'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

1930களில் பிரபல உருது கவிஞர் ஜோஷ் மலிஹாபாதி பணம் இல்லாமல் சிரமப்பட்ட போது அவர் பிரபல வழக்கறிஞர் தேஜ் பகதூர் சப்ருவின் கடிதத்துடன் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் வெளியுறவு அமைச்சர் கே.எம்.பணிக்கரிடம் சென்றார்.

ஜோஷ் மலிஹாபாதிக்கு குறிப்பிட்ட ஓய்வூதியத்தை நிர்ணயிக்குமாறு மகாராஜாவை கேட்டுக் கொள்ளுமாறு பணிக்கருக்கு எழுதிய கடிதத்தில் தேஜ் பகதூர் சப்ரு குறிப்பிட்டிருந்தார்.

பணிக்கர் ஜோஷை மகாராஜாவிடம் அழைத்துச் சென்று அவருக்கு மாதம் 75 ரூபாய் ஓய்வூதியம் வழங்க பரிந்துரைத்தார்.

"மகாராஜா என்னை நோக்கி திரும்பினார். மிகுந்த ஆச்சரியத்துடன் 'நீங்கள் தென்னிந்தியர், எனவே இந்த கவிஞரின் பெருமை உங்களுக்கு புரியாது. நம்மை அனைவரும் மறந்துவிடுவார்கள், ஆனால் காளிதாஸைப் போல மக்கள் இவரை நினைவில் கொள்வார்கள். இவ்வளவு பெரிய மனிதருக்கு இவ்வளவு குறைவான ஓய்வூதியம் அளிப்பது என் அந்தஸ்துக்கு பொருந்தாது. எனவே அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு 250 ரூபாய் ஓய்வூதியமாக வழங்க நான் முடிவு செய்திருக்கிறேன் என்று சொன்னார்," என்று பணிக்கர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

பிரபல உருது கவிஞர் ஜோஷ் மலிஹாபாதி

பட மூலாதாரம், Prem Mohan Kalra

படக்குறிப்பு, பிரபல உருது கவிஞர் ஜோஷ் மலிஹாபாதி

பன்முக ஆளுமை

பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங், தாராள குணமும், கண்மூடித்தனமாக செலவு செய்யும் பழக்கமும் கொண்ட ஒரு அரசராக இருந்திருந்தால் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள்.

அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் நட்வர் சிங் தனது புத்தகமான 'The Magnificent Maharaja, The Life and Times of Maharaja Bhupinder Singh of Patiala' வில், "மகாராஜாவின் வசீகரம் அவரது பன்முக ஆளுமையில் இருந்தது. அவர் ஒரு மகாராஜா, ஒரு தேசபக்தர், ஒரு பரோபகாரி, ஒரு விளையாட்டு வீரர், ஒரு சிப்பாய், இசை மற்றும் கலையின் காதலர், அன்பான தந்தை, விசுவாசமான நண்பர், ஆபத்தான எதிரி, இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன், ஒரு புத்திசாலி அரசியல்வாதி," என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஜா பூபிந்தர் சிங் 1891 அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தார். அவர் சிறுவயதில் 'டிக்கா சாஹேப்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அவருக்கு 9 வயதாக இருந்த போதே அவரது தந்தை ராஜீந்தர் சிங் காலமாகிவிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அதற்கு முன் அவரது தாயார் ஜஸ்மித் கெளரும் இறந்துவிட்டார். தனது பத்தாவது வயதில் அவர் பாட்டியாலாவின் அரியணை ஏறினார்.

விக்டோரியா மகாராணியின் மரணம் காரணமாக அவரது முடிசூட்டு விழா கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

பூபிந்தர் சிங் இளமைப்பருவம் அடையும் வரை பாட்டியாலாவின் நிர்வாகம் மந்திரி சபையால் நடத்தப்பட்டது. 1903 ஆம் ஆண்டில் பிரிட்டனின் மகாராஜா ஐந்தாம் எட்வர்டின் அரச சபை டெல்லியில் நிறுவப்பட்டது.

அப்போது பூபிந்தர் சிங்குக்கு 12 வயது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தனது மாமாவுடன் சிறப்பு ரயிலில் டெல்லி சென்றடைந்த அவர் அங்கு தனது முதல் பொது உரையை நிகழ்த்தினார்.

