குரங்கம்மையை தொடர்ந்து உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ் - தடுப்பூசியோ, மருந்தோ இல்லை

ஓரோபோச் வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆனர் ஏரன்
    • பதவி, பிபிசி உலக சேவை

சமீபகாலமாக, தொடர்ந்து அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள், இதைத் தடுக்க தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாத நிலை, வைரஸ் குறித்த போதிய தரவுகள் இல்லாதது என ஓரோபோச் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை மாத இறுதியில் பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான பஹியாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் ஓரோபோச் காரணமாக இறந்ததை அங்குள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கியூபாவிலும் முதல்முறையாக இந்த வைரஸ் பரவியுள்ளது. மிட்ஜ்கள் (Midge- சிறிய பூச்சிகள்) மற்றும் கொசுக்கள் கடித்தால் இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த நோயினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன? அதை எவ்வாறு கண்டறிவது, தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஓரோபோச் வைரஸ் என்றால் என்ன?

ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த ‘குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்’ பூச்சிகள் மூலம் பரவுகிறது. இந்தப் பூச்சி அமெரிக்காவின் பரந்த நிலப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

கரீபியன் தீவுகளான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள ‘வேகா டி ஓரோபோச்’ கிராமத்தில், 1955ஆம் ஆண்டில் இந்த நோய் பாதிப்புகள் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.

கடந்த அறுபது ஆண்டுகளில், பிரேசிலில் இந்த வைரஸால் 5,00,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு இதுவரை பிரேசில் நாட்டில் கிட்டத்தட்ட 10,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2023இல் 800க்கும் அதிகமான பாதிப்புகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பாதிப்புகள் பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளன, அங்கு ஓரோபோச் உட்பரவு நோயாகக் (Endemic) கருதப்படுகிறது.

பிரேசிலைத் தவிர, சமீப காலங்களில் பெரு, கொலம்பியா, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரஞ்சு கியானா, பனாமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் ஓரோபோச் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது.

ஐரோப்பாவில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் ஜூன் மாதம் முதல் ஒரு சில பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் இவை பிரேசில் மற்றும் கியூபாவிலிருந்து திரும்பும் பயணிகளிடையே காணப்பட்டது.

ஓரோபோச் வைரஸ்

ஓரோபோச் வைரஸ் எப்படி பரவுகிறது?

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பூச்சிக் கடிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் உடனான நேரடி தொடர்பு அல்லது காற்று வழியாக போன்ற வேறு ஏதேனும் வகையில் இது பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

ஓரோபோச் வைரஸ் எப்படி பரவுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொசுக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது

பிரேசிலின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று, ‘கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து அவர்களின் கருவுக்கு இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது’ என்று கூறுகிறது.

கர்ப்பம் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் மீது ஓரோபோச்சின் விளைவுகள் குறித்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை, ஆனால் ஆராயப்பட்டு வருகிறது.

நகரமயமாக்கல், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உந்தப்பட்டு மனிதர்களிடையே இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.

ஓரோபோச் வைரஸ், இயற்கையாகவே குரங்குகள், வன்மக்கரடி போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது. இது சில பறவைகளையும் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

ஓரோபோச் வைரஸின் அறிகுறிகள் என்ன?

ஓரோபோச் வைரஸின் அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது

ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் இந்த நோயின் அறிகுறிகளை பின்வருமாறு பட்டியலிடுகிறது:

  • திடீரென அதிக காய்ச்சல்
  • தலைவலி
  • கண்களுக்குப் பின்னால் வலி
  • மூட்டு விறைப்பு அல்லது வலி
  • அதீத குளிர்
  • குமட்டல்/ஒவ்வாமை
  • வாந்தி

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.

இருப்பினும், 60% நோயாளிகளில், சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் மீண்டும் தோன்றுகின்றன என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூறுகிறது. காய்ச்சல் மீண்டும் ஏற்படும்போது அவை தோன்றுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீண்டும் மீண்டும் ஒருவர் பாதிக்கப்பட என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோன்ற நோய் தொற்று மீண்டும் உருவாகியிருக்கலாம் அல்லது வைரஸைச் சுமக்கும் பூச்சிகள் அதிக அளவில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்.

ஓரோபோச் எந்தளவு ஆபத்தானது?

ஜூலை 25 அன்று, பிரேசிலில், ஓரோபோச் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் இறப்புகளை அதிகாரிகள் பதிவு செய்தனர். இறந்த இருவரும் சுமார் 20 வயதுடைய பெண்கள். அவர்களுக்கு அதற்கு முன்பாக எந்த உடல்நலக் குறைபாடுகளும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருவில் இருக்கும் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு ஏற்படும் மூளை குறைபாடுகளுக்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மைக்ரோசெபலி எனும் மூளை வளர்ச்சி குறைதல் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் ஜிக்கா வைரஸுடன் தொடர்புடைய ஒரு பிரச்னையாகும். ஓரோபோச் வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவில் இருந்த குழந்தை ஒன்று இறந்தே பிறந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் கர்ப்ப காலத்தில் வைரஸின் அபாயங்களை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஓரோபோச்சிலிருந்து ஏற்படக்கூடிய பிற கடுமையான சிக்கல்களில் மூளையழற்சி மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவையும் அடங்கும். அவை மூளை மற்றும் முதுகெலும்பைச் சுற்றியுள்ள சவ்வுகளின் அழற்சி நோய்கள்.

