அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன?

சீனா மீதான அமெரிக்காவின் 10% வரி விதிப்பு

பட மூலாதாரம், Getty Images

சீனா மீதான அமெரிக்காவின் 10% வரி விதிப்பு செவ்வாய்கிழமை காலை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியை அடுத்து, சீனா பதிலுக்கு அமெரிக்க சரக்குகளுக்கு வரி விதித்துள்ளது.

இதனால் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் பெரிய என்ஜின்கள் கொண்ட கார், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி பாதிக்கப்படும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எந்தெந்த பொருட்கள் மீது வரி

நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மீது 15% வரி விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. அதே போன்று கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள், சரக்கு வாகனங்கள், பெரிய என்ஜின் கொண்ட கார்கள் மீது 10% வரி விதித்துள்ளது.

அரிதாக கிடைக்கப்படும் உலோகப் பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகள் அமெரிக்காவின் வரி விதிப்பு அமலுக்கு வந்த உடனேயே வெளிவந்தன.

சந்தையில் ஒரே ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை தவிர்க்கும் வகையில், அதை கண்காணிப்பதற்கான அமைப்பை சீனா கொண்டுள்ளது.

அந்த அமைப்பு அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளது.

ஒரே ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் சட்டங்களை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2010-ஆம் ஆண்டு முதல் கூகுள் சீனாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில சேவைகளை கூகுள் சீனாவில் கொண்டுள்ளது.

உதாரணமாக, அதன் ஆண்ட்ராய்ட் அமைப்புதான், சீனாவில் பயன்படுத்தப்படும் செல்போன்களில் பிரதானமாக காணப்படுகிறது,

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்ட்ராய்டை அமைப்பை பயன்படுத்துகின்றன. உள்ளூர் நிறுவனங்களுடன் சேர்ந்து செயலிகள், செல்போன் விளையாட்டுகள் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் சீனாவில் வழங்கி வருகிறது.

கூகுள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010ம் ஆண்டு முதல் கூகுள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சீன நிதித்துறை என்ன கூறுகிறது?

அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்து சீன நிதித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச வர்த்தக விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

"அமெரிக்காவின் ஒரு தலைபட்சமான வரி திணிப்புகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுகின்றன. தனது நாட்டின் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இந்த நடவடிக்கை உதவாது, அது மட்டுமல்லாமல் அமெரிக்கா-சீனா இடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பையும் இது பாதிக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பதிலுக்கு பதில் என்ற அணுகுமுறையை சீனா மேற்கொள்ள தயாராக இருக்கிறது என்பது தெரிகிறது. இது பல நிபுணர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், அமெரிக்கா விதித்த வரி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். ஆனால் சீனாவின் வரி விதிப்பு குறிப்பிட்ட சில சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 1ம் தேதி கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25% வரி விதிப்பதாகவும் சீனா மீது 10% வரி விதிப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

என்ன நடந்தது?

கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25% வரி விதிப்பதாகவும் சீனா மீது 10% வரி விதிப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்கவும், போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

மெக்ஸிகோவும் கனடாவும் அமெரிக்கா மீது பதிலுக்கு வரிகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாக பிப்ரவரி 3ம் தேதி, மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் தெரிவித்திருந்தார். எல்லையில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்பு குழுவினரை மெக்ஸிகோ அனுப்புவதாக ஒப்புக் கொண்டதனால் இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்புடன் கடைசி நேரத்தில் தொலைபேசியில் பேசியதாக கூறினார்.

எல்லை பாதுகாப்பை உறுதிசெய்வதாக கனடா கூறியதால், கனடா மீதான 30 நாள் வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்கா கூறிய கால அவகாசம் வரை, சீனாவுடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், சீனா சரக்குகள் மீதான 10% வரி அமலுக்கு வந்தது.

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக உறவு

டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது 2018ம் ஆண்டில், அமெரிக்க- சீனா இடையிலான வர்த்தக் போர் முழுவீச்சில் நிகழ்ந்தது.

'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையை டிரம்ப் அப்போது அமல்படுத்திக் கொண்டிருந்தார். வெளிநாட்டு சரக்குகள் மீது மாறி மாறி வரிகளை விதித்துக் கொண்டிருந்தார் டிரம்ப்.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான சீன சரக்குகள் புதிய அல்லது அதிகபடியான வரிகளை சந்திக்க நேர்ந்தது. இதனால் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க சரக்குகள் மீது வரி விதித்தது.

ஜோ பைடன் அதிபரான போது, அந்த வரிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, சில வரிகள் உயர்த்தப்பட்டன.

பைடன், முக்கிய உயர் தொழில்நுட்ப துறைகளை குறிவைத்தார். செமி கண்டக்டர் மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றின் வர்த்தகத்தின் கட்டுப்படுத்தினார். அவற்றின் மீதான வரிகளை உயர்த்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவினாலும், அவர்களுக்கு இடையிலான உறவு மிகவும் பின்னி பிணைந்ததாக உள்ளது. எனவேதான் இந்த இருநாட்டு உறவு என்பது உலகின் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் உறவாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பு கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில், 401 பில்லியன் டாலராக இருந்தது. அதே போன்று அமெரிக்காவிலிருந்து சீனாவின் இறக்குமதி 131 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீனா மீதான வரி விதிப்பு என்னவாகும்?

இந்த வார இறுதிவரை சீன அதிபரிடம் டிரம்ப் பேசப்போவதில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.

சீனா மீதான வரிகள் மேலும் உயர்த்தப்படலாம் என்றும் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.

"சீனா ஃபென்டனில் அனுப்பாது என்று நம்புகிறோம், அப்படி செய்தால் வரிகள் மேலும் அதிகரிக்கப்படும்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஃபென்டனில் போதை மருந்து அமெரிக்காவின் பிரச்னை என்று சீனா கூறுகிறது. அதே நேரம் பேச்சுவார்த்தைகளுக்கு தனது கதவுகளை திறந்து வைத்திருப்பதாகவும் சீனா சொல்கிறது.

சீனா மீதான 10% வரி விதிப்பை "ஆரம்பம்" மட்டுமே என்று கூறும் டிரம்ப், ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்றால், வரிகள் மேலும் உயர்த்தப்படும் என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)