தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம்

தோல் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரக்ஷனா ரா
    • பதவி, பிபிசி தமிழ்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் புதிய தோல் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலனோமா என்று அறியப்படும் ஒரு வகையான தோல் புற்றுநோய் காரணமாக 2022 ஆம் ஆண்டில் 60,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல் புற்றுநோய் என்றால் என்ன? தோலில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? அந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தோல் புற்றுநோய் என்றால் என்ன?

"சருமத்தில் இருக்கும் செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் காரணமாக சருமத்தில் ஏற்படும் வித்தியாசமான மாற்றங்களே தோல் புற்றுநோயாகும்," என்று கூறுகிறார் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி.

பல வகை தோல் புற்றுநோய்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வரக்கூடியதாக இருப்பது பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் (basal cell carcinoma ) மற்றும் ஸ்குவேமஸ் செல் கார்சினோமா புற்றுநோய் (squamous cell carcinoma). இவை மெலனோமா அல்லாத புற்றுநோய்கள். மற்ற வகை தோல் புற்றுநோயுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவில் காணப்படும் புற்றுநோயான மெலனோமாதான் அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது, என்று தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

தோல் புற்றுநோய், அறிகுறிகள்
படக்குறிப்பு, பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் தான் அதிகமாக ஏற்படும் தோல் புற்றுநோயாகும்.

யாரை அதிகமாக பாதிக்கும்?

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, "தோல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது புற ஊதா (UV) கதிர்வீச்சுக்கு அதிகம் வெளிப்படுவதுதான். மேலும் மரபணு வழியாகவும் இது ஏற்பட வாய்ப்புள்ளது. சிறியவர்களை விட இந்த தோல் புற்றுநோய், வயதானவர்களை அதிகம் தாக்குகின்றது. ஏனென்றால் வயதானவர்களுக்கு புதிய செல்கள் உருவாகுவதில் தாமதம் இருப்பதால் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இந்த பிரச்னை ஏற்பட மற்றொரு காரணம் ஒருவர் மிகவும் வெளுப்பான நிறத்தில் இருப்பதாகும். இயல்பாகவே இந்தியர்களின் நிறம் இந்த வெப்பநிலைக்கு ஏற்றார்போல அமைந்துள்ளதால் இந்தியாவில் தோல் புற்றுநோயின் சதவீதம் குறைவாகவே உள்ளது," என்று தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்புப்பின் அறிக்கையின்படி, நீலம், பச்சை போன்ற நிறத்தில் கண்களை கொண்டிருப்பது, அதீத அளவிலான மச்சங்கள், சருமப் புள்ளிகள் மற்றும் வெளுப்பான முடி ஆகியவற்றைக் கொண்டிருப்பதும் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகும்.

ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அதிகளவிலான புற ஊதா கதிர்கள் பூமியை தாக்குகின்றன. தற்போது ஓசோன் படலம் இருக்கும் அளவிலிருந்து குறைந்தால் புற்றுநோய் பாதிப்புகள் இன்னும் அதிகரிப்பதற்கான ஆபத்துகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

தோல் புற்றுநோயின் அறிகுறிகள்

மனிதர்களின் உடலில் மச்சம், மறு ஆகியவை தோன்றுவது மிகவும் இயல்பான ஒன்றாகும். ஆனால் தோல் புற்றுநோயின் அறிகுறிகளையும், சாதாரண மச்சத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் எவ்வாறு கண்டறிவது?

உடலில் இருக்கும் சாதாரண மச்சத்திற்கும் புற்றுநோயின் அறிகுறியான மச்சத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பிரிட்டனின் தேசிய சுகாதார நிறுவனமான NHS விளக்கியுள்ளது.