12 வயதில் மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 12 வயதில் மகாராஜா பூபிந்தர் சிங்

முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவி

1904 ஆம் ஆண்டில் அவர் படிப்பதற்காக லாகூரில் உள்ள எட்சிசன் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அவரைப் பராமரிக்க 50 உதவியாளர்கள் குழு லாகூர் சென்றது. அவருடைய ஷூ லேஸைக்கூட பணியாளர்கள் கட்டுவார்கள்.

வயது வந்த பிறகு ஆட்சி அதிகாரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வைஸ்ராய் லார்ட் மிண்டோ அவரது முடிசூட்டு விழாவில் பங்கேற்றார்.

அந்த நேரத்தில் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். போலோ, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதில் தனது நேரத்தை செலவிட்டார்.

முதல் உலகப் போரில் அவர் பிரிட்டனுக்கு முழு மனதுடன் உதவினார். மேஜர் வாலியுடன் இணைந்து ராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கினார். ஒரே நாளில் 521 ஆட்களை ராணுவத்தில் சேர்த்தார்.

டாக்டர் தல்ஜித் சிங் மற்றும் குர்ப்ரீத் சிங் ஹரிகா "மகாராஜா பூபிந்தர் சிங், தி க்ரேட் ரூலர் ஆஃப் தி பாட்டியாலா ஸ்டேட்' என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளனர்.

"மகாராஜா பூபிந்தர் சிங் பிரிட்டிஷ் அரசுக்கு போருக்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்தார். அந்த நாளில் அது ஒரு பெரிய தொகை. இது தவிர பாட்டியாலா ராஜ்ஜியம் போரின் போது தனியாக 60 லட்சம் ரூபாய் செலவிட்டது. இது தவிர 72 வது பாட்டியாலா ஒட்டகப் படைக்கு 1072 ஒட்டகங்களையும் அவர் வழங்கினார். கூடவே பிரிட்டிஷ் படைக்கு 247 கோவேறு கழுதைகள், 405 குதிரைகள் மற்றும் 13 மோட்டார் கார்களையும் அளித்தார்," என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சிம்லா மலைப்பகுதியில் உள்ள 'ராக்வுட்' மற்றும் 'ஓகோவர்' என்ற தனது குடியிருப்புகளை மருத்துவமனைகளாக மாற்றினார்.

மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாராஜா பூபிந்தர் சிங்

ஹிட்லர் மற்றும் முசோலினியுடன் சந்திப்பு

பூபிந்தர் சிங் மிகவும் உயரமாக இருப்பார். சுதந்திரப் போராட்டத்தின் போது அவர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் பஞ்சாபியர்கள் குறிப்பாக சீக்கியர்கள், வேறு எந்த செல்வாக்கு மிக்க தலைவர்களும் இல்லாத நிலையில் அவரை தங்கள் பிரதிநிதியாகப் பார்த்தார்கள்.

அவரது நடை, உடை பாவனை மற்றும் பேஷன் ஸ்டேட்மெண்ட், குறிப்பாக அவர் தலைப்பாகையை கட்டிக்கொள்ளும் விதம் அவர்களை பெருமிதம் கொள்ள வைத்தது. அவர் பஞ்சாபி மொழியில் வல்லவர். அதை அரசவை மொழியாக மாற்ற தன்னால் இயன்றவரை அவர் முயன்றார்.

பஞ்சாபின் முன்னாள் முதல்வரும், மகாராஜா பூபிந்தர் சிங்கின் பேரனுமான அமரீந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் குஷ்வந்த் சிங், 'கேப்டன் அமரீந்தர் சிங் தி பீப்பிள்ஸ் மஹாராஜா' என்ற புத்தகத்தில், 'பூபிந்தர் சிங் பஞ்சாபி மொழியை மிகவும் விரும்பினார். அவரது ஆலோசனையின் பேரில் ரெமிங்டன் டைப்ரைட்டர் நிறுவனம், 'குர்முகி தட்டச்சுப்பொறியை உருவாக்கியது'. அதற்கு 'பூபிந்தர் டைப்ரைட்டர்' எனப் பெயரிடப்பட்டது. சொந்த விமானம் வைத்திருந்த முதல் இந்தியர் அவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பிரிட்டனில் இருந்து அவர் அதை வாங்கினார். இதற்காக அவர் பாட்டியாலாவில் விமான ஓடுதளத்தையும் கட்டினார்," என்று எழுதியுள்ளார்.

