விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா?

விரல் நகமும் ஆரோக்கியமும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

*இந்த தலைப்பிலான தொடர் கட்டுரைகளில் வெளியாகும் அனைத்து உள்ளடக்கங்களும் பொதுவான தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன, மேலும் அவை உங்கள் சொந்த மருத்துவர் அல்லது வேறு எந்த உடல்நலப் பராமரிப்பு வல்லுநரின் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகக் கருதப்படக்கூடாது. இந்த தளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஒரு பயனர் செய்யும் எந்தவொரு நோயறிதலுக்கும் பிபிசி பொறுப்பாகவோ அல்லது காரணமாகவோ இருக்காது. பிபிசி தளத்தில் சுட்டிக்காட்டப்படும் எந்தவொரு வெளி இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கும் பொறுப்பாக இருக்காது, மேலும் எந்தவொரு தளத்திலும் குறிப்பிடப்பட்ட அல்லது அறிவுறுத்தப்பட்ட வணிக தயாரிப்பு அல்லது சேவையை நாங்கள் ஏற்பதில்லை இல்லை. உங்கள் உடல்நலம் குறித்து எந்தவொரு கவலையும் இருந்தால், எப்போதும் உங்கள் சொந்த மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

விரல் நகங்கள் அதன் அடியில் இருக்கும் தோல் காயமடையாமல் பாதுகாக்கின்றன. உடலில் எங்காவது அரிப்பு ஏற்பட்டால் அதை சொரியவும் நகங்கள் உதவுகின்றன. ஆனால் இந்த நகங்களை பார்த்து நமது உடல் ஆரோக்கியம் பற்றி என்ன அறியலாம்?

நகங்களை கொண்டு உடலின் ஆரோக்கியத்தை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து பல்வேறு விசயங்கள் வாய்மொழியாக சொல்லப்படுகின்றன. நகங்களில் வெள்ளை கோடுகள் தெரிந்தால், உடலில் சுண்ணாம்பு சத்து குறைவு என்று பொதுவாக கூறப்படும். ஆனால் அதில் உண்மை உள்ளதா?

முதலில் சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம். நகங்கள் நமது தோலின் நீட்சியாகும். அவை கெரடின் எனும் புரதத்தால் ஆனவை. கெரடின் நமது கால் மற்றும் கை விரல்களின் மேற்பரப்பை பாதுகாக்கும் மிக கடினமான புரதம் ஆகும்.

விரல் நகமும் ஆரோக்கியமும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நகங்களின் அடியில் பிறை நிலா வடிவில் இருப்பவை லுனுலா எனப்படும். நகங்களாக இறுகிப்போகும் செல்களை உருவாக்கும் வளர்ச்சி மையமாக இவை இருக்கின்றன. இதற்கு கீழ் இருக்கும் படிமத்துக்கு பெயர் குடிகில். இறந்த செல்களால் ஆன இந்த படிமமே நகத்தை தோலுடன் இணைக்கிறது. குடிகில் நகங்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது, அதுவே நகங்களில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வேறு நுண்ணுயிரிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும்.

நகங்களை வைத்து ஒருவரின் உடல் நலம் குறித்த அடிப்படையான சில தகவல்களை மருத்துவரால் தெரிந்துகொள்ள முடியும். சரும பிரச்னைகள் முதல் சிறுநீரக நோய், அத்துடன் சில நேரங்களில் நோயெதிர்ப்பு சக்தி சரிவர செயல்படாததால் ஏற்படும் நோய்களைக் கூட நகங்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

விரல் நகமும் ஆரோக்கியமும்

பட மூலாதாரம், Getty Images

தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா?

பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் உடற்கூராய்வு மற்றும் நரம்பியல் அறிவியல் குறித்த விரிவுரையாளராகவும், பொது மருத்துவராகவும் பயின்று வரும் டான் பாம்கார்ட், தான் மருத்துவக் கல்லூரியில் கற்றுக்கொண்ட முதல் சில விசயங்களில் ஒன்று நகங்கள் பற்றியவை என்றார். "நகங்களில் 'கிளப்பிங்' (ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளுதல் என்று அர்த்தம்) இருக்கிறதா என்று கண்டறிவது நான் மருத்துவக் கல்லூரியில் கற்றுக்கொண்ட முதல் சில விசயங்களில் ஒன்று. அதாவது நகத்துக்கும், அதன் கீழ் உள்ள பகுதிக்கும் இடையே இடைவெளி இருக்காது, அது கிளப்பிங் எனப்படும்." என்கிறார்.

நகங்களுக்கு அடியில் உள்ள சதை மென்மையாகிவிடும். விரல்களுடன் உறுதியாக பொருந்தி இருக்காமல் நகங்கள் காற்றில் பறப்பது போல தோன்றும். விரல் நுனி பெரிதாகவும், வீக்கம் கொண்டதாகவும் தோன்றலாம். "வழக்கத்துக்கு மாறாக விரல்கள் வீங்கியிருப்பது போன்று தோற்றமளிக்கும். சொல்லப்போனால் விரல்கள் பார்ப்பதற்கு முருங்கைக்காய் மாதிரி இருக்கும்" என விளக்கினார் பாம்கார்ட்.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருப்பதன் அறிகுறியே கிளப்பிங் ஆகும். இது நுரையீரல் புற்றுநோயுடன் அதிகம் தொடர்புப்படுத்தப்படுகிறது. எனினும், இருதயத்தின் அறைகள், வால்வுகளில் தொற்று இருப்பதையும் இது குறிக்கக்கூடும். சீலியக் நோய், கல்லீரல் அழற்சி மற்றும் நுரையீரல் தொற்று ஆகியவற்றுடன் கூட தொடர்புப்படுத்தப்படுகிறது.

"'கிளப்பிங்' கொண்ட நகங்களுடன் ஒரு நோயாளியைப் பார்த்தால் உடனே அவருக்கு எக்ஸ் ரே எடுக்க வேண்டும், "ஏனென்றால் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கக்கூடும். ஆனால், ஒரு மருத்துவராக பயின்றுள்ள 14 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே கிளப்பிங் நகங்கள் கொண்ட நோயாளியை பார்த்துள்ளேன்" என்கிறார் பாம்கார்ட்.

விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது?

நகங்களில் தென்படும் வெள்ளை கோடுகள் லுகோனிசியா எனப்படும். அவை பொதுவாக விட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் இந்த கூற்றுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கின்றன. இளநிலை மாணவர்கள் செய்த சிறிய அளவிலான ஆய்வு ஒன்றில் ஒருவர் எடுத்துக்கொள்ளும் ஜின்க் (Zinc) அல்லது சுண்ணாம்பு சத்துக்கும் இந்த வெள்ளைக் கோடுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

எனினும், க்ரான் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், நகத்தில் லுகோனிசியாவும் கொண்டிருந்தார். அவருக்கு செலினியம் குறைபாடு இருந்தது. இந்த செலினியம் உட்கொள்தலை அவர் அதிகரித்த பின், வெள்ளை கோடுகள் மறைந்துவிட்டன.

விரல் நகமும் ஆரோக்கியமும்

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக லுகோனிசியா, நகத்தில் ஏற்படும் பாதிப்பினால் உருவாகிறது. கால் நகங்களை எங்காவது இடித்துக்கொள்வது, கதவில் விரல் நகம் உரசி செல்வது அல்லது கால்களின் மேல் கனமான பொருள் விழுவது போன்ற காரணங்களால் வெள்ளை கோடுகள் ஏற்படலாம்.

என்ன காரணமாக இருந்தாலும், நகங்களில் வெள்ளை கோடுகள் இருந்தால் அவை உங்களுக்கு இருக்கும் உடல் நல சிக்கல் குறித்த அறிகுறியே. ஈயம், பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் உடலில் ஆபத்தான அளவில் சேருவதை இந்த வெள்ளை கோடுகள் குறிக்கலாம். சரும நோயான சொரியாசிஸ் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

நகங்கள் மொத்தமும் வெள்ளையாக மாறிவிட்டால், ரத்தத்தில் புரதத்தின் அளவு குறைவாக இருப்பதை குறிக்கும். அதாவது, சிறுநீரக, கல்லீரல் அல்லது நீரிழிவு நோய் இருக்கலாம்.

"ஒருவரின் ரத்தத்தில் புரதம் மிக குறைவாக இருந்தால், பல நேரங்களில் அவர்களின் நகங்கள் மொத்தமும் வெள்ளையாகிவிடும்" என்கிறார் பாம்கார்ட்.

"குடிப் பழக்கத்தின் காரணமாக ஏற்படும் கல்லீரல் அழற்சி போன்ற கல்லீரல் நோய்கள் கொண்டவர்களிடம் வெள்ளை நகங்களை நாங்கள் பார்க்கிறோம்" என்கிறார் .

அதேநேரம், நீல நிற நகங்கள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதை உணர்த்துகின்றன. தீவிரமான இதய நோய் அல்லது மருத்துவரிடம் சென்று உடனடியாக பரிசோதிக்க வேண்டிய நோய் ஏதோ இருக்கிறது என்று அர்த்தம்.

நகங்களுக்கு அடியில் கருப்பு கோடுகள் தெரிந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். நகங்கள் எங்காவது அடிபடும்போது கருப்பு கோடுகள் உருவாகலாம் என்றாலும், அரிய வகை தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சப்புன்குயல் மெலனோமா என்ற இந்த புற்றுநோய் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

நகங்களுக்கு அடியில் நிற்காத ரத்தப் போக்கும் உடலில் தீவிர பிரச்னை இருப்பதற்கான அறிகுறியாகும். விரல் நகங்களுக்கு அடியில் மெல்லிய சிவப்பு நிறத்தில் ரத்தம் கசியும். "இப்படியான ரத்தக் கசிவை பார்த்தால், வாஸ்குலிடிஸ் எனப்படும் ரத்த நாளங்களின் வீக்கம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். இதய வால்வுகளில் ஏற்பட்ட தொற்று காரணமாகவும் இவை தென்படலாம்."

விரல் நகமும் ஆரோக்கியமும்

பட மூலாதாரம், Getty Images

பூஞ்சை பாதிப்பு

ஒரு நோயாளியை பார்க்கும்போது, நகங்களின் நிறம், தடிமன், வடிவம் ஆகியவற்றை மருத்துவர் கவனத்தில் எடுத்துக்கொள்வார். இதன் மூலம், பொதுவான சில நோய்களையும் கண்டறிய முடியும். "வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் உங்கள் கால் நகங்களில் காணப்பட்டால், பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கலாம்" என்று ஹல் பல்கலைகழகத்தின் காயம் ஆறுதல் குறித்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன் கூறுகிறார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலே மருந்து கடைகளில் நகங்களில் ஏற்பட்டிருக்கும் லேசான பூஞ்சை தொற்றுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், வெகு நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதை குணமாக்குவது சிக்கலாகிவிடும் (நகங்களில் தொற்று இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரியானது)

"நிறைய நேரங்களில், நகங்களில் நிற மாற்றங்கள் தோன்றினாலும் அவை நோய்க்கான அறிகுறியாக மக்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே, அது தொற்று மிக தீவிரமடைந்து கடைசியில் பாதநோய் மருத்துவரை அணுக வேண்டிவரும்" என்கிறார் வில்கின்சன்.

மெல்லிய நகங்கள்

நகங்களின் வடிவமும் உடலில் உள்ள சில நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். ஆரோக்கியமான கால் மற்றும் கை விரல் நகங்கள் வெளிப்புறமாக சற்று வளைந்திருக்கும். அவற்றில் குழிகள் ஏதேனும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது கோய்லோனிசியா எனும் நகக் கோளாறாக இருக்கலாம், நகங்கள் உட்பக்கமாக வளைந்தும், மெல்லியதாகவும் இருக்கும். சிலருக்கு நகங்களில் ஒரு துளி திரவத்தை சேமித்து வைக்கும் அளவு குழி இருக்கலாம். அவை குழி நகம் எனப்படும்.

குழி நகங்கள் ரத்த சோகைக்கான அறிகுறியாகும். உடலில் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல போதிய அளவு ரத்தம் இல்லை என்று அர்த்தம். உடலில் இரும்புச் சத்து குறைவதால் ரத்த சோகை ஏற்படுகிறது. எனினும் அது கோலியாக் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடலின் எதிர்ப்பு சக்தி சிறுகுடலை பாதிப்பது கோலியாக் நோயாகும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதையும் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறிக்கலாம். பியூஸ் கோடுகள் எனும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக செல்லக்கூடிய கோடுகள் நகங்களில் காணப்படும். அவை புரத குறைபாடு இருப்பதற்காக அறிகுறியாகும். இருப்பினும், இது நீரிழிவு மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் - இது உடலின் சில பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் குறைவதை உள்ளடக்கிய ஒரு கோளாறு ஆகும். பொதுவாக தமனிகளில் கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் குறையும். எனவே அதை பரிசோதிப்பது இன்னும் முக்கியம்.

"பியூவின் கோடுகள் ஜின்க் (Zinc) குறைபாட்டைக் குறிக்கலாம், அதே நேரத்தில் உடையக்கூடிய நகங்கள் ஹைப்போ தைராய்டிசம் அல்லது வைட்டமின் பி 7 குறைபாட்டின் அறிகுறியாகும்" என்று வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் குழந்தை மருத்துவர் மேரி பியர்சன் கூறுகிறார்.

"சில சந்தர்ப்பங்களில் இந்த அறிகுறிகளை தேடுவதில் நாங்கள் விடாமுயற்சியுடன் இருப்போம். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தையின் ஊட்டச்சத்து குறித்து நாங்கள் கவலைப்படும் சந்தர்ப்பங்களில் அல்லது நாள்பட்ட நோயை நாங்கள் சந்தேகிக்கும் இடங்களில்," என்று அவர் கூறுகிறார்.

விரல் நகமும் ஆரோக்கியமும்

பட மூலாதாரம், Getty Images

சில சமயங்களில், உடல்நல பிரச்சனை தவிர, வாழ்க்கை முறை சார்ந்த காரணிகளாலும் நகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, நகங்கள் உரிதல் பிரச்சனை. இது ஓனிகோஸ்கிசியா என்றும் அழைக்கப்படுகிறது. நகத்தின் மெல்லிய அடுக்குகள் அதன் விளிம்பிலிருந்து பிரிந்து பின்னால் உரிந்து செல்லும்."ஓனிகோஸ்கிசியா அதிகமாக கைகளை கழுவுதல், நகங்கள் உலர்த்துதல் மற்றும் அக்ரிலிக்ஸ் மற்றும் பிற நக பாலிஷ்களை பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படலாம்," என்று நியூயார்க்கில் உள்ள தி மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தோல் நோயியல் பேராசிரியர் ஜோஷுவா ஜெய்க்னர் கூறுகிறார்.

நகங்கள் ஒரு நபரின் அடிப்படை உடல்நலத்தை வெளிப்படுத்துவதற்கு என்ன காரணம் என்றால், "நகங்கள் தோலின் நீட்சிகள் ஆகும். உங்கள் தோல் உங்கள் உடலில் நடப்பதை பற்றி நிறைய உணர்த்திட முடியும்." என்று பாம்கார்ட் கூறுகிறார்.

"ஒரு நோயாளியைப் பற்றிய உங்கள் முதல் பார்வை பெரும்பாலும் படுக்கையின் பக்கத்தில் இருந்து தொடங்குகிறது, எனவே நீங்கள் அவர்களை முழுவதுமாக பார்ப்பதை அவர்களின் நகங்களுடன் தொடங்குகிறீர்கள், அவர்களின் கண்கள் மற்றும் வாயைப் பார்க்கிறீர்கள். பின்னர் நீங்கள் படுக்கையின் விளிம்பில் நின்றபடி மதிப்பீடு செய்யத் தொடங்குகிறீர்கள், அந்த ஆரம்ப கட்டத்திலிருந்தே நோயறிதலை பார்ப்பதன் மூலம் முயற்சிக்கிறீர்கள். எனவே, நகங்கள் நாம் பார்க்கும் முதல் விஷயங்களில் ஒன்றாகும்," என்று அவர் கூறுகிறார்.

பெரும்பாலான நேரங்களில் நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் தீங்கற்றவை. அவை நகத்தில் உருவான காயத்தால் ஏற்படலாம். ஆனால் நகத்தின் வடிவம், நிறம் அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றம் நிரந்தரமானதாக இருந்தால், நீங்கள் எப்போதும் ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)