காணொளி: பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் தோல்வியடைந்தது ஏன்? இஸ்ரோ ஆய்வு

காணொளிக் குறிப்பு, விண்ணில் பாய்ந்த PSLV-C62-ல் கோளாறு!
காணொளி: பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் தோல்வியடைந்தது ஏன்? இஸ்ரோ ஆய்வு

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியைக் கண்காணிப்பதற்கான EOS-N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் மூன்றாவது நிலையில் சிறு கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன், "இன்று நாங்கள் பிஎஸ்எல்வி-சி62 இஓஎஸ்-என்1 திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தோம். பிஎஸ்எல்வி ராக்கெட் ஒரு நான்கு-நிலைகள் கொண்ட ராக்கெட் ஆகும். இதில் இரண்டு திட எரிபொருள் நிலைகளும் இரண்டு திரவ எரிபொருள் நிலைகளும் உள்ளன. மூன்றாவது நிலை முடியும் வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே இருந்தது." என்றார்.

மூன்றாவது நிலையின் முடிவில், ராக்கெட்டின் சுழற்சி வேகத்தில் (அச்சினைச் சுற்றியுள்ள கோணத் திசைவேகம்) சில இடையூறுகள் தென்பட்டதாகவும், அதன் பயணப் பாதை மாறியதாகவும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

"இதன் காரணமாக, இந்தத் திட்டத்தை எதிர்பார்த்தபடி தொடர முடியவில்லை. தற்போது, ​​அனைத்து தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்து வருகிறோம்." என்று வி. நாராயணன் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு