பெங்களூரு சாலையில் பாடிய பாப் பாடகர் எட் ஷீரன், மைக் ஒயரை துண்டித்து காவலர் - என்ன நடந்தது?
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அன்று பெங்களூருவில் பிரிட்டனை சேர்ந்த பிரபல பாப் இசைக் கலைஞர் எட் ஷீரன், திடீரென சாலையோரம் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாடிய போது காவல்துறையை சேர்ந்த ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இவ்வாறு பாடுவதற்கு அவர் உரிய அனுமதி பெறவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூருவின் சர்ச் தெருவில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஷாப்பிங், பொழுதுபோக்கு என எப்போதும் இந்த இடம் கலைக்கட்டும்.
இப்படிப்பட்ட இடத்தில் எட் ஷீரன் பாடியபோது அவரது மைக் வயரை காவல்துறை அதிகாரி ஒருவர் துண்டிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
- எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்?
- பல வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களுக்கு மதகஜராஜாவின் வெற்றி உதவுமா?
- விடாமுயற்சி திரைப்படம் 1997-ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா? அதன் கதை என்ன?
- மதகஜராஜா: 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது எப்படி?

அந்த பகுதியில் மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசலை தவிர்க்குமாறு எட் ஷீரனின் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக காவல்துறை ANI செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.
ஆனால், "எங்களுக்கு அந்த இடத்தில் பாட அனுமதி இருந்தது. இது முன்பே திட்டமிடப்பட்டது. நாங்கள் அங்கு தற்செயலாக வரவில்லை", என்று எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள NICE மைதானத்தில் அவரது 'Mathematics Tour' எனப்படும் சுற்றுப்பயண இசை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடைபெற்றது.
காவல்துறையின் இந்த செயலை எட் ஷீரனின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைத் தடுக்கும் அங்கிள்கள் (uncle) வாழும் உலகில் இருக்கிறோம்", என்று இந்தியாவில் பொது இடங்களில் உள்ள வரையறுக்கப்படாத விதிகள் பற்றி ரசிகர் ஒருவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் பாஜக கட்சியை சேர்ந்த கர்நாடக மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான பி.சி. மோகன், "உலகளாவிய நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளூர் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றவில்லை என்றால் அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை", என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், KM Music Conservatory
இரண்டாவது ஆண்டாக இந்தியாவுக்கு பயணம்
ஷீரன் 15 நாள் சுற்றுப்பயணமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே புனே, ஹைதராபாத் மற்றும் சென்னையில் இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தி முடித்துள்ளார். மேலும் மேகாலயா, டெல்லியிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த இசைநிகழ்ச்சியில் அவர் ஏ. ஆர் ரஹ்மானுடன் இணைந்து தனது 'ஷேப் ஆஃப் யு' பாடலுடன் ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடலையும் பாடினார்.
அவர் ரஹ்மானின் கே. எம். கன்சர்வேடரி இசைக்கல்லூரியின் மாணவர்களுடன் தனது 'பெர்ஃபெக்ட்' பாடலை கர்நாடக இசை முறைப்படியும் சேர்த்து பாடினார். அவர் சிதார் இசைக்கலைஞர் மேகா ராவூத்துடன் 'ஷேப் ஆஃப் யூ' பாடலை சிதாரில் வாசித்தார்.
மேலும் சென்னைக்கு வந்திருந்தபோது அவர் தலைக்கு மசாஜ் செய்துகொண்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது.

பட மூலாதாரம், www.instagram.com/teddysphotos/
மேலும் நேற்று (பிப்ரவரி 9) பெங்களூருவில் நடந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பாடகியான ஷில்பா ராவுடன் இணைந்து மேடையில் 'சுட்டமல்லே' என்னும் தெலுங்கு பாடலை பாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது இந்திய பாடகரும் நடிகருமான தில்ஜித் உடன் இணைந்து அவர் மேடையில் பாடினார்.
எட் ஷீரன், துவா லிபா, கோல்ட் ப்ளே இசைக்குழு போன்றவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியதைத் தொடர்ந்து இந்தியாவில் கான்சர்ட் என்னும் இசை நிகழ்ச்சிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளுக்கான பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பாங்க் ஆஃப் பரோடா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, கான்சர்ட் நிகழ்ச்சிகளின் மதிப்பு 700-900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













