இந்திரா காந்தியுடன் மோதிய நேருவின் தங்கை - பிரதமர் தேர்வின் போது காமராஜர் என்ன செய்தார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
இந்திராகாந்தி சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே அவருக்கும் அவரது அத்தை விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் இடையிலான உறவில் விரிசல் காணப்பட்டது. காரணம் இந்திராவின் தாயார் கமலா நேரு.
நேருவின் தங்கையான விஜயலட்சுமியின் செல்லப் பெயர் 'நான்' (Nan). அவர் இந்திராவின் தாயார் கமலா நேருவை விட ஒரு வயது இளையவர்.
விஜயலட்சுமி தனது சகோதரர் ஜவஹர்லால் நேருவை மிகவும் நேசித்தார். ஆனால் 1916இல் அவருக்கு திருமணம் ஆனதில் இருந்து அண்ணி கமலாவை, விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை.
அவர் மட்டுமல்ல, நேருவின் தாயார் ஸ்வரூப் ராணியும் தன் மகன் ஜவஹருக்கு கமலா பொருத்தமானவர் அல்ல என்று நினைத்தார்.
“கமலாவின் ஆங்கிலம் மிகவும் பலவீனமாக இருந்ததால் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆங்கிலப் படங்களைப் பார்க்க கமலா அழைக்கப்பட மாட்டார். ஜவஹர் சிறையில் நீண்ட காலம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இதற்கிடையில், கமலாவின் உடல்நிலையும் வேகமாக மோசமடைய ஆரம்பித்தது," என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறான ' தி லைஃப் ஆஃப் இந்திரா காந்தி’ புத்தகத்தில் பிரபல எழுத்தாளர் கேத்தரின் ஃபிராங்க் எழுதியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த புகழ்பெற்ற புத்தகத்தில் கேத்தரின் ஃபிராங்க், நேரு குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களுடன் பேசி, அவர்களின் கடிதப் பரிமாற்றங்களை ஆராய்ந்த பிறகு, “நேரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களான ஸ்வரூப் ராணி, விஜயலட்சுமி மற்றும் கமலா ஆகிய மூவரும் நேருவின் நேரத்தையும் அன்பையும் பெற போட்டியிட்டனர். தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் பரபரப்பில் உழன்று கொண்டிருந்த காரணத்தால் தனது தாய், சகோதரி மற்றும் மனைவிக்கு இடையேயான பதற்றமான உறவைப் பற்றி நேரு அறியக் கூட இல்லை என்பதை இந்திரா சிறுவயது முதலே கவனித்து வந்தார்,” என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Harper Collins
இந்திரா காந்தியை தனிமையில் தள்ளிய அத்தையின் வார்த்தைகள்
விஜயலட்சுமி தனது மூத்த சகோதரர் ஜவஹரை மிகவும் நேசித்தார். இருவரது விருப்பங்களும் ஒரே போல இருந்தன. இருவரும் ஒன்றாக குதிரை சவாரி செய்து, ஒருவருக்கொருவர் கவிதைகளை வாசித்து, விருந்துகளில் ஒன்றாக கலந்து கொள்வார்கள்.
“திடீரென்று ஒரு இளம் பெண் தன் சகோதரனுக்கு அருகில் இதுவரை தான் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டிருப்பதை விஜயலட்சுமி கண்டார். விஜயலட்சுமிக்கு கமலா ஒரு வெளியாள். நேரு குடும்பத்தின் தலைவியாக ஆவதற்குத் தேவையான 'பண்போ’ அல்லது ’திறமையோ’ கமலாவுக்கு இல்லை என்று அவர் கருதினார். கமலாவுக்கு விலையுயர்ந்த ஆடைகள் அல்லது நகைகள் மீதும் ஆர்வம் இருக்கவில்லை," என்று புபுல் ஜெயகர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.
தனது பாட்டி மற்றும் அத்தை தனது தாயிடம் நடந்துகொள்ளும் விதத்தை இந்திரா ஒருபோதும் விரும்பவில்லை. இதுமட்டுமின்றி இந்திரா காந்தியை அழகில்லாதவர், முட்டாள் என்று விஜயலட்சுமி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பலமுறை இதுபோல நடந்தது. இந்திரா அதை தன் காதுகளால் கேட்கவும் செய்தார்.
இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியான புபுல் ஜெயகர், “தன் வயதைத் தாண்டிய உயரத்துடன் காணப்பட்ட இந்திரா மிகவும் ஒல்லியாக இருந்தார். அவர் கறுப்பாக இருப்பதாகவும் விஜயலட்சுமி நினைத்தார். அத்தை பேசிய வார்த்தைகள் இந்திராவை மிகவும் காயப்படுத்தின.” என்று இந்திராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கூறியுள்ளார்.
“அத்தையின் இந்த வார்த்தைகளுக்கு பிறகு யாருடனும் கலந்து பழகாத பெண்ணாக இந்திரா மாறினார். 50 வருடங்கள் கடந்த பிறகும் அத்தையின் வார்த்தைகள் இந்திராவின் நினைவுகளில் பசுமையாக இருந்தன. இந்த வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தியது மட்டுமல்லாமல் தன் தன்னம்பிக்கையையும் குலைத்தது என்று அவர் ஒப்புக்கொண்டார். இந்திரா அனைவரிடமிருந்தும் விலகி இருக்க ஆரம்பித்தார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஃபெரோஸுடனான திருமணம் தொடர்பாக இடையே கருத்து வேறுபாடு
ஃபிரோஸ் காந்தியை திருமணம் செய்ய இந்திரா முடிவு செய்தபோது இந்திராவிற்கும் விஜயலட்சுமிக்கும் இடையிலான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்தது. நேருவுக்குப் பிறகு இந்திரா தன் எண்ணத்தை தன் அத்தைகளிடம் சொன்னபோது அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.
இந்திரா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் மற்ற இளைஞர்களையும் சந்திக்க வேண்டும் என்றும் இரண்டாவது அத்தை கிருஷ்ணா கூறினார். சொந்தத்தில் உள்ள ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
உடனே இந்திரா திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டார், "ஏன்? நீங்கள் திருமணத்தை முடிவு செய்ய பத்து நாட்களுக்கும் குறைவாகவே ஆனது. எனக்கு ஃபெரோஸை பல வருடங்களாகத் தெரியும். பிறகு நான் ஏன் காத்திருக்க வேண்டும். நான் ஏன் மற்ற இளைஞர்களை சந்திக்க வேண்டும்?" என்று கேட்டார் அவர்.
விஜயலட்சுமியிடம் இந்த விஷயத்தை இந்திரா காந்தி கூறியபோது, 'ஃபெரோஸை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக அவருடன் ஒரு காதல் உறவை வைத்துக்கொள்வது நன்றாக இருக்கும்' என இந்திராவிடம் திட்டவட்டமாக கூறினார்.
இது இந்திராவை வருத்தமடையச்செய்தது. தன்னையும் ஃபெரோஸையும் அவமதிப்பதாக இந்த யோசனை உள்ளது என்று அவர் கருதினார்.
இந்த சம்பவத்தால் அலகாபாத்தில் உள்ள ஆனந்த் பவனில் வசித்த பெண்களின் வாழ்க்கை மேலும் அழுத்தத்திற்கு உள்ளானது.

பட மூலாதாரம், Getty Images
அரசு நிகழ்ச்சிகளில் இந்திரா ஒதுக்கி வைப்பு
சுதந்திரத்திற்கு சிறிது காலத்திற்கு முன்பாக விஜயலட்சுமி பண்டிட் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக இடைக்கால இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் டெல்லி திரும்பிய போது விலங்கு ரோமத்தால் செய்யப்பட்ட ஃபர் கோட்டை கொண்டு வந்தார்.
