டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?

ஆஸ்திரேலியா 'டீப் ஃபேக்- மோசடி : பெண்ணுக்கு நெருங்கிய நண்பர் செய்த துரோகம்

பட மூலாதாரம், Nikki Short/BBC

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய பெண்ணான ஹன்னா கிரண்டி தனது டீப் பேக் புகைப்படங்கள் இருந்த இணையதளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்
    • எழுதியவர், டிஃப்பானி டர்ன்புல்
    • பதவி, பிபிசி நியூஸ், சிட்னி

எச்சரிக்கை : விரும்பத்தகாத மொழி மற்றும் பாலியல் வன்முறை பற்றிய விவரிப்புகள் உள்ளன

பிப்ரவரி மாதத்தின் ஓர் இதமான இரவில் சிட்னியில் வாழும் ஹன்னா கிரண்டியை அச்சுறுத்தும் ஒரு மின்னஞ்சல் அவரது இன்பாக்ஸுக்கு வந்தது.

"இது உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டியது என்று நான் கருதுவதால், உங்களுக்குத் தொடர்ந்து இமெயில் அனுப்பிக் கொண்டிருப்பேன்" என அந்தப் பெயர் குறிப்பிடாத அனுப்புநர் எழுதியிருந்தார்.

இமெயிலின் உள்ளே ஓர் இணைய முகவரியும் கொட்டை எழுத்துகளில் "இதில் கவலையளிக்கும் விஷயங்கள் உள்ளன" என்ற எச்சரிக்கை செய்தியும் இருந்தன.

அது ஒரு மோசடியாக இருக்கலாம் என்ற அச்சத்தால் அவர் ஒரு கணம் தயங்கினார். ஆனால், உண்மை அதைவிட மிக மோசமாக இருந்தது.

அந்த லிங்கில் பக்கம் பக்கமாக ஹன்னாவின் போலி ஆபாச புகைப்படங்களும், விரிவான வன்புணர்வு கற்பனைகளும், மோசமான அச்சுறுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"நான் அதில் கட்டிப்போடப் பட்டிருந்தேன். பயந்துபோய் இருந்தேன். கண்ணீரோடு இருந்தேன், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தேன்" என்று அவர் நினைவுகூர்கிறார்.

சில மோசமான படங்களின் மீது ஹன்னாவின் முழுப் பெயர் எழுதப்பட்டிருந்தது. அவரது இன்ஸ்டாகிராம் முகவரியும், அவர் தங்கியிருந்த புறநகர்ப் பகுதியின் பெயரும் அங்கு பதிவிடப்பட்டிருந்தது. அவரது செல்போன் எண்ணும் பகிரப்பட்டது அவருக்குப் பின்னர் தெரிய வந்தது.

ஒரு திரைப்படக் கதையைப் போல, அந்த மின்னஞ்சல் ஹன்னாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அரங்கேறக் காரணமாக அமைந்தது.

அவரே அவரது பிரச்னைக்குத் துப்பறிவாளராக மாறி அவருக்கு நெருக்கமான ஒருவர் தனக்குச் செய்த துரோகத்தைக் கண்டுபிடித்தார். அதன் விளைவாக, அவர் தனது வாழ்க்கையையும் ஆஸ்திரேலிய சட்ட வரையறைகளையும் மாற்றிய ஒரு வழக்கையும் தொடுத்தார்.

'பெரும் அதிர்ச்சி'

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, ஹன்னா, கிரிஸ் மற்றும் ஆண்டி(வலது) சிட்னி பல்கலைக்கழக வளாக பாரில் பணிபுரிந்தபோது சந்தித்தனர்.

அந்த இணையதள பக்கத்திற்கு ஹன்னாவின் அழிப்பு எனப் பொருள்படும்படி "தி டிஸ்ட்ரக்‌ஷன் ஆஃப் ஹன்னா', எனப் பெயரிடப்பட்டு இருந்தது. அதற்கு மேலே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது. அதில் நூற்றுக்கணகான மக்கள் அவரை எவ்வித துன்புறுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.

அதற்குக் கீழே அவருடைய முகம் ஒட்டப்பட்ட 600க்கும் மேற்பட்ட மோசமான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுக்கு இடையில் முதுகுதண்டை சில்லிடச் செய்யும் மிரட்டல்கள் இடம்பெற்றிருந்தன.

முக்கிய சுவரொட்டியில் "நான் இந்த வேசியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

"அவளுடைய வீட்டில் ஒளிந்துகொண்டு அவள் தனியாக இருக்கும்வரை காத்திருந்து அவளைப் பின்புறமிருந்து பிடித்து... அவள் தப்பிக்கப் போராடுவதை உணர வேண்டும்."

இது நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் 35 வயதான அவருக்கு, அந்த இணைய பக்கத்தைத் திறந்தபோது அவரும் அவரது 33 வயதான துணைவர் கிரிஸ் வென்ச்சுராவும் உணர்ந்த அந்த அதிர்ச்சி இன்னமும் நினைவில் இருந்தது.

"அது உடனே உங்களிடம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும்," என்று தனது வீட்டின் வரவேற்பறையில் பெப்பர்மின்ட் தேநீரைப் பருகியபடி ஹன்னா கண்கள் விரிய என்னிடம் தெரிவித்தார்.

அந்த இணையதளத்தை மேலும் பார்த்தபோது, கிரிஸ் அவர்களது நெருங்கிய நண்பர்களின் புகைப்படங்களையும், சிட்னியை சேர்ந்த மேலும் 60 பெண்களின் புகைப்படங்களையும் பார்த்தார்.

இந்த டீப் ஃபேக் புகைப்படங்களை உருவாக்குவதற்கான புகைப்படங்கள் அந்தப் பெண்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதை அவர்கள் விரைவில் புரிந்துகொண்டனர். அப்போது மர்மம் விலகியது: இது அவர்கள் அனைவருக்கும் தெரிந்த யாரோ ஒருவர் செய்தது.

அந்த ஒருவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் வெறியுடன் ஹன்னாவும் கிரிஸும் அந்தப் பெண்களை அடையாளம் காண்பது, அவர்களுடைய சமூக ஊடக நண்பர்களில் பொதுவானவர்களைக் கண்டுபிடிப்பது என ஆதாரங்களைச் சேகரிப்பதில் பல மணிநேரத்தைச் செலவழித்தனர்.

நான்கு மணிநேரத்திற்குள் அவர்கள் சந்தேகத்திற்குரிய 3 பேர் கொண்ட பட்டியலை உருவாக்கியிருந்தனர்.

அந்தப் பட்டியலில் பல்கலைக்கழகத்தில் அவர்களுடைய நெருங்கிய நண்பராக இருந்த ஆன்ட்ரு ஹேய்லெர் பெயர் இருந்தாலும், அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்கள் மூவரும் பல்கலைக் கழகத்தில் இருந்த பாரில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர். அங்கு பணியாற்றியவர்கள் பொதுவாக ஆழமான நட்பைக் கொண்டிருந்தனர்.

அதில் மேற்பார்வையாளராக இருந்த ஆண்டி அந்தக் குழுவை ஒற்றுமையாக வைத்திருக்கும் பசையாகப் பார்க்கப்பட்டார்.

அவர் அக்கறையும், அன்பும் நிறைந்தவராக இருந்தார் என்கிறார் ஹன்னா. ஒரு பாரில் பெண்களைப் பாதுகாக்கக்கூடிய, தனது பெண் தோழிகள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்யக்கூடிய ஒரு நபராக ஆண்டி இருந்ததாக ஹன்னா கூறுகிறார்.

அவர்கள் அனைவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டதுடன், விடுமுறைகளை ஒன்றாகக் கழித்து, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து அன்பு செலுத்தினர். "அவரை மிக நெருங்கிய நண்பராக நினைத்திருந்தேன்," என்கிறார் ஹன்னா.

"அவர் மிக நல்ல மனிதர் என்று நாங்கள் மிகவும் உறுதியாக நம்பினோம்."

ஆனால் அவர்கள் பட்டியலைச் சுருக்கிக் கொண்டே வந்தபோது, இறுதியில் ஆண்டியின் பெயர் மட்டுமே மிச்சமிருந்தது.

பயமும், தாமதங்களும்

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, ஹன்னாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை ஆண்டி டிஜிட்டல் முறையில் எடிட் செய்து பதிவு செய்திருந்தார்

அடுத்த நாள் காலையில் ஹன்னா காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அவரது அதிர்ச்சி மற்றும் திகிலுக்கு இடையில் அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது.

"அவர்கள் அன்று பிற்பகலே அவரைக் கைது செய்வார்கள் என நினைத்தோம்," என்று விரக்திப் புன்னகையுடன் சொல்கிறார் கிரிஸ். ஆனால் அங்கு தாங்கள் அலட்சியத்தையே எதிர்கொண்டதாகக் கூறினார் ஹன்னா.

