அமெரிக்காவில் 'இந்தியா தின' அணிவகுப்பில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெற எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் `இந்தியா தின அணிவகுப்பு’ ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு பிறகு ஏற்பாடு செய்யப்படும் இந்த அணிவகுப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதில் பல இந்திய பிரபலங்கள் பங்குபெறுவார்கள்.
இந்த ஆண்டும் நியூயார்க்கில் 'இந்தியா தின அணிவகுப்பு' நடத்த திட்டமிடப்பட்டது.
நியூயார்க்கில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படும் இந்தியா தின அணிவகுப்பு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை அணிவகுப்பு ஏற்பாட்டில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
இந்த ஆண்டு அணிவகுப்பில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் மாதிரி ஊர்தி (Tableau of Ayodhya Ram Temple) சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'முஸ்லிம் எதிர்ப்பு' மனநிலை என எழும் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
என்பிசி (NBC) செய்தி சேனல் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகரில் நடைபெறும் இந்தியா தின அணிவகுப்பில் ராமர் கோவில் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்படுவதற்கு பல தெற்காசிய அமெரிக்க அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தெளிவாக முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர்.
அலங்கார ஊர்தியின் விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட வீடியோவில், அயோத்தியின் ராமர் கோவிலின் பெரிய மாதிரி காட்சிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் அதன் ஒட்டுமொத்த தெற்காசிய சமூகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
அவர்களது கருத்துப்படி, "இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பிரதிநிதிகள், எங்கள் பெரிய நகரத்தின் தெருக்களில் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கொண்டாட்டங்களை மேற்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம், இருப்பினும், இதுபோன்ற பொதுக் கொண்டாட்டங்களில் பிரிவினை அல்லது மதவெறியின் சின்னங்கள் இருக்கக் கூடாது."
செய்தி முகமையான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சில அமெரிக்க அமைப்புகள் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் ஆகியோருக்கு கடிதம் எழுதி, இந்த அணிவகுப்பு' முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அது 'மசூதி' இடிப்பு சம்பவத்தை கொண்டாடுவது போல் உள்ளது என்றும் கூறியுள்ளது.
அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில், இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் மற்றும் மனித உரிமைகளுக்கான இந்து அமைப்பு ஆகிய அமைப்புகள் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
அணிவகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சொல்வது என்ன?
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டது.
1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, இதற்கு இந்து அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சில பாஜக தலைவர்களின் தலையீடு இருந்ததாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு தொடரப்பட்ட விசாரணைகள் நடந்தது. இறுதியில் ராமர் கோவிலுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அயோத்தியில் கட்டப்பட்ட புதிய ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோதி இந்த ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைத்தார்.
நியூயோர்க் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின்படி , "மத வெறியர்களால் மசூதி இடிக்கப்பட்டு, அதே இடத்தில் இந்த (ராமர்) கோவில் கட்டப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டது.
மசூதி இடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் பெரிய அளவில் வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. அந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது.
ராமர் கோவிலின் மாதிரியை காட்சிப்படுத்தும் தங்கள் செயலை அணிவகுப்பு அமைப்பாளர்கள் நியாயப்படுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பல சமூக குழுக்கள் அதை முஸ்லிம் விரோத மனநிலையை பிரதிபலிக்கும் சின்னம் என்று கருதுகின்றனர்.
இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு நியூயார்க்கில் இந்தியா தின அணிவகுப்பை நடத்துகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவர் அங்கூர் வைத்யா, அணிவகுப்பின் போது, கோவிலின் மாதிரி ஊர்தி மேடிசன் அவென்யூவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறியுள்ளார்.
ராமர் கோவில் மாதிரிக்கு எதிராக மேயருக்கு கடிதம்
ராமர் கோவில் மாதிரியை சேர்த்து அணிவகுப்பு ஏற்பாடு செய்த அமெரிக்காவின் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, அயோத்தியில் உள்ள கோவிலை "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்து மத நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் மையமாக இருக்கும் ஒரு புனித தலமாக" கொண்டாடுவதாகக் கூறியது.
நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, விஸ்வ இந்து பரிஷத் (VHP) அமெரிக்காவின் தலைவர் அஜய் ஷா இந்தியாவின் வலதுசாரி தேசியவாத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்துடன் தொடர்புடையவர்.
