கோலார் தங்க வயலில் தங்கம் எடுத்த தொழிலாளர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, முனுசாமி, கோலார் தங்க வயலின் முன்னாள் தொழிலாளி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சுமார் 120 ஆண்டு காலம் ஆசியாவின் முக்கியமான தங்கச் சுரங்கமாகச் செயல்பட்டுவந்த கோலார் தங்க வயல் மூடப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் இன்றைய நிலை என்ன?

தங்கலான் படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும் கோலார் தங்க வயல் ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இது, பெங்களூருவில் இருந்து சுமார் 95 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் நிறுவனங்கள் வசம் இருந்த இந்தச் சுரங்கங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு பொதுத்துறை நிறுவனமான பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் (BGML) வசமாயின. 121 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தத் தங்கச் சுரங்கத்தில், 1950-களுக்குப் பிறகு தங்கம் கிடைப்பது அரிதாகிக் கொண்டே வந்த நிலையில், 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி அது மூடப்பட்டது.

அங்கு வசிக்கும் முனுசாமிக்கு வயது இப்போது 77. இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவம் நேற்று நடந்ததைப் போல அவரது நினைவில் இருக்கிறது.

"1995-ஆம் வருடம். அன்றைக்கு மார்ச் 3-ஆம் தேதி. இப்போது நீங்கள் பார்க்கிறீர்களே, சயனைடு மலை, அதிலிருக்கும் மண்ணைச் சுத்திகரித்து தங்கம் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த மண் பெல்ட் மூலமாக இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அப்படி எடுத்துச் செல்லப்படும் பெல்ட் திடீரென நின்றுவிட்டது. என்னை ஏறி சரிசெய்யச் சொன்னார்கள். நான் சரிசெய்துகொண்டிருந்தேன். ஆனால், திடீரென ஃபோர்மேன் பெல்ட்டை இயக்கிவிட்டார். அதில் சிக்கி எனது கை துண்டாகிவிட்டது," என யாருக்கோ நடந்த சம்பவத்தைச் சொல்வதைப் போலச் சொல்கிறார் முனுசாமி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோலார் தங்க வயல்

முனுசாமியின் தந்தையார் தமிழ்நாட்டின் அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சுரங்க வேலைக்காக கோலார் தங்க வயலுக்கு வந்தார். அவருக்குப் பிறகு, 1980-இல் முனுசாமியும் தங்க வயலில் வேலைக்குச் சேர்ந்தார். முனுசாமிக்குத் தங்கச் சுரங்கத்திற்குள் இறங்க வேண்டிய வேலையில்லை. ஏற்கனவே வெட்டிப் போடப்பட்ட மண்ணில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் வேலைதான். அங்கு பணியாற்றும் போதுதான், விபத்தில் சிக்கி கை பறிபோனது.

"விபத்திற்குப் பிறகு மூன்று மாதம் விடுமுறை கொடுத்தார்கள். கை போய்விட்டதால் என்னால் வேலை செய்ய முடியாது என முதலில் வேலையைவிட்டு நீக்கிவிட்டார்கள். பிறகு, என் குடும்ப கஷ்டம் குறித்துக் கூறியதால் மீண்டும் வேலை கொடுத்தார்கள். கம்பனி மூடப்பட்ட 2001 வரை அங்கே வேலை பார்த்தேன்," என்கிறார் முனுசாமி.

2001-இல் நிறுவனம் மூடப்பட்டபோது, முனுசாமிக்கு ரூ 1.76 லட்சம் இழப்பீடாகக் கிடைத்தது. அதனை வைத்துச் சில நாட்கள் ஓடின. அதற்குப் பிறகு கஷ்டம்தான். இவருடைய இரு மகன்களில் ஒருவர் இப்போது பெங்களூருக்குச் சென்று வேலை பார்த்து வருகிறார். இன்னொரு மகன் மாற்றுத்திறனாளி. முதல் மகனின் வருவாயில்தான் குடும்பம் நகர்கிறது.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் (BGML) 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி மூடப்பட்டது

‘4,800 அடி ஆழம் இறங்க, 60 ரூபாய் சம்பளம்’

கோலார் தங்க வயல் பகுதிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கம் இருந்த பகுதி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், 1880-ஆம் ஆண்டு வாக்கில் இங்கு தங்கம் எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் துவங்கின. அப்போதிலிருந்து, சுரங்கம் மூடப்பட்ட 2001-ஆம் ஆண்டுவரை இங்கிருந்து சுமார் 800 டன் தங்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் எவ்வளவு தங்கம் எடுக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. இங்குள்ள சுரங்கங்களின் நீளம் மட்டுமே 1,360 கி.மீ அளவுக்கு நீளும். உலகின் இரண்டாவது மிக ஆழமான 3 கி.மீ. ஆழமுள்ள சுரங்கம் இங்கேதான் அமைந்திருந்தது.

சுரங்கம் தோண்டும் பணிக்காக, அருகிலிருந்த தமிழ்நாட்டில் இருந்து பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கோலார் தங்க வயலுக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது சுரங்கங்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இங்கேதான் வசிக்கிறார்கள்.

