அரிய வானியல் நிகழ்வு: சிவப்பு நிறத்தில் தோன்றிய சூப்பர்- ப்ளூ மூன், எங்கே?

சூப்பர்- ப்ளூ மூன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர்- ப்ளூ மூன் ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது

(2024 ஆகஸ்ட் 18-ம் தேதி சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டதையடுத்து 2023-ல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது)

வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் ‘சூப்பர்- ப்ளூ மூன்’ (Super- Blue moon) ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது. அப்போது நிலவு திடீரென சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானில் தென்பட்ட இந்த அரிய காட்சியை பிரிட்டன் மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்பட்டாலும், நிலவு உண்மையில் நீல நிறமாக மாறுவதில்லை. ஆனால், பிரிட்டனின் மேல் உள்ள வளிமண்டலத்தில், வடஅமெரிக்க காட்டுத்தீயால் உண்டான புகை நிலைகொண்டதால், ஞாயிற்றுக்கிழமை இரவு தோன்றிய ‘ப்ளூ மூன்’ சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

வளிமண்டலத்தில் புகைத் துகள்கள் இருந்தால், ஸ்பெக்ட்ரமின் (நிற மாலை) ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் வழக்கத்தை விட அதிகமாகத் தெரியும் வகையில் வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் ஒளியானது சிதறடிக்கப்படும். இதுவே இந்த சிவப்பு நிலவிற்கு காரணம்.

இந்த 'சூப்பர்-ப்ளூ மூன்' என்றால் என்ன? இதற்கு வானியல் மற்றும் புவியியல் ரீதியான முக்கியத்துவம் ஏதேனும் உண்டா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூப்பர் மூன் என்றால் என்ன?

சூப்பர் மூன் என்றால் என்ன

பட மூலாதாரம், BBC Weather Watchers / Coastal JJ

நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்தப் பாதையில், நிலவு பூமியில் இருந்து மிகத் தொலைவான புள்ளியில் இருக்கும்போது சற்று சிறியதாகத் தோன்றும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து சராசரியாக 405,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அதுவே நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து கிட்டத்தட்ட 363,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஆனால், இந்த வித்தியாசங்கள் மிகச் சிறியவை. வெறும் கண்களால் இதைக் கண்டறிவது கடினம். ஒரு தொலைநோக்கியின் மூலம் அதைப் படம் பிடித்தால்தான் அதன் வித்தியாசத்தை நாம் காண முடியும் என்கிறார், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

சூப்பர் மூன் என்றால் என்ன

பட மூலாதாரம், BBC Weather Watchers / Wrightsaycheese

படக்குறிப்பு, ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு

ப்ளூ மூன் என்றால் என்ன?

ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு.

இது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதால், ஆங்கிலத்தில் ‘ப்ளூ’, அதாவது அரிதான நிகழ்வு என்ற அர்த்தத்தில் மேற்குலகில் அழைக்கப்படுகிறது.

இதற்கான காரணம் ஆங்கில மாதங்களின் அமைப்புதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

ஐரோப்பிய காலண்டர் அமைப்பில் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகிய ரோமானிய மன்னர்களின் பெயரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அடுத்தடுத்து 31 நாட்களுடன் இணைக்கப்பட்டதால், மாதங்களின் நாட்கணக்குகள் கூடக் குறைய மாறின.

உதாரணத்துக்கு பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள். ஆனால், நிலவு பூமியைச் சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது.

இதனால், ஆங்கில நாட்காட்டியின் படி, ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் வருவது அரிதானது. அதைக் குறிக்கவே இதை ‘ப்ளூ மூன்’ என்று அழைத்தனர் என்கிறார் வெங்கடேஸ்வரன். இது நாட்காட்டிகளைப் பொறுத்து மாறும்.

உதாரணத்துக்கு வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள் இருப்பதால், ப்ளூ மூன் என்னும் நிகழ்வு சாத்தியப்படாது. ஆனால் தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை.

சில நேரங்களில் தமிழ் மாதங்களுக்கு 32 நாட்கள்கூட இருக்கும். அதனால் தமிழ் மாத அமைப்பின்படி, ‘ப்ளூ மூன்’ சாத்தியப்படும். ஆனால் தமிழ் கலாசாரத்தில் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

முக்கியமாக, ‘ப்ளூ மூனு’க்கும் நீல வண்ணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

சூப்பர் ப்ளூ மூன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சகநிகழ்வு மட்டுமே என்கிறார் வெங்கடேஸ்வரன்

சூப்பர் ப்ளூ மூன் எப்போது நிகழும்?

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கும் நிகழ்வே ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

அதாவது நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அதுவே மாதத்தின் இரண்டாவது முழுநிலவாக அமைந்து விட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. இது மிக அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்கு மொத்தம் 12 முழுநிலவுகள். 168 முழுநிலவுகள் நடந்தால்தான் ஒரு ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழும்.

சூப்பர் ப்ளூ மூன்

பட மூலாதாரம், BBC Weather Watchers / JaneyB

இதற்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா?

இல்லை, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சகநிகழ்வு மட்டுமே, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

“இதனால் எந்த பெரிய வானியல் மாற்றங்களும் நிகழாது,” என்கிறார் அவர்.

ஆனால், நிலவை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கக்கூடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)