முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமான ஔரங்கசீப்பின் கடைசி 27 ஆண்டுகள் வாழ்க்கை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது.
ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (Aurangzeb, the Man and the Myth) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆட்ரே ட்ருஸ்ச்கே, "அந்த படை, முகாம்கள், சந்தை, மன்னரின் வாகனம், பணியாட்கள், அதிகாரிகளுடன் முன்னோக்கி நகர்ந்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.
"ஔரங்கசீப், பழைய முகலாய பாரம்பரியத்தையே பின்தொடர்ந்தார். முகலாய மன்னர்களுடன் அவர்களின் தலைநகரும் சேர்ந்தே நகரும் என்பது தான் அந்த பாரம்பரிய நடைமுறை. ஆனால், மற்ற மன்னர்களோடு ஒப்பிடுகையில் ஔரங்கசீப் வித்தியாசப்படுகிறார். ஏன் என்றால் அவர் தென்னிந்தியா வந்த பிறகு டெல்லிக்கு திரும்பவே இல்லை."
டெல்லியை விட்டு அவர் வெளியேறிய பிறகு டெல்லி தனித்துவிடப்பட்டது. செங்கோட்டையில் தூசி படலத்தின் அடர்த்தி கூடியது.
- கிருஷ்ணரின் 'துவாரகா' நகரம் உண்மையில் இருந்ததா? அகழாய்வில் புதிய தகவல்கள்
- இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்
- பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?
- தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
- நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை

தனிமையில் கழிந்த வயதான காலம்
தன்னுடைய வாழ்நாளின் இறுதி மூன்று தசாப்தங்களை தென்னிந்தியாவில் கழித்த ஔரங்கசீப் அங்கிருந்தபடியே போர்களை வழிநடத்தினார்.
அவரது படையில் இடம் பெற்றிருந்த பிம்சேன் சக்சேனா என்ற இந்து வீரர், பாரசீகத்தில் 'தாரிக்-இ-தில்குஷா' என்ற சுயசரிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், "இந்த உலக மக்கள் அனைவரும் பேராசைக்காரர்களாக இருப்பதை நான் உணர்கிறேன். ஔரங்கசீப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. பல கோட்டைகளை கைப்பற்றுவதில் அவர் அதீத ஆர்வம் காட்டுகிறார்," என்று குறிப்பிட்டிருந்தார்.
ஔரங்கசீப்பின் இறுதி காலம் அவருக்கு மகிழ்ச்சியாக இல்லை. இந்தியா முழுமையும் ஆள வேண்டும் என்ற அவருடைய கனவு கொஞ்சம்கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியது.

பட மூலாதாரம், Penguin Viking
'தி ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் ஔரங்கசீப்' (The Short History of Aurangzeb) என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்கார், "வயதான காலத்தில் தனிமை நோய்க்கு ஆளானார் ஔரங்கசீப். அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலரும் இறந்து போனார்கள்.
இளமை காலம் முதல் அவருடன் பயணித்த அவரின் அமைச்சர் அசாத் கான் மட்டுமே உயிருடன் இருந்தார். ஔரங்கசீப்பின் அமைச்சரவை, கோழைத்தனம் கொண்ட, பொறாமை மிகுந்த, சுயநலனுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தவர்களால் நிறைந்திருந்தது," என்று எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
திறமையற்ற மகன்கள்
ஔரங்கசீப் மரணத்தின் போது அவருடைய மூன்று மகன்கள் உயிருடன் இருந்தனர். இரண்டு மகன்கள் அவர் வாழும் போதே உயிரிழந்தனர். உயிருடன் இருந்த மகன்கள் யாருமே இந்தியாவை ஆளக்கூடிய தகுதியையோ, பலத்தையோ பெற்றிருக்கவில்லை.
18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், தன்னுடைய இரண்டாவது மகன் மௌசத்தால் கந்தஹாரை வெற்றி கொள்ள இயலவில்லை என்ற விமர்சனத்தை ஔரங்கசீப் முன்வைத்தார். "திறமையற்ற மகன் இருப்பதைக் காட்டிலும் ஒரு மகளைப் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்," என்றும் அவர் எழுதியிருந்தார். ஔரங்கசீப்பின் கடிதங்கள் அனைத்தும் 'ருகாயத் ஆலம்கிரி' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.
"உன்னுடைய எதிரிகளிடமும், கடவுளிடமும் உன்னுடைய முகத்தை எவ்வாறு காட்டுவாய்?" என்று கோபத்துடன் அந்த கடிதத்தை அவர் முடித்திருப்பார்.
