பிரிட்டனில் அரை நூற்றாண்டு காலம் மக்கள் நுழையவே தடை விதிக்கப்பட்ட 'மரணத் தீவு' - என்ன காரணம்?

"பாதுகாப்பு அமைச்சகத்தின் சொத்து. உள் செல்லாதே" என்று இந்த புகைப்படம் கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "பாதுகாப்பு அமைச்சகத்தின் சொத்து. உள்ளே செல்ல வேண்டாம்" என்று இந்த அறிவிப்பு பலகை கூறுகிறது
    • எழுதியவர், மைல்ஸ் பர்க்
    • பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர்

ஸ்காட்லாந்தின் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள தீவில், இரண்டாம் உலகப்போரின் போது நடந்த ரகசிய மற்றும் அதிர்ச்சிகரமான சோதனைகள், ஆபத்தான நச்சு கலத்தல், விலங்குகளின் புதிரான இறப்புகள் பற்றிய உள்ளூர் செய்திகளை 1960-களில் பிபிசி விசாரிக்கத் தொடங்கியது.

"இங்குள்ள மக்கள் அதை மரணத் தீவு மற்றும் மர்மமான தீவு என்று அழைக்கிறார்கள். ஆனால், ஒரு நல்ல காரணத்திற்காக இப்படி அழைக்கின்றனர்" என்று பிபிசி நிருபர் ஃபைஃப் ராபர்ட்சன், ஸ்காட்டிஷ் தீவான 'க்ரூனார்ட்'-ஐ 1962-ல் குறிப்பிட்டு கூறினார்

"ஆனால் இது பயங்கரமான பழைய கதைகளில் ஒன்றோ அல்லது மூடநம்பிக்கையோ இல்லை", என்றும் அவர் கூறினார்.

"இந்தக் கதை 1942ஆம் ஆண்டில் தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக போர் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று போர் அலுவலகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த தீவைக் கைப்பற்றி, மிக ரகசியமாக சோதனை செய்யத் தொடங்கினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்று வரை ஒரு சிலருக்கு மட்டுமே அங்கு என்ன நடந்தது என்பது தெரியும்".

"உள்ளூர் மக்களுக்கு இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை," என்றும் நிருபர் ராபர்ட்சன் கூறினார்.

க்ரூனார்டில் நடந்ததாக நம்பப்படும் அரசாங்கத்தின் ஆபத்தான சோதனைகளின் கதைகளை ஆய்வு செய்வதையே ராபர்ட்சன் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் ஆய்வை தொடங்குவதற்குள், பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் அந்த தீவிற்கு செல்ல தடை விதித்தது.

ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் உள்ளூர்வாசிகளை அந்த தீவை சுற்றிக் காட்டுவதற்காக இணங்க வைக்க ராபர்ட்சனால் முடியவில்லை.

பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இங்கு இரு சுற்றுச்சூழல் பேரழிவு நிகழ்ந்தது. இந்த தீவு மிகவும் ஆபத்தன நச்சு கலக்கப்பட்ட இடமாக இருந்தது. சுமார் அரை நூற்றாண்டு காலமாக தடைசெய்யப்பட்ட பகுதியாகவே இருந்தது. இறுதியாக 1990 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த தீவை பாதுகாப்பானதாக அறிவித்தது.

உண்மை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் அரசாங்கம் ஆந்த்ராக்ஸ் எனப்படும் ஒரு கொடிய பாக்டீரியா தொற்றினை போரில் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான ரகசிய முயற்சிகளை செய்யும் இடமாக க்ரூனார்ட் தீவு இருந்தது.

ராணுவம் அந்த நேரத்தில் படம்பிடித்த காட்சிகளை அரசு ரகசியமாக வைத்திருந்த நிலையில், 1997 ஆம் ஆண்டு அந்த காட்சிகளை அரசு வெளியிட்டது. அப்போதுதான் அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய சரியான விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

ஆபரேஷன் வெஜிடேரியன் (Operation Vegetarian) என்று இந்த திட்டம் அழைக்கப்பட்டது. இங்கிலாந்தின் வில்ட்ஷையரில் உள்ள போர்டன் டவுன் ஆய்வகத்தின் உயிரியல் துறையின் தலைவராக இருந்த பால் ஃபில்டஸின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் தொடங்கியது.

1916ஆம் ஆண்டு, முதலாம் உலகப்போரின் போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்களின் விளைவுகள் குறித்து ஆராய்வதற்காக, போர்டன் டவுன் ஆய்வகம் அமைக்கப்பட்டது.

1940-களில், பிரிட்டன் மீண்டும் போரில் ஈடுபட்டபோது, ஜெர்மனி நாஜிகளுக்கு எதிராக பேரழிவு விளைவிக்கவும், போர் வீரர்கள் களத்தில் நேரடியாக போரிடுவதை குறைக்கவும் உயிரி ஆயுதங்களை (biological weapons) போர்டன் டவுன் ஆய்வகத்தில் பிரிட்டன் தயாரித்தது.

க்ரூனார்ட் என்பது ஸ்காட்லாந்தின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, க்ரூனார்ட் என்பது ஸ்காட்லாந்தின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு.

பலியான ஆடுகள்

ஆந்த்ராக்ஸ் என்ற பாக்டீரியாவை பிண்ணாக்குகளில் செலுத்தி, அதை ஜெர்மனி முழுவதும் கால்நடை மேயும் இடங்களில் பரப்பி பாதிப்பு ஏற்படுத்துவதே திட்டமாக இருந்தது.

மாடுகள் இந்த பிண்ணாக்குகளை சாப்பிட்டு ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட மாட்டின் இந்த இறைச்சியை சாப்பிடுபவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவர்.

ஆந்த்ராக்ஸ் இயற்கையாகவே தோன்றும் ஒரு கொடிய உயிரினம். நோய்த்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அவை ஏற்படும் போது விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பயங்கரமானதாக இருக்கும்.

ஜெர்மனியின் இறைச்சி விநியோகத்தை அழித்து, நாடு முழுவதும் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பிற்கு வழிவகுத்து, இதனால் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுத்துவதே, இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு இயல்பான சூழலில் ஆந்த்ராக்ஸ் எவ்வாறு செயல்படும் என்பதை புரிந்துகொள்ளவும், ஆராய்ச்சியாளர்கள் அதை சோதனை செய்து பார்க்கவும், மக்கள் வசிக்கும் பகுதி அல்லாத ஒரு இடம் தேவைப்பட்டது.

1942 ஆம் ஆண்டு, தூரத்தில் மக்கள் வசிக்காத 522 ஏக்கர் க்ரூனார்ட் தீவை பிரிட்டன் ராணுவம் வாங்கியது. உள்ளூர்வாசிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தது.

விஞ்ஞானிகளின் மேற்பார்வையின் கீழ் ஒரு ராணுவக் குழு, அங்கு பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

இந்த சோதனைக்காக தீவிற்கு கால்நடைகள் கொண்டுவரப்பட்டன. ஆராய்ச்சியாளர்கள் தீவின் நிலபரப்பு முழுவதும் ஆந்த்ராக்ஸ் வித்துகளை வெளியிட்டு தொடர் சோதனையை தொடங்கினார்.

"ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா திறந்த வெளியில் உயிருடன் இருக்குமா என்று கண்டறிவதே நோக்கமாக இருந்தது, அது வெளியிலும் இதே வீரியத்துடன் செயல்படுமா என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்தது" என 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பிபிசி ஆவணப்படமான 'தி மிஸ்டரி ஆஃப் ஆந்தராக்ஸ் ஐலாண்ட்' மூலம் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எட்வர்ட் ஸ்பியர்ஸ் விளக்கினார்.

"பல்வேறு அளவில் ஆந்த்ராக்ஸ் வித்துகள் வெளியிட்ட இடத்தில் சுமார் எண்பது செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்தன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆந்த்ராக்ஸ் வித்துகள் வெளியிடுவது கட்டுப்படுத்தப்பட்டது" என்றார் அவர்.

இதன் முடிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. வித்துக்கள் வெளியிட்ட சில நாட்களுக்குள், செம்மறி ஆடுகள் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கி விரைவாக இறக்கத் தொடங்கின.

பாதிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டன.

ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா

5 மில்லியன் பிண்ணாக்குகள்

இந்த சோதனைகளை உள்ளூர் விவசாயிகள் சிலர் கண்டனர். அவர்கள் அந்த தீவின் மேல் ஆந்த்ராக்ஸ் மேகங்கள் மிதப்பதை கண்டறிந்தனர்.

விஞ்ஞானிகள் குழுவிற்கு செம்மறி ஆடுகளை விற்ற உள்ளூர்வாசி ஒருவர், விலங்குகள் மீது புகை விழுவது போல ஒன்றை பார்த்ததாக நினைவு கூர்ந்தார். "இது ஆந்த்ராக்ஸ் போன்ற விஷ வாயுவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்", என்று அவர் 1962 ஆம் ஆண்டு ராபர்ட்சனிடம் கூறினார்.

1943 ஆம் ஆண்டு வரை, ரகசிய சோதனைகள் தொடர்ந்தன. ராணுவம் அவற்றை வெற்றிகரமாகக் கருதியது. அந்த விஞ்ஞானிகள் போர்டன் டவுன் ஆய்வகத்திற்கு திரும்பினர்.

இதன் விளைவாக, ஆந்த்ராக்ஸுடன் கலந்த ஐந்து மில்லியன் பிண்ணாக்கு கட்டிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் நார்மண்டி மீதான அச்சுப் படைகளின் படையெடுப்பினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

போருக்குப் பிறகு அந்த பிண்ணாக்குகள் அழிக்கப்பட்டன.

பின்னர் 1952ஆம் ஆண்டு பிரிட்டன் ஒரு வித்தியாசமான பேரழிவு ஆயுதத்தை உருவாக்கி, உலகின் மூன்றாவது அணுசக்தி உடைய மாறி அதன் லட்சியத்தை அடைந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டன் ரசாயன மற்றும் உயிரி ஆயுதத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. மேலும் 1975 ஆம் ஆண்டு உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்துவதையோ, உற்பத்தி செய்வதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கும், உயிரி ஆயுதங்கள் மாநாட்டு ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டது.

க்ரூனார்ட் தீவில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, க்ரூனார்ட் தீவில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை

க்ரூனார்ட் தீவில் என்ன நடந்தது

ஆபரேஷன் வெஜிடேரியனின் விளைவுகள் அந்த தீவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது.

ஆந்த்ராக்ஸ் மிகவும் கொடிய பாக்டீரியா ஆகும். அது பல ஆண்டுகளாக மண்ணில் நிலைத்திருக்கும். இது வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் உயிரினங்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இங்கு நடைபெற்ற ராணுவ சோதனைகள், இத்தீவை மக்கள் அல்லது விலங்குகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக மாற்றியது. இங்கு விழும் மழைநீர் கடலில் கலந்தால் கூட அதுவும் அபத்தானதாக இருக்கக்கூடும்.

இந்த சோதனைகள் நடைபெற்ற அடுத்த சில மாதங்களில், க்ரூனார்ட் விரிகுடாவுக்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் இருக்கும் விலங்குகள் இறக்கத் தொடங்கின.

"பிரிட்டன் அரசு ஒரு கிரேக்கக் கப்பலில் இருந்து விழுந்த ஒரு நோய்வாய்ப்பட்ட ஆடின் காரணமாகவே விலங்குகள் இறந்து போகின்றன என்று கூறி யாருக்கும் தெரியாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது", என்று எலிசபெத் வில்லிஸ் தனது " நச்சுத்தன்மை மற்றும் இழப்பீடு" என்ற கட்டுரையில் கூறியுள்ளார்.

"அவர்களுக்கு இதைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிந்தது, இல்லையென்றால் அவர்கள் இவ்வளவு விரைவாக இழப்பீடு பயணம் தர மாட்டார்கள்", என்று உள்ளூர்வாசி ஒருவர் 1962 ஆம் ஆண்டில் பிபிசியிடம் கூறினார்.

ராணுவம் அந்த தீவிற்கு செல்ல தடை விதித்தது மற்றும் பார்வையாளர்களை விலகி இருக்குமாறு எச்சரிக்கை பலகைகளை வைத்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து, ரசாயன கலவைகள் கொண்டு நிலத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவை பெரும்பாலும் பயனற்றவையாகவே இருந்தன.

1971 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு, மேற்பரப்பில் எந்த ஆந்த்ராக்ஸ் வித்துகளும் இல்லை என்றாலும், அவை இன்னும் நிலத்தின் அடியில் இருந்தன என்பது கண்டறியப்பட்டது.

இவை தீவில் காலடி எடுத்து வைக்கும் எந்த நபருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

1981 ஆம் ஆண்டில், டார்க் ஹார்வெஸ்ட் கமாண்டோஸ் என்ற சுற்றுச்சூழல் குழு தீவிலிருந்து ஆந்த்ராக்ஸ் பாதிக்கப்பட்ட மண்ணின் மாதிரிகளை எடுத்து சென்றது.

அவர்கள் அந்த நிலத்தின் மாதிரிகளை ஒரு வாளியில் போட்டு போர்டன் டவுனின் புறநகரில் விட்டு சென்றனர். தீவில் உள்ள கொடிய நச்சுத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் மீண்டும் இந்த தீவில் கிருமி நீக்கம் செய்ய முயன்றனர்.

அவர்கள் தீவின் நிலப்பரப்பை கடல் நீர் மற்றும் ஃபார்மால்டிஹைட் (formaldehyde) கலவையில் ஊறவைத்தனர். மேலும் நச்சுத்தன்மை வாய்ந்த மேல் மண்ணை அகற்றினர்.

இம்முயற்சி வெற்றிகரமாக இருந்தது. இறுதியாக ஏப்ரல் 24, 1990 ஆம் ஆண்டில், 48 வருட கால தடைக்கு பிறகு பிரிட்டன் அரசாங்கம் க்ரூனார்ட் தீவை ஆந்த்ராக்ஸ் இல்லாததாக தீவாக அறிவித்தது.

ரகசிய உயிரியல் போர் சோதனைகளை முதலில் க்ரூனார்ட்டில் மேற்கொண்டது போல பல இடங்களில் பிரிட்டன் அரசாங்கம் செய்துள்ளது.

அங்கு நடந்தவற்றின் பின்விளைவுகள் உயிரியல் போரின் ஆபத்துகள் மற்றும் பேரழிவை ஏற்படுத்த மனிதன் செய்தவை ஆகிய இரண்டிற்கும் ஒரு உறுதியான சான்றாக அமைகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)