

பட மூலாதாரம், Derren Fox/BAS

படக்குறிப்பு, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் இந்தப் பனிப்பாறை கடந்த சில மாதங்களாகச் சுழன்று கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த A23a பனிப்பாறையோ இந்த நீரோட்டத்தின் உதவியோடு எங்கும் செல்லவில்லை. மாறாக தெற்கு ஓர்க்னே தீவுகளுக்கு வடக்குப் பகுதியில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 15 டிகிரி கோணத்தில் எதிர்கடிகார திசையில் சுற்றி வருகிறது. இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கடற்கரையில் இருந்து பிரிந்த பனிப்பாறை மீண்டும் கடலின் அடிப்பகுதியோடு இணையவில்லை. கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது.

கடந்த 1920ஆம் ஆண்டில் முதன்முதலாக சர் ஜி.ஐ.சர் ஜி.ஐ.(ஜியோஃபெரி இன்கிராம்) டெய்லர் இந்தச் சுழல் குறித்து விவரித்துள்ளார். இப்போது அந்தச் சுழலில் இந்தப் பனிப்பாறை சிக்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, தடையானது 100 கி.மீ. அகலம் கொண்ட, பிரீ கரை எனப்படும் கடல் முகடு. இந்த பிரீ கரையின் மேலே நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜில் படித்த இவர் திரவ இயக்கவியல் துறையில் ஒரு முன்னோடியாகச் செயல்பட்டார். மேலும் உலகின் முதல் அணுகுண்டு சோதனையின் மாதிரியைக் காட்ட மன்ஹாட்டன் திட்டத்தில்கூட இவர் இணைக்கப்பட்டார்.

பேராசிரியர் டெய்லர், சரியான சூழலில், நீரோட்டத்தில் ஏற்படும் தடை எவ்வாறு இரு வித்தியாசமான நீரோட்டங்களை உருவாக்கும் என்பதையும் அவற்றுக்கு மத்தியில் எவ்வாறு ஆழமான நீர் சுழற்சியை உருவாக்கும் என்பதையும் விவரித்தார்.

இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, 100 கி.மீ வரை விரிந்துள்ள, பிரீ கரை எனப்படும் கடல் முகடு தடையாக உள்ளது. இந்த பிரீ கரையின் மேலேதான் நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுழலில் தற்போது A23a வசமாக சிக்கிக் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது.

கடல் ஆச்சரியங்களால் நிறைந்தது. இதன் டைனமிக் அம்சம் அதில் சிறப்பான ஒன்று என்கிறார் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வேயில் இருந்து பேசிய பேராசிரியர் மைக் மெரெடித்.

"இத்தகைய டெய்லர் (Taylor Columns) நிகழ்வானது காற்றிலும் ஏற்படும். மலைகளுக்கு மேலே நகரும் மேகங்களில் இத்தகைய நிகழ்வுகளை நீங்கள் காண இயலும்.

ஆய்வகத் தொட்டியின் மேல் இது ஒரு சில சென்டிமீட்டர்கள் மட்டுமே நீளம் கொண்டதாகவும் அது இருக்கலாம் அல்லது இந்தப் பனிப்பாறை போன்ற மிகப்பெரிய அளவிலும்கூட இருக்கலாம்," என்கிறார் மைக்.

ஆனால் எவ்வளவு காலத்திற்கு A23a இப்படி சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கும்?

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

யாருக்குத் தெரியும். ஒரு மிதவை கருவியை பேராசிரியர் மெரெடித், பிரீ கரையின் மற்றொரு பகுதியில் ஆராய்ச்சிக்காக வைத்திருந்தார். நான்கு ஆண்டுகள் ஆன பிறகும்கூட அந்த இடத்தில் இந்த மிதக்கும் கருவியானது இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.

கடல் தரையின் அமைப்பு பற்றித் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதற்கு இந்தப் பனிப்பாறை ஒரு நல்ல உதாரணம்.

கடலில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள், நீரின் ஓட்டம், நீர் கலப்பது, கடலில் உள்ள ஊட்டச்சத்துகள் கடல் உயிரினங்களுக்கு சரியாகச் சென்று சேர்வது உள்ளிட்ட அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ

பட மூலாதாரம், SEABED2030/Nippon Foundation

படக்குறிப்பு, கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும் கடலின் தரைப்பகுதிகளில் இன்னும் அதிக அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இது காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் வெப்பத்தைப் பரப்புவதில் இந்த நீரின் போக்கானது உதவுகிறது.

இந்த செயல்பாட்டிற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், தெற்கு ஓர்க்னேவின் வடக்குப் பகுதியானது நன்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதேநிலை உலகிலுள்ள மற்ற இடங்களுக்குப் பொருந்தாது. தற்போது வரை, உலகிலுள்ள கடல் தரைகளில் கால்பகுதி மட்டுமே நவீன தரத்திற்கு ஏற்ப வரைபடமாக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)