ஜெர்மனிக்கு ரஷ்யா குறியா? சதி, கொலை முயற்சிகளால் ஐரோப்பாவில் மீண்டும் பனிப்போர் மேகம்

ஜெர்மனியில் பனிப்போர் 2.0 சூழல் ஏற்படுமா?

பட மூலாதாரம், Alex Kraus/Bloomberg

    • எழுதியவர், ஜெசிகா பார்க்கர்
    • பதவி, பிபிசி பெர்லின் நிருபர்
  • ராணுவத் தளங்களைச் சுற்றியுள்ள வேலிகளில் மர்ம துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • ஜெர்மனியின் முன்னணி ஆயுத உற்பத்தியாளரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
  • உயர்மட்ட `லுஃப்ட்வாஃப்’ அமைப்பின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது.

இவை 1960களின் உளவு நாவலில் இருந்து எடுக்கப்பட்ட கதைக்களங்கள் அல்ல, இந்த ஆண்டு ஜெர்மனியில் நடக்கும் நிஜ சம்பவங்கள்.

இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் ரஷ்யா மீது திட்டவட்டமாக குற்றம் சாட்ட முடியாது. ஆனால் ரஷ்ய தரப்பில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நாசவேலைகளுக்கு ஜெர்மனி தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது. ஏனெனில் யுக்ரேனுக்கு ஜெர்மனி தொடர்ச்சியாக ராணுவ ஆதரவு கொடுத்து வருவதால், ரஷ்யா ஜெர்மனிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளதால் ஐரோப்பா புதிய பனிப்போரை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதோ என்னும் கவலைகள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"பனிப்போரைப் பற்றி நாம் சிந்திக்கையில் கண்டிப்பாக 1970களைப் பற்றிய நினைவுகள் வரும். ஏனெனில் அப்போது தான் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தது" என்கிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (Rusi) மற்றும் மாயக் உளவுத்துறையின் இயக்குனர் மார்க் கலியோட்டி.

"1950கள் மற்றும் 1960களில் இருந்த ஆரம்பகால பனிப்போர் சூழலை போலவே நாம் இப்போது மோசமான தருணத்தில் இருக்கிறோம்" என்று விவரித்தார்.

இருப்பினும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கும் மற்றும் பனிப்போர் கால கட்டத்தில் இரும்புத்திரையால் பாதியாகப் பிரிக்கப்பட்ட தேசத்திற்குப் இந்த புதுப்பிக்கப்பட்ட பனிப்போர் எப்படி இருக்கும்?

ஆயுத நிறுவன தலைமை நிர்வாகியை கொல்ல திட்டமிட்டது யார்?

ஜெர்மனியின் மிகப்பெரிய ஆயுத நிறுவனமான ரைன்மெட்டாலின் தலைமை நிர்வாகியைக் கொல்ல ரஷ்ய சதி செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ஜெர்மனியிடம் கூறியதாக கடந்த மாதம் சிஎன்என் செய்தி வெளியிட்டது. அப்போது அந்த செய்தி மிகப்பெரிய அதிர்வலைகள் உருவானது.

ரஷ்யா இந்த கூற்றை மறுத்தது. ஆனால் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் "ஒரு ஹைப்ரிட் ஆக்கிரமிப்புப் போரை நடத்துகிறது" என்று ரஷ்யாவைத் தாக்கி பேசினார்.

பிப்ரவரியில் ஒரு புதிய ஆயுத தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில்தான் ரெயின்மெட்டால் (Rheinmetal) தலைமை நிர்வாக அதிகாரி அர்மின் பேப்பர்கரை நான் சந்தித்தேன்.

61 வயதான அவரை பற்றி சொல்ல வேண்டுமெனில் உண்மையில் அவர் "யாரோ" என்று தான் ஆரம்பத்தில் தோன்றியது. ஏனெனில் நேட்டோ நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை மீண்டும் வழங்கவும் தங்கள் சொந்த பாதுகாப்பை அதிகரிக்கவும் பில்லியன்களை செலவிடும் நிலையில் அர்மின் பேப்பர்கர் முக்கியத்துவம் உள்ளவரா என்று சிந்திக்க வைக்கிறது.

