ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை

மேரி டாட், ஆப்ரகாம் லிங்கன்

பட மூலாதாரம், Library of Congress

படக்குறிப்பு, அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அமெரிக்காவை காப்பாற்றியவர் லிங்கன்.
    • எழுதியவர், க்ளேர் மெக்ஹாக்

செய்யப்படும் செலவுகளுக்காகவும், உணர்ச்சிகளில் கட்டுப்பாடு ஏதும் இன்றி இருந்ததாகவும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார் ஆபிரகாம் லிங்கனின் மனைவி. ஆனால் அவர் குறித்த இரண்டு புதிய நாடகங்கள், இறுதியாக அவருக்கு சிறந்த ஊடக கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாவில் எப்போதும் போல் 'முதல் பெண்மணி' குறித்த ஆர்வம் குவிந்தது.

மெலனியா டிரம்பின் ஆடை, அவரின் சிரிப்பு, அவர் அணிந்திருந்த தொப்பி ஆகியவை கவனத்தை ஈர்த்தது. பொதுமக்களின் பார்வையில் இருந்து தனது முகத்தை மறைக்க அந்த தொப்பியை அணிந்து வந்தாரா? யாராலும் அதை உறுதியாக கூற இயலாது.

அதிகாரம் இல்லை. ஆனால் தொடர்ந்து மதிப்பிடப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தவறேதும் இல்லாதவர்களாய் அதே நேரத்தில் சிறப்பான நடத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது என்பதெல்லாம் அதிபர் மனைவி என்ற அந்தஸ்தை கடினமானதாக மாற்றுகிறது.

மேரி டாட், ஆப்ரகாம் லிங்கன்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மேரி டாட் குறித்த விமர்சனங்கள்

அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அமெரிக்காவை காப்பாற்றியவர் லிங்கன். அவரின் மனைவியோ, வாஷிங்டனில் 1861-ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தகாலம் தொட்டே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார்.

முதலில் வெள்ளை மாளிகை அழகுபடுத்தும் திட்டத்தில் இறங்கினார். அதற்காக அவர் நியூயார்க் சென்றார். எங்கு சென்றாலும் அவரை ஊடகவியலாளர்கள் பின்தொடர்ந்தனர். "சில முன்னணி நிறுவனங்களிடம் இருந்து பெரிய அளவில் பொருட்களை வாங்கும் முயற்சியில் இருந்த லிங்கனின் மனைவி வழக்கமான பாணியில் மகிழ்ச்சியோடு இருந்தார்," என்று நியூயார்க் ஹெரால்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

போர் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் இதுபோன்ற செய்திகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

உண்மையில், அடிமைகளைக் கொண்டிருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் மேரி டாட். அடிமைகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாகாணங்களை உள்ளடக்கிய கான்ஃபிடரேட் ராணுவத்தில் அவருடைய மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்கள் பணியாற்றினார்கள். இந்த காரணங்களுக்காகவே உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் அவரின் விசுவாசம் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

1865-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 அன்று, ஃபோர்ட் தியேட்டரில் மேரிக்கு அருகே அமர்ந்திருந்த லிங்கனை கான்ஃபிடரேட் ஆதரவாளரான ஜான் வில்கிஸ் பூத் சுட்டுக் கொன்ற பிறகு, தங்களது விருப்பத்துக்குரிய தலைவரை இழந்த பெண் என்ற அனுதாபத்தை அவர் பெறவில்லை. 1875-ஆம் ஆண்டு அவருடைய சொந்த மகனே அவரை ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்தார்.

டிக்டாக், இன்ஸ்டகிராம், முகநூல் லைக்குகளால் உயர்ந்து விழும் சமூக மதிப்பு கொண்ட இந்த காலகட்டத்தில் மேரிக்கான மறுமதிப்பீடு நிகழ்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியர், எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஜான் ரான்சம் பிலிப்ஸின் புதிய நாடகமான 'மிஸஸ் பிரசிடென்ட்' கடந்த வாரம் லண்டனின் சேரிங் கிராஸ் தியேட்டரில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டது. இதுவும் அந்த மறுமதிப்பீடாக காணப்படுகிறது.

மேரி டாட், ஆப்ரகாம் லிங்கன்

பட மூலாதாரம், Library of Congress

படக்குறிப்பு, அடிமைகளைக் கொண்டிருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் மேரி டாட்

நாடகம் மூலம் மீட்கப்படும் அவரின் பிம்பம்

இந்த நாடகத்தில் மேரி டாட் லிங்கனாக நடித்திருக்கிறார் மிரியம் க்ரேஸ் எட்வார்ட்ஸ். சாம் ஜென்கின்ஸ் ஷா, மேத்யூ ப்ராடியாக நடித்துள்ளார். மேத்யூ ப்ராடி, அமெரிக்க புகைப்பட - ஊடகவியலின் தந்தையாக அறியப்படுகிறார். இந்த நாடகம் மேரி டாடுக்கும், மேத்யூ ப்ராடிக்கும் இடையேயான உறவு குறித்தது.

மேத்யூ, ஆபிரகாம் லிங்கன், அவரது குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போரின் கோரங்களை புகைப்படமாக்கியவர்.

இந்த நாடகம், மேரி ப்ராடியின் புகைப்பட ஸ்டுடியோவுக்கு வருவதை காட்சிப்படுத்தியிருக்கும். அடிமைத் தன ஒழிப்புக்கு எதிராக இருந்த தெற்கு அமெரிக்காவில் இருந்து மேரி டாட் வந்திருப்பதால் அவர் மீது எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகம் குறித்து அவர் நன்கு அறிந்திருக்கிறார்.

அப்படியான சூழலில், அந்த நாடகத்தில், மேத்யூவிடம், "என்னைப் பற்றிய வரலாற்றின் பார்வையை வரையறுக்கும் ஒரு புகைப்படம் வேண்டும்," என்று மேரி கூறுகிறார். அதற்கு மேத்யூவோ அவருக்கு அந்த சக்தி இருப்பதாக கூறுகிறார்.

"அமெரிக்காவை வடிவமைக்கும் மக்களின் பிம்பத்தை, காலம் கடந்தும் நான் வடிவமைக்கிறேன்," என்று கூறுகிறார்.

இந்த நாடகத்தில், மேரி தன்னை "திருமதி. அதிபராக" அழைக்க வேண்டும் என்றும், அவர் தன்னை எப்படியாக புகைப்படமாக்கிக் கொள்ள விரும்புகிறார் என்பது குறித்தும் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் மூல்கிறது.

ஒரு புகைப்படத்தின் பொதுவான பிம்பத்தை கட்டுக்குள் வைத்திருப்பது யார்? கலைஞரா அல்லது அவர் எடுக்கும் புகைப்படத்தின் கருபொருளா என்ற விவாதத்தை முன்வைக்கிறது அந்த நாடகம். இந்தக் கேள்வி காலத்தையும் இடத்தையும் தாண்டியது.

ஆனால் தான் செய்த அனைத்து தியாகங்களுக்கும் தன்னுடைய வாழ்நாளில் சரியான அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றும் அதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நம்பிய முன்னாள் முதல் பெண்மணியின் எண்ண ஓட்டத்தை அந்த நாடகம் பிரதிபலிக்கிறது.

லிங்கன் இறந்த பிறகு மேரியின் வாழ்க்கையை ஒட்டிய காட்சிகள் பிறகு நாடகத்தில் இடம் பெறுகின்றன. கூடவே,19-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் அமெரிக்கா வரலாற்றில் சர்ச்சைக்குரிய நபர்களாக அறியப்படும், அடிமை ஒழிப்புவாதியான ஜான் பிரவுன், தலைமை நீதிபதி ரோஜர் டேனி மற்றும் இயற்கை ஆர்வலர் ஜான் ஜேம்ஸ் ஆடுபோன் - மேடையில் தோன்றுகிறார்கள். அப்போது தன்னுடைய சுயம் குறித்த ஒரு துணிச்சலான பன்முக பார்வையை மேரி டாட் கொண்டிருப்பார்.

ஆபிரஹாம் லிங்கன், மேரி டாட் லிங்கன்

பட மூலாதாரம், Getty Images

உண்மையில் மேத்யூவுக்கும் மேரிக்குமான உறவானது ஒரு சிறு நிகழ்வே. 1861-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 625 பென்சில்வேனியா அவென்யூ முகவரியில் அமைந்திருக்கும் மேத்யூ ப்ராடியின் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்கச் சென்றார் மேரி.

ஆனால் மேத்யூ எடுத்த புகைப்படங்களில் ஒன்றைத் தவிர வேறு எதுவும் மேரிக்கு பிடிக்கவில்லை. அந்த புகைப்படங்கள் அனைத்தையும் மேரி அழிக்கக் கூறினார். ஆனால் அவரின் வேண்டுகோளுக்கு மாறாக மேத்யூ அனைத்து புகைப்படங்களையும் பாதுகாத்து வைத்தார்.

இந்த நாடகத்தை எழுதிய ரான்சம் பிலிப்ஸ் இது குறித்து பிபிசியிடம் பேசும் போது, இது வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் இயக்கப்பட்ட நாடகம் இல்லை என்றார்.

"ஏளனம் மிகுந்த கேலிச்சித்திரங்களில் இருந்து அவரை மீட்டு, ஆண்களிடம் இல்லாத உணர்வுகளைக் கொண்ட ஒரு சிக்கலான, ஆழமான பெண்ணாக அவரை முழுமையாக காட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி இது," என்று கூறினார்.

மேலும் ப்ராடியைப் பற்றிய அவரது பார்வையும் மென்மையானதாக இல்லை. "என்னைப் போன்றே பிராடியும் ஒரு கலைஞர். கலைஞர்கள் மோசமானவர்களாக இருக்கக் கூடும் என்பது எனக்கு தெரியும்," என்று கூறுகிறார்.

மேரி டாட், ஆப்ரகாம் லிங்கன்

பட மூலாதாரம், Pamela Raith

படக்குறிப்பு, ஏளனம் மிகுந்த கேலிச்சித்திரங்களில் இருந்து அவரை மீட்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி இது

வேறு கோணத்தில் மற்றொரு நாடகம்

இந்த நாடகம் லண்டனில் நடந்தால், மற்றொரு கோணத்தில் மற்றொரு நாடகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஓ மேரி என்று அழைக்கப்படும் அந்த நாடகம் முதல்முறையாக 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லுசிலே லார்டெல் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது இருந்தே அதற்கு வரவேற்பு அதிகம். பிறகு கடந்த கோடை காலத்தில் பிராட்வேக்கு அந்த நாடகம் மாற்றப்பட்டது.

நகைச்சுவை நாடகமான இதை கோலே எஸ்கோலா எழுதியுள்ளார். தி நியூயார்க் டைம்ஸ் இதனை, மகிழ்ச்சியற்ற, சுவையற்ற, கட்டுப்பாடற்ற வரலாற்றுக் கற்பனை நாடகம் என்று விமர்சித்துள்ளது.

மேலும் மேரியை தாபம் நிறைந்த பெண்ணாகவும், சுயநலம் மிக்க குடிக்கு அடிமையான ஒருவராகவும் காட்டியுள்ளது. தன்னுடைய கணவன் மற்றும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி ஒரு கபாரே நடனக் கலைஞராக மாற விருப்பம் தெரிவிக்கும் ஒரு நபராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்.

கடந்த மாதம் எஸ்கோலா இந்தப் பாத்திரத்தை பெட்டி கில்பினிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அவரே மேரியாக நடித்தார். மாறுவேடமிட்டு, நீண்ட கருமையான சுருள் முடி கொண்ட 'விக்கை' மாட்டிக் கொண்டு அவர் நடித்தார். கடந்த ஆண்டு என்.பி.ஆருக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் எஸ்கோலா, "ஒரு பெண் அதீதமாக இருக்கலாம். அவருக்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு இடத்தில் ஒரு பாத்திரத்தில் சிக்கிக் கொண்டவராக இருக்கலாம்," என்று விளக்கம் அளித்தார்.

மேரி டாட், ஆப்ரகாம் லிங்கன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லிங்கனின் இல்லற வாழ்க்கையை ஒரு நரகம் போல் மாற்றி பாத்திரங்களை தூக்கி எறியும் ஒரு கோபக்கார மனைவியா அவர்?

நீடிக்கும் கேள்விகள்

தற்செயலாக, எஸ்கோலாவும் பிலிப்ஸும் மேரி லிங்கனை சிறப்பாகப் புரிந்து கொள்வது எப்படி என்று வரலாற்றாசிரியர்களிடையே ஒரு நூற்றாண்டு காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதத்தில் இணைந்துள்ளனர்.

ஒரு கிராமப்புற வழக்கறிஞரான லிங்கனிடம் இருந்த மகத்துவத்தை உணர்ந்து அவரை பெரும் லட்சியங்களை நோக்கி நகர்த்திய துடிப்பு மிக்க பெண்ணா அவர்?

அல்லது, லிங்கனின் இல்லற வாழ்க்கையை ஒரு நரகம் போல் மாற்றி கோபம் ஏற்படும் போது பாத்திரங்களை தூக்கி எறியும் ஒரு கோபக்கார மனைவியா?

1850ஆம் ஆண்டு, தனது மூன்று வயது மகன் எட்டி காச நோயால் இறந்த போது அவர் அடைந்த துக்கத்தில் இருந்து அவர் விடுபட்டாரா? அல்லது 12 ஆண்டுகள் கழித்து அவருடைய இரண்டாவது மகன் வில்லி இறந்த போதா அவருடைய மன நலம் மிகவும் பாதிக்கப்பட்டதா?

முதல் பெண்மணி என்பதால் அவர் லஞ்சம் வாங்கினாரா? அல்லது அதிபர் லிங்கனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி மதிப்புமிக்க நண்பராக செயல்பட்டாரா?

மக்களின் பார்வையில் அவர் பல குணாம்சங்களைக் கொண்டவர். உண்மையில் அவரை யார் ஆய்வுக்குட்படுத்துகின்றரோ அவர்களைப் பொறுத்து மேரி மாறுகிறார், என்று கூறுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜேசன் எமெர்சன்.

"தி மேட்னஸ் ஆஃப் மேரி லிங்கன்" உட்பட, லிங்கன் குடும்பத்தைப் பற்றிய ஏழு புத்தகங்களை எழுதிய எமர்சன், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் லிங்கன் ஆய்வு மையத்திற்காக முன்னாள் முதல் பெண்மணி எழுதிய கடிதங்களை தற்போது தொகுத்து வருகிறார்.

"மேரி ஒரு சிக்கலான நபர். ஆனாலும் மிகவும் மனிதாபிமானமுள்ளவர். லிங்கனைப் போலவே அவரும் தவறுகளைச் செய்தார். இறுதியில் மோசமான முடிவை சந்தித்தவர்," என்று கூறுகிறார் அவர்.

ஆறு வயதில் தன்னுடைய அம்மாவை இழந்து, பல்வேறு இழப்புகளை தொடர்ச்சியாக சந்தித்தவர் அவர். அவருடைய அப்பா மறுமணம் செய்து, அதில் 9 குழந்தைகளுக்கு தகப்பனான பிறகு அந்த கென்டக்கி வீட்டில் அன்பு அரிதான ஒன்றாக மாறிவிட்டது.

மேரி இல்லினாய்ஸின் ஸ்பிரிங்ஃபீல்டிற்கு தப்பிச் சென்று, அங்கு அவரது அக்காவுடன் வசித்து வந்தார். திறமையாக பேசும் திறன் கொண்ட இளம் வயது மேரிக்கு அங்கே ரசிகர்கள் ஏராளம்.

கவிதை, நாடகம், அரசியலில் ஒத்த சிந்தனையைக் கொண்ட ஆணாக அவர் லிங்கனை கண்டுகொண்டார். அவரைவிட 10 வயதில் மூத்தவர். மேலும் ஒரு அடி கூடுதல் உயரத்தைக் கொண்டவர் லிங்கன். சிறு வயதில் இருந்தே அவருக்கு வழங்க மறுக்கப்பட்ட அன்பை லிங்கன் அவருக்கு தருவதற்கு பதிலாக, வீட்டில் இருந்து விலகி பெரும்பாலும் இல்லினாய்ஸ் நீதித்துறை வட்டாரத்தில் பணியாற்றி வந்தார்.

மேரி டாட் லிங்கன்

பட மூலாதாரம், Getty Images

தன் மீது கவனத்தையும் அன்பையும் செலுத்துமாறு கூறிய மேரியின் வேண்டுகோள்களுக்கு பதில் அளிக்க போராடினார் லிங்கன்.

மனரீதியாக அவர்கள் இருவரும் வேறுபட்டவர்கள் என்று கூறும் எமர்சன், வயதடைய அடைய மேரியின் மன நல பிரச்னைகள் மோசம் அடைந்தன. அது பை-போலார் பிரச்னைகளை ஒத்திருக்கிறது என்று கூறுகிறார்.

19-ஆம் நூற்றாண்டில் அதிக அளவு ஆய்வுக்குட்படுத்தப்படாத, முன்பு மேனிக் டிப்ரஸிவ் டிசார்டர் (Manic Depressive Disorder) என்று அழைக்கப்பட்ட மனநல நோயால் மேரி பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை லிங்கன் மற்றும் அவரின் உறவினர்கள் தொடர்பான ஆய்வு மூலம் உறுதிபடுத்திக் கொண்டார் எமர்சன்.

போர்காலத்தின் போது இருவருக்கும் இடையே இருந்த மன அழுத்தம் மிகவும் மோசமானது. மேரி நாகரீக உடை அணிந்து, ஆடம்பரமாக இருக்க விரும்பினார்.

"அவர் தன்னை அமெரிக்காவின் ராணியாக நினைத்துக்கொண்டு, முதல் பெண்மணியாக தன்னுடைய கடமைகளை ஆற்றினார். அவரின் அந்த செயல்பாடே அவருடைய பலவீனமாக இருந்திருக்கலாம்," என்று கூறுகிறார் எமர்சன். 1862-ஆம் ஆண்டு அவருடைய மகன் வில்லி டைஃபாய்டில் இறந்து போக, அவர் பல வாரங்களாக தன்னுடைய படுக்கையறையை விட்டு வெளியே செல்லாமல் துக்கத்தில் மூழ்கி இருந்தார்.

பெரும்பாலும் கட்டுப்பாடற்று இருந்த காரணத்தால், 1882-ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த பிறகும் கூட அவரைப் பற்றி மோசமான செய்திகள் அவரை பின் தொடர்ந்திருக்கலாம். லிங்கனோடு இணைந்து சட்ட பயிற்சிகளை மேற்கொண்ட வில்லியம் ஹெர்ண்டோன் மேரி குறித்து மிகவும் மோசமான கருத்துகளை சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 1889-ஆம் ஆண்டு 'ஹெர்ன்டன்ஸ் லிங்கன்: தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் எ கிரேட் லைஃப்' என்ற புத்தகத்தை இணைந்து எழுதிய ஹெர்ண்டோன் மேரியை வெறுத்தார். மேரியும் அவ்வாறே. லிங்கனின் காலத்தில் இருவரும் அவரின் கவனத்தைப் பெற போராட்டம் நடத்தினர். ஆனால் தனிப்பட்ட முறையில் ஹெர்ண்டோன் அவரை "ஷீ-வுல்ஃப்" (பெண் ஓநாய்) என்று அழைத்தார்.

மேரி டாட், ஆப்ரகாம் லிங்கன்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, போர்காலத்தின் போது இருவருக்கும் இடையே இருந்த மன அழுத்தம் மிகவும் மோசமானது

புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் மேரி

பல ஆண்டுகளாக, துறவியை மணந்த மோசமான பெண்தான் இந்த மேரி என்ற ஹெண்டோனின் விளக்கம் நீடித்திருந்தது. ஆனால் 1980கள் மற்றும் 1990களில், வரலாற்றில் பெண்களின் பங்கை அறிஞர்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யத் தொடங்கியபோது, ​​பிரச்னையில் இருந்த முதல் பெண்மணி குறித்த புதிய கண்ணோட்டம் பிறந்தது.

மேரிலாந்தின் கௌச்சர் கல்லூரியின் வரலாற்றாசிரியரான ஜீன் பேக்கர், 'மேரி டாட் லிங்கன்: எ பயோகிராஃபி' என்ற புத்தகத்தை 1987-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அதில் லிங்கனின் திருமணம் அடிப்படையில் சகிப்புத்தன்மை மற்றும் அன்பானது. மேரி தனது கணவரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்கு வகித்து, அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி ஊக்கமளித்தார் என்று குறிப்பிட்டிருப்பார்.