அவரது வாழ்நாளில் உலகின் இரண்டு பெரிய சர்வாதிகாரிகளான பெனிட்டோ முசோலினி மற்றும் ஹிட்லர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஹிட்லர் அவருக்கு ஒரு டஜன் ஜெர்மன் தயாரிப்பு லிக்னோஸ் கைத்துப்பாக்கிகளையும் வெள்ளை நிற மேபேக் காரையும் அன்பளிப்பாக வழங்கினார்.

ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர்

உலகின் அரிய விஷயங்களை சேகரிப்பதில் விருப்பம்

பூபிந்தர் சிங் லண்டனுக்குச் செல்லும் போதெல்லாம் அவரது வருகை குறித்து பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. "மகாராஜா உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளர். அவர் வெள்ளி குளியல் தொட்டியில் குளிப்பார், அவருடைய ஹோட்டல் அவருக்கு தினமும் 3000 ரோஜாக்களை அனுப்புகிறது. அவர் தன்னுடன் 200 சூட்கேஸ்களை கொண்டு வந்துள்ளார்," என்று 'டெய்லி மெயில்' தனது 1925 ஆகஸ்ட் 3 ஆம் தேதி இதழில் எழுதியது.

இந்தியாவின் 560 ஆட்சியாளர்களில் 108 ஆட்சியாளர்கள் மட்டுமே துப்பாக்கி சல்யூட் பெறும் தகுதி பெற்றிருந்தனர். ஹைதராபாத், பரோடா, காஷ்மீர், மைசூர் மற்றும் குவாலியர் மன்னர்கள் 21 துப்பாக்கி சல்யூட் பெறுவார்கள். பூபிந்தர் சிங் எங்கு சென்றாலும் அவருக்கு 17 துப்பாக்கி சல்யூட் வழங்கப்பட்டது.

புத்தகங்கள், கார்கள், தரைவிரிப்புகள், உடைகள், நாய்கள், நகைகள், கையெழுத்துப் பிரதிகள், பதக்கங்கள், ஓவியங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் பழைய ஒயின்கள் போன்றவற்றை சேகரிப்பதில் பூபிந்தர் சிங்கிற்கு அளவற்ற ஆர்வம் இருந்தது. அவரது நகைகள் 'கார்டியே' (cartier) வால் செய்யப்பட்டன. அவரது கைக்கடிகாரங்கள் 'ரோலக்ஸ்' நிறுவனத்தால் சிறப்பு ஆர்டர் மூலம் செய்யப்பட்டன. அவரது உடைகள் 'Savile Row' இல் இருந்து வரும் மற்றும் அவரது காலணிகள் 'Lobs' நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டன.

ஜான் லார்ட் தனது 'மகாராஜாஸ்' என்ற புத்தகத்தில், "அவரிடம் மொத்தம் 27 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன. அந்த நிறுவனம் அனுப்பிய ஆங்கிலேயர் ஒருவர் அவற்றை கவனித்து வந்தார்" என்று எழுதுகிறார்.

லண்டனில் உள்ள ஷெவோய் ஹோட்டலின் மொட்டை மாடியில் நிற்கும் மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டனில் உள்ள ஷெவோய் ஹோட்டலின் மொட்டை மாடியில் நிற்கும் மகாராஜா பூபிந்தர் சிங்

'பாட்டியாலா பெக்' அறிமுகம்

மகாராஜா பூபிந்தர் சிங்கின் ஈகை குணத்தின் கதைகள் எல்லா இடங்களிலும் பிரபலமாக இருந்தன. பல்கலைக் கழகங்களுக்கும், ஏழைகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகளுக்கும் அவர் தாராளமாக நன்கொடை அளித்து வந்தார்.

மகாராஜாவின் அமைச்சராக இருந்த திவான் ஜர்மானி தாஸ் தனது 'மகாராஜா' என்ற புத்தகத்தில், "மதன் மோகன் மாளவியா போன்ற பெரிய தலைவர்கள் மகாராஜாவிடம் பனாரஸ் பல்கலைக் கழகத்திற்காக பணம் கேட்டுவரும்போது அவர்கள் 50,000 ரூபாய் காசோலையுடன்தான் சென்றார்கள்," என்று எழுதியுள்ளார்.

மகாராஜாவின் இடத்தில் குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஒரு திட்டவட்டமான நெறிமுறை இருந்தது. பாட்டியாலா பெக் அவரது அரண்மனையில் இருந்துதான் தொடங்கப்பட்டது.

"இதன் பொருள் கிளாஸில் நிரப்பிய நான்கு அங்குல விஸ்கியை தண்ணீர் கலக்காமல் ஒரே மடக்கில் குடிப்பது. மகாராஜா விஸ்கியை விட ஒயினை அதிகம் விரும்பினார். அவருக்கு எல்லா வகையான ஒயின்கள் பற்றிய ஞானமும் இருந்தது. அவரது ஒயின் சேகரிப்பு இந்தியாவிலேயே சிறந்ததாக இருக்கலாம்," என்று நட்வர் சிங் எழுதுகிறார்.

மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Rupa Publications

படக்குறிப்பு, மகாராஜா பூபிந்தர் சிங்

மகாராஜாவுக்கு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தட்டில் சாப்பாடு

பூபிந்தர் சிங்கின் அரண்மனையில் 11 சமையலறைகள் இருந்தன. அதில் தினமும் பல நூறு பேருக்கு உணவு சமைக்கப்பட்டது.

"மகாராணிகளுக்கு தங்கத் தட்டு மற்றும் கிண்ணங்களில் உணவு பரிமாறப்பட்டது. அவர்களுக்குப் பரிமாறப்பட்ட மொத்த உணவுகள் 100. ராணிகளுக்கு வெள்ளித் தட்டுகளில் உணவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு 50 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. மற்ற பெண்களுக்கு பித்தளைத் தட்டுகளில் உணவு வழங்கப்பட்டது. அவர்களுக்குப் 20 வகை உணவு பரிமாறப்பட்டன. மகாராஜாவுக்கு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தட்டில் உணவு பரிமாறப்பட்டது. அவருக்கு பரிமாறப்பட்ட உணவுகளின் எண்ணிக்கை 150 க்கு குறையாமல் இருந்தது," என்று திவான் ஜர்மானி தாஸ் எழுதுகிறார்.

மன்னர்கள், ராணிகள் மற்றும் இளவரசர்களின் பிறந்தநாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில், விருந்துகள் வழங்கப்பட்டன. அதில் சுமார் 300 பேர் கலந்துகொள்வார்கள்.

இந்த விருந்தில் இத்தாலிய, இந்திய மற்றும் ஆங்கிலேய பணியாளர்கள் உணவு பரிமாறினர். உணவு மற்றும் மதுவின் தரம் உச்சத்தில் இருந்தது. விருந்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்ட நடனக் கலைஞர்கள் மகாராஜாவை மகிழ்வித்தனர். இந்த வகை விருந்து பொதுவாக காலையில் முடிவடையும். அதற்குள் அனைவரும் முழு மது போதையில் இருப்பார்கள்.

மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Kanishka Publishers

படக்குறிப்பு, மகாராஜா பூபிந்தர் சிங்

கிரிக்கெட் மீதான ஆர்வம்

மகாராஜா பூபிந்தர் சிங் கிரிக்கெட்டை மிக அதிகமாக நேசித்தார். சிறந்த கிரிக்கெட் வீரர் ரஞ்சி, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மகாராஜாவின் தந்தை ராஜீந்தர் சிங்கின் ஏடிசியாக இருந்தார். 1898 இல் பாட்டியாலாவுக்கு வந்த நேரத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக அவர் பிரபலமாக இருந்தார். ஆனால் நவாநகர் மன்னராக அவரது அங்கீகாரம் முடிவுக்கு வந்திருந்தது.

அவர் முதலில் ஜோத்பூர் மகாராஜா சர் பிரதாப் சிங்கிடம் சென்றார். அவர் ஒரு கடிதம் எழுதி பாட்டியாலா மகாராஜாவிடம் அனுப்பினார். 1911 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற முதல் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 20 வயது பூபிந்தர் சிங் இருந்தார்.