87 வயதாகும் சுந்தர்ராஜன் என்ற கலையரசன், கடந்த நூற்றாண்டின் மத்தியில் இருந்து கோலார் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியவர்.

"கூண்டுகளின் மூலம் சுரங்கத்திற்குள் கீழே இறங்குவோம். 4,800 அடி ஆழம் கீழே இறங்கிய பிறகு ஒரு சந்திப்பு வரும். அதனை 48-வது ஜங்க்ஷன் என்பார்கள். அந்த இடத்தில் கூண்டு நின்ற பிறகு அங்கே இறங்கி, பக்கவாட்டில் உள்ள சுரங்கங்களுக்குள் செல்ல வேண்டும். பிறகு அந்த இடத்தில் இருந்து 200 - 300 அடி ஏணிகளின் மூலம் மேலே ஏற வேண்டும். அங்கேதான் பாறைகளைத் துளையிட்டு தங்கம் எடுக்கும் பணிகள் நடக்கும். வேலை முடிந்த பிறகு மறுபடியும் 200 - 300 அடி கீழே இறங்கி 48-வது ஜங்ஷனுக்கு வர வேண்டும். பிறகு கூண்டில் ஏறி மேலே வர வேண்டும். இது மிகக் கடினமான வேலை. வெறும் டிரவுசர் மட்டுமே அணிந்து செல்வோம். உள்ளே அதீதமான வெப்பம் இருக்கும். ஒருவரால் ஒரு மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது,” என்கிறார் அவர்.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, சுந்தர்ராஜன் என்ற கலையரசன், கோலார் தங்க வயலின் முன்னாள் தொழிலாளி

“இப்போது அதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஏற 300 அடி, இறங்க 300 அடி என 600 அடி ஏறி இறங்கியிருக்கிறோம். இப்படி 16 வருடங்கள் சுரங்கத்தில் வேலை பார்த்தேன். பிறகு, மேல் தளத்தில் தங்கத்தை ஆய்வு செய்யும் சோதனைக் கூடத்தில் வேலைக்கு அனுப்பினார்கள். அங்கே பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருக்கும். திரும்பி வரும் போது ஆடைகளைக் களைந்துச் சோதிப்பார்கள். காவலர்கள் எல்லோரும் வட இந்தியர்களாக இருப்பார்கள்." என நினைவுகூர்கிறார் கலையரசன்.

ஆனால், அவர் வேலைக்குச் சேர்ந்த காலத்திலேயே சுரங்கத்தில் தங்கம் கிடைப்பது குறைய ஆரம்பித்திருந்தது. ஒரு டன் மண்ணிற்கு 4 -5 கிராம் கிடைத்துக் கொண்டிருந்த தங்கம், கடைசியில் ஒரு கிராம் அளவுக்குக் குறைந்துவிட்டது. செய்யப்படும் செலவுக்குக்கூட அது போதவில்லை என்கிறார் கலையரசன்.

கலையரசன் சுரங்கத்தில் வேலை பார்த்த காலத்தில் அவருக்கு மாதச் சம்பளம் 60 ரூபாய். "அந்தச் சம்பளத்தில் எப்படி குடும்பத்தை நடத்தினோம் என ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், தங்க இடம், ரேஷன் என எல்லாவற்றையும் சுரங்க நிர்வாகம் கொடுத்துவிடும் என்பதால் பெரிய செலவு இல்லை," என நினைவுகூர்கிறார் அவர்.

கோலார் தங்க வயல்

‘தங்கம் எடுத்தவர்கள் தங்கத்தைக் கண்ணால் பார்த்ததில்லை’

சுரங்கத்தில் பணியாற்றியவர்களுக்குச் சுரங்க நிர்வாகம் வீடுகளை ஒதுக்கித் தந்தது. வீடு என அதனைக் குறிப்பிட்டாலும், மூங்கில்களால் வேயப்பட்ட 8x8 நீள, அகலமுள்ள குடிசைதான் அது. இந்தக் குடிசை இருந்த இடத்தில், தற்போது அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் வீடு போல கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அந்த இடம் அவர்களுக்குச் சொந்தமாகவில்லை.

"தங்கச் சுரங்கம் இயங்கிவந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. ஆகவே, தமிழ்நாட்டின் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் இங்கே வேலைபார்க்க முன்வந்தார்கள். அப்போது சம்பளம் என்பது மிகக் குறைவாக இருந்தாலும் பெரும்பாலான செலவுகளை நிர்வாகமே பார்த்துக் கொண்டதால், மக்களிடம் ஒரு நிறைவு இருந்தது. பட்டினியே கிடையாது," என்கிறார் கலையரசன்.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, ஆனந்த்ராஜ், கோலார் தங்க வயலின் முன்னாள் தொழிலாளி

தங்க வயலில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற மற்றொரு தொழிலாளியான என்.ஆனந்த்ராஜ் இதனை ஆமோதிக்கிறார். ஆனந்த்ராஜ், 1961-இல் பணிக்குச் சேர்ந்து 1997-இல் ஓய்வுபெற்றவர். இப்போது அவருக்கு 83 வயதாகிறது.

