சித்தராமையாவுக்கு நெருக்கடி: கர்நாடகாவில் காங்கிரசுக்கு பின்னடைவா? புதிய வாய்ப்பா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவிலிருந்து
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
காரணம், பொதுவாகவே பா.ஜ.க-வைச் சேராத தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொண்டே வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாகவே, சித்தராமையாவுக்கு எதிராக ஏதாவது வழக்கைப் பதிவு செய்ய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை என்றுதான் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் விஜயநகர் லே-அவுட்டில் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறி, ஆளுநர் கெலாட் முன் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், இந்த வீட்டுமனைகள், அந்த ஆணையம் சட்டவிரோதமாக கையகப்படுத்திய 3.16 ஏக்கர் நிலத்துக்குக் கைமாறாக வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த மூன்று மனுக்களில் முதல் மனு தாக்கல் செய்யப்படும் வரை, சித்தராமையாவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை களங்கமற்றதாகவே இருந்து வந்தது.
இந்த நில ஒதுக்கீட்டில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிறார் சித்தராமையா. “ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் கேட்டார்.
நிச்சயமாக, உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ முழுப் பிரச்னையையும் ஆராய்ந்து, இப்பிரச்னையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் வரை அவருடைய கேள்வி விவாதத்திற்குரியது.
ஆனால், முதலமைச்சராகவும், சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், சித்தராமையாவுக்கு இருந்த தார்மீக அதிகாரத்தின் ‘பிரகாசம் மங்கிவிட்டது’ என்பதில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பின் முக்கிய அரசியல்வாதிகள் மத்தியிலும், அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காங்கிரசுக்கு பின்னடைவா? புதிய வாய்ப்பா?
இதுகுறித்து பிபிசி ஹிந்தியிடம் பிரபல அரசியல் விமர்சகரும், NITTE கல்வி அறக்கட்டளையின் கல்வி இயக்குநருமான பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி, இன்றிருக்கும் சித்தராமையா, முன்னர் இருந்த சித்தராமையாவின் மங்கிய நிழல் மட்டுமே, என்கிறார்.
“இந்தக் குற்றச்சாட்டு வந்த காலத்திலிருந்து அவரிடம் இருந்த உற்சாகம், ஆற்றல் இப்போது இல்லை. அவரது உடல்மொழியில் ஒரு தற்காலிகத்தன்மை அதிகம் பிரதிபலிக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் இது அவருக்கு ஒரு பின்னடைவு தான்," என்கிறார் பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி.
இந்தக் கருத்தில் மற்ற அரசியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் சாஸ்திரியிடம் இருந்து வேறுபடுகிறார்கள்.
மைசூரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் டீன், பேராசிரியர் முசாபர் அஸதி பிபிசி ஹிந்தியிடம், “அவர் ஊழலில் ஈடுபட்டாரா என்பதுதான் கேள்வி. இந்த வழக்கில் அவர் ஊழலில் ஈடுபடவில்லை. இது ஒரு ஊழல் வழக்கு இல்லை. அவரைச் சுற்றி ஊழல்வாதி என்ற பிம்பமும் இல்லை,” என்கிறார்.
அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் ஆட்சி மற்றும் கொள்கைப் பேராசிரியரான நாராயணா, பிபிசி ஹிந்தியிடம், “இது ஊழல் குற்றச்சாட்டு அல்ல. இது தொழில்நுட்பச் செயல்முறை குறித்த கேள்வி. இதை வைத்து அவர்களால் சித்தராமையாவை தாக்க முடியாது. இது அவருடைய பிம்பத்தை ஓரளவு மங்கச் செய்திருக்கலாம். இது கட்சியால் சமாளிக்க முடியாத பிரச்னை அல்ல. காங்கிரஸ் இதை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே எல்லாம் இருக்கிறது,” என்கிறார் அவர்.
ஆனால், மைசூரு பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சாம்பி பூரணிக், இவர்கள் யாருடனும் உடன்படவில்லை. “சித்தராமையா மிகவும் திறமையான மற்றும் வலிமையான தலைவர். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் திறன் அவருக்கு உண்டு. அவர் தூய்மையானவர் என்ற பிம்பத்துடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இப்போது இரட்டை ஆபத்தை எதிர்கொள்கிறார். இது அவருக்கும் அவரது கட்சிக்கும் பின்னடைவாகும்,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
சித்தராமையாவின் அரசியல் முக்கியத்துவம்
சித்தராமையா பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்பது அரசியல் வட்டாரங்களிலும் சரி, அரசியல் ஆய்வாளர்களிலும் சரி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மறைந்த டி தேவராஜ் அர்ஸ் உருவாக்கிய ஓபிசி-தலித்-சிறுபான்மையினர் சார்ந்த ஒரு சமூக அச்சை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் ஒரு தனித்துவமான பிரசாரம் மேற்கொண்டார். இதனால், அவர் மதச் சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது, தங்கள் கட்சியில் சேர காங்கிரஸ் அவருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தது.
மாநில அரசியலிலும், தேசிய அளவிலும் சித்தராமையாவின் முக்கியத்துவம் மற்றும் அவர் ஏன் குறிவைக்கப்பட்டார் என்பது குறித்து ஆய்வாளர்களின் கருத்தில் வேறுபாடு இல்லை.
பேராசிரியர் அஸதி, “ராகுல் காந்தியின் ஆதரவு இருப்பதால், சித்தராமையாவை பா.ஜ.க குறிவைக்கிறது என்பது தெளிவாகிறது. பா.ஜ.க-வை ராகுல் காந்தி தொடர்ந்து தாக்கி வருகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது," என்கிறார்.
பேராசிரியர் சாஸ்திரி, காங்கிரஸ் கட்சிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதற்குப் பல காரணங்களைக் குறிபிடுகிறார். “உண்மையில், அவரை முதலமைச்சராக்க காங்கிரஸ் மனப்பூர்வமாகத் தேர்வு செய்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. அவர் ஓ.பி.சி சமூகத்தினரை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார்,” என்கிறார் அவர்.
மேலும், “பா.ஜ.க மீதான தாக்குதலின் மூலம் தேசிய அளவில் ஓ.பி.சி-க்களின் ஒற்றுமையைத் தொடர விரும்பும் ராகுல் காந்தியின் குறிக்கோளால் இது தூண்டப்பட்டது. அவர் தொடர்ந்து நீடிப்பது காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானது. இல்லையெனில், சாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்கள் உருவாக்கும் எண்ணத்தையோ அல்லது அவர்கள் பா.ஜ.க-வைத் தாக்கும் விதத்தையோ அது சிதைத்துவிடும்,” என்று பேராசிரியர் சாஸ்திரி கூறுகிறார்.
ஆனால் 2023-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தரவுகளின் பகுப்பாய்வையும் பேராசிரியர் சாஸ்திரி சுட்டிக் காட்டுகிறார்.
சிறுபான்மையினர்-தலித்துகள்-ஓ.பி.சி-க்களின் வாக்குகள் பா.ஜ.க-வால் எவ்வாறு மெதுவாகப் பறிக்கப்பட்டன என்பதை அது கூறுகிறது.
“ஓ.பி.சி சமூகங்களில் ஆதிக்கம் இல்லாத பிரிவினர் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸின் நீண்ட காலத் திட்டம், ஓ.பி.சி-களில் ஆதிக்கம் செலுத்தாத பிரிவினரை மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பக் கொண்டு வருவதாகும்,” என்கிறார் பேராசிரியர் சாஸ்திரி.
பேராசிரியர் அஸதி வேறு கருத்தை முனைக்கிறார்.
“ஓ.பி.சி-க்கள், சித்தராமையாவுக்கு எதிரான இந்த வழக்கை, ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவரை அவமானப்படுத்துவதாகக் கருதுவார்கள். இதுவே ஓபிசிகளை ஒருங்கிணைக்க வழிவகுக்கும்,” என்கிறார்.
பேராசிரியர் நாராயணா, “சித்தராமையாவுக்கு எதிரான வழக்கும், மற்ற பல காரணங்களும் காங்கிரஸின் சரிவைச் சற்றுக் குறைக்கும். இது சித்தராமையா மீது ஒரு அனுதாபத்தை உருவாக்கும். அவருக்கு ஆதரவாக நிற்பதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதுதான் பிரச்னை. ஒருவகையில், இந்தப் பிரச்னையை காங்கிரஸ் எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தது. அதன் ஆதரவுத் தளத்தை ஒருங்கிணைக்க இது ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறதா என்பதுதான் கேள்வி,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டுமா?
ஆனால் இந்த விஷயத்தில் காங்கிரஸின் நிலை குறித்து பேராசிரியர் பூரணிக் வேறுபடுகிறார்.
“காங்கிரஸின் பிம்பம் அடிபட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவுடன், சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்,” என்கிறார்.
எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்காது என்கிறார் பேராசிரியர் சாஸ்திரி.
“இந்தப் பிரச்னையில் ஒன்றிணைந்திருப்பதே சிறந்தது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக, இந்த விஷயம் பெரிதாகப் பெரிதாகப், பிளவுகள் வெளிவருகிறதா என்பதும், இந்தப் பிரச்னையில் கட்சி ஒற்றுமையாக இருக்குமா என்பதும் தெளிவாகும். அவர் பதவி விலகுவது குறித்து காங்கிரஸின் முடிவு, சூழ்நிலையின் அடிப்படையில் எடுக்கப்படும்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