அவர் மகன்கள் வாரிசாக இந்தியாவை ஆள முடியாமல் போனதற்கு அவரும் ஒரு காரணம் என்பதை ஔரங்கசீப் உணரவில்லை.
தி பிரின்சஸெஸ் ஆஃப் தி முகல் எம்பையர் (The Princesses of the Mughal Empire) என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் முனிஸ் ஃபரூக்கி, "இளவரசர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிட்டு ஔரங்கசீப் அவர்கள் சுயமாக தேர்வு செய்யும் உரிமையை கேள்விக்குள்ளாக்கினார்," என்று கூறுகிறார்.
ஆட்ரே தன்னுடைய புத்தகத்தில், "ஔரங்கசீப், 1700-களின் போது, தன்னுடைய மகன்களைக் காட்டிலும் பேரன்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க துவங்கினார். இது மகன்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. சில நேரங்களில், ஔரங்கசீப் தன்னுடைய மகன்களைக் காட்டிலும் அரசவையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவரின் இளைய மகனான கம்பக்ஷை முதன்மை அமைச்சர் அசாத் கான் மற்றும் ராணுவத் தளபதி ஜுல்ஃபிகர் கான் கைது செய்தது அதற்கு ஒரு முக்கிய உதாரணம்," என்று குறிப்பிடுகிறார்.
தந்தையின் அனுமதியைப் பெறாமல் மராத்தி அரசர் ராஜாராமுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்றது தான் கம்பக்ஷ் செய்த தவறு. ராஜாராம், சிவாஜியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் மரணம்
ஔரங்கசீப்புக்கு வயது அதிகரிக்கஅதிகரிக்க அவருடைய தனிப்பட்ட வாழ்வில் இருள் சூழ்ந்தது.
1704-ஆம் ஆண்டு இரானில் அவரின் போராட்ட குணம் மிக்க மகன், இரண்டாம் அக்பர் மரணம் அடைந்தார். 1705, மார்ச் மாதத்தில் அவருடைய மருமகள் ஜஹான்ஜெப் பானோ குஜராத்தில் மரணம் அடைந்தார்.
அதற்கு முன்னதாக 1702-ஆம் ஆண்டு அவருடைய மகளும் கவிதாயினியுமான ஜெப்-உன்-நிஷா மரணம் அடைந்தார். அதன் பிறகு உயிருடன் இருந்த கடைசி உடன்பிறப்பான கௌஹர்-ஆராவும் உயிரிழந்தார்.
"ஷாஜகானின் பிள்ளைகளில் நானும் அவளும் மட்டுமே உயிர் பிழைத்திருந்தோம்," என்று ஔரங்கசீப் ஒரு முறை கூறினார்.
ஆனால் அவருடைய இழப்புகள் அத்துடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. 1706-ஆம் ஆண்டு அவருடைய மகள் மெஹர்-உன்-நிஷா, மருமகன் இஸித் பக்ஷும் உயிரிழந்தனர்.
ஔரங்கசீப் மரணமடைவதற்கு சில காலம் முன்னர், அவருடைய பேரன் புலாந்த் அக்தரும் உயிரிழந்தார். அதன் பின்னரும் இரண்டு பேரன்கள் உயிரிழந்தனர். இது ஔரங்கசீப்பிற்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் என்பதால் அரசவை உறுப்பினர்கள் அவரிடம் இந்த மரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
வறட்சியும் கொள்ளை நோயும்
இது மட்டுமின்றி, இந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் நிலவிய பஞ்சம் ஔரங்கசீப்பின் பிரச்னைகளை அதிகரித்தது.
நிகோலோ மனுச்சி என்ற இத்தாலிய பயணி ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அவருடைய ஸ்டோரியா டொ மோகர் (Storia do Mogor) என்ற புத்தகத்தில், "1702 முதல் 1704 வரையிலான காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் மழையே இல்லை. அதோடு கொள்ளை நோயும் பரவிய காலம் அது. இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். பசியால் வாடிய மக்கள் காலணாவுக்காக பெற்ற பிள்ளைகளையும் விற்க தயாராக இருந்தனர். ஆனால் வாங்கிக் கொள்ளத்தான் ஒருவரும் இல்லை," என்று குறிப்பிடுகிறார்.
"இறந்து போன மக்கள் கால்நடைகளைப் போல் புதைக்கப்பட்டனர். புதைப்பதற்கு முன்பு அவர்களின் உடைகளில் ஏதேனும் நாணயங்கள் இருக்கிறதா என்று தேடப்பட்டது. பிறகு தலையும் காலும் ஒரே கயிற்றால் கட்டி, இழுத்துவரப்பட்டு, கண் முன்னே தெரியும் ஏதாவது ஒரு குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்"
"அந்த இடத்தின் நாற்றம் வாந்தி உணர்வை ஏற்படுத்தியது," என்று மனுச்சி குறிப்பிடுகிறார். அதனைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. உணவு உண்பது முடியாமல் போய்விட்டது," என்றும் கூறுகிறார்.
"வயல்களில் மரங்களும், பயிர்களும் இல்லாமல் போனது. அந்த இடத்தை மனிதர்கள், விலங்குகளின் எலும்புகள் ஆக்கிரமித்தன. மொத்த பகுதியிலும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. மூன்று நான்கு நாட்கள் பயணத்தில் மக்கள் நெருப்பு பற்ற வைத்ததைக் கூட காண இயலவில்லை," என்று அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Vintage
இறுதி வரை உடன் இருந்த உதய்பூரி
இறுதி காலம் வரை, கம்பக்ஷின் அம்மா உதய்பூரி ஔரங்கசீப்புடன் இருந்தார்.
மரணப் படுக்கையில் இருந்த போது கம்பக்ஷுக்கு ஔரங்கசீப் எழுதிய கடிதத்தில்,"உடல் நிலை மோசமடைந்த காலத்திலும் உதய்பூரி என்னைவிட்டுச் செல்லவில்லை. மரணம் வரையிலும் என்னுடன் வருவார்," என்று குறிப்பிட்டிருந்தார் ஔரங்கசீப்.
உண்மையில் அவ்வாறே நடந்தது. ஔரங்கசீப் மரணம் அடைந்து சில மாதங்களில் உதய்பூரியும் மரணத்தை தழுவினார்.

பட மூலாதாரம், Getty Images
வடக்கில் ஏற்பட்ட புரட்சி
இறுதியாக அஹமதுநகரில் முகாமிட்டார் ஔரங்கசீப்.
ஸ்டான்லி லேன்-பூல், 'ஔரங்கசீப் அண்ட் தி டிகேய் ஆஃப் தி முகல் எம்பையர்' (Aurangzeb and the Decay of the Mughal Empire) என்ற புத்தகத்தில்," ஔரங்கசீப் நீண்ட காலம் டெல்லியில் இல்லாத காரணத்தால் வடக்கில் பல இடங்களில் கலகங்கள் வெடித்தன. ராஜபுத்திரர்கள் முன்னோக்கி வந்தனர். ஆக்ரா அருகே ஜாட் பிரிவினர் தலை தூக்கினார்கள்.
சீக்கியர்கள் முல்தானில்ஆதிக்கம் செலுத்தி முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு சவாலாக மாறினார்கள். முகலாய ராணுவம் சோர்வுற்றிருந்தது. மராத்தியர்களும் முகலாயர்களை ரகசியமாக தாக்கும் துணிவைப் பெற்றனர்," என்று எழுதியுள்ளார்.
தன்னுடைய தந்தை ஷாஜகானுக்கு அவருடைய மகன்கள் செய்ததைப் போன்றே, தன்னுடைய மகன்களும் தன்னை மோசமாக நடத்தக் கூடும் என்று நினைத்த ஔரங்கசீப் அவர்களை தொலைதூரங்களுக்கு அனுப்பி வைத்தார்.
"ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிராந்திய விரிவாக்கம் முகலாயர்களை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கியது. அவருடைய ஆட்சியின் கீழ், சாம்ராஜ்ம் விரிவாக்கப்பட்டது. அதனை ஆள்வது கடினமானது. எனக்குப் பின்னால் இந்த சாம்ராஜ்யம் தலைமையில்லாமல் தடுமாறும் என்று ஔரங்கசீப்பே ஒருமுறை கூறியுள்ளார்," என்று மற்றொரு வரலாற்றாசிரியர் ஆப்ரஹாம் எராலி 'தி முகல் த்ரோன் தி சகா ஆஃப் இண்டியாஸ் கிரேட் எம்பெரர்ஸ்' ( 'The Mughal Throne The Saga of India's Great Emperors') என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மோசமான ஔரங்கசீப் உடல்நிலை
இவை அனைத்தைக் காட்டிலும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது, அவரைத் தொடர்ந்து அரியணையை கைப்பற்றுவது யார் என்பது தான்.
மனுச்சி, "அரியணைக்கு உரிமைக் கோரக் கூடியவர்களான, ஔரங்கசீப்பின் மகன்களுக்கும் வயதாகிவிட்டது. அவருடைய பேரன்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் தாடிகளும் நரைத்துப் போகும் அளவுக்கு 45 வயதை தாண்டியவர்களாக இருக்கின்றனர்.
இளைய இரத்தமான கொள்ளுப்பேரன்கள் அவர்களின் 25-27 வயதில் இருந்தனர். ஆனால் ஔரங்கசீப்புக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஒருவரால் மட்டுமே ஏற்க முடியும். அரியணைக்கான போட்டியில் மற்றவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்படும் அல்லது கொல்லப்படுவார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
1705-ஆம் ஆண்டு வாகின்சேரா என்ற மராட்டிய கோட்டையை கைப்பற்றிய பிறகு ஔரங்கசீப் தன்னுடைய படைகளுடன் கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கே தான் அவருக்கு உடல் நிலை மோசமானது. அதே ஆண்டு டெல்லி செல்வதை இலக்காகக் கொண்டு அவர் அஹமதுநகருக்கு நகர்ந்தார். ஆனால் அதுவே அவரின் இறுதிப்பயணமாக அமைந்தது.
1707-ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று 89 வயதான ஔரங்கசீப் உடல் நிலை மீண்டும் மோசமானது. சில நாட்களில் உடல் நலன் தேறி அரசுப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் இந்த முறை, அவருக்கு இனி போதுமான அவகாசம் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். தன்னுடைய மகன் அஸாமின் பொறுமையின்மை அவரை கலங்க வைத்தது.

பட மூலாதாரம், Getty Images
மகன்களுக்கு ஔரங்கசீப் கடிதம்
ஜாதுநாத் சர்க்கார், "ஔரங்கசீப் உடல் நிலை சரியில்லாமல் போன நான்கு நாட்கள் கழித்து, தனது மகன் அஸாமை மாள்வா ஆளுநராக நியமித்து அனுப்பிவைத்தார். ஆனால் தன்னுடைய அப்பா அவரின் இறுதி காலத்தை நெருங்குகிறார் என்று உணர்ந்த அஸாம் எந்த பரபரப்பும் இல்லாமல் பொறுமையாக மாள்வா செல்ல ஆரம்பித்தார் அஸாம்.
பல இடங்களில் பொறுமையாக நின்று தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். அஸாமை அனுப்பிய நான்காவது நாளில் ஔரங்கசீப்பிற்கு உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இருப்பினும் அவர் அரசவைக்கு வந்து தன்னுடைய பணிகளை தொடர்ந்தார். அந்த மோசமான சூழலிலும் அவர் ஐந்து முறை தொழுகை நடத்தினார்," என்று எழுதியுள்ளார்.
ஔரங்கசீப் தன்னுடைய இறுதி காலத்தில் தன்னுடைய மகன்களுக்கு இரண்டு கடிதங்களை எழுதினார். "உங்கள் இருவருக்கும் இடையே அதிகாரத்துக்கான சண்டை வரவே கூடாது என்று விரும்புகிறேன். ஆனால் என்னுடைய மரணத்திற்கு பிறகு ரத்தக்களரி ஏற்படும் என்பதை என்னால் உணர முடிகிறது. மக்களுக்காக பணியாற்றும் ஆசையையும், ஆட்சி செய்வதற்கான திறனையும் கடவுள் உங்களுக்கு வழங்கட்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
1707 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி ஔரங்கசீப் தன்னுடைய படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தார்.
ஜாதுநாத் சர்கார், "ஔரங்கசீப், அன்று காலை தொழுகை நடத்தினார். ஜெபமாலையில் உள்ள மணிகளை எண்ணினார். மெதுவாக, அவர் சுயநினைவை இழக்கத் துவங்கினார். சுவாசிக்க சிரமப்பட்டார். அவருடைய உடல் பலவீனம் அடைந்தாலும் கூட, அவர் கையில் இருந்த ஜெபமாலை அவர் கையை விட்டு நழுவவில்லை. வெள்ளிக்கிழமை தான் அவருடைய இறுதி நாளாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த ஆசையும் நிறைவேறியது," என்று எழுதினார்.
அவர் மரணிப்பதற்கு முன்பு, அவருடைய உடல் சவப்பெட்டி ஏதும் இல்லாமல் அருகிலேயே எங்காவது புதைக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.
அவர் மரணமடைந்த இரண்டு நாட்கள் கழித்து அங்கே வந்த அஸாம், துக்கம் அனுசரித்தார். தன்னுடைய சகோதரி ஜூனத்-உன்-நிஷா பேகத்திற்கு ஆறுதல் கூறிய அவர் தன்னுடைய தந்தையின் உடலை, தௌதலாபாத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்திருக்கும் சூஃபி ஞானி ஷேக் ஜெய்ன்-உத்-தின் கல்லறை அருகே அடக்கம் செய்தார்.
ஔரங்கசீப் 89 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். ஜாதுநாத் சர்கார், "ஔரங்கசீப் நல்ல நினைவாற்றலைக் கொண்டிருந்தார். ஒருவரை ஒரு முறை பார்த்துவிட்டால் அந்த முகத்தை அவரால் மறக்க மாட்டார். அவருடைய இறுதி காலத்தில், அவரின் ஒரு காதில் கேட்கும் திறன் குறைந்தது. அவர் வலது காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடுக்கத்துடன் நடக்கத் துவங்கினார்," என்று எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஔரங்கசீப் மகன்களுக்கு இடையே நடந்த யுத்தம்
பஞ்சாப் ஆளுநராக இருந்த தன்னுடைய மகன் மௌசம் என்ற ஷா ஆலத்தை ஔரங்கசீப் அடுத்த வாரிசாக அறிவித்திருந்தார். இருப்பினும் கூட, ஔரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு அங்கே வந்த அஸாம் ஷா தன்னை மன்னனாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து ஆக்ரா நோக்கிச் சென்றார். அப்போது தான் அவருடைய மன்னர் பொறுப்பு முறையாக அங்கீகரிக்கப்படும்.
மனுச்சி இது குறித்து கூறும் போது, "மற்றொருபுறம், ஷா ஆலம் தன்னுடைய அப்பாவின் மரண செய்தியை கேட்டு ஆக்ராவுக்கு விரைந்தார். அஸாம் ஷா ஆக்ராவுக்கு வருவதற்கு முன்பே ஆலம் அங்கே சென்றார். அவரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஜஜௌவில் இரண்டு சகோதரர்களின் ராணுவமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு ஔரங்கசீப்பிற்கும் அவருடைய சகோதரர் தாரா சிகோவுக்கும் இதே இடத்தில் தான் போர் மூண்டது. ஷா ஆலம் அந்த சண்டையில் முன்னிலையில் இருந்தார். அடுத்த நாள், ஜூன் 20 அன்று தந்தையின் அரியணையை தன் வசமாக்கிக் கொண்டார் ஷா ஆலம்.

பட மூலாதாரம், Vintage
முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவு
தோல்வி அடைந்த அஸாம் ஷா, தன்னுடைய சகோதரன் ஷா ஆலமின் கையில் சரணடைவதற்கு முன்பே தன்னுடைய முடிவை தானே தேடிக் கொண்டார்.
ஷா ஆலமும் 1712-ஆம் ஆண்டு, ஔரங்கசீப் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து மரணம் அடைந்தார்.
1712 முதல் 1719 வரையிலான 7 ஆண்டுகளில் நான்கு முகலாய மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதற்கு முந்தைய 150 ஆண்டுகளை வெறும் நான்கே நான்கு முகலாய மன்னர்கள் தான் ஆட்சி செய்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக முகலாய சாம்ராஜ்யத்தின் பழம்பெருமை அழியத் துவங்கியது.
"அவர் பாரிய சாதனைகளை புரிந்திருந்தாலும் கூட, அரசியல் ரீதியாக அவர் தோல்வியுற்ற அரசர். அவருடைய தனி ஆளுமை மட்டுமே அவருக்குப் பின்னால் முகலாய சாம்ராஜ்யம் அழியக் காரணம் இல்லை. அவரால் தான் முகலாய சாம்ராஜ்யம் அழிந்தது என்று கூறுவதும் கூட சரியல்ல. ஆனால் சாம்ராஜ்யம் அழிவதை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை," என்று ஜாதுநாத் சர்கார் எழுதியுள்ளார்.
1707-ஆம் ஆண்டு ஔரங்கசீப் மரணித்த பிறகு, முகலாய சாம்ராஜ்யம் கடந்த கால கனவுகளுடன் வாழ்ந்து கொண்டு தான் இருந்தது. அந்த மரணம் நிகழ்ந்து 150 ஆண்டுகள் கழித்து, 1857-ஆம் ஆண்டு பஹதூர் ஷா ஜாஃபரின் ஆட்சியோடு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது முகலாய சாம்ராஜ்யம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












