நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா?

தொல்லியல் காலகட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பாவில் இரும்பு காலத்தைச் சேர்ந்த மனிதர்களின் படம் (கோப்புக்காட்சி)
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தொல்லியல் தொடர்பான செய்திகள் வெளியாகும்போது அது எந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தது என்ற செய்திகளும் வெளியாகின்றன. ஆனால், சில இடங்களில் சில காலகட்டங்கள் இல்லாமல் போகின்றன. அது ஏன்?

தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளியாகும்போதோ, ஒரு புதிய தொல்லியல் அகழாய்வின் தொன்மையைப் பற்றிச் சொல்லும்போதோ, அது எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த காலகட்ட பகுப்பு என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானதாக இருப்பதில்லை.

வெவ்வேறு கண்டங்கள், துணைக் கண்டங்களில் வெவ்வேறு விதத்தில் காலகட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. சில நேரங்களில், ஒரு நாட்டிற்கு உள்ளேயே வெவ்வேறு விதத்தில் காலகட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.

தெற்காசிய தொல்லியல் காலகட்டங்கள் என்னென்ன?

தெற்காசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை பொதுவாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.

  • தொல்லியல் காலகட்டம் பழைய கற்காலம் (கி.மு. 3,00,000 – கி.மு. 10,000)
  • இடைகற்காலம் (கி.மு. 10,000 – கி.மு. 6,500)
  • புதிய கற்காலம் (கி.மு. 6,500 – கி.மு. 4,000. சில இடங்களில் இது கி.மு. 2,000 வரை)
  • செப்புக் காலம் (கி.மு. 4000 – கி.மு. 2000)
  • வெண்கலக் காலம் (கி.மு. 3,100 – கி.மு. 1,100)
  • இரும்புக் காலம் (கி.மு. 1,100 - கி.மு. 500)
  • தொல் வரலாற்றுக் காலம் (கி.மு. 1,500 - கி.மு. 500)
  • வரலாற்றுக் காலம் (கி.மு. 500க்குப் பிந்தைய ஆண்டுகள்)
 தொல்லியல் வரலாற்றில் சில காலகட்டங்கள் இல்லாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கற்கால பொருட்கள்.

பழைய கற்காலத்தைப் பொறுத்தவரை உலகின் பல இடங்களில் மூன்று லட்சம் ஆண்டுகளில் துவங்கி, பனியுகம் முடிவுக்கு வந்த காலகட்டம் வரை (கி.மு. 10,000 வரை) இருந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள் வேட்டையாட, கற்களால் கருவிகளைச் செய்து பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

இடைக்கற்காலத்தைப் பொறுத்தவரை கி.மு. 10,000 ஆண்டிலிருந்து கி.மு. 6,500வது ஆண்டு வரை குறிப்பிடப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் மனிதர்கள் மிக நுணுக்கமான, சிறிய கற்கருவிகளைச் செய்ய ஆரம்பித்த காலகட்டம். புதிய கற்காலப் பகுதியில் மனிதர்கள் வேளாண்மை செய்ய ஆரம்பித்தபோது மற்ற உயிரினங்களையும் வளர்க்க ஆரம்பித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

செப்பு காலகட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

இதற்குப் பிறகு வரும் செப்புக் காலகட்டம்தான் மனித வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில்தான், மனிதர்கள் உலோகத்தால் ஆன தொழிற்கருவிகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

ஐரோப்பாவுக்கு முன்பாகவே, மத்திய கிழக்குப் பகுதியில் இந்தக் காலம் உருவாகிவிட்டது. ஆனால், ஐரோப்பாவில் செப்புக் காலத்தல் இருந்து வெண்கலக் காலத்திற்கு வேகமாக நகர்ந்தனர்.

மத்திய கிழக்கில் இது சற்றுத் தாமதமாக நடந்தது. ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே இந்த காலப் பகுப்பு பயன்படுத்தப்படுகிறது.

வெண்கலக் காலத்தைப் பொறுத்தவரை, உலோகங்களைக் கலந்து கருவிகள் செய்வது இந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது. வேறு சில முக்கிய மாற்றங்களும் இந்தக் காலகட்டத்தில் நடந்தன. அதாவது, நகரங்கள் இந்தக் காலகட்டத்தில்தான் உருவாக ஆரம்பித்தன. பல இடங்களில் எழுத்துகளும் உருவாக ஆரம்பித்தன.

இரும்புக் காலகட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

தொல்லியல் வரலாற்றில் சில காலகட்டங்கள் இல்லாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

மனித குல வரலாற்றில் இரும்புக் காலகட்டம் மிக முக்கியமானது. இரும்பைப் பயன்படுத்தப் பழகிய மனிதர்கள், அதை வைத்து உறுதியான கருவிகளைச் செய்ய ஆரம்பித்தனர். இது விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை, அவை ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு தருணத்தில் உருவாகியிருக்கிறது. ஆரம்பத்தில் 3,300 ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியை ஒட்டிய பகுதிகளில் துவங்கியதாகக் கருதப்பட்டது. ஆனால், புதுப்புது தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் தகவல்கள், அதே காலகட்டத்திலோ அதற்கு முன்பாகவோ இந்தியா போன்ற இடங்களிலும் இரும்பின் பயன்பாடு இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால், இந்தக் காலகட்ட பகுப்புகள் எல்லா இடங்களிலும் இருக்கவில்லை. இந்தியாவை பொறுத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலகட்டங்களை, பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், செப்புக் காலம், இரும்புக் காலம் என்று மட்டுமே பிரிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, வெண்கலக் காலம் என்று தனியான காலப் பகுப்பாய்வு கிடையாது.

தொல்லியல் வரலாற்றை வெவ்வேறு காலமாக பிரித்துப் பார்ப்பது அவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்கிறார் இந்திய தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணா. "ஒரு இடத்தை காலத்தை வைத்து பிரித்துப் பார்ப்பது, அந்த காலகட்டத்தைப் புரிந்துகொள்ள வெகுவாக உதவும்" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டின் தொல்லியல் காலகட்டங்கள் எப்படி பகுக்கப்படுகின்றன?

தொல்லியல் வரலாற்றில் சில காலகட்டங்கள் இல்லாதது ஏன்?

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

படக்குறிப்பு, தமிழகத்தின் இரும்புக் காலத்துக்கு சொந்தமானவையாக அடையாளம் காணப்படும் பொருட்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல இடங்களில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்திருக்கின்றன.

உதாரணமாக குடியம், அதிரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகள், மதுரையில் ஆவியூர் போன்ற இடங்களில் பழைய கற்கால கருவிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், பழைய கற்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பொருட்கள் பெரும்பாலும் வட தமிழ்நாட்டில் மட்டுமே கிடைப்பதாக தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவின் 'தமிழ்நாட்டு வரலாறு - தொல் பழங்காலம்' என்ற நூல் குறிப்பிடுகிறது.

இதை உறுதிப்படுத்துகிறார் தமிழ்நாடு தொல்லியல்துறையின் இணை இயக்குனரான ஆர். சிவானந்தம். "பழைய கற்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பொருட்கள் திண்டிவனத்திற்கு தெற்கே உள்ள பகுதிகளில் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. ஆனால், நுண்கற்காலத்தைச் (கி.மு. 10,000 - கி.மு. 7,000) சேர்ந்த தொல்பொருட்கள் மதுரைக்குத் தெற்கே அதிகம் கிடைத்திருக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட பொருட்கள் வட தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை" என்கிறார் அவர்.

ஆகவே, வட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழைய கற்காலத்தில் இருந்து நுண்கற்காலத்திற்குச் செல்லாமல் நேரடியாக புதிய கற்காலத்திற்கு நகர்ந்துவிடுகிறது என்கிறார் சிவானந்தம். இரு பகுதிகளுமே புதிய கற்காலத்தில் இருந்து இரும்புக் காலத்திற்கு நகர்ந்தன.

"ஆனால், இதே காலகட்டத்தில் வடமேற்கு இந்திய பகுதிகளில் செப்புக் காலம்தான் இருந்தது. இதற்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகே அங்கு இரும்புக் காலம் தோன்றியது. அந்தக் காலகட்டம்தான் இந்தியாவில் இரும்புப் பயன்பாட்டின் துவக்கமாக இப்போதுவரை கருதப்பட்டது. ஆனால், இந்தக் கருதுகோள் மாறி வருகிறது. ஒரு பகுதியில் செப்புக் காலம் இருந்தபோது, மற்றொரு பகுதியில் இரும்புக் காலம் இருந்திருக்க முடியும் என்பதைத்தான் சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன," என்கிறார் சிவானந்தம்.

"வடமேற்கு இந்தியப் பகுதியில் இரும்புத் தாது கிடைக்காததால், அவர்கள் இரும்புக் காலத்திற்குள் நுழைவது தாமதமாக இருந்தது. ஆனால், தென்னிந்தியாவில் செப்புத் தாது கிடைக்கவில்லை; இரும்புத்தாதுதான் அதிகமாகக் கிடைத்தது என்பதால் செப்புக் காலமே தமிழ்நாட்டில் இல்லை. நேரடியாக இரும்புக் காலம் வந்துவிட்டது" என்கிறார் சிவானந்தம்.

ஆகவே, தொல்லியல் வரலாற்றைச் செங்குத்தாக காலப் பகுப்பாய்வு செய்து, புரிந்து கொள்வது இனியும் சரியாக இருக்காது என்கிறார் அவர்.

"ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் பொருட்களை வைத்துதான் அங்கு அவற்றைப் பயன்படுத்தும் நுட்பம் உருவாகிறது. வட தமிழகத்தில் கற்கருவிகளுக்கான கற்கள் எளிதாகக் கிடைத்தன. ஆகவே இங்கு வசித்த மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தினார்கள்.

தென்பகுதியில் அப்படிப்பட்ட கற்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதற்காக அங்கே மனிதர்கள் வசிக்கவில்லை என அர்த்தமில்லை. இனி வரும் ஆய்வுகளில் நிலவியல் சார்ந்தும் சூழல் சார்ந்து காலத்தைப் பகுப்பாய்வு செய்வதே சரியாக இருக்கும்," என்கிறார் சிவானந்தம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)