இந்திரா காந்தி கடுமையான வார்த்தைகளில் இதை விமர்சித்தார். இந்த கோட் சோவியத் அரசால் விஜயலட்சுமிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது. நேரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் சுதந்திரத்திற்காகப் போராடி சிறையில் இருந்த நேரத்தில் விஜயலட்சுமி பண்டிட் மகள்களான சந்திரலேகா, நயன்தாரா ஆகிய இருவரும் அமெரிக்கப் பள்ளிகளில் படித்ததையும் இந்திரா விமர்சித்தார்.
விஜயலட்சுமி பண்டிட் 1949இல் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். நேரு அமெரிக்கா சென்றபோது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நேருவின் அட்டவணையை அவர்தான் முடிவு செய்தார்.
சகரிகா கோஷ் தனது 'இந்திரா, இந்தியாஸ் மோஸ்ட் பவர்ஃபுல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகத்தில் "இங்கும் அத்தை, மருமகள் இடையே இருந்த பழைய பகை வெளிப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் எல்லா அரசு நிகழ்ச்சிகளில் இருந்தும் இந்திரா காந்தியை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தார். இது இந்திராவை மிகவும் கோபப்படுத்தியது. புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை நேரு சந்தித்த பிரின்ஸ்டன் நகருக்குச் செல்லவும் அவரை அனுமதிக்கவில்லை,” என்று எழுதுகிறார்.
இந்திரா காந்தியின் தனிமையைக் கண்ட அணு விஞ்ஞானி ஹோமி பாபா, அவரை உணவு அருந்துவதற்காக பலமுறை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பட மூலாதாரம், Juggernaut
ராஜீவ் காந்தியின் கல்லூரி சேர்க்கைக்கு உதவி
விஜயலட்சுமிக்கும் இந்திராவுக்கும் இடையே எல்லாமே மோசமாக இருந்தது என்று சொல்லமுடியாது. “தனது சகோதரருக்கு எழுதிய கடிதங்களில் விஜயலட்சுமி எப்போதும் இந்திராவைப் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனராக இருந்த போது இந்திராவின் மூத்த மகன் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள உதவினார்,” என்று சமீபத்தில் வெளியான விஜயலக்ஷ்மி பண்டிட் வாழ்க்கை வரலாற்றில் மனு பகவான் எழுதுகிறார்.
விஜயலட்சுமி ராஜீவ் காந்தியை மிகவும் நேசித்தார். இந்திராவும் தன் மகனை கவனித்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.
நேரு மறைவுக்குப் பிறகு, சாஸ்திரியின் அமைச்சரவையில் சேர இந்திரா நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராவது அவசியமானது.
“இந்திரா தனது தந்தை எம்.பி.யாக இருந்த அதே நாடாளுமன்றத் தொகுதியான ஃபூல்பூரில் இருந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று அனைவருமே கருதினர். ஆனால் விஜயலட்சுமி பண்டிட் அங்கிருந்து போட்டியிட விரும்பினார். இந்திரா விரும்பினால் அந்த இடத்தை விட்டுக்கொடுக்க தயார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அப்போது மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட இந்திரா விரும்பாததால், மாநிலங்களவை வழியாக நாடாளுமன்ற உறுப்பினராக முடிவு செய்தார்,” என்று கேத்தரின் ஃபிராங்க் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நேருவின் மரபுரிமை பற்றிய கேள்வி
லால் பகதூர் சாஸ்திரி 1966இல் காலமான போது பிரதமர் பதவிக்கு உரிமை கோர வேண்டும் என்று விஜயலட்சுமிக்கு ஒரு கணம் தோன்றியது.
