நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபய் கே.
- பதவி, தூதாண்மை அதிகாரி மற்றும் வரலாற்றாசிரியர், பிபிசி ஹிந்திக்காக
நாளந்தாவின் கட்டடங்கள் தற்போது இடிபாடுகளாக மாறிவிட்டன. வரலாற்றின் இந்த பெரிய மடாலயம் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செயல்படுவதை நிறுத்தியது. ஆனால் அதன் மரபு இன்றும் பல்வேறு ஆய்வுத் துறைகளை முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த மடாலயம் அறிவியல், மருத்துவம், கணிதம், வானியல், தத்துவம், தர்க்கம், இலக்கணம், எழுத்தியல், புத்தக கலாசாரம், மொழிபெயர்ப்பு, இலக்கியம், கலை மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது.
நாளந்தாவில் முதல் மடாலயம் கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது. மௌரியர் காலத்தில் நாளந்தா விகாரை கட்டப்பட்ட போது, மாணவர்கள் தங்கி படிப்பைத் தொடரக் கூடிய கல்வி நிறுவனமாக அது திட்டமிடப்பட்டது.
ஐரோப்பாவில் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் வளாக கட்டமைப்புகள், இதன் மூலம் உத்வேகம் பெற்றதாக நம்பப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களின் சதுர வளாகங்களும் இதில் அடங்கும்.
கிமு மூன்றாம் நூற்றாண்டில் ஒரு மடாலயமாக நிறுவப்பட்டதிலிருந்து நாளந்தா ஒரு முறையான திட்டத்துடன் ஒரு மாபெரும் மடாலயமாக வளர்ந்தது.
- சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்தபோது என்ன நடந்தது?
- தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?
- இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்
- தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு

பல மடங்கள், வளர்ச்சியடைந்த உள் கட்டமைப்பு, ஒரு சுற்றுச்சுவர் குடியிருப்பு வளாகம், பல சதுர விகாரைகளை கொண்ட இது, சர்வதேச மாணவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பரந்த அளவிலான பாடங்களைக் கற்பிக்க அந்தக் காலத்தின் சிறந்த ஆசிரியர்கள் அங்கு இருந்தனர்.
நாளந்தா மகாவிகாரையில் நாகார்ஜுனா, வாசுபந்து, சாந்தரக்ஷிதா மற்றும் கமல்சிலா போன்ற சிறந்த அறிஞர்கள் இடைக்கால விஞ்ஞான முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்த தர்க்க முறையை (வாதத்திற்குப் பின் துணை வாதம்) மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.
இந்த அணுகுமுறை மத்திய ஆசியா, அரபு உலகம் மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

பட மூலாதாரம், Getty Images
கணிதம் மற்றும் வானியலின் மையம்
இந்திய கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆர்யபட்டா, ஆறாம் நூற்றாண்டில் நாளந்தா மகாவிகாரையில் மிகவும் முக்கியமான கணிதவியலாளர் ஆவார். 'ஆர்யபட்டியா' என்ற மூல நூலை அவர் எழுதினார்.
பூஜ்ஜியத்தை எண்ணாக அங்கீகரித்த முதல் கணிதவியலாளர் இவரே. இந்த புரட்சிகர கருத்து, கணக்கீடுகளை எளிதாக்கியது. பின்னர் இயற்கணிதம் மற்றும் கால்குலஸ் என அறியப்பட்ட கருத்துகளுக்கு வழிவகுத்தது.
பின்னர் பிரம்மகுப்தர் ஆர்யபட்டாவின் பணியை முன்னெடுத்துச் சென்றார். எட்டாம் நூற்றாண்டில் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 'பிரம்மாஸ்பூதசித்தாந்தா'வை எழுதியவர். எட்டாம் நூறாண்டில் இது அரேபிய மொழியில் மொழிபெயர்பு செய்யப்பட்டது.
'சிந்தஹிந்த்' என்ற பெயரில் இது புகழ் பெற்றது. இந்திய எண்கள், இயற்கணிதம், கால்குலஸ், அல்காரிதம்கள் மற்றும் இந்திய வானியல் ஆகியவற்றை இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக சீனாவில் கணிதம் மற்றும் வானியல் துறையில் நாளந்தாவின் செல்வாக்கு மிகவும் முக்கியமானது.

