மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி
முட்டைகளை வேக வைப்பதற்கான சிறந்த முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் இந்த புது செயல்முறையில் ஒரு முட்டையை வேக வைப்பதற்கு சுமார் அரை மணி நேரம் வரை ஆகலாம் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு முட்டையை சரியான பதத்தில் வேக வைப்பது என்பது மக்களின் தினசரி வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று ஆகும்.
நீங்கள் காலை உணவுக்காக முட்டைகளை வேக வைப்பீர்கள்.
சில நிமிடங்கள் கழித்து, முட்டை சுவையாகவும் நன்றாகவும் வெந்திருக்கும் என்ற நம்பிக்கையில், வேக வைத்த முட்டையின் ஓடுகளை உடைத்து, ஒரு துண்டு பிரெட்டை எடுத்து முட்டையோடு சாப்பிட தயாராவீர்கள்.
ஆனால் முட்டையை உடைத்துப் பார்த்தால், அதன் மஞ்சள் கரு உடைந்திருக்கும்.
மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கரு கலங்கிய நீர் போல இருக்கும்.
இப்படித்தான் சரியாக வேகாத முட்டை தரும் ஏமாற்றத்தோடு காலைப் பொழுது தொடங்கும்.
இதற்கு என்ன காரணம் என்பதையும், மஞ்சள் கரு, வெள்ளைக்கரு ஆகிய இரண்டும் சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி? என்பதற்கு ஆய்வாளர்கள் கூறும் புதிய வழிமுறைகளை விளக்குகிறது இத்தொகுப்பு.

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆல்புமின் (முட்டையின் வெள்ளைப் பகுதி) ஆகிய இரு பகுதிகளும் வெவ்வேறு வெப்பநிலைகளில் வேகும் என்பதுதான், முட்டையை வேக வைப்பதில் உள்ள பெரிய சவால்.
மஞ்சள் கருவை சரியாக சமைக்க வெறும் 65 டிகிரி செல்சியஸ் (149°F) வெப்பநிலை போதுமானது.
அதே சமயம் ஆல்புமினுக்கு (முட்டையின் வெள்ளைப் பகுதி) 85 டிகிரி செல்சியஸ் (185°F) அதாவது, மஞ்சள் கருவை விட சற்று அதிகமான வெப்பநிலை தேவைப்படுகிறது.
முட்டைகளை வேக வைப்பதற்கான பாரம்பரிய முறைகள், இந்த இரண்டு முரண்பாடுகளுக்கு இடையிலான மையப்புள்ளியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன.
உதாரணமாக, நீங்கள் 100°C (212°F) வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கும் போது, முட்டையின் வெள்ளைக்கரு மென்மையாகவும், நன்றாகவும் வெந்திருக்கும். அதே சமயம், முட்டை நீண்ட நேரம் வேக வைக்கப்படும் போது, மஞ்சள் கரு திடமாகவும் உறுதியாகவும் மாறும்.
நீங்கள் திடமான மஞ்சள் கருவை விரும்பினால், உங்களுக்கு இந்த முறை மிகப் பொருத்தமானது.
ஆனால், உங்களுக்கு மென்மையான மஞ்சள் கரு தான் பிடிக்குமென்றால், இப்படி நீண்ட நேரம் வேக வைத்த முட்டை உங்களுக்கு ஏமாற்றமளிக்கும்.
முட்டையை வேக வைப்பதில் உள்ள மற்றொரு அணுகுமுறை ஸூ விடே முறையாகும்.
அதில், முட்டையானது 60-70 டிகிரி செல்சியஸ் (140-158°F) வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் வேக வைப்பதன் மூலம் சமைக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் மஞ்சள் கரு உடைந்துவிடாமல் இருக்கும், அதைச் சுற்றி வெள்ளைக்கருவும் சரியாக வேகாமல் மென்மையாக இருக்கும்.
ஆனால், கவலை வேண்டாம். முட்டையை சரியாக வேக வைப்பதற்கான வழிமுறையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த புதிய முறையில் முட்டைகளை சமைக்கும் போது, முட்டை சரியாகவும், சுவையாகவும் வெந்திருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருப்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
ஏனென்றால், இந்த புதிய முறையின் மூலம் சமைக்கப்படும் முட்டைகளில் அதிக பாலிஃபினால்கள் உள்ளன.
இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கருதப்படுகின்றன.
பஸ்வோலியில் உள்ள இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த விஞ்ஞானி பெல்லெக்ரினோ முஸ்டோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கணக்கீட்டுத் திரவ இயக்கவியலை (CFD - computational fluid dynamics) பயன்படுத்தி முட்டை சமைப்பதற்கான மாதிரியை உருவாக்கத் தொடங்கினர்.
அவர்களின் ஆராய்ச்சியின்போது, இந்த செயல்முறை ஒரு புதிய வழிமுறைக்கு இட்டுச்சென்றது.
ஆனால் பெரும்பாலான சமையல்காரர்களுக்கும், வீட்டில் தினசரி சமைப்பவர்களுக்கும் அறிமுகமில்லாத இந்த முறை, சிறந்த முடிவுகளைத் தரும் எனக் கருதப்படுகிறது.
அதாவது, இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி முட்டையை வேக வைப்பது தான் இந்தச் செயல்முறை.
இதனை குறிப்பிட்ட இடைவெளியில் சமைக்கும் முறை என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதாவது, முட்டை முதலில் 100 டிகிரி செல்சியசில் உள்ள (212 ° F) கொதிக்கும் நீரில் வேக வைக்கப்படுகிறது.
பின்னர் அது 30 டிகிரி செல்சியஸ் (86 ° F) வெப்பநிலையில் உள்ள தண்ணீருடன் வேறு கிண்ணத்திற்கு மாற்றப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், கொதிக்கும் நீர் (100°C) மற்றும் வெதுவெதுப்பான நீருக்கு (30°C) இடையே முட்டையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
இதேபோல் மொத்தம் 32 நிமிடங்களுக்கு இந்த செயல்முறையைத் தொடர வேண்டும்.
எனவே சமைக்கும் போது, முட்டையை ஒருபக்கம் வேக வைத்து விட்டு, மறுபுறம் வேறு வேலையை பார்க்கச் செல்பவர்களுக்கு இது பலனளிக்காது.
ஆனால், அதிக நேரமெடுத்து, கவனமான முயற்சிகளுடன் முட்டையை சமைக்க நீங்கள் தயாராக இருந்தால் இந்த முறை உங்களுக்கு சிறந்த பலனளிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
முட்டையின் அமைப்பு, சுவை மற்றும் அதன் ரசாயனச் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்து முட்டையின் தன்மையை ஆராய்ச்சியாளர்கள் சரிபார்த்தனர்.
அணு காந்த அதிர்வு (NMR) மற்றும் உயர் திறன் கொண்ட மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி போன்ற மேம்பட்ட அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி முட்டையை விரிவாக ஆய்வு செய்து அதன் உயர் தரத்தையும் உறுதிப்படுத்தினர்.
இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி வேகவைத்து சமைக்கப்பட்ட முட்டைகள் மென்மையான மஞ்சள் கருவைக் கொண்டிருந்தன.
அவை சூ விடே முறையைப் பயன்படுத்தி சமைக்கப்பட்ட முட்டைகளைப் போலவே இருந்தன. ஆனால், முழுவதும் சூ விடே முறையில் சமைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இல்லாமல் , வெள்ளைக்கரு முழுமையாக சமைக்கப்பட்டு, பாரம்பரியமாக, மென்மையாக வேக வைத்த முட்டையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன.
இந்த புதிய முறையை பயன்படுத்தி சமைக்கும் போது, முட்டையில் உள்ள வெள்ளைக்கருவின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் (95°F) மற்றும் 100 டிகிரி செல்சியஸ் (212°F) வரை மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
அதே சமயம் மஞ்சள் கருவானது இந்தச் செயல்முறை முழுவதும் 67 டிகிரி செல்சியஸ் (153°F) எனும் ஒரே வெப்பநிலையில் தொடரும்.
இந்த வெப்பநிலை மாற்றம் தான் வேறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என அறியப்படுகின்றது.
சுவாரஸ்யமாக, பிற முறைகளைப் பயன்படுத்தி சமைத்த முட்டைகளுடன் வேதியியல் பகுப்பாய்வில் ஒப்பிடும்போது, இந்த முறையில் சமைக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவில் அதிக பாலிஃபினால்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த பாலிஃபினால்கள், அவற்றின் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகின்றன.
புற ஊதா கதிர்வீச்சு, வறட்சி அல்லது பூச்சிகளின் தாக்குதல்கள் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிரான பாதுகாப்பு செயல்முறையாக தாவரங்கள் பாலிஃபினால்களை உற்பத்தி செய்கின்றன.
ஆனால் இந்த பாலிஃபினால்கள் மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன.
உதாரணமாக, அதிகமான பாலிஃபினால்களை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக, இதய நோய்கள், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அரியவகை நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என தொற்றுநோயியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, மென்மையான வேக வைத்த முட்டைகளை காலை உணவாக நீங்கள் சாப்பிட விரும்பினால், நிச்சயமாக இந்த புதிய முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