புகழ்பெற்ற லிங்கன் அறிஞர் மைக்கேல் பர்லிங்கேம் தனது 2021 ஆம் ஆண்டு எழுதிய "ஆன் அமெரிக்கன் மேரேஜ்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஆபிரகாம் லிங்கன் அண்ட் மேரி டாட்" என்ற புத்தகத்தில் மேலே கூறிய கண்ணோட்டத்தில் இருந்து மாறுபட்டிருக்கும்.

மேரி ஆபிரகாமை துன்புறுத்தியிருப்பார் என்று பர்லிங்கேம் நம்புகிறார். சில நேரங்களில் உடல் ரீதியாகவும் வன்முறைக்கு ஆபிரகாம் ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். ''தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி லிங்கனை அவர் கட்டாயப்படுத்தியிருக்கலாம். ஒரு நாள் அறிவிப்பின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒன்பது மாதத்திற்குள் அவர்களின் முதல் குழந்தை பிறந்தது. அமெரிக்க அரசாங்க ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மேரி வெள்ளை மாளிகையில் இருந்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிகளையும் மன்னிப்புகளையும் விற்றார்'' என பர்லிங்கேம் உறுதியாக நம்புகிறார். இருப்பினும், லிங்கனின் எழுச்சிக்கு மேரிதான் காரணம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஹிஸ்டரி அன்பிளக்டு என்ற பாட்காஸ்டில் பேசிய அவர், "இப்படி கணவனை தூண்டிவிடும் ஒரு துடிப்புமிக்க பெண்ணை லிங்கன் மணந்திருக்காவிட்டால் அவர் இத்தனை சாதனைகளை நிகழ்த்தியிருக்கமாட்டார்," என்று கூறினார்.

சிக்கலான மனிதர்களை சமாளிக்கும் லிங்கனின் திறன் அவருடைய ஆட்சிகாலத்தில் வெளிப்படையாக தெரிந்தது. அந்த திறன் அவருடைய வீட்டில் மெருகூட்டப்பட்டிருக்கக் கூடும் என்று பர்லிங்கேம் நம்புகிறார்.

டேனியல் டே லூயிஸ் லிங்கனாகவும், சாலி ஃபீல்ட் மேரியாகவும் நடித்த 2012-ஆம் ஆண்டில் வெளியான லிங்கன் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். அதற்காக அவர் ஆலோசனைப் பெற்ற ஏராளமான நபர்களில் பர்லிங்கேமும் ஒருவர்.

அந்த படத்தில் மேரி குறித்து நல்லவிதமாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கணவர் மனைவியாக இருவரும் நல்ல பிணைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனாலும் ஸ்பீல்பெர்கும் திரைக்கதை ஆசிரியர் டோனி குஷ்ணரும் பர்லிங்கேமின் புத்தகங்களை நன்றாக படித்திருக்கிறார்கள் என்று உணர்ந்திருக்கிறார் பலிங்கேம்.

அந்த படத்தில் லிங்கன், மேரி கதாப்பாத்திரத்தில் நடித்த நட்சத்திரங்கள், ஒரு காட்சியில் லிங்கனின் மூத்த மகன் ராபர்ட் ராணுவத்தில் சேர்க்கப்படுவது குறித்து ஏற்படும் விவாதத்தில் நடித்திருப்பார்கள்.

லிங்கன் மகனின் விருப்பத்திற்கு ஆதரவு அளிப்பார். மேரியோ லிங்கனுக்கு ராபர்ட் மீது பாசமே இல்லை என்பார்.

"உனக்கு எப்போதும் வருத்தத்தையே தந்த ஒரு திருமணத்தில் சிக்க வைக்க காரணமாக இருந்த ராபர்ட்டை நீ எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறாய்," என்று மேரி பேசுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

வெறுக்கப்பட்டதைக் காட்டிலும் பரிதாபமிக்கவராகவே மேரி டாட் பார்க்கப்படுகிறார் என்று பர்லிங்கேம் கூறுகிறார். ஏன் என்றால் அவர்களின் நான்கு மகன்களில் மூன்று மகன்கள் இறந்துவிடுகின்றனர். அவருடைய கணவர் அவர் கண் முன்னே கொல்லப்பட்டிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)