பட மூலாதாரம், Abhay K
665 முதல் 698 வரை சீனாவின் வானியல் பணியகத்தின் தலைவராக இருந்தவர் கௌதம் சித்தார்த்தா.
'அரசாங்கத்தில் பயன்படுத்தப்படும் அதிகாரபூர்வ நாட்காட்டியை உருவாக்குவதற்கும், பேரரசி வூ ஜேடியனுக்கு ஜோதிட மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளுக்கு வானியல் விளக்கங்களை வழங்குவதற்குமான பொறுப்பு அவரிடம் இருந்தது.'
நாளந்தாவில் வளர்ந்த தாந்திரீக பௌத்தம், ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் சீனாவில் பெரும் சக்தியாக மாறியது. உயர்மட்ட சீன அறிவுஜீவிகள் பலர் அதை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
பெரும்பாலான தாந்த்ரீக அறிஞர்கள் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் தாந்த்ரீக கணிதவியலாளர்களும் சீனக் கணிதவியலாளர்கள் மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இந்த ஆர்வத்திற்கான காரணம் ஆரம்பத்தில் எண்களின் கவர்ச்சியின் ஈர்ப்பாகவும் இருக்கலாம்.
சீன தாந்த்ரீக பௌத்த துறவி ஐ-சிங் அல்லது யி ஷிங் (கி.பி. 672 முதல் 717 வரை), அவரது காலத்தின் சிறந்த சீன வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். நாளந்தாவில் உருவான கணிதம் மற்றும் வானியல் பற்றிய இந்தியப் படைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர் அவர்.

பட மூலாதாரம், Dinodia Photos/Alamy
ஆசியாவின் கலைகள் மற்றும் கலாசாரத்தில் தாக்கம்
இரண்டு பெரிய மகாயான பௌத்த தத்துவங்களான மத்யமிகா மற்றும் யோகசாராவின் வளர்ச்சி மற்றும் பரிணாமத்தில் நாளந்தா பெரும் பங்காற்றியது.
பல நூற்றாண்டுகளாக யோகாச்சாராவுடனான மகாவிகாரையின் தொடர் ஈடுபாடானது, யோகசார தத்துவத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட வஜ்ராயனா அல்லது தந்திரயானா எனப்படும் ஒரு சிறப்புப்பள்ளியை உருவாக்கியது.
நாளந்தாவில் மத்யமிகா மற்றும் யோகசாரம் ஆகியவற்றை இணைத்து சந்தரக்ஷிதா ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கினார். இது யோகசாரம்-மத்யமிகா என்று அழைக்கப்படுகிறது.
நாளந்தாவில் உருவாக்கப்பட்ட தத்துவங்களை தெற்கு, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பரப்புவதிலும், இந்நாடுகளின் மக்களின் கலாசார மற்றும் மத அமைப்பை வடிவமைப்பதிலும் நாளந்தா மகாவிஹாரம் முக்கிய பங்கு வகித்தது.
ஐந்தாம் நூற்றாண்டுக்குள் நாளந்தா, கலையின் முக்கிய மையமாக மாறியது.
நாளந்தாவில் உருவான கலைப்படைப்புகள் உள்ளுர் தவிர மதுரா மற்றும் சாரநாத் ஆகிய இரண்டு இடங்களின் குணாதிசயங்களையும் கொண்டிருந்தன. இது எட்டாம் நூற்றாண்டில் பாலா காலத்தில் நாளந்தா ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்ற தனி கிளையாக வளர்ந்தது.
இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளின் கலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
வஜ்ராயன தத்துவத்தின் ஒரு பகுதியாக, தாந்த்ரீக பௌத்த கொள்கைகளுடன் இணைந்து முப்பரிமாண மண்டலங்களை உருவாக்கும் முறை நாளந்தா மகாவிகாரையில் உருவாக்கப்பட்டது.
பிகாரில் உள்ள கேஸரியா புத்த ஸ்தூபங்கள் மற்றும் ஜாவாவில் உள்ள உலகின் மிகப்பெரிய புத்த நினைவுச்சின்னமான போரோபுதூரின் கட்டுமானத்திலும் இது பயன்படுத்தப்பட்டது.
நாளந்தாவின் ஆச்சார்யர்கள் சமஸ்கிருதத்தில் நூல்களை இயற்றியதன் மூலம் சமஸ்கிருத மொழியை வளப்படுத்தினர்.
இந்த படைப்புகளில் தூய மற்றும் பாணினி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தத்துவ நூல்கள், பௌத்த தர்க்கம் மற்றும் நெறிமுறைகள் பற்றிய படைப்புகளும், கலப்பு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஸ்தோத்திரங்கள், மகாத்ம்யா, தந்திரம் மற்றும் சாதனா ஆகியவையும் அடங்கும்.
நாளந்தா மகாவிகாரையில் உள்ள சூத்திரங்களை நகலெடுத்து வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பெரும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பல நாடுகளின் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை வளப்படுத்தியது.
திபெத்தின் பண்பாடும் மொழியும் இந்த மரபுக்கு வாழும் சான்றாகும். திபெத்திய அறிஞர் தோன்மி சம்போடா நாளந்தா மகாவிகாரையில் பயின்றார். தேவநாகரி மற்றும் காஷ்மீரி எழுத்துகளின் அடிப்படையில் திபெத்திய மொழிக்கான எழுத்துகளை அவர் உருவாக்கினார்.
நாளந்தா மகாவிகாரையின் சௌராசