காணொளி: இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு கொடுத்த அமெரிக்கா - விமர்சிக்கப்படும் மோதி
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாட்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரியில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போது, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டிருப்பதாக டிரம்ப் கூறி இருந்தார். இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்க விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கூறி இருப்பது மோதி அரசை விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. நடந்தது என்ன?
இதுபற்றி அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "உலக சந்தைக்கு தொடர்ந்து எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்க கருவூலத் துறை தற்காலிக 30 நாள் விலக்கு அளிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி பலன்களை வழங்காது, ஏனெனில் இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இடையூறு செய்வதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் இரானின் முயற்சியால் உருவான அழுத்தத்தைக் குறைக்க இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது மோதி அரசு தொடர்ந்து ராஜீய தளத்தை விட்டுக்கொடுத்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது. எந்த பிரதமரும் எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் அடிபணிந்து மற்றொரு நாடு கட்டுப்படுத்தும் நாடாக இந்தியாவை மாற்றவில்லை, மோதியை தவிர என குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என அனுமதிக்க அமெரிக்கா யார்? இந்தியாவுக்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை? என அதில் கேட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு எந்த நாட்டிற்கும் முன்பாக இந்தியா இப்படி தலை குனிந்ததில்லை. இந்திய வரலாற்றில் ஒருபோதும் இந்தியாவின் தலைமை இவ்வளவு பலவீனமாக இருந்ததில்லை என மோதி அரசை கடுமையாக அவர் விமர்சித்துள்ளார்.
இரான் போர் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் தாக்குதல்களும், ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றி அதிகரித்து வரும் பதற்றங்களும் சர்வதேச எண்ணெய் சந்தையை சீர்குலைத்துள்ளன.
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாக எந்தக் கப்பல் வந்தாலும் தாக்குதலுக்கு இலக்காகும் என இரான் எச்சரித்துள்ளது.
இந்தியா தனது எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதத்தை ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே பூர்த்தி செய்கிறது.
இதுபற்றி குறிப்பிடும் பிபிசி செய்தியாளர் சவுதிக் பிஸ்வாஸ், இந்தியாவில் தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இல்லை. ஆனால் ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றி நடந்து வரும் மோதல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிக குறுகிய கடல் பாதையை எவ்வாறு சார்ந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்கிறார்.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என இரான் எச்சரித்துள்ளதால், இந்தப் பாதை வழியான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு இது மிகப்பெரிய ஆபத்து, ஏனெனில் இந்தியா தன் கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 25 முதல் 27 லட்சம் பீப்பாய்கள் இந்த வழித்தடம் வழியாகவே தினசரி வருகின்றன. இந்த எண்ணெய் குறிப்பாக இராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வருகிறது.
கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $10 அதிகரித்தால், இந்தியாவில் பணவீக்கம் சுமார் 0.2 முதல் 0.25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது.
இதுபற்றி கடல்சார் புலனாய்வு நிறுவனமான கெப்ளரைச் சேர்ந்த ஆய்வாளர் சுமித் ரிட்டோலியா பிபிசியிடம் பேசும் போது, "இந்தியாவில் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 100 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உள்ளது. இதில் சுமார் 80 சதவீதம் பயன்படுத்தப்படலாம், இது சுமார் 30 முதல் 35 நாட்களுக்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும்." என்றார்.
கூடுதலாக, டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது. எனவே, தேவைப்பட்டால், உள்நாட்டு விநியோகத்தைப் பராமரிக்க இந்தியா இந்த ஏற்றுமதிகளைக் குறைக்கலாம்.
மறுபுறம் தற்போதைய சூழ்நிலயை சமாளிக்க போதுமான அளவுக்கு எண்ணெய் இருப்பு இருப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
கடந்த ஜனவரியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் கூறுகையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளில் வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய், உள்நாட்டுத் தேவையை 74 நாட்களுக்குப் பூர்த்தி செய்யப் போதுமானது என்றார்.
கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்கள் வரை போதுமானது, அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு அடுத்த 25 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ முகமை கூறி உள்ளது.
அதே நேரம், மிகப்பெரிய இயற்கை எரிவாயு விநியோக நாடான கத்தார், இரான் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு எதிர்பாராத சூழலை காரணம் காட்டி, உற்பத்தியை நிறுத்துவதாக கூறியுள்ளது. இந்தியா தனது சுமார் 2.7 கோடி டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதத்தை கத்தாரிலிருந்து வாங்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