"அந்தக் காலகட்டத்தில் சம்பளம் மிகக் குறைவு என்றாலும் தொழிலாளர்களிடம் ஒரு திருப்தி இருந்தது. இப்போது வெவ்வேறு இடங்களில் வேலை செய்து கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றாலும் நிம்மதி இல்லை. அப்போது கோலார் தங்க வயல் நகரம் மிகத் தூய்மையாக இருக்கும். அந்தத் தூய்மையும் இப்போது போய்விட்டது," என்கிறார் அவர்.

கோலார் தங்க வயல் தொழிலாளர்களில் பலர், அங்கிருந்து எடுக்கப்படும் தங்கத்தையே பார்த்ததில்லை என்பது இவர் சொல்லும் மற்றொரு சுவாரஸ்யமான தகவல்.

"இதோ இங்கே கொட்டிக் கிடக்கும் கற்களைப் போன்ற கற்களைத்தான் மேலே எடுத்துவருவோம். அவை மேலே கொண்டுவரப்பட்டு, அரைக்கப்பட்டுத்தான் தங்கம் பிரித்தெடுக்கப்படும். தொழிலாளர்களைப் பொருத்தவரை, தங்கம் பிரித்தெடுக்கப்படும் இடத்தில் வேலை பார்த்தவர்களைத் தவிர, மற்றவர்கள் இங்கேயிருக்கும் தங்கத்தை கண்ணால் பார்த்ததே இல்லை," என்கிறார் ஆனந்த்ராஜ்.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, முன்னாள் தொழிலாளர்கள் இன்று வசிக்கும் வீடுகள்

இன்னும் வீடில்லாமல் இருக்கும் முன்னாள் தொழிலாளர்கள்

இப்போது சுரங்கம் மூடப்பட்டு 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் இழப்பீட்டுத் தொகைக்காகவும் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் மனையை தங்களுக்கே அளிக்கக் கோரியும் போராடிவருகிறார்கள் முன்னாள் தொழிலாளர்கள்.

நீதிமன்றம் தொழிலாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தாலும், அரசு அந்தத் தீர்ப்பை நிறைவேற்றாமல் தாமதம் செய்கிறது என்கிறார் வழக்கறிஞரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ஆர். ஜோதிபாசு.

"2001-இல் தங்கச் சுரங்கத்தை மூடியதை எதிர்த்து தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். சுரங்கத்தை மூடியது தவறு என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து நிர்வாகமும் மத்திய அரசும் மேல் முறையீடு செய்தன. இதனை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், 2003-இல் தீர்ப்பளித்தது. சுரங்கத்தை மூடியது சரி என்றாலும் அந்தத் தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளை சதுர அடிக்கு 10 ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கே கொடுத்துவிட வேண்டுமென்றும் அவர்கள் பணியாற்றிய காலத்தைப் பொறுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது,” என்கிறார் அவர்.

மேலும், “2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை, நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்பதாக அறிவித்தது. முதலில் பாதித் தொகையைக் கொடுப்பதாகவும் பிறகு மீதித் தொகையைக் கொடுப்பதாகவும் வீடுகளை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கிவிடுவதாகவும் கூறியது. இதையடுத்து தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு சம்மதித்து நிர்வாகத்துடன் கையெழுத்திட்டனர். 3,500 தொழிலாளர்களுக்கு வீடுகள் குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதமும் வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 50 சதவீதம் இன்னும் தரப்படவில்லை,” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “இதையடுத்து 2020-இல் தொழிலாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தொழிலாளர்களுக்கு வாக்களித்தபடி இழப்பீட்டுப் பணத்தைத் தர வேண்டும் எனவும் 2001-ஆம் ஆண்டிலிருந்து பணம் வழங்கும் காலம் வரை அந்தப் பணத்திற்கு 6 சதவீத வட்டியையும் வழங்க வேண்டுமெனவும் கூறியது. தீர்ப்பு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பணம் இன்னமும் தரப்படவில்லை. வீடுகளும் சொந்தமாக்கப்படவில்லை," என்கிறார் ஜோதிபாசு.

“தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு, கோலார் தங்க வயல் பகுதியில் வேலைவாய்ப்புகள் ஏதும் கிடையாது. இங்கிருந்து ரயில் மூலம் பெங்களூரு நகருக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியுமென்பதால், இங்கு வசிப்பவர்கள் பெங்களூரு சென்று பணியாற்றித் திரும்புகின்றனர். அந்த வீடு ஒன்றுதான் அவர்களை இந்த நகரத்தோடு பிடித்து வைக்கிறது. ஆகவே, அவர்கள் இப்போது வசிக்கும் வீட்டை சொந்தமாக்கிக் கொடுத்தால் வசதியாக இருக்கும். எஞ்சிய 50 சதவீத இழப்பீட்டுத் தொகையையும் அரசு விரைந்து தர வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் " என்கிறார் ஜோதிபாசு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)