"பாட்டியாலாவில் கிரிக்கெட்டில் கூட நெறிமுறை பின்பற்றப்பட்டது. ஒருமுறை அன்றைய வேகப்பந்து வீச்சாளரான முகமது நிஸார் தலைப்பாகை இல்லாமல் மோதிபாக் அரண்மனையை அடைந்தார். அவர் சீக்கியரும் அல்ல, பாட்டியாலாவில் வசிப்பவரும் அல்ல. ஆனால் அவர் மகாராஜாவின் அணியில் உறுப்பினராக இருந்தார். ஆறு அடி இரண்டு அங்குலம் கொண்ட நிஸாரை பூபிந்தர் சிங் பார்த்தவுடன் 'நிஸார், உடனடியாக திரும்பிச்செல். தலைப்பாகை அணிந்து வா' என்று கூறினார்," என்று நட்வர் சிங் எழுதுகிறார். ,

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது நிஸார்

பட மூலாதாரம், BCCI

படக்குறிப்பு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது நிஸார்

'ரஞ்சி கோப்பை' என்று பெயர் சூட்டிய பூபிந்தர் சிங்

ஒருமுறை அவர் பிரபல கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத்தின் மீது கோபமடைந்தார். லாலாவை தனது பவுன்சரால் தலையில் அடித்தால் பெரிய வெகுமதி கொடுப்பதாக அவர் நிஸாரிடம் கூறினார்.

லாலாவின் மகன் ராஜிந்தர் அமர்நாத் அவரது வாழ்க்கை வரலாற்றான 'லாலா அமர்நாத் லைஃப் அண்ட் டைம்ஸ்' புத்தகத்தில், "நிஸார் அமர்நாத்தை ஓவர் முழுவதும் பவுன்சர்களால் சரமாரியாக தாக்கியபோது, அமர்நாத் நிஸாரிடம் சென்று, 'உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா? ஏன் இப்படி பந்து வீசுகிறாய்?' என்று கேட்டார். அதற்கு நிஸார் சிரித்துக் கொண்டே, 'உன் தலைக்கு நூறு ரூபாய் வெகுமதி இருக்கிறது. உன்னை அடிக்கும் அத்தனை முறையும் எனக்கு அவ்வளவு நூறுகள் கிடைக்கும். ஒரு முறையாவது அடிவாங்கு. நாம் பணத்தை பாதி பாதியாக பங்குபோட்டுக்கொள்ளலாம் என்று கூறினார். உன் பந்தால் அடிவாங்கியபிறகு யார் பிழைப்பார்கள் என்று லாலா அமர்நாத் பதில் சொன்னார்," என்று எழுதியுள்ளார்.

"மகாராஜா எப்போதும் லாலா அமர்நாத்தை 'சோக்ரா' என்றே அழைப்பார். ஒருமுறை மகாராஜா அவரிடம், "சோக்ரே, நீ அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு தங்க நாணயம் தருகிறேன் என்றார். அமர்நாத் சதம் அடித்து வெகுமதியைப் பெற்றார்."

"1932 இல் தேசிய கிரிக்கெட் போட்டிக்கு வெலிங்டன் டிராஃபி என்று பெயர் வைக்க சிலர் விரும்பினர். இந்த கோப்பைக்கு ரஞ்சியின் பெயரை வைக்க முதலில் பரிந்துரைத்தவர் பூபிந்தர் சிங். அதுமட்டுமின்றி இந்த கோப்பையை உருவாக்க பெரும் தொகையை கொடுத்தார். அவரது முயற்சியால் தான் மும்பையின் புகழ்பெற்ற பிரபோர்ன் மைதானம் கட்டப்பட்டது," என்று ராஜிந்தர் அமர்நாத் எழுதியுள்ளார்.

லாலா அமர்நாத்

பட மூலாதாரம், Rupa & Company

காமா பயில்வானை கௌரவித்தார்

மஹாராஜா பூபிந்தர் சிங் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார். புகழ்பெற்ற மல்யுத்த வீரர் காமாவுக்கு மகாராஜா அடைக்கலம் அளித்திருந்தார். காமா 1910 இல் ஜான் புல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார்.

"1928 இல் பாட்டியாலாவில் காமா பயில்வானின் ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதைப்பார்க்க 40 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த போட்டியில் காமா, போலந்து மல்யுத்த வீரர் ஸ்டானிஸ்லாஸ் ஜிபிஸ்கோவை தோற்கடித்தார். காமா வென்றவுடன் மகாராஜா தனது கழுத்தில் இருந்த முத்து மாலையை அவருக்கு பரிசாக வழங்கினார். அவரை கௌரவித்து இளவரசரின் யானையின் மீது உட்கார வைத்து, அவருக்கு ஒரு கிராமத்தை பரிசாக அளித்து, உதவித்தொகையையும் வழங்கினார்," என்று பார்பரா ரெமுசாக் தனது 'தி நியூ கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் இந்தியா, தி இந்தியன் பிரின்ஸஸ் அண்ட் தேர் ஸ்டேட்ஸ்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மகாராஜாவின் மரணத்திற்குப் பிறகு பாட்டியாலாவில் உள்ள அவரது மோதி பாக் அரண்மனை தேசிய விளையாட்டு கழகமாக மாற்றப்பட்டுள்ளது.

பிரபல மல்யுத்த வீரர் காமா

பட மூலாதாரம், Wrestling Federation of India

படக்குறிப்பு, பிரபல மல்யுத்த வீரர் காமா (வலது)

பார்வை இழப்பு

பூபிந்தர் சிங் தனது ஏழாவது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.

வெளிநாட்டில் இருந்த போது அவருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது. கடைசி காலத்தில் அவர் கண்பார்வையையும் இழந்தார்.

"தனக்கு கண்பார்வை இல்லை என்பது தன் மனைவிகளுக்கு தெரியக்கூடாது என்று மகாராஜா நினைத்தார். அவரது நெருங்கிய உதவியாளர் மெஹர் சிங் கடைசி வரை அவரது தாடியை பராமரித்து தலைப்பாகையை அணிவித்து வந்தார். அவரது மனைவிகளும் சுற்றியுள்ள மக்களும் அவரது கண் பார்வை பற்றி சந்தேகப்படாமல் இருக்க அவர் முன்பு போலவே கண்ணாடி அமர்ந்திருப்பார். பணியாட்கள் முன்பு போலவே அவரது கண்ணில் மை தீட்டுவார்கள்.

இறுதி வரை அவர் வெள்ளை பட்டு ஷெர்வானி அணிந்திருந்தார். அவரது மருத்துவர்கள், அவரது பிரதமர் மற்றும் அவரது சிறப்பு ஊழியர்கள் சிலருக்கு மட்டுமே அவருக்கு கண்பார்வை இல்லை என்ற விஷயம் தெரியும்," என்று திவான் ஜர்மானி தாஸ் குறிப்பிடுகிறார்.

மகாராஜா பூபிந்தர் சிங்

பட மூலாதாரம், Kanishka Publishers

47 வயதில் மரணம்

அவரை பரிசோதிக்க பாரிஸிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவரது முதுகுத் தண்டுவடத்தில் ஒரு ஊசி போடப்பட்டது, இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

"மரணப் படுக்கையில் இருந்த போதும் அவரது பலமும் ஆற்றலும் அபரிமிதமாக இருந்தது. அவர் இறக்கும் நாளில் கூட பத்து முட்டைகள் கொண்ட ஆம்லெட் சாப்பிட்டார். அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்திக்கச் சென்ற போது அவரது மனைவிகள் அவரைச் சுற்றி இருந்தனர். அந்த நிலையிலும் அவர் அரச ஆடைகளை அணிந்திருந்தார். கழுத்தில் முத்து மாலை இருந்தது. காதில் குண்டலமும், கையில் 'கடா' எனப்படும் வளையமும் அணிந்திருந்தார்," என்று கே.எம்.பணிக்கர் எழுதுகிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்தவர்களில் காந்தியின் மருத்துவர் பி.சி.ராயும் ஒருவர். 1947 க்குப் பிறகு பி.சி.ராய் மேற்கு வங்கத்தின் முதல்வராக ஆனார்.

மகாராஜா பூபிந்தர் சிங் 1938 மார்ச் 23 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கோமா நிலைக்குச் சென்றார். எட்டு மணி நேரம் இந்த நிலையில் இருந்த பிறகு அவர் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.

அப்போது அவரது வயது 47 மட்டுமே. அவரது உடல் ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)