மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை

பட மூலாதாரம், DR. KAMAL GOKHALE
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
1659 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜிக்கு இரண்டு வயது இருந்தபோது அவரது தாயார் காலமானார். சம்பாஜி தனது தந்தை சிவாஜி மற்றும் பாட்டி ஜீஜாபாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.
ஔரங்கசீப், சிவாஜியை ஆக்ரா சிறையில் அடைத்தபோது சம்பாஜி அவருடன் இருந்தார். சிவாஜி அங்கிருந்து தப்பிச் சென்றபோதும் அவர் உடன் இருந்தார்.
சிவாஜி அவருக்கு கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு சமஸ்கிருத மொழியில் ஆர்வம் இருந்தது. பின்னர் அந்த மொழியில் அவர் புலமை பெற்றார்.
1670 முதல் சிவாஜி சம்பாஜியை முக்கியமான நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தத் தொடங்கினார். சிவாஜி அரசரானபோது இயல்பாகவே சம்பாஜி அவரது வாரிசாக பார்க்கப்பட்டார். ஆனால் இதற்கிடையில் சிவாஜியின் குடும்பத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது.
- வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு
- டெல்லி அரியணைக்காக அக்பருக்கு எதிராகவே கிளர்ச்சி செய்த மகன் ஜஹாங்கீர் - என்ன நடந்தது தெரியுமா?
- அக்பரின் படைகளை திணறடித்த 'பெண் சுதந்திரத்தின் சின்னம்' - யார் இந்த சந்த் பீபி? என்ன செய்தார்?
- ஹஜ் சென்ற முதல் இந்திய பெண் - 3 தலைமுறை முகலாய பேரரசர்களுடன் வாழ்ந்த இவர் யார்?

வைபவ் புரந்தரே தனது 'சிவாஜி இண்டியாஸ் கிரேட் வாரியர் கிங்' என்ற புத்தகத்தில், "சிவாஜியின் மனைவிகளில் ஒருவரான சொய்ராபாய் 1670 பிப்ரவரி 24ஆம் தேதி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவருக்கு ராஜாராம் என்று பெயரிடப்பட்டது," என்று எழுதுகிறார்.
"சிவாஜியின் முடிசூட்டு விழா நடந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் சம்பாஜிக்கு பதிலாக தனது மகனை சிவாஜியின் வாரிசாக ஆக்க வேண்டும் என்று சொய்ராபாய் விரும்பினார்."
"சிவாஜி எட்டு திருமணங்கள் செய்துகொண்டபோதிலும் அவருக்கு இந்த இரண்டு மகன்கள் மட்டுமே இருந்தனர். இவற்றில் பல திருமணங்கள் அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டவை. அவருக்கு ஆறு மகள்களும் இருந்தனர். செல்வாக்குமிக்க மராட்டிய குடும்பங்களில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பாஜி சிவாஜியை விட்டு விலகினார்

பட மூலாதாரம், DR. KAMAL GOKHALE/CONTINENTAL PUBLICATION
1676ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி ஒரு மாதம் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது அவர் இறந்துவிட்டார் என்று தெற்கில் சில வட்டாரங்களில் ஒரு வதந்தி பரவியது.
இந்த நேரத்தில் சிவாஜியின் குடும்பத்தில் எழுந்துள்ள கடுமையான கருத்து வேறுபாடுகள் பற்றிய செய்திகளும் பரவ ஆரம்பித்தன.
"அந்த நேரத்தில் சம்பாஜியின் மோசமான நடத்தை பற்றிய செய்திகளும் வலுப்பெறத் தொடங்கின. 1674இல் சிவாஜியின் முடிசூட்டுக்குப் பிறகு இந்த செய்திகள் அதிகமாக வரத் தொடங்கின. மக்களின் பார்வையில் சம்பாஜியின் பிம்பம் சரியவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த செய்தியை பரப்புவதில் அவரது சித்தி சொய்ராபாய்க்கு பங்கு இருந்தது," என்று கமல் கோகலே தனது 'சிவபுத்ர சம்பாஜி' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"சிவாஜியின் குடும்பத்தில் பதற்றம் தோன்ற ஆரம்பித்தது உண்மைதான். குடும்பத்தில் உள்ள தனது நிலை குறித்து சம்பாஜி மிகவும் அதிருப்தி அடைந்தார்."
அவரது மிகப்பெரிய ஆதரவாளரான அவரது பாட்டி ஜீஜாபாய் 1674 ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார்.
1678 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி சம்பாஜி தனது தந்தையை மனதளவில் காயப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு நடவடிக்கையை எடுத்தார்.
அவர் சதாராவை விட்டு வெளியேறி பெட்காவுக்கு சென்றார். அங்கு அவர் முகலாய கவர்னர் திலேர் கானுடன் சேர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 21.
அமைதியில்லாமல் தவித்த சம்பாஜி

பட மூலாதாரம், Getty Images
சம்பாஜி சிவாஜியை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என்று அப்போது கிடைத்த ஆதாரங்கள் தெளிவாக விளக்கவில்லை.
விஷ்வாஸ் பாட்டீல் சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றில்,"திலேர் கானின் அனுபவமிக்க கண்கள் இளம் இளவரசரின் முகத்தில் காணப்பட்ட சோகத்தின் வெளிப்பாடுகளைப் படித்தன. அவர் சம்பாஜிக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக 'ராய்கட்டில் நீங்கள் எப்படி அவமதிக்கப்பட்டீர்கள் என்பது பற்றி உங்கள் சகோதரர் திலேருக்கு முழுமையாகத் தெரியும்' என்று சொன்னார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"யானை மீது சவாரி செய்த சம்பாஜி, பகதூர்கர் கோட்டைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். ஆனாலும் சம்பாஜியின் மனதில் நெருடல் இருந்தது."
திலேர் கான் சாம்பாஜியை விட நாற்பது வயது மூத்தவர். ஆனாலும் அவர் இளம் இளவரசருடன் மிகவும் நட்பாக நடந்து கொண்டார்.
திலேர் கான் மீதான சம்பாஜியின் அதிருப்தி

பட மூலாதாரம், PHAS/Universal Images Group via Getty Images
சம்பாஜியை தங்கள் பக்கம் வைத்திருப்பது முகலாயர்களுக்கு ஒரு பெரிய போராட்டமாக இருந்தது. விரைவிலேயே அவருக்கு திலேர் கானுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது.
1679 ஏப்ரலில் திலேர் கான் பூபால்கர் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியபோது சம்பாஜி அவருடன் இருந்தார். திலேர் கான் கோட்டையில் இருந்த மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார்.
ஜதுநாத் சர்க்கார் தனது 'சிவாஜி அண்ட் ஹிஸ் டைம்ஸ்' புத்தகத்தில், "திலேர் கான் கோட்டையில் உயிர் பிழைத்த 700 பேரின் ஒரு கையை துண்டித்தார். கிராமத்தில் வாழ்ந்த மக்களை அடிமைகளாக்கிக் கொண்டார்," என்று எழுதியுள்ளார்.
திலேர் கான் ஆதில் ஷாஹிக்கு எதிராகவும் தனது சண்டையை தொடங்கினார். ஆதில் ஷாஹியின் தளபதி சித்தி மசூத், பீஜாபூரை பாதுகாக்க சிவாஜியிடம் உதவி கோரினார்.
சேதுமாதவ் ராவ் பகாடி தனது 'சத்ரபதி சிவாஜி' என்ற புத்தகத்தில், "சிவாஜி உடனடியாக 10 ஆயிரம் வீரர்களையும், தானியங்கள் நிரம்பிய 10 ஆயிரம் மாட்டு வண்டிகளையும் அனுப்பினார். அழுத்தத்தைக் குறைக்க முகலாய பகுதி ஜால்னாவைத் தாக்கி அதைக் கைப்பற்றினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"இதன் காரணமாக திலேர் கான் பீஜாப்பூரின் முற்றுகையை முடித்துக்கொண்டார். அங்கிருந்து திரும்பும் போது திலேர் கான், டிகோட்டா நகரைத் தாக்கி நகரின் மூவாயிரம் பொதுமக்களை கைது செய்தார். அதன் பிறகு அவர் அட்டானிக்குச் சென்று அங்குள்ள மக்கள் மீது மேலும் கொடுமைகளை இழைத்தார்," என்று அவர் மேலும் எழுதுகிறார்.
சிவாஜியின் தாராளவாத மக்கள் கொள்கையை பார்த்து வளர்ந்த சம்பாஜிக்கு, திலேர் கானின் கொடூரமான நடத்தை பிடிக்கவில்லை.
முகலாயர்களுடனான தனது தொடர்பு நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார்.
சம்பாஜி திரும்பினார்

பட மூலாதாரம், RANJIT DESAI
"1679 நவம்பர் 20 ஆம் தேதியன்று சம்பாஜி தனது மனைவி யசுபாயுடன் முகலாய முகாமில் இருந்து தப்பிச்சென்றார். அவரது மனைவி ஆண் வேடமிட்டிருந்தார். சம்பாஜியுடன் 10 வீரர்கள் இருந்தனர்." என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
"குதிரையில் சவாரி செய்து அவர் மறுநாள் பீஜாப்பூரை அடைந்தார். அங்கு மசூத் அவரை வரவேற்றார். டிசம்பர் 4 ஆம் தேதி அவர் பன்ஹாலாவை அடைந்தார். தந்தையும் மகனும் அங்கு சந்தித்தனர்."
சிவாஜி அவரை அன்புடன் வரவேற்றார். ஆனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான விரிசல் இறுதிவரை நீங்கவில்லை. சுமார் ஒரு வருடம் நீடித்த சம்பாஜியின் கிளர்ச்சி, மராட்டியப் பேரரசில் கணிசமான கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்த சந்திப்புக்கு பிறகும் சிவாஜியின் வாரிசுப் பிரச்னை தீரவில்லை.
கிருஷ்ணாஜி அனந்த் சபாசாத், சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றான 'சபாசத் பக்கர்' என்ற புத்தகத்தில், "நீ தனி நாடு உருவாக்க நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும். எனக்கு இரண்டு மகன்கள், நீ சம்பாஜி மற்றும் ராஜாராம் என்று சிவாஜி சொன்னார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"எனது சாம்ராஜ்யத்தை இரண்டாகப் பிரிக்கிறேன். ஒன்று துங்கபத்ரா முதல் காவேரி வரையிலும் இருக்கும். மற்றொன்று துங்கபத்ராவின் மறுபுறத்தில் கோதாவரி நதி வரை செல்லும். நான் கர்நாடகாவின் நிலப்பரப்பை உனக்கும் மீதிப் பகுதியை ராஜாராமுக்கும் தருகிறேன் என்று சிவாஜி குறிப்பிட்டார்."
சிவாஜியின் மறைவுக்குப் பிறகு சம்பாஜி நிர்வாகத்தைக் கைப்பற்றினார்

பட மூலாதாரம், Getty Images
1680 ஏப்ரல் 3 ஆம் தேதி சிவாஜி காலமானார். அப்போது அவருக்கு 53 வயதுகூட பூர்த்தியாகவில்லை. சிவாஜி மரணப் படுக்கையில் இருந்தபோது சம்பாஜிக்கு இதுபற்றித் தெரிவிக்கப்படவில்லை.
"சிவாஜியின் உடல்நிலை குறித்து சம்பாஜி அறிந்ததும் அவர் உடனடியாக தனது ஒட்டகத்தில் ஏறி பன்ஹாலாவிலிருந்து ராய்கட்-க்கு புறப்பட்டார்," என்று டென்னிஸ் கின்கெய்ட், சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார்.
"வெப்பமான பருவநிலையில் இரவும் பகலும் பயணம் செய்து அவர் ராய்கட் கோட்டையை அடைந்தார். ஆனால் அதற்குள் அவரது தந்தை இறந்துவிட்டார். கோபத்தில் அவர் தனது ஒட்டகத்தின் தலையை வெட்டினார். பின்னர் அவர் அதே இடத்தில் தலையற்ற ஒட்டகத்தின் சிலையை அமைக்க உத்தரவிட்டார்."
சம்பாஜி சிவாஜியின் வாரிசானார். மன்னரான ஒரு வருடம் கழித்து அவர் தனது சித்தி சொய்ராபாய்க்கு மரண தண்டனை விதித்தார். 'தனது கணவர் சிவாஜிக்கு விஷம் கொடுத்ததாக' அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
"அநேகமாக இது பொய் குற்றச்சாட்டாக இருக்கலாம். ஏனெனில் தன் மகனை சிவாஜியின் வாரிசாக ஆக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக சம்பாஜி அவரை பழிவாங்க விரும்பினார்," என்று ஜதுநாத் சர்கார் குறிப்பிடுகிறார்.
ஔரங்கசீப்பின் படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பாஜி

பட மூலாதாரம், Penguin India
1681 மற்றும் 1682 க்கு இடையில் ஔரங்கசீப் தென்னிந்தியாவை கைப்பற்றும் நடவடிக்கையை தொடங்கினார். அனைத்து சவால்களுக்கும் முடிவுகட்ட முன்முயற்சி எடுத்தார்.
பீஜாப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றி அங்குள்ள அரசர்களை சிறையில் அடைத்தார்.
1689 இல் சம்பாஜியும் ரத்னகிரியில் உள்ள சங்கமேஸ்வரில் சிறைபிடிக்கப்பட்டார்.
"சம்பாஜி பகதூர்கரில் உள்ள முகலாய முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அவர் நகரம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார். சம்பாஜிக்கு கோமாளியின் ஆடைகள் அணிவிக்கப்பட்டன," என்று விஷ்வாஸ் பாட்டீல் எழுதுகிறார்.
"ஒரு காலத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சம்பாஜி குற்றவாளியைப் போல ஒரு சிறிய ஒல்லியான ஒட்டகத்தின் மீது அமர வைக்கப்பட்டார். கைதிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மரத் தொப்பி அவரது தலையில் வைக்கப்பட்டது," என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
"அவரது கைகளை மேலே தூக்கி ஒரு மரப் பலகையில் கட்டினர். இருபுறமும் பார்க்கமுடியாதபடி அவரது கழுத்தும் மரப்பலகையில் கட்டப்பட்டது."
இந்த ஊர்வலம் மெதுவாக திவான்-இ-காஸை அடைந்தது. தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் ஔரங்கசீப் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றார்.
"சிவாஜியின் மகன் கைதியாக தன் முன் வருவதைக் கண்டவுடன் ஒளரங்கசீப் மெக்காவின் திசையில் தரையில் விழுந்து வணங்கினார்," என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
"ஔரங்கசீப் முன்னிலையில் தலை குனிந்து நிற்கும்படி சம்பாஜி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் சம்பாஜி அதை ஏற்க மறுத்தார். ஔரங்கசீப்பை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். அன்றிரவே சம்பாஜியின் கண்களை வெளியே எடுக்குமாறு ஔரங்கசீப் உத்தரவிட்டார்."
இந்த நிகழ்வை விவரித்துள்ள டென்னிஸ் கின்கெய்ட்,"ஒளரங்கசீப் அவரை இஸ்லாத்திற்கு மாறுமாறு உத்தரவிட்டார். ஆனால் சம்பாஜி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். ஒளரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அவரது நாக்கு துண்டிக்கப்பட்டது," என்று எழுதியுள்ளார்.
"இதற்குப் பிறகு மன்னரின் உத்தரவு அவரிடம் மீண்டும் கூறப்பட்டது. ஒரு காகிதத்தை தருமாறு கேட்ட சம்பாஜி 'அரசர் தனது மகளை எனக்குக் கொடுத்தாலும் நான் இதை செய்ய மாட்டேன்' என்று பதில் எழுதினார்."
சம்பாஜியின் மரணம்
சிவாஜியின் மகன் சம்பாஜி ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கண்பார்வை பறிக்கப்பட்ட பதினைந்து நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளானார்.
"1689 மார்ச் 11 ஆம் தேதி சம்பாஜியின் அனைத்து உறுப்புகளும் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு இறுதியில் அவரது தலை துண்டிக்கப்பட்டது," என்று டென்னிஸ் கின்கெய்ட் மேலும் எழுதுகிறார்.
அவரது துண்டிக்கப்பட்ட தலை தெற்கின் முக்கிய நகரங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
மறுபுறம் சிவாஜியின் இளைய மகன் ராஜாராம் அரசனாக்கப்பட்டார். முகலாயர்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை.
முகலாயர்கள் சம்பாஜியின் மனைவி மற்றும் மகன் ஷாஹுவையும் சிறைபிடித்தனர் என்று வைபவ் புரந்தரே குறிப்பிடுகிறார்.
ராஜாராம் தனது மனைவி தாராபாயுடன் செஞ்சி கோட்டையில் தஞ்சம் புகுந்தார். இறுதியாக 1697 இல் இருவரும் செஞ்சி கோட்டையிலிருந்து தப்பித்துச்செல்வதில் வெற்றி பெற்றனர். இதற்குப் பிறகு அவர் ஔரங்கசீப் மீது பதில் தாக்குதல் தொடுத்தார்.
ராஜாராம் 1699 இல் தனது 30 வது வயதில் காலமானார். ஆனால் அவரது மனைவி தாராபாய் ஒளரங்கசீப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