இந்த அணிவகுப்பை விமர்சிப்பவர்களுக்கு "இந்துக்கள் மீதான வெறுப்பு" இருப்பதாக அஜய் ஷா குற்றம் சாட்டியுள்ளார். "இப்படி விமர்சிப்பவர்களின் முக்கிய பணி எப்பொழுதும் பிரதான இந்துக்களையும் அவர்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்துவதாகும். அவர்களது பிரச்னை எந்த ஒரு குறிப்பிட்ட கோவிலையும் பற்றியது இல்லை, எல்லா கோவில்களிலும் அவர்களுக்கு பிரச்னை உள்ளது," என்று கூறியுள்ளார்.
நியூயார்க் மற்றும் அமெரிக்கா முழுவதும் வசிப்பவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் வளப்படுத்திய இந்து மதத்தையும் அதனை பின்பற்றுபவர்களையும் இழிவுபடுத்தும் கருத்துகளை நிராகரிக்குமாறு அவர் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், 'இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்' (ஐ.ஏ.எம்.சி) உள்ளூர் மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் கவர்னர் கேத்தி ஹோச்சுல் ஆகியோருக்கு அணிவகுப்பில் ராமர் கோவில் மாதிரியை சேர்க்க அனுமதிக்க கூடாது என கடிதம் எழுதியுள்ளது. புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், ராமர் கோவில் மாதிரியை சேர்ப்பது அமெரிக்காவின் விழுமியங்களை அவமதிப்பு போன்றது என்று ஐ.ஏ.எம்.சி கூறியது.

பட மூலாதாரம், Getty Images
தலித் ஒற்றுமை மன்ற உறுப்பினர் எக்லான் சிங், மன்ஹாட்டன் அணிவகுப்பில் ராமர் கோவிலை கொண்டாடுவது என்பது, அமெரிக்காவின் 'சுதந்திர சிலையை (Statue of Liberty) கேலி செய்வது போன்றது' என்று விவரித்தார்.
மன்ஹாட்டனில் உள்ள மேடிசன் அவென்யூவில் நடக்கவுள்ள ஊர்வலத்தில் முஸ்லிம் எதிர்ப்பின் அடையாளமாகக் கருதும் விஷயங்களைச் சேர்த்ததால் சர்ச்சை தொடங்கியுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது.
கடந்த காலங்களிலும் இதுபோன்று பல விஷயங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. மேயர் எரிக் ஆடம்ஸ் 2023 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் இந்தியா தின அணிவகுப்பில் பங்கேற்றார். ஆனால் இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
ஆடம்ஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்த நகரம் அனைவருக்குமானது, இங்கு வெறுப்புக்கு இடமில்லை. அணிவகுப்பில் வெறுப்பை ஊக்குவிக்கும் நபரோ அல்லது ஊர்தியோ இருந்தால், அவர்கள் அதை செய்யக் கூடாது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அணிவகுப்பில் பிரச்னை ஏற்படுவது புதிதல்ல
ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாகவும், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி , நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸின் அலுவலகம் ஒரு மின்னஞ்சல் பதிலில், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா தின நிகழ்வில் மேயர் கலந்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியது.
அவர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியா தின அணிவகுப்பில் பங்கேற்று வந்தார்.
நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, இந்து தேசியவாதத்தின் அரசியல் நியூயார்க் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல.
2022-இல் எடிசனில் நடந்த இந்தியா தின அணிவகுப்பில் கட்டுமான உபகரணங்களைச் சேர்த்தது ஒரு சலசலப்பை உருவாக்கியது. அப்போது, நியூஜெர்சியின் இரு செனட்டர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
2014-இல் முதல் முறையாக பிரதமரான பிறகு, மன்ஹாட்டனில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த மாபெரும் பேரணியில் நரேந்திர மோதி பங்குபெற்று உரையாற்றினார். இதில் போராட்டக்காரர்களும் திரண்டனர்.
நியூயார்க் டைம்ஸ் கூற்றுபடி, 2023-ஆம் ஆண்டில், பிரதமர் மோதி ஐக்கிய நாடுகள் சபையில் யோகாசனத்தை நடத்திய போது, மேயர் ஆடம்ஸும் அதில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் போராட்டக்காரர்களுடன் சிலர் மோதலில் ஈடுபட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