உடலில் திடீரென்று அதிக அளவிலான மச்சங்கள் தோன்றுவது மற்றும் ஏற்கனவே இருக்கக்கூடிய மச்சத்தில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது மெலனோமா புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம். தோல் புற்றுநோயானது சருமத்தில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால் சூரிய வெளிச்சத்திற்கு அதிகளவில் வெளிப்படும் பகுதியில்தான் இது மிகுந்து காணப்படுகிறது.

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

இயல்பாக நமது உடலில் இருக்கும் மச்சங்கள் வட்டமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும். ஆனால் மெலனோமாவால் உருவாகும் மச்சங்கள் சீரற்று காணப்படும்.

இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அந்த மச்சத்தின் நிறத்தை தான். சாதாரணமாக மச்சம் என்பது ஒரே சீரான நிறத்தில் இருக்கும். ஆனால் மெலனோமா பாதிப்பால் தென்படும் மச்சங்கள் இரண்டு அல்லது அதற்கு மேலான நிறத்தைக் கொண்டிருக்கும்.

மச்சத்தின் வடிவம், நிறம் ஆகியவற்றிக்கு பிறகு நாம் கவனத்தில் கொள்ளவேண்டுயது அதன் அளவு. புற்றுநோயால் உருவாகும் மச்சம் போன்றவை மிகவும் பெரிய அளவில் இருப்பதால் வித்தியாசத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்கிறது பிரிட்டனின் தேசிய சுகாதார நிறுவனமான NHS.

"தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு சில சமயங்கள் அந்த காயங்கள் ஆறாமல் அப்படியே இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகுந்துள்ளன. அதே போல சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களில் வரும் புண்ணால் கூட இந்த நோய் ஏற்படலாம்," என்று மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்

ஒருவருக்கு தோலில் ஏற்பட்டுள்ள வித்தியாசமான மச்சம் போன்றவை புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய பையாப்ஸி பரிசோதனை செய்யப்படும். பாதிக்கப்பட்ட நபரின் திசு மாதிரியை எடுத்து சோதனை செய்த பின்னரே இதற்கான முடிவுகள் கிடைக்கும்.

பொதுவாகவே புற்றுநோய்க்கு வழங்கும் முதன்மையான சிகிச்சைகளுள் ஒன்று கீமோதெரபி. ஆனால் தோல் புற்றுநோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் மாற்றங்கள் உள்ளதாக தெரிவித்தார் மருத்துவர் பாலாஜி.

"மெலனோமாவிற்கு இம்யூனோ தெரபி என்ற ஒரு தனித்துவமான சிகிச்சை வழங்கப்படும். அதாவது இந்த சிகிச்சை குறிப்பிட்ட புற்றுநோய் செல்லை மட்டும் குறிவைக்கும். மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்க்கு ஒன்று அறுவைசிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படும். ஏனென்றால் மெலானோமா என்பது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பரவக்கூடிய ஒரு புற்றுநோய். நுரையீரல், கல்லீரல் மற்றும் மூளைக்கு கூட இது பரவ வாய்ப்புள்ளது." என்கிறார் மருத்துவர் பாலாஜி

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

"புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதே தோல் புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும்," என்கிறார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சரவணன்.

மேலும் பேசிய அவர், "உங்கள் சருமத்தில் ஏதேனும் புதிதாகவோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் புண், மச்சம், சிவந்த சருமம் ஆகியவற்றை நீங்கள் கவனித்த உடனே, ஒரு மருத்துவரை அணுகவேண்டும்," என்றார்.

தோல் மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடெமி அமைப்பு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளில் முக்கியமாக தெரிவிக்கப்படுவது புற ஊதா கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்கும் உடைகளை நாம் அணிந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.

மேலும், வெளியில் செல்லும் போது சன் ஸ்கிரீன் பூசிக்கொள்வதை அவசியமாக்கிக்கொள்ள வேண்டும். அதன் எஸ்.பி.எஃப் குறைந்தது 30 அல்லது அதற்கு மேலாக இருக்கவேண்டும் என்பதையும் அது வலியுறுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)