இருப்பினும், பிரேசிலிய சுகாதார அமைச்சகம் அறிவித்த இரண்டு இறப்புகள் இதற்கு முன் நிகழ்ந்திராதவை.

பல ஆண்டுகளாக 500,000க்கும் மேற்பட்ட ஓரோபோச் பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது, இதற்கு முன்னும் ஏதேனும் இறப்புகள் நிகழ்ந்து அவை தவறவிடப்பட்டதா அல்லது டெங்குவால் ஏற்பட்டதாக தவறாக கண்டறியப்பட்டதா? என்ற கேள்வி எழுவது சாத்தியமே.

ஓரோபோச்சை குணப்படுத்த முடியுமா?

ஓரோபோச்சை குணப்படுத்த முடியுமா

பட மூலாதாரம், Getty Images

ஓரோபோச் சிகிச்சைக்கு என குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. ‘தி லான்செட் மைக்ரோப்’ என்ற கல்வியியல் இதழில் உள்ள ஒரு கட்டுரை, ஓரோபோச் காய்ச்சலின் பரவல்களை "உலகளாவிய சுகாதாரத்திற்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தல்" என்று வகைப்படுத்துகிறது மற்றும் புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளின் பற்றாக்குறை குறித்தும் எச்சரிக்கிறது.

"அறிகுறிகள் உள்ள நோயாளிகள் முறையான சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்புடன் ஓய்வெடுக்க வேண்டும்" என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

காய்ச்சல், வலி ​​மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளைப் போக்க மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

பாதிக்கப்பட்ட எவரும் தொடர்ந்து பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் பூச்சிகளால் கடிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டும், ஏனெனில் அந்த பூச்சிகள் மற்றவர்களுக்கு வைரஸைப் பரப்பக்கூடும்.

ஓரோபோச் வைரஸை தடுக்க முடியுமா?

கொசு வலைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொசு வலைகள் பயனுள்ளதாக இருக்கும்தான், ஆனால் மலேரியா போன்ற நோய்களைக் காட்டிலும் ஓரோபோச்சைத் தடுப்பதில் அவை குறைவான செயல்திறன் மிக்கதாக இருக்கலாம்

இந்த தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசிகள் எதுவும் இல்லை. ஓரோபோச்சுக்கு எதிராக மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, மிட்ஜ்கள் மற்றும் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதாகும்.

சுகாதார அதிகாரிகள் அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றனர். அவை பின்வருமாறு,

  • கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களைத் தவிர்த்தல், குறிப்பாக மிட்ஜ்கள்
  • கதவுகள் மற்றும் ஜன்னல்களில் கொசு வலைகளை நிறுவுதல்
  • கடிபடுவதைத் தடுக்க, உடலின் பெரும்பகுதியை மறைக்கும் ஆடைகளை அணிதல்.
  • ஆடை மறைக்காத தோல் பகுதிகளில் பூச்சி விரட்டி களிம்புகளைப் பயன்படுத்துதல்
  • உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல்,
  • குறிப்பாக தாவரங்கள் அல்லது விலங்குகள் உள்ள வெளிப்புற பகுதிகள்
  • நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் அழுகிய தாவரங்களை அப்புறப்படுத்துதல், ஏனெனில் அங்கு பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யலாம்.

கொசு வலைகள் பயனுள்ளதாக இருக்கும்தான். ஆனால் மலேரியா போன்ற நோய்களைக் காட்டிலும் ஓரோபோச்சைத் தடுப்பதில் அவை குறைவான செயல்திறன் மிக்கதாக இருக்கலாம்.

ஏனென்றால் ஓரோபோச்சைப் பரப்பும் மிட்ஜ்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் அவற்றால் பெரும்பாலும் கொசு வலைகளைக் கடந்து செல்ல முடியும்.

டெல்டாமெத்ரின் மற்றும் என்,என்-டைஎத்தில்-மெட்டா-டோலுஅமைடு (DEET) போன்ற சில பூச்சிக்கொல்லிகள், நோயைக் பரப்பும் பூச்சி இனங்களைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

சர்வதேசக் கண்ணோட்டத்தில், நோயறிதலை விரைவுபடுத்துவதற்கும், பரவுவதற்கு முன்பு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆய்வுகள் இன்னும் பரவலாகக் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.

அதிகளவிலான காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள், ஓரோபோச் வைரஸ் ஒரு பரந்த வாழ்விடத்திற்கு பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதனால் இந்த வைரஸ் நகர்ப்புற பரவலுக்கு ஏற்றார் போல புதிய சுழற்சிகளை உருவாக்குகிறது. இதுபோன்ற மாற்றம் ஏற்கனவே டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா வைரஸ் தொடர்பான விஷயத்திலும் நடந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)