நியு சௌத் வேல்ஸ் காவல் அதிகாரி ஒருவர் 'ஆண்டிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்' என்று தன்னையே கேட்டதாகக் கூறுகிறார் ஹன்னா. இதை நிறுத்துமாறு ஆண்டியிடம் கேட்குமாறும் அவர்கள் ஹன்னாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள். அதோடு, ஹன்னாவை மோசமான ஆடையில் சித்தரிக்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டி, அதில் அவர் அழகாக இருப்பதாக அந்த அதிகாரி கூறியதாகவும் ஹன்னா தெரிவித்தார்.

ஹன்னாவின் வழக்கு தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவிக்க நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

அவருடைய புகார் காவல்துறையால் எதிர்கொள்ளப்பட்டவிதம் "ஒன்றுமில்லாததை பெரிய பிரச்னை ஆக்குவது" போன்ற உணர்வை உண்டாக்கியதாக ஹன்னா கூறுகிறார். "என்னைப் பொறுத்தவரை இது என் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் ஒன்றாகத் தோன்றியதாக" ஹன்னா தெரிவித்தார்.

காவல் துறையினர் தனக்கு உதவுவார்கள் என்று அவருக்கு இருந்த நம்பிக்கை விரைவில் குன்றியது.

தாமதங்களுக்கு இடையில் அவர் ஆஸ்திரேலியாவின் இ-பாதுகாப்பு ஆணையரை அணுகினார். ஆனால் ஒரு முறைப்படுத்தும் அமைப்பு என்ற அதிகார வரம்புக்குள் அதனால் செய்ய முடிந்ததெல்லாம், இணையத்தில் இருந்து அந்தப் பகுதிகளை நீக்க உதவ முன்வந்ததுதான்.

விரக்தியில் அந்தத் தம்பதி, ஒரு வழக்கறிஞரை நியமித்து, ஒரு தடயவியல் ஆய்வாளரின் சேவைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கிடையில், ஆண்டிக்கு விஷயம் தெரிந்துவிடாமல் இருக்கவும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவும், அவர்கள் தங்களது நடவடிக்கைகளைச் சுருக்கிக்கொண்டனர்.

"எங்கள் உலகம் மேலும் சிறிதானது. நாங்கள் யாருடனும் பேசவில்லை, வெளியே செல்வதுமில்லை" என்றார் ஹன்னா.

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், Getty Images

அவர்களின் வெற்றிடத்தை அதீத பயமும் தனிமையும் ஆக்கிரமித்தன.

"அவர் இதையெல்லாம் செய்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளவே, அவர் மீதான எங்கள் நம்பிக்கையை முற்றாக மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே அவர் உங்களை வன்கொடுமை செய்யவோ, உங்களைக் காயப்படுத்தவோ அவர் வருகிறார் என்பது சாத்தியமற்ற கற்பனையல்ல."

ஹன்னா-கிறிஸ் தம்பதி, தங்கள் வீட்டைச் சுற்றி முழுமையாக கேமராக்களை பொருத்தியதுடன், இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள உதவும் லொகேஷன் டிராகிங்கையும் இயக்கி வைத்தனர். அவரது மூச்சு வேகம் அதிகரித்தாலோ அல்லது முற்றாக நின்றுவிட்டாலோ அது யாரோ ஒருவருக்குத் தெரியும் வகையில் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் கடிகாரத்தை ஹன்னா 24 மணிநேரமும் அணிந்துகொள்ளத் தொடங்கினார்.

"யாராவது உள்ளே வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பதையே நான் நிறுத்திக்கொண்டேன்," என விளக்குகிறார் ஹன்னா.

"எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், படுக்கையை ஒட்டியிருக்கும் இரண்டு மேசைகளிலும் கத்திகளை வைத்துக் கொண்டு தூங்கத் தொடங்கினோம்."

காவல்துறையால் கைவிடப்பட்டதாக உணர்ந்த கிறிஸ், ஹன்னாவுக்கு எதிராக அந்த இணையதளத்தில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களைக்கூட உன்னிப்பாகக் கவனித்து வந்தார். தங்களுடைய விசாரணையைத் தொடர வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட மற்ற நண்பர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இது அந்த இணைக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. "அவர்களிடம் சொல்லாமல் இருப்பது சரிதானா என்பது குறித்து எங்களுக்கு உள்ளேயே போராட்டம் நடந்துகொண்டிருந்தது," என்கிறார் ஹன்னா.

ஒரு கட்டத்தில் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, விரிவான தடயவியல் அறிக்கைக்காக ஹன்னாவும் கிரிஸும் மேலும் அதிக தொகையை திரட்டியதுடன், காவல்துறையைக் கண்காணிக்கும் அமைப்பிடம் முறையான புகார் தாக்கல் செய்யப் போவதாகவும் எச்சரித்தனர். தங்களைக் காத்துக் கொள்ளவும், ஆண்டியை தடுத்து நிறுத்தவும் 20,000 ஆஸ்திரேலிய டாலர்களை (10,200 பவுண்டுகள் அல்லது 12,400 அமெரிக்க டாலர்கள்) அவர்கள் செலவிட்டிருந்தனர்.

இறுதியில் ஒரு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் காவல்துறையினர் ஆண்டியின் வீட்டைச் சோதனையிட்டனர். அவர் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், Nikki Short/BBC

படக்குறிப்பு, ஆண்டி அக்கறையுள்ளவராகவும், அபாயமற்றவராகவும் தோன்றியதாக ஜெஸ் சொல்கிறார்

முதலில் நிம்மதியடைந்தாலும், இந்த தகவலைத் தெரிவிக்க தனது நண்பர்களை அச்சத்துடனேயே தொடர்பு கொண்டார் ஹன்னா.

ஆண்டி தனது புகைப்படத்திற்குச் செய்தது குறித்து அறிந்த தருணத்தை நினைவு கூறும் ஜெஸிகா ஸ்டூவர்ட் "தனது வயிற்றில் புளியைக் கரைத்தது" என்று சொல்கிறார்.

"நான் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன், ஆனால் அதை முழுமையாகப் புரிந்துகொண்டதாக நினைக்கவில்லை."

குடும்பத்தில் ஒருவர் போல் நேசித்த ஒரு நண்பர்தான் அந்தக் குற்றத்தின் பின்னால் இருந்தார் என்பதுதான் அவருக்குப் பெரிய இடியாக இருந்தது. ஆண்டி எப்போதும் தற்பெருமை அற்றவராகவும், ஆழ்ந்த சிந்தனை உள்ளவராகத் தோன்றியதாகவும், மோசமான நேரத்தில் உதவிக்கு அணுகக் கூடியவராகத் தாம் கருதியதாகவும் அவர் தெரிவித்தார்.

"அந்த இரண்டு பேரும் ஒரே நபர்தான் என்பதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது."

ஆஸ்திரேலிய சட்டத்தை மாற்றிய வழக்கு

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கு ஆஸ்திரேலியாவுக்கு புதுமையான வழக்கு.

தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் செய்ற்கை நுண்ணறிவு குற்றங்களுக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதில் பின்தங்கியிருப்பதால் டீப் ஃபேக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலும் பெண்கள்) பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.

கடந்த 2022இல் ஆண்டி கைது செய்யப்பட்டபோது, நியு சௌத் வேல்ஸ் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவிலேயே எங்கும் டீப்ஃபேக் ஆபாச படங்களைப் பகிர்வது குற்றமாகக் கருத சட்டத்தில் இடமிருக்கவில்லை. அந்த நாடு இவ்வளவு பெரிய வழக்கையும் அதுவரை எதிர்கொண்டதில்லை.

இந்நிலையில், 39 வயதான ஆண்டியின் மீது அச்சுறுத்தல், துன்புறுத்தல் குற்றத்தைச் செய்ய தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது அனைத்து இணையவழிக் குற்றங்களுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டப்பிரிவு என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம் என ஹன்னாவிடம் சொல்லப்பட்டது.

"அவர் லேசான தண்டனையுடன் விடுவிக்கப்படுவதாக இருந்தாலும் அதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாராக இருந்தோம்" என்றார் அவர்.

அவரும், இந்த வழக்கில் ஓர் அங்கமாக இருக்க முடிவு செய்த மேலும் 25 பெண்களும் ஆண்டியை குற்றத்திற்குப் பொறுப்பேற்க வைப்பத்தில் உறுதியாக இருந்தனர். ஓர் ஆண்டுக்கு முன்பு, அவருக்கான தண்டனையை அறிவிக்கும் விசாரணையில் ஒருவர் பின் ஒருவராகப் பலரும் வாக்குமூலம் அளித்தனர்.

"நீ எங்களுடைய நட்புக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, நான் பாதுகாப்பாக இருப்பதாக சாதாரணமாகப் பெறும் பாதுகாப்பு உணர்வையும் நீ உடைத்திருக்கிறாய்," என நீதிமன்றத்தில் ஜெஸ் தெரிவித்தார்.

"இந்த உலகம் அன்னியமானதாகவும், அபயாகரமானதாகவும் தோன்றுகிறது. நான் தொடர்ந்து கவலையில் இருக்கிறேன், நான் தூங்கும்போது கொடிய கனவுகளைக் காண்கிறேன். இந்த மனிதரும் ஆண்டியை போல் இருப்பாரா என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டே இருப்பதால் புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்வது அசாத்தியமாகத் தோன்றுகிறது," என்று அவர் கூறியுள்ளார்.

ஆண்டி, தான் குறிவைத்த பெண்களிடம் மன்னிப்பு கேட்பதற்கான நேரம் வந்தபோது, ஜெஸ் மற்றும் ஹன்னாவால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்.

"அவர் என்னிடம் சொல்லக்கூடிய எதுவும் இதைச் சரிசெய்துவிட முடியாது, அவர் அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன்" என்கிறார் ஹன்னா.

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், Ethan Rix/ABC News

படக்குறிப்பு, கடந்த ஆண்டு, ஆண்டிக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னர் ஹன்னாவும், ஜெஸ்ஸும் கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்

அந்தப் படங்களை உருவாக்கியது தனக்குள் இருக்கும் இருண்ட பகுதிக்கு அதிகாரத்தை அளித்ததைப் போன்று இருந்ததாக நீதிமன்றத்தில் ஆண்டி தெரிவித்தார். ஆனால் அதனால் பாதிப்புகள் எதுவும் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நான் மிகவும் மோசமான ஒரு காரியத்தைச் செய்திருக்கிறேன், அதற்காக வருந்துகிறேன்," என்று அவர் கூறினார்.

ஆனால் அவருடைய மன்னிப்பை நீதிபதி ஜேன் கல்வர் ஏற்கவில்லை. அவரிடம் கொஞ்சம் மன வருத்தம் தெரிந்தாலும் அவருடைய மிகுதியான குற்றங்கள் விளைவித்த ஆழமான துன்பங்களை அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை என நீதிபதி கூறினார்.

ஆண்டியை ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். இது ஒரு மைல்கல் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

"அந்த நீதிமன்றத்தில் வெளிப்பட்ட பெருமூச்சு அவ்வளவு நிம்மதி நிறைந்ததாக இருந்தது," என்கிறார் ஜெஸ்.

"நாங்கள் பேசியது உண்மையில் கேட்கப்பட்டதாக நான் உணர்ந்தது அதுதான் முதல் தடவை."

ஆண்டி பரோல் பெறுவதற்கு டிசம்பர் 2029இல் தகுதி பெறுவார், ஆனால் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் பாலினம் குறித்து ஆய்வு செய்யும் சட்ட வல்லுநரான நிகோல் ஷேக்கல்டன், இந்த வழக்கு, எதிர்கால வழக்குகளுக்கு ஆச்சரியப்படத்தக்க முக்கிய சட்ட தரநிலையை உருவாக்கியிருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இது ஏதோ ஆன்லைனில் நடந்த ஒன்று மட்டுமல்ல என்பதையும் இதுபோன்ற செயல்பாடு பெண்களுக்கு எதிரான வன்முறையோடு தொடர்புடையது என்பதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டிருப்பதாக மெல்பர்ன் ஆர்.எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷேக்கல்டன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் ஆஸ்திரேலியாவும் மற்ற நாடுகளும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை முறைப்படுத்துவதிலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விசாரணை நடத்துவதில் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவரைப் போன்ற நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

டீப் ஃபேக் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் பகிர்வதை தேசிய அளவில் ஒரு குற்றமாக ஆஸ்திரேலியா அறிவித்தது. ஆனால் வேறு பல நாடுகளில் சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதாகவும், டீப் ஃபேக் ஆபாசப்பட தயாரிப்பைக் குற்றமாகவே கருதுவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. பிரிட்டனில் அதைப் பகிர்வது குற்றம், ஆனால் உருவாக்குவது குற்றமாகாது. இது விரைவில் மாறவிருக்கிறது.