அவரது சகோதரி கிருஷ்ணா தனது ‘வீ நேரூஸ்’ புத்தகத்தில், “அப்போது என் சகோதரி விஜயலட்சுமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பினார். சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதராகவும், பிரிட்டனுக்கான ஹை கமிஷனராகவும் பதவி வகித்த பிறகு இந்தியாவில் அவர் பிரபலமாக இருந்தார். பிரதமராக வருவதற்கு தனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர் உணர்ந்தார். ஆனால் காமராஜர் அவரது பெயரை கருத்தில் கொள்ளக்கூட இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளிநாட்டில் பிரபலமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவை விட்டு பல காலம் வெளியே இருந்தார். பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தி வரவேண்டும் என்று காமராஜர் விரும்பினார்.

பட மூலாதாரம், Holt, Rinehart and Winston
இந்திராவின் திறமை மீது சந்தேகம்
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தியை விஜயலட்சுமி பண்டிட் வாழ்த்திய போது அவர் தெரிவித்த வார்த்தைகள் இந்திரா காந்திக்கு பிடிக்கவில்லை.
"'இந்திராவுக்கு திறமை உள்ளது. அவருக்கு அனுபவம் தேவை. சிறிது அனுபவம் பெற்ற பிறகு அவர் ஒரு நல்ல பிரதமராக நிரூபணமாவார். அவரது உடல்நிலை பலவீனமாக உள்ளது. ஆனால் நண்பர்களின் உதவியுடன் அதை அவர் முறியடிப்பார் என்று விஜயலட்சுமி கூறினார்,” என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் ஜரீர் மஸானி எழுதுகிறார்.
“இந்திரா காந்தியை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் விஜயலட்சுமி பண்டிட் கடுமையான அமைதியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்கும் இந்திராவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முடியவில்லை," என்று மனு பகவான் எழுதுகிறார்.
இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியான உஷா பகத் தனது ’இந்திராஜி, த்ரூ மை ஐஸ்’ என்ற புத்தகத்தில், “பிரதமரான பிறகு விஜயலட்சுமி மீதான இந்திராவின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஓரிரு முறை விஜயலட்சுமி பண்டிட் இந்திராவை சந்திக்க வந்தபோது பத்து நிமிடம் கழித்து அறைக்கு வரும்படி என்னிடம் அறிவுறுத்தினார். விஜயலட்சுமியுடன் பேசுவதற்கு இந்திரா வசதியாக உணராததே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Penguin Viking
ஹை கமிஷனராக நியமிக்கும் யோசனையை நிராகரித்த இந்திரா
விஜயலட்சுமி இப்போது தேவையில்லாத நபராகிவிட்டார் என்பதற்கான அறிகுறிகள் இந்திரா காந்தியின் தரப்பில் இருந்து வரத் தொடங்கின. இதற்கிடையில் விஜயலட்சுமி பண்டிட்டை மீண்டும் பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனராக அனுப்ப வேண்டும் என்று மவுண்ட் பேட்டன் பிரபு யோசனை தெரிவித்தார்.
"ஒரு சந்திப்பின் போது விஜயலட்சுமி இந்திராவிடம் இதற்கான சாத்தியக்கூறு பற்றிக் கேட்டபோது அவர் மிகவும் வெளிப்படையாக,’ அத்தை, எனக்கு உங்கள் மேல் நம்பிக்கையில்லை’ என்று பதிலளித்தார்,” என்று விஜயலக்ஷ்மி பண்டிட் வாழ்க்கை வரலாற்றில் மனு பகவான் எழுதுகிறார்.
”விஜயலட்சுமி இந்திராவின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டி அவரது உச்சி முகர்ந்து ’நல்லது, நீ தெளிவாகச் சொன்னாய்’ என்று கூறினார்.”
பிரிட்டனுக்கு பதிலாக பிரான்ஸ் தூதராக அவரை அனுப்ப இந்திரா முன்வந்தார். ஆனால் அதை விஜயலட்சுமி ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டேராடூனில் குடியேற முடிவு செய்தார்.

பட மூலாதாரம், Penguin Random House
1977 தேர்தலில் இந்திராவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம்
இந்திரா காந்தி 1977இல் நெருக்கடி நிலையை நீக்கி மக்களவைத் தேர்தலை அறிவித்த போது, ஜெகஜீவன் ராம் மற்றும் ஹேம்வதி நந்தன் பகுகுணா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இந்திராவின் அத்தை விஜயலட்சுமி பண்டிட்டும் 10 நாட்களுக்குப் பிறகு அரசியல் ஓய்வில் இருந்து வெளியே வந்து ஜனதா கட்சிக்கு தனது ஆதரவை வழங்கினார்.
”இந்திராவும், நெருக்கடி நிலையும் ஜனநாயக அமைப்புகளை நசுக்கிவிட்டன” என்று பகிரங்கமாக அவர் அறிக்கை வெளியிட்டார்.
சிகாகோ டைம்ஸ் அவரது அறிவிப்பை வரவேற்ற அதேவேளையில், ’தனது அத்தையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் இந்திரா காந்திக்கு கடுமையான போட்டியை அளிக்கும் திறன் அவருக்கு உள்ளது என்றும்’ இந்திரா காந்தியை எச்சரித்தது.
அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ஷாஹி இமாம் ஆகியோருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தின் வழியில் அனைத்து மத கூட்டணியை உருவாக்க விஜயலட்சுமி முயன்றார். இந்திராவின் தோல்விக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு வரும் நம்பிக்கையில் இருந்தார் விஜயலட்சுமி.
பிரதமரான பிறகு மொரார்ஜி தேசாய் ஒருவேளை தன்னை இந்திய குடியரசுத் தலைவராக நியமிப்பார் என்று அவர் நம்பினார். ஆனால் அவர் இதை பகிரங்கமாக சொல்லவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகவியலாளர்கள் இதுபோன்ற ஊகங்களை தெரிவித்தனர்.
இந்த கேள்வியை விஜயலட்சுமியிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே, “இவ்வளவு சீக்கிரமாக இன்னொரு இறுதிச்சடங்கை நான் விரும்பவில்லை,” என்றார். குடியரசுத்தலைவராக இருந்த ஃப்க்ரூதின் அலி அகமது சில நாட்களுக்கு முன்புதான் காலமாகியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனந்த் பவனில் ஓரிரவு கூட தங்க அனுமதிக்கப்படவில்லை
"நானும் இந்திராவும் குடும்பப் பின்னணி மற்றும் கல்வியில் ஒரே நிலையில் இருந்து வந்தவர்கள். மனித உரிமைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சுதந்திரம் குறித்து எங்களுக்கு ஒரே மாதிரியான கருத்துகள் இருந்தன. ஆனால் அவர் தனது பாதையில் இருந்து விலகிய போது அவரை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று விஜயலட்சுமி பின்னர் தனது சுயசரிதையான 'தி ஸ்கோப் ஆஃப் ஹேப்பினஸ்' இல் எழுதினார்.
“தேர்தல் முடிவுகள் வெளியாகி பல வாரங்களுக்குப் பிறகு அவரை சந்திக்கச் சென்றபோது நான் அவரைக் கட்டிப்பிடித்து அழுதேன். அவர் ஏன் இப்படி தவறு செய்தார் என்று நினைத்து நான் அழ ஆரம்பித்தேன்,” என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Speaking Tiger Books
இந்திராவின் மனதில் அத்தையின் மீதான கோபம் குறையவில்லை. 1970ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது மூதாதையர் இல்லமான ஆனந்த பவனை நாட்டுக்கு வழங்குவதாக அறிவித்த போது, அங்கு ஓரிரவாவது தங்கவேண்டும் என்ற ஆசையை விஜயலட்சுமி வெளியிட்டார்.
ஆனால் இந்திரா காந்தி அதை அனுமதிக்கவில்லை. 1974 இல் தனது இளைய மகன் சஞ்சய் காந்தியின் திருமணம் நடந்த போது விஜயலட்சுமி பண்டிட்டுக்கு அழைப்பிதழ் கூட அனுப்பாத அளவுக்கு இந்திராவின் கோபம் இருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












