இந்திய மருத்துவ மாணவர்களில் ஆறில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களிடையே ஆன்லைன் வாயிலாக, தேசிய மருத்துவ ஆணையம் எடுத்த சர்வேயில், கடந்த 12 மாதங்களில் 16.2 சதவீதம் பேர் அதாவது சுமார் ஆறில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். 25 சதவீத இளங்கலை மாணவர்களும் 15 சதவீத முதுகலை மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த சர்வே குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், "மருத்துவ மாணவர்களுக்கு அதிக பணிச்சுமை வழங்கப்படுவதாகச் சொல்வது தவறான தகவல் என்றும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல ஆலோசனை மன்றம் வைத்திருப்பதாகவும்" தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையை உலுக்கிய சம்பவம் இது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறையில் படித்து வந்த மருதுபாண்டியன் என்ற 30 வயதான மருத்துவர், தனது அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணம் நடந்திருந்தது.
இறப்பதற்கு முன்னதாகத் தொடர்ந்து 18 மணிநேரம் அவர் மருத்துவப் பணி பார்த்ததாகக் கூறப்பட்டது. 'கடும் பணிச்சுமையின் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம்' என மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தின.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் முதுகலை படித்து வந்த 27 வயதான மருத்துவ மாணவி ஒருவர், தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு காரணமாக, தனது பேராசிரியர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் மேலும் இரண்டு மருத்துவர்கள் மனதளவில் தன்னைக் காயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவை ஒரு சில உதாரணங்கள்தான். தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணிச்சுமை, பாலியல் தொல்லைகள், ராகிங் உள்படப் பல்வேறு பிரச்னைகளை "மருத்துவ மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் எதிர்கொள்கின்றனர்."
இதன் காரணமாக அவர்கள் "தற்கொலை முடிவை நோக்கித் தள்ளப்படுவதாக" மருத்துவ சங்கங்கள் தொடர்ந்து பேசி வந்தன.
அதற்கு வலு சேர்ப்பது போல, தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய சர்வே ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வே சொல்வது என்ன?
ஆன்லைன் வாயிலாக, தேசிய மருத்துவ ஆணையம் சர்வே எடுத்துள்ளது. இளங்கலை மருத்துவ மாணவர்கள் 25,590 பேர் மற்றும் முதுகலை மாணவர்கள் 5,337 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆசிரியர்கள், நிர்வாகத்தில் உள்ளவர்கள், வார்டன் என 7,035 பேர் சர்வேயில் பங்கெடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழல், படிக்கும் இடம், நிதிச் சுமை, ராகிங், தனிமை, வழிகாட்டுநரின் செயல்பாடு, கல்லூரி மற்றும் நிர்வாகரீதியிலான பிரச்னைகள், விடுதி, பணிச்சூழலில் ஏற்படும் அழுத்தம், குடும்ப அழுத்தம், துன்புறுத்தல்கள் எனப் பல்வேறு வகைகளில் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இதில், கடந்த 12 மாதங்களில் 16.2 சதவீதம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். 25 சதவீத இளங்கலை மாணவர்களும் 15 சதவீத முதுகலை மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதுதொடர்பாக, மருத்துவக் கல்லூரிகளில் மனநல சேவைகளை அணுக முடியாத நிலை உள்ளதாக இளங்கலை மாணவர்களில் 19 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இந்த சேவைகள், தரமற்றதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் மனநல உதவியை நாடுவதில் தயக்கம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் சர்வேயில் பதிலளித்த முதுகலை மாணவர்களில் 41 சதவீதம் பேர், மனநல உதவியை நாடுவதில் தயக்கம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள புறச்சூழல்களால் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியாகலாம் என்ற அச்சத்தில் உதவியை நாடுவதைத் தவிர்த்ததாகக் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முதுகலை மாணவர்களுக்கான விடுதி வசதியில் குறைபாடு இருப்பதையும் தனியாகத் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இதைச் சரி செய்வதற்கு, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 24 மணிநேர மனநல ஆலோசனைகளை வழங்கும் மையங்களைக் கொண்டு வரவேண்டும் எனவும் வாரத்துக்கு 74 மணிநேரத்துக்கு மேல் உறைவிடப் பயிற்சி மருத்துவர்கள் வேலை பார்க்கக்கூடாது எனவும் தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
"இது பல ஆண்டுகளாக நடந்து வரும் பிரச்னைதான். மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஏராளமான பிரச்னைகளை தினமும் சந்திக்கின்றனர். 12 மணிநேரம் முதல் 36 மணிநேரம் வரை தொடர்ந்து வேலை பார்க்க வைக்கப்படுகின்றனர். ராகிங், பாலியல் தொல்லை, விடுதிப் பிரச்னை என அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீனியர் மாணவர்கள், தங்களுக்குக் கீழ் உள்ள மாணவர்களிடம் தங்கள் வேலையை ஒப்படைத்துவிடுகின்றனர். கூடுதல் பணிச்சுமை குறித்து துறைத் தலைவர்களிடம் கேட்டால், அவர்கள் கற்றுக் கொள்வதற்காகக் கூடுதலாக வேலை பார்ப்பதாகக் கூறுகின்றனர். இது தவறான தகவல்" என்கிறார் அவர்.
தீர்ப்பு இருக்கிறது... ஆனால்?
மேலும், பயிற்சி மருத்துவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் தகவல் உள்ளீடுப் பணி(டேட்டா என்ட்ரி) உள்ளிட்ட வேறு வேலைகளையும் செய்ய நிர்பந்திக்கப்படுவதாக ரவீந்திரநாத் குறிப்பிடுகிறார்.
"பணி செய்ய மறுத்தால், சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான சான்றிதழைக் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிலைமை இன்னும் மோசம். அங்கு அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். மாணவர்களின் பணிக்கு உரிய ஊக்கத்தொகை கொடுப்பதில்லை" என்கிறார் ரவீந்திரநாத்.

பயிற்சி மாணவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை வழங்கப்படுவது குறித்து, 2015ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கின் முடிவில், 'பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு 12 மணிநேர வேலையை வழங்கக்கூடாது' என்ற தீர்ப்பு வெளியானது.
"நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. ஆள் பற்றாக்குறை இருந்தால் அதற்கென பணியாளர்களை நியமிக்க வேண்டுமே தவிர, படிக்க வந்தவர்களைக் கூடுதல் நேரம் பணி செய்ய நிர்பந்திப்பது சரியல்ல. இதன் காரணமாக, கடும் மன அழுத்தத்துக்கு மாணவர்கள் ஆளாகின்றனர்" என்கிறார் ரவீந்திரநாத்.
தினசரி 300 நோயாளிகள்
"புறநோயாளிகளாக வருபவர்களில், நாளொன்றுக்கு 50 பேருக்குத்தான் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்க முடியும். அப்போதுதான் நோயாளிகளிடம் அவர்களின் பிரச்னையைக் கேட்க முடியும்." ஆனால், அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 300 நோயாளிகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறுகிறார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவி ஒருவர்.
இதனால் நோயாளிகளின் பிரச்னைகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை எனவும், இது சில நேரங்களில் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், இரவு நேரங்களில் பணிபுரியும்போது போதிய பாதுகாப்பு இருப்பதில்லை. காவல்துறையும் மருத்துவமனை நிர்வாகமும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"முதுநிலை மாணவர்கள் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகு ஓராண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிரந்தர டாக்டர் என்ற தேவையை அரசு பூர்த்தி செய்து கொள்கிறது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு சி.ஆர்.எம்.ஐ (compulsory residential medical internship) என்ற பெயரில் 4 ஆண்டு படிப்பும் ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது."
"இந்த ஓராண்டில் அதிக வேலைப்பளுவும் பலதரப்பட்ட வேலைகளையும் ஓய்வின்றிச் செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் குடும்ப உறவுகளிடம் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. புறச்சூழல்களும் பாதிப்பை ஏற்படுத்துவதால், சிலர் தற்கொலை முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது" என்கிறார் அந்த மாணவி.
தேசிய மருத்துவ ஆணையத்தின் சர்வே குறித்து, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி பிபிசி தமிழிடம் பேசியபோது, "இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கும் வகையில், கடந்த ஆண்டு 'மனம்' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக" கூறினார்.
மேலும், "இங்கு பயிற்சி மாணவர்களுக்குக் கூடுதல் பணிகள் வழங்கப்படுவதில்லை. தேசிய மருத்துவ ஆணையம் என்ன வழிமுறைகளை வகுத்துள்ளதோ, அதன்படியே பின்பற்றப்படுகிறது" என்கிறார் அவர்.
அமைச்சர் சொல்லும் காரணம்
"மருத்துவராக மாணவர்கள் பயிற்சி எடுத்துதான் ஆக வேண்டும். அவர்களுக்குப் பயிற்சி அளிக்காமல் இருக்க முடியாது. பயிற்சி எடுக்க விரும்பாத ஒரு சிலர்தான், காரணங்களைக் கூறுகின்றனர்" என்கிறார் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல ஆலோசனை மன்றத்தை வைத்திருக்கிறோம். அதன் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகிறோம்.
அரசு மருத்துவமனைகளில் பயிற்சி எடுப்பதையே மாணவர்கள் விரும்புகின்றனர். அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் புதிய களமாக அது அமைவதும் ஒரு காரணம். அதிக பணிச்சுமை வழங்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான தகவல்" என்கிறார்.
முக்கியக் குறிப்பு
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