போதிய பயிற்சியற்ற, போதிய நிதி ஆதாரங்களற்ற நிலையில் காவல்துறையினர் இருக்கும்போது, ஹன்னா போன்ற பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவருக்கு துப்பு கொடுத்த தனியார் துப்பறிவாளர் போன்றவர்கள்தான் அதிகாரிகளாகவும், கட்டுப்பாடுகளை அமல்படுத்துபவர்களாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு குற்றங்களில் விசாரணை சவாலானது, வளங்களும் நேரமும் அதிகம் தேவைப்படும் நடைமுறை" என அறிக்கை ஒன்றில் என்.எஸ்.டபிள்யு காவல்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு காவல் அதிகாரியும் இதுபோன்ற குற்றங்களைக் கையாள்வதில் சிறப்பாகச் செயல்படும் வகையில் அண்மையில் பயிற்சி அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

டீப் ஃபேக் படைப்புகளை நீக்க இ-பாதுகாப்பு ஆணையர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் காவல்துறையினர் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும் தயாரிப்புகளை அப்புறப்படுத்துவதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமனது என இ-பாதுகப்பு ஆணையர் ஜூலி இன்மேன் கிராண்ட் கூறினார். "இதைச் செய்வதில் இ-பாதுகாப்பு அதிகம் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் குற்றப் புலனாய்வையும் தண்டணைகளை மேற்கொள்ளவும் இ-பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம், ஆனால் உங்கள் காவல்துறைக்குத் திறமை இல்லாவிட்டால்.. " என்று சொல்ல வந்த கிரிஸ் பேச்சைப் பாதியிலேயே நிறுத்தினார்.

"எங்களுக்கு ஆண்டியின் மீது கோபம் உண்டு. ஆனால், இது போன்ற ஒரு விஷயத்தில் நீதி கிடைக்க, காவல்துறையுடன் முட்டி மோதத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என்ற நிலை இருப்பது வெறுப்பூட்டுவதாக இருக்கிறது."

ஆஸ்திரேலியா: நாட்டையே உலுக்கிய டீப் ஃபேக் மோசடி - பெண்களிடம் நெருங்கிப் பழகி துரோகம் செய்த நபர்

பட மூலாதாரம், Nikki Short/BBC

படக்குறிப்பு, காவல்துறையின் அணுகுமுறை மாற வேண்டும் என ஹன்னாவும் கிரிஸும் விரும்புகின்றனர்

எதிர்காலத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு விஷயங்கள் வேறு விதமாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும், என்.எஸ்.டபிள்யு மற்றும் விக்டோரியாவில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில், இரண்டு பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பின் சக மாணவர்களின் நிர்வாண டீப் ஃபேக் புகைப்படங்களை உருவாக்கியதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் நரக வாழ்க்கைக்குப் பிறகு ஹன்னாவும் வாழ்வில் கடந்து செல்ல முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஆனால் அவரது வாழ்வையும், மன நலனையும் மறுகட்டமைப்பு செய்ய அவர் செய்த கடும் உழைப்புக்கு ஆண்டியின் மேல்முறையீடு ஓர் ஆபத்தாக உள்ளது.

முழங்கால்களை நெஞ்சுக்கு நேராக மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஹன்னா, ஆண்டி அவருக்குரிய தண்டனையையே பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.

"ஏனென்றால் எனக்கும், பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கும் இது நிரந்தரமானது. அவை எப்போதும் இணையத்தில் இருக்கவே செய்யும்," என்கிறார் அவர்.

அந்தப் புகைப்படங்களை இணையத்தில் தேடி அழிக்கும் சேவைக்கு அவர் இன்னமும் பணம் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார். எதிர்கால நண்பர்களோ, முதலாளிகளோ, மாணவர்களோ தனது சொந்த குழந்தைகளோ அவற்றைப் பார்ப்பது குறித்து அவர் கவலைப்படுகிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்று அவரது சிறந்த நினைவுகள் எல்லாம் திரும்பக் கிடைக்காமலே போய்விடும் என்பதுதான்.

"நம் வாழ்விலேயே மகிழ்ச்சியான தருணங்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறோம். ஒரு நாய்க்குட்டியை வாங்கினால், அல்லது ஒரு வீடு வாங்கினால், திருமணம் நிச்சயமானால் ஒரு ஃபோட்டோவை பதிவிடுவோம்."

"அப்படியான எங்கள் ஒவ்வொரு தருணத்தையும் அவர் ஆபாசப் படங்களாக மாற்றிவிட்டார். இப்போது அந்தப் படங்களைப் பார்க்கும்போது, நான் வண்புணர்வு செய்யப்படுவதைத்தான் பார்க்கிறேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)