ஜெர்மனி சான்சலர் ஓலாஃப் ஷூல்ஸ், பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சென் ஆகியோர் லோயர் சாக்சனி பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை பற்றி பேச அவர்களுடன் அர்மின் பேப்பர்கரும் நின்றார். அப்போது தான் அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

அவரைக் கொல்வதற்கான சதி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், அது மேற்குலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கும்.

அடுத்தடுத்து அரங்கேறும் நாசவேலைகள் : ஜெர்மனியில் பனிப்போர் 2.0 சூழல் ஏற்படுமா?

பட மூலாதாரம், RONNY HARTMANN/AFP

படக்குறிப்பு, ஜெர்மன் சான்சலர் மற்றும் டேனிஷ் பிரதமருடன் அர்மின் பேப்பர்கர்

தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்ட உளவாளிகள்

பாதுகாப்பு நடவடிக்கை குறைபாட்டால், ஜெர்மன் விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கு இடையேயான மிகவும் உணர்ச்சிகரமான உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது. பின்னர் அது ரஷ்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

லுஃப்ட்வாஃபில் உள்ள ஒரு பிரிகேடியர் ஜெனரல், பாதுகாப்பற்ற தொலைபேசி இணைப்பை பயன்படுத்தியதால் உளவாளிகள் ஒட்டு கேட்க வழிவகுத்தது. இது ஜெர்மனிக்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது நடந்து சில வாரங்களுக்குப் பிறகு, பவேரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை நாசப்படுத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு ஜெர்மன்-ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் ரஷ்ய தூதரை வரவழைத்து புகார் அளித்தார்: "புதின் தனது பயங்கரவாதத்தை ஜெர்மனிக்கு கொண்டு வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றார் அவர்.

ஜெர்மனியில் பனிப்போர் 2.0 ஏற்படுமா?

பட மூலாதாரம், AXEL HEIMKEN/AFP

ஜெர்மனியை குறி வைக்கிறதா ரஷ்யா?

கடந்த வாரம்தான், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள இரண்டு ராணுவத் தளங்களுக்கு நீர் வழங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த வேலிகளில் துளைகள் இடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ நீரில் விஷம் கலக்க முற்படுகிறார்கள் என்ற கவலை எழுந்தது.

சந்தேகத்திற்குரிய நாசவேலைச் செயல்களால் குறிவைக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நிறுவப்பட்ட, ஏராளமான அமெரிக்க ராணுவ தளங்களை ஜெர்மனி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா ஜெர்மனியை மிகப்பெரிய அதே சமயம் "பலவீனமான" சக்தியாகக் கருதுகிறது என்று மார்க் கலியோட்டி நம்புகிறார்.

நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை தகர்த்தது யார்?

ரஷ்யா - ஜெர்மனி இடையே பால்டிக் கடலுக்கு அடியில் உள்ள நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய் 2022 இல் தகர்க்கப்பட்டது (Nord Stream blasts). சமீப ஆண்டுகளில் ஜெர்மனியைப் பாதித்த மிகப் பெரிய நாசவேலையாக இது கருதப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த ஊகங்கள் அன்றிலிருந்து எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது அந்த சம்பவம் தொடர்பாக யுக்ரேனிய டைவிங் பயிற்றுவிப்பாளரைக் கைது செய்ய ஜெர்மனி இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உண்மையில் அதிர்ச்சியூட்டும் விஷயம்.

கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், இந்த சிறிய அளவிலான நடவடிக்கை தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்பட்டது என்றாலும் யுக்ரேனில் இருந்து மேற்பார்வையிடப்பட்ட ஒன்று என்று தெரிவித்தது.

யுக்ரேன் இந்த அறிக்கையை முட்டாள்தனம் என்று நிராகரித்தது. அதிபர் புதின் தனது சொந்த குழாய் திட்டத்தை அழிக்க உத்தரவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்ற சந்தேகம் இருந்தபோதிலும், இது உளவுத்துறையின் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத தன்மையை பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு முறையும் வெளிப்படையான நாசவேலை சம்பவங்கள் நிகழும் போது, உடனடியாகவும், நிச்சயமாகவும் ரஷ்யாவை காரணம் காட்ட முடியாது.

பிரான்சில் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நாட்டின் அதிவேக ரயில் வலையமைப்பை குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் ரஷ்ய ஏஜெண்ட்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அடுத்தடுத்து அரங்கேறும் நாசவேலைகள் : ஜெர்மனியில் பனிப்போர் 2.0 சூழல் ஏற்படுமா?

பட மூலாதாரம், BENJAMIN WESTHOFF/EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு, கொலோன்-வான் பகுதியில் உள்ள ஜெர்மன் விமானப்படை தளம் "நீரில் காணப்பட்ட தன்மை" காரணமாக பல மணி நேரம் சீல் வைக்கப்பட்டது.

ஜெர்மனியிலும் தீவிர இடதுசாரி போராளிகளின் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

நார்ட் ஸ்ட்ரீம் தகர்புக்கு யுக்ரேனிய ஏஜெண்டுகளே காரணம் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இது ஜெர்மனியில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் புதிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஜெர்மனி யுக்ரேனுக்கு ஆதரவு அளிப்பதை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தீவிர வலதுசாரி ( AfD) கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடல், யுக்ரேனுக்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை யுக்ரேன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பனிப்போர் ஒப்பீடுகள் ஐரோப்பிய பாதுகாப்பை சார்ந்திருப்பதால், அந்தக் கால அரசியலும் ஜெர்மனியில் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது.

பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில், ஜெர்மன் அரசாங்கம் முக்கியமான உள்கட்டமைப்பு பிரச்னைகளை சரிசெய்யும் நோக்கத்தில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி வருகிறது.

"அனைத்து பகுதிகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்" இருக்க வேண்டும் என்று ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் கூறுகிறார்.

அடுத்தடுத்து அரங்கேறும் நாசவேலைகள் : ஜெர்மனியில் பனிப்போர் 2.0 சூழல் ஏற்படுமா?

பட மூலாதாரம், Danish Defence handout

படக்குறிப்பு, நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தகர்ப்பு

ஐரோப்பாவில் மீண்டும் பனிப்போர் மேகம்

கிரிட்டிஸ் அம்ப்ரெல்லா சட்டத்தின் கீழ் (Kritis Umbrella Act), ஆற்றல், போக்குவரத்து மற்றும் நீர் போன்ற முக்கியமான துறைகளில் செயல்படுபவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு தரங்களைப் பின்பற்ற வேண்டும்.

இது ஜெர்மனியில் வகுக்கப்படும் முதல் பெடரல் சட்டம், ஆனால் போரைச் சுற்றி அதிக பதற்றங்கள் இருந்தபோதிலும் இன்னும் இறுதி ஒப்புதல் பெறப்படவில்லை.

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கவச மோர்ட்டார் வாகனங்கள் ரஷ்ய எல்லைக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ஜெர்மனியின் மற்றொரு வெளியுறவுக்கொள்கை மீதான தடை உடைக்கப்படுவதை இது குறிக்கிறது.

2026 முதல் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை தனது மண்ணில் நிலைநிறுத்த ஜெர்மனி ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய போது, ​ ஜெர்மனி சான்சலர் ஷூல்ஸ், `ஜெய்டென்வெண்டே’ (Zeitenwende) அதாவது தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார்.

எவ்வாறாயினும், ஜெர்மனி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பல ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் குறைவாகவே முதலீடு செய்யும் போக்கை மாற்றியமைக்கவும், ஜெர்மனியின் துயரமான கடந்த காலத்தால் ஏற்பட்ட காயத்தை மாற்றுவதற்கும் நேரம் எடுக்கும் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஜெர்மனி இந்த நிகழ்வுகளுக்கு எவ்வளவு காலம் எடுத்து கொள்ளும் என்ற கேள்விக்குறி எழுகின்றது.

பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றி மட்டுமல்ல, இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதும் உளவுத்துறையை மேம்படுத்துவதும் இதில் அடங்கும் என்று மார்க் கேலியோட்டி கூறுகிறார்.

"பாதுகாப்பு திட்டமிடல் என்பது சில வாரங்கள் அல்லது மாதங்களில் நடந்துவிடாது. வருடங்கள் ஆகும்.." என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)