கிருஷ்ணரின் 'துவாரகா' நகரம் உண்மையில் இருந்ததா? அகழாய்வில் புதிய தகவல்கள்

- எழுதியவர், ஜெய் சுக்லா
- பதவி, பிபிசி குஜராத்தி
புராணங்களிலும், பழங்கதைகளிலும் வேரூன்றியிருக்கும் துவாரகா என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் "சொர்க்கத்தின் வாசல்" என்று பொருள். அது கிருஷ்ணர் ஆட்சி பரிந்த நிலப்பகுதி என்று புராணங்கள் கூறுகின்றன.
புராண கதைகளின்படி கிருஷ்ணர் உலகை விட்டுச் சென்றபோது துவாரகா மூழ்கியது கலியுகத்தின் தொடக்கம் என கூறப்படுகிறது. இதைத் தவிர, காலப்போக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பல தொன்மையான அமைப்புகள் ஒரு நகரம் திடீரென மூழ்கியதை சுட்டிக்காட்டுகின்றன.
துவாரகா உண்மையில் கடலில் மூழ்கியதா? அந்த நகரம் எவ்வளவு பெரிதாக இருந்தது, அங்கு என்ன கட்டடங்கள் இருந்தன? அவை இப்போதும் இருக்கின்றனவா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டும் என பலருக்கும் தோன்றுவது இயல்பானதுதான்.
துவாரகா திட்டமிட்ட ஒரு நகரமா அல்லது வெறும் கற்பனையா? துவாரகாவின் மூழ்கிய மர்மங்களை கண்டறிய கண்டறியும் முயற்சி 1930-களில் ஹிரிதயானந்தா சாஸ்திரியால் தொடங்கப்பட்டது. முதல் விரிவான அகழாய்வுகள் 1963ஆம் ஆண்டு ஜே.எம். நானாவதி மற்றும் ஹெச்.டி. சன்கியா ஆகியோர் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழாய்வில், பழங்கால துவாரகாவின் எச்சங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
1983-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் அகழாய்வாளர்கள், துவாரகாவின் பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களை கண்டறிந்தனர். பழங்கால துவாரகா நகரின் சுவர்கள் இருந்த பகுதியில் பலப்படுத்தப்பட்ட அஸ்திவாரங்கள், கல் தூண்கள், கல் நங்கூரங்கள் மற்றும் பாசன கால்வாய்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
1960-களின் தொடக்கத்தில் துவாரகாவில் இருக்கும் ஜகத் மந்திர் கோயிலுக்கு அருகே ஒரு வீட்டை இடிக்கும்போது ஒரு கோயில் போன்ற அமைப்பின் மேற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புனேவின் டெக்கன் கல்லூரியால் நடத்தப்பட்ட அகழாய்வில் ஒன்பதாம் நூற்றாண்டு விஷ்ணு ஆலயத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. மற்ற அகழாய்வு இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு பல பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், துவாரகா ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அழிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், CSIR-NIO
குஜராத்தை தனது வீடாக்கிக் கொண்டிருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.ஆர். ராவ் அங்கு, கடலில் பல ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசனோகிராபி எனப்படும் தேசிய கடலியல் நிறுவனத்தில் ஆழ்கடல் அகழாய்வை தொடங்கி வைத்தார்.
அங்கு கண்டறியப்பட்ட பொருட்களின் அடிப்படையில் துவாரகா பெரும்பாலும் ஒரு துறைமுகமாக இருந்ததாக அகழாய்வாளர்கள் நம்புகின்றனர். இங்கிருந்து மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவுடன் வணிகம் நடைபெற்றிருக்கலாம்.
இந்த துறைமுகம் மற்ற நாகரிகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கலாம் என்றும் அதனால் மேலும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் அவர் நம்புகிறார்.
இந்த எண்ணம் தான் கோவாவில் உள்ள தேசிய கடலியல் நிறுவனத்தின் ஆழ்கடல் அகழாய்வு மையம் ஒரு ஆழ்கடல் ஆய்வை நடத்த காரணமாக இருந்தது.
பெட்-துவாரகாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்து ஆய்வு அறிக்கை

பட மூலாதாரம், CSIR-NIO
கோவாவில் உள்ள தேசிய கடலியல் நிறுவனத்தை (என்ஐஓ) சேர்ந்த ஆய்வாளர்களும், ஆழ்கடல் அகழாய்வாளர்களுமான சுந்தரேஷ் மற்றும் ஏ.எஸ் கவுர் ஆகியோர் துவாரகா மற்றும் பெட்-துவாரகாவில் நடைபெற்ற அகழாய்வுகள் குறித்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர்
இந்த ஆய்வறிக்கையின் கூற்றுப்படி இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் பெட்-துவாரகா ஒரு முக்கிய பங்காற்றியது. மெசபடோமியாவுடனான இந்தியாவின் வர்த்தகம் இங்கிருந்துதான் நடத்தப்பட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் நகைகள் செய்ய பயன்படுத்தப்பட்ட சங்குகளுக்கு இந்தப் பகுதி புகழ் பெற்றிருந்தது.
இந்த சங்குகள் துவாரகாவில் அதிக அளவில் எடுக்கப்பட்டதாக என்ஐஓ ஆய்வு சொல்கிறது. தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வில் முதனிலை வரலாற்றுக் காலத்தை சேர்ந்த பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்கால் உருவாக்கப்பட்ட முத்திரை, மண் பாண்டத்தில் எழுதப்பட்ட எழுத்துகள், மண் பாண்டங்கள் மற்றும் ஒரு கத்தி போன்ற கூர்மையான பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
1981 முதல் 1995 வரை பெட்-துவாரகாவில் நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அகழாய்வு எங்கு நடத்தப்பட்டது?

பட மூலாதாரம், CSIR-NIO
பெட்-துவாரகா என்பது துவாரகாவின் வடக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 13 கிலோமீட்டர் நீளமுள்ள மணலும் பாறைகளும் நிறைந்த பகுதியாகும்.
அங்கு சங்குகள் அதிக அளவில் காணப்படுவதால் அது சங்கோதார் எனவும் அழைக்கப்படுகிறது. இந்துமத நூலான மகாபாரதத்தின் சபாபர்வாவில் இது சங்கோதார் என குறிப்பிடப்படுகிறது. அதில் யாதவர்கள் சிவனை வழிபட துவாரகாவிலிருந்து அந்த தீவிற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி காலப்போக்கில் கடலரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கிமு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமானதாக கருதப்பட்ட இந்த துறைமுகத்தின் கிழக்குப் பகுதி கடலால் விழுங்கப்பட்டிருக்கலாம். தெற்கிலும் முக்கியமான வரலாற்று தகவல்கள் அல்லது ஆதாரங்களும் அழிந்துள்ளன.
1930ஆம் ஆண்டு திங்கேஸ்வர் மஹாதேவ் கோயிலுக்கு பின்னால் உள்ள நில்காந்த் மஹாதேவ் ஆலயத்தை சுற்றி தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது.
அங்கே அவர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டு மனித நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டெடுத்தனர்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு பாத்திரத்தின் துண்டில் மெளரிய பிராமி எழுத்தில் வார்த்தைகள் இருந்தன. இது கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஆழ்கடல் அகழாய்வு மையம் பெட்-துவாரகாவின் கிழக்குப் பகுதியில் சிடி பாவா தர்காவின் அருகே அகழாய்வை 1981ஆம் ஆண்டு தொடங்கியது. 1984-85ஆம் ஆண்டில் கிமு 1500ஆம் ஆண்டு காலகட்டத்தை சேர்ந்த சுவரின் மிச்சங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது
இந்த சுவர் பாக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தது. ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்த முத்திரைகள், ஜாடிகள் மற்றும் பிற எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கே நடுப்பகுதியில் 580 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய சுவரின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
1991-ல் பலாபூர் அகழாய்வுகளில் கிடைத்தது என்ன?

பட மூலாதாரம், CSIR-NIO
பலாபூரில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே சுரங்க வேலைகள் நடந்திருப்பதாக தொல்லியல் துறை கருதியது. எனவே பலாபூரிலும் அகழாய்வு நடத்தப்பட்டது.
ஆனால் இங்கு நிறைய எச்சங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இங்கே கடலரிப்பு பெருமளவில் நடைபெற்று எச்சங்களும் அழிந்து விட்டது தெளிவாக தெரிந்தது.
அங்கு கண்டெடுக்கப்பட்ட சில பொருட்கள் ஹரப்பா காலகட்டத்தை சேர்ந்தவையாக இருந்ததுடன், பெட் துவாரகாவின் வடக்கு தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மனித வசிப்பிடங்கள் இருந்ததை நிரூபித்தன.
தீவை சுற்றி நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் 6 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை பிடிகே1 என தொடங்கி பிடிகே6 வரையிலான பெயர்களில் அழைக்கப்பட்டன.
பெட்-துவாரகாவின் தென்கிழக்கு கரை தொல்பொருட்களின் பொக்கிஷமாக இருக்கிறது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் பெட்-துவாரகாவை இரண்டு கால கட்டத்தை சேர்ந்ததாக வகைப்படுத்தலாம்: புரோட்டோ ஹிஸ்டாரிக் எனப்படும் முதனிலை வரலாற்றுக் காலம் மற்றும் ஹிஸ்டாரிக் எனப்படும் வரலாற்றுக் காலம்.
முதனிலை வரலாற்றுக் காலத்தை சேர்ந்த பொருட்கள் என்ன?
வரலாற்றுக் காலத்தை சேர்ந்த நாணயங்களும் மண் பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அதேநேரம் காலத்தை தீர்மானிக்க முடியாத சில சங்குகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதனிலை வரலாற்றுக் காலம் கிமு 3,500 முதல் கிமு 1,000 வரையான காலகட்டத்தை உள்ளடக்கியது. சிந்து சமவெளி நாகரிகம் இந்த காலத்தில்தான் வளர்ச்சியடைந்தது.
பெட்-துவாரகாவில் வளர்ந்த நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்தின் இறுதி கட்டத்தில் தோன்றியிருக்கலாம் என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
காலகட்டத்தை நிர்ணயம் செய்ய தொல்லியலாளர்கள் மண் பானைகளின் எச்சங்களை டிஎல் டேட்டிங் முறையில் ஆய்வுக்குட்படுத்தினர். இந்த பரிசோதனையின் அடிப்படையிலேயே இந்த காலகட்டம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்-துவாரகாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியப் பொருள் சங்கினால் செய்யப்பட்ட முத்திரைதான். இது 20க்கு 18 மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு சங்கு. அதில் ஒரு மூன்று தலை விலங்கு பொறிக்கப்பட்டுள்ளது. இது காளை , கொம்புடைய குதிரையான யுனிகார்ன் அல்லது சிறுகொம்புகளுடைய ஆடாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த முத்திரை, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டதை ஒத்திருப்பதாக ஆய்வு சொல்கிறது. இந்த முத்திரை ஆழ்கடல் அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்டது,
இது தவிர, சிவப்பு மற்றும் சாம்பல நிற மண்பாண்டங்கள், ஜாடிகள் மற்றும் பாத்திரங்களின் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கிமு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை என நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், CSIR-NIO
வரலாற்றுக் காலத்தை சேர்ந்த என்ன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
இந்த காலகட்டத்தைச் சேர்ந்த நாணயங்களும், மண் பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நான்கு நாணயங்களில் மூன்று செம்பினாலும் ஒன்று ஈயத்தாலும் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு செம்பு நாணயங்கள் குஷாணர் காலத்தை சேர்ந்தவை என நம்பப்படுகிறது. இவை கிபி முதல் நூற்றாண்டை சேர்ந்தவை என கணிக்கப்படுகிறது.
இந்த நாணயத்தில் நின்று கொண்டிருக்கும் அரசனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தனது கையில் ஒரு கத்தியை வைத்திருப்பதுடன், தலையில் கிரீடம் சூடியுள்ளார். அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை படிக்க முடியவில்லை. ஈயத்தால் செய்யப்பட்ட நாணயம் 3.4952 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் 12 ஆரங்களுடைய சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் தேய்ந்து போய் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஒரு முக்கிய நாகரிகத்தின் வளர்ச்சியை இவை காட்டுவதாக தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், CSIR-NIO
இந்த காலகட்டத்தில் சில மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றின் வடிவிலும், மேற்புற வேலைப்பாடுகளிலும் வேறுபாடுகள் இருந்தன.
இங்கு சங்கு தொழில் செழித்திருந்தது. ஹரப்பா காலகட்ட வர்த்தகத்தில் சங்குகள் முக்கிய பங்காற்றின.
முதனிலை வரலாற்றுக் காலம், வரலாற்றுக் காலம் என இரு காலகட்டத்தை சேர்ந்த சங்குகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது இங்கு சங்கு தொழில் பெரிய அளவில் செழித்திருந்ததை காட்டுகிறது. சங்குகளிலிருந்து வளையல் செய்யும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்தது.
பெட் துவாரகாவில் சங்குகள் அதிகம் கிடைத்ததால் ஹரப்பா நாகரிகம் இங்கு வளர்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த காலகட்டத்தில் சங்குகளுக்கு வணிக ரீதியாக நல்ல மதிப்பு இருந்தது. பெட் துவாரகாவைச் சுற்றி கடலின் மட்டம் அதிகரித்ததால், இந்தப் பகுதி முழ்கியதாக தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும் தொல்லியல்துறையால் கடல் மட்டம் உயர்ந்ததற்கு எந்த குறிப்பிட்ட காரணத்தையும் சுட்டிக்காட்ட முடியவில்லை.

பட மூலாதாரம், CSIR-NIO
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்தப் பகுதியில் மனித குடியேற்றம் கிபி மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் மீண்டும் தொடங்கியதாக சொல்லலாம் என இந்த ஆய்வு கூறுகிறது.
கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்தில், இங்கு வசித்த மக்கள் ரோமானியர்களுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர்.
இங்கு நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகளின் போது, கல்லால் செய்யப்பட்ட நங்கூரம், மூன்று துளைகள் உள்ள கல் நங்கூரங்கள், கல் குவளை, வளையம் போன்ற கைப்பிடியுடன் இருந்த தமரூசி மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ஒரு தெளிப்பானும் பெட்-துவாரகாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மகாபாரதம் நிகழ்ந்தது கிமு 1500 காலகட்டம் என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட நங்கூரங்களின் காலகட்டமும் கிமு 1500தான். எனவே இந்த பொருட்களும் மகாபாரத காலகட்டத்தை சேர்ந்தவை தான் என தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












