புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மருத்துவர் திலிப் நிகம்
    • பதவி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர், பாம்பே மருத்துவமனை, மும்பை

புற்றுநோய். இந்தப் பெயரைக் கேட்டாலே நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாது, மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் அச்ச உணர்வும், விரக்தியும் தோன்றுகிறது.

புற்றுநோயின் வரலாறு என்ன? எத்தனை வகையான புற்றுநோய்கள் மனிதகுலத்தைப் பாதித்துள்ளன? இவற்றை அழிப்பதற்கான முயற்சிகளின் பலன் என்ன?

உலகத்தில் புற்றுநோயின் வரலாற்றைப் பார்த்தால், கிரேக்க, ரோமானிய புத்தகங்களில் அதுகுறித்த குறிப்புகளைப் பார்க்க முடிகிறது.

கிமு 470 முதல் 370 வரை, கிரேக்க மருத்துவத்தின் தந்தை எனக் கருதப்படும் ஹிபோகிரேடஸ், புற்றுநோயைக் குறிப்பிட கார்சினோஸ் அல்லது கார்சினோமா என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். கார்சினோஸ் என்றால் கிரேக்க மொழியில் நண்டு எனப் பொருள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பல புற்றுநோய் நோயாளிகளைப் பார்த்த பின்னர், அவர்களுக்கு கடினமான கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவதையும் கண்டுபிடித்தனர். நோயின் இறுதிக் கட்டங்களில் வலி பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோய்க்கு நண்டின் பெயர் ஏன்?

நண்டின் முதுகுப் பகுதி மிகவும் கடினமாக உள்ளதுடன் அது தனது கொடுக்கு மூலம் உங்களைக் கடித்தால், தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இந்த இரண்டு அறிகுறிகளும் புற்றுநோயாளிகளிடமும் காணப்படுகின்றன. அதனால்தான் இந்த நோய்க்கு கேன்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உடலில் புற்றுநோய் எப்படி பரவுகிறது

பட மூலாதாரம், Getty Images

கிரேக்க மருத்துவரான கேலன், ஆன்சோஸ் என்ற பதத்தைப் பிரபலப்படுத்தினார். கிரேக்க மொழியில் ஆன்சோஸ் என்றால் வீக்கம் எனப் பொருள். ரோமானிய மருத்துவரான செல்சஸ் முதல்முறையாக கேன்சர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

லத்தீன் மொழியில் நண்டு, கேன்சர் என அழைக்கப்படுகிறது. எனவே இந்த நோயைக் குறிக்க கேன்சர் என்ற சொல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது.

புற்றுநோய் புரிந்துகொள்ள முடியாத, குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்பட்டது. புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது.

கடந்த 19ஆம் நூற்றாண்டில் மருத்துவம் முன்னேற்றம் கண்டபோது, புற்றுநோய் குறித்த மர்மங்கள் விலகத் தொடங்கின.

உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது?

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது

ஆனால் உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது? அது எப்படி வளர்கிறது? அது உடலின் மற்ற பகுதிகளுக்கு எப்படிப் பரவுகிறது? இவற்றையெல்லாம் கண்டுபிடித்தது, இதுவரை செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே இதை மிக முக்கியமானதாக மாற்றுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் புற்றுநோய் குறித்த பல கட்டுக்கதைகளைச் சிதறடிக்கச் செய்துள்ளது.

புற்றுநோய் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன், உடலின் வடிவம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனித உடல் பல பில்லியன் உயிர் அணுக்களால் உருவானது, பல தசைகள் ஒன்றாக இணைந்து உடல் உறுப்புகளை உருவாக்குகின்றன.

புதிய உயிரணுக்களின் உற்பத்தி, அவை தங்களது வேலைகளை முறையாகச் செய்வது, அவற்றின் வேலை முடிந்ததும் அழிக்கப்படுவது, புதிய உயிரணுக்கள் உருவாக்கப்படுவது என அனைத்து செயல்பாடுகளும் நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே நடைபெற்று வருகின்றன. இந்த உயிரணுக்களில் உள்ள மரபணு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம்.

புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரணிகளுடனான தொடர்பு, தொற்று பாதிப்பு, அல்லது பரம்பரைக் காரணங்களால் மரபணுக்களில் சீர்குலைவு ஏற்பட்டால், மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடு இழக்கப்படுகிறது. உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்குகின்றன. அவற்றின் அளவு மற்றும் இயல்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதுவே புற்றுநோய் எனப்படுகிறது. புற்றுநோய் அணுக்கள், சாதாரண அணுக்களைவிட குறைவான வேகமுடையவையாக இருப்பதுடன், கட்டுப்படுத்தப்படாத விகிதத்தில் வளரக் கூடியவை

புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை. அவை உடலின் தற்காப்பு அமைப்பில் இருந்து தப்பி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுகின்றன. அங்கே அவை மற்ற உயிரணுக்களையும் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இதைத் தடுப்பது மிகவும் கடினம்.

இருப்பினும், உடலில் உருவாகும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல. சில நேரங்களில், சாதாரண கட்டிகள்கூட உருவாகலாம். ஒரு சாதாரண கட்டி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுவதில்லை. ஆனால் ஒரு புற்றுநோய்க் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம். அது பரவுவதை வைத்து அது புற்றுநோயா இல்லையா என்பதைக் கூறமுடியும்.

எத்தனை வகையான புற்றுநோய் பரவல் உள்ளன?

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை

நேரடிப் பரவல்: புற்றுநோய் உயிரணுக்கள் நேரடியாக அடுத்துள்ள உயிரணுக்கள் அல்லது உறுப்புகளைத் தாக்குகின்றன.

நிணநீர் பரவல்: புற்றுநோய் அணுக்கள் நிணநீர் அமைப்புக்குள் புகுந்து நிணநீர்க் கணுக்களில் வளர்கின்றன.

ரத்தம் மூலம் பரவல்: புற்றுநோய் அணுக்கள் ரத்த நாளங்கள் மூலம் நுரையீரல், எலும்புகள், கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவுகின்றன.

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடலில் இருக்கும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல

எத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன?

புற்று நோய்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

உடல் உறுப்பு வகையைப் பொறுத்து வகைப்படுத்துதல்: புற்றுநோய் எந்த உறுப்பில் தொடங்குகிறதோ அதைப் பொறுத்து பெயரிடப்படும். உதாரணமாக நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை.

உயிரணு அடிப்படையில் வகைப்படுத்துதல்

கார்சினோமா: இது சாதாரணமான புற்றுநோய் வகை. இது எபிதீலியல் உயிரணுக்கள் அல்லது உடல் உறுப்புகளில் தோன்றுகிறது. கார்சினோமாவின் கீழ் அடினோகார்சினோமா (நுரையீரல், மார்பகம்), பேஸல் செல் கார்சினோமா (தோல்), டிரான்சிஸ்னல் (சிறுநீரகம்) உள்ளிட்டவை உள்ளன.

சர்கோமா: இந்த வகைப் புற்றுநோய் இணைப்புத் திசுக்கள் மற்றும் உடலின் துணை உயிரணுக்களில் ஏற்படுகிறது.

மெலனோமா: இந்தப் புற்றுநோய், தோலில் மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோடைப் அணுக்களில் ஏற்படுகிறது. இதுவே உடலில் மிக வேகமாகப் பரவும் புற்றுநோய் எனக் கருதப்படுகிறது.

மூளைக்கட்டி: கிளியோபிளாஸ்டோமா மற்றும் அஸ்ட்ரோசைடோமா போன்ற புற்றுநோய்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இது மூளையில் உள்ள பல்வேறு செல்களால் உருவாகிறது.

ரத்தப் புற்றுநோய் வகைகள்

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு புற்றுநோய் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம்

பல்வேறு வகையான ரத்தப் புற்றுநோய்கள் உள்ளன. அவை லுக்கீமியா, லிம்போமா மற்றும் மல்டிபிள் மைலோமா.

லுக்கீமியா: எலும்பு மஜ்ஜை வெள்ளை ரத்த அணுக்களை முறையாக உருவாக்குவதில்லை. இதன் விளைவாக, முற்றிலும் வளர்ச்சியடையாத அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ரத்த நாளங்கள் மூலம் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த நோயில் எந்தக் கட்டியும் காணப்படாமல் போகலாம்.

லிம்போமா: நிணநீர்க் கணுக்களில் (Lymph Node), நிணநீர் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து நிணநீர்கணுக் கட்டிகளை உருவாக்குகின்றன.

மல்டிபிள் மைலோமா: நோய் எதிர்ப்பு அமைப்புக்குக் காரணமான எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து எலும்புகளைச் சேதப்படுத்தும் மைலோமா அணுக்களை உருவாக்குகின்றன.

நண்டு போன்ற நோய் என்று ஹிபோகிரேட்டஸ் விவரித்ததில் தொடங்கிய புற்றுநோயின் பயணம் தற்போது உயர்தர அறிவியல் ஆய்வு மூலம் சிகிச்சையளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. உலகம் முமுவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், புற்றுநோய் போன்ற நோய்கள் வெல்லக் கூடியவைதான் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)