இந்தியாவில் ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இது அபாயகரமானதா?
இந்த விலங்கை உற்றுப் பாருங்கள். பார்ப்பதற்கு ஓநாய் போலத் தெரியலாம். ஆனால், அது ஓநாய் அல்ல. ஓநாய் மற்றும் நாயின் கலப்பினம். புனே அருகேயுள்ள சாஸ்வட்(Saswad) என்ற இடத்தில் இந்த விலங்கு கண்டுபிடிக்கப்பட்டது. ஓநாய்கள் இந்தப் புல்வெளிகளில் சுற்றித் திரிகின்றன. இங்கு சில கலப்பின விலங்குகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட்-ஐ சேர்ந்த மிஹிர் காட்போல் இதுகுறித்து பேசுகையில், “2013-14இல் வனத்துறையின் பயிற்சிக்காக பாராமதிக்கு சென்றிருந்தோம். அப்போது நான்கு ஓநாய்களைப் பார்த்தோம். அதில் ஒன்று பழுப்பு மஞ்சள் நிறத்தில் இருந்தது. இது வழக்கமான ஓநாய்களின் நிறமல்ல. நாசிக், தூலே மற்றும் கோண்டியா மாவட்டங்களிலும் இதுபோன்ற விலங்குகள் இருப்பதைக் கண்டறிந்தோம்.”
மேலும், “மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே ஓநாய்கள் இருக்கும். ஆனால் அவை மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை என்பதால் முடிந்தவரை மனிதர்களைத் தவிர்க்கும். எனவே அவற்றைக் கண்காணிப்பது எளிதல்ல.” என கூறுகிறார் மிஹிர் காட்போல்.
இந்த விலங்கு குறித்து ஆராய புனேவை சேர்ந்த தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட், பெங்களூருவில் உள்ள NCBS மற்றும் ஏட்ரீ (ATREE) உடன் இணைந்தது. மரபணு வரிசை முறையை அவர்கள் ஆராய்ந்தனர். அதில், இந்த விலங்கு ஓநாய் மற்றும் நாயின் கலப்பினம் என்பது நிரூபணமானது. இந்த விலங்கு கலப்பினமாக இருக்க என்ன காரணமாக இருக்கும்? ஏட்ரீயின் அபி வனக் மற்றும் NCBSஇன் உமா ராமகிருஷ்ணன் இதற்கு பதில் அளித்தார்கள்.
இதுகுறித்து பேசிய NCBS மூலக்கூறு சூழலியல் நிபுணர்உமா ராமகிருஷ்ணன், "உங்களிடம் இரண்டு நிற பெயின்ட்கள் இருந்தால், நீங்கள் அதைக் கலக்க ஆரம்பித்தால், வண்ணங்கள் முன்பு இருந்ததைப் போல் இருக்காது. அதே போல, கலப்பினச் சேர்க்கை ஓர் இனத்தின் மரபணுவை நீர்த்துப் போகச் செய்கிறது. இதனால், இறுதியில் ஓநாய்கள் அழியலாம்." என்று கூறினார்.
இந்தியாவில் இரண்டு முக்கிய வகை ஓநாய்கள் உள்ளன. அதில் ஒன்று இமயமலை ஓநாய், மற்றொன்று இந்திய சாம்பல் ஓநாய். இது சமவெளி மற்றும் புல்வெளிகளில் காணப்படுகிறது. மிகவும் பழமையான ஓநாய் இனங்களில் இந்திய சாம்பல் ஓநாயும் ஒன்று என்பதால் இவை முக்கியமானவை. ஆனால், தற்போது இந்த இனம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
“நகரமயமாக்கல் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது. ஏனெனில் மனிதர்கள் வசிக்கும் இடங்களில் நாய்களும் இருக்கும். குப்பை இருக்கும் இடத்தில் நாய்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவை ஓநாய்களின் இரையான காட்டுமான், முயல் போன்ற இரைகளை வேட்டையாடத் தொடங்குகிறது. வைரஸ்கள் மற்றும் ரேபிஸ் போன்ற நோய்களை நாய்கள் பரப்பலாம். இது ஓநாய்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்." என கூறியுள்ளார் தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட்டின் மிஹிர் காட்போல்.
தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட்டை சேர்ந்த பிரேரண சேத்தியா, “புல்வெளிகளையும், அதை நம்பி வாழும் தங்கர் போன்ற மக்கள் சமூகங்களையும், அதில் வாழும் விலங்குகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். மகாராஷ்டிரா புல்வெளிகளில் இந்திய சாம்பல் ஓநாய், உடலில் கோடுகள் கொண்ட கழுதைப்புலி, சின்காரா மான் போன்ற குறிப்பிட்ட இனங்கள் உள்ளன.” என்கிறார்.
இந்தியா புலிகள் கணக்கெடுப்பை நடத்துகிறது. ஆனால் ஓநாய்களுக்கு அதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. இந்திய சாம்பல் ஓநாய்கள் புலிகளின் எண்ணிக்கைக்கு இணையாக சுமார் 2000 - 3000 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சாஸ்வட் சுற்றுவட்டாரப் பகுதியில் 40 மட்டுமே உள்ளன.
மேலும், இதுகுறித்து பேசிய பிரேரண சேத்தியா, “புலிகள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்றன. ஓநாய்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களுக்கு வெளியே வாழ்கின்றன. எனவே அவை மனிதர்களுடன் அதிகம் தொடர்பு கொள்கின்றன. இது அவற்றைப் பெரிய ஆபத்தில் ஆழ்த்துகிறது. மேலும், மனிதர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. எனவே இருதரப்புக்கும் பாதுகாப்பு தேவை.”
“வனத்துறை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஆஷ்ரயாஹஸ்தா அறக்கட்டளையுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதலில், கண்காணிப்பு கேமரா மூலம் ஓநாய்களை நெருக்கமாகக் கண்காணிக்கிறோம். அதன் செயல்பாடுகள், எவ்வளவு நிலப்பகுதியைப் பயன்படுத்துகின்றன, எத்தனை முறை இனப்பெருக்கம் செய்கின்றன, அவை எப்போது குழுவில் இருந்து பிரிகின்றன, காலப்போக்கில் அவற்றின் உணவுமுறை எவ்வாறு மாறிவிட்டது ஆகியவற்றை நாங்கள் ஆராய்கிறோம். இந்த வீடியோக்களை விரைவாகப் பகுப்பாய்வு செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இரண்டாவதாக, கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.” என கூறியுள்ளார்.
தற்போது கிராமத்தினரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.
உள்ளூர்வாசியான பிராசாத் மேமனே, “இயற்கைச் சூழலை நாம் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கு எதுவும் இருக்காது. ஓநாய்கள் எங்கு இருக்கிறது என்று நாங்கள் சொல்லமாட்டோம். ஏனெனில் மக்கள் சென்று அவற்றைத் தாக்கலாம். ஓநாய்கள் நம்மைத் தாக்காது, அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன என்பதையும் நாங்கள் மக்களுக்குச் சொல்கிறோம்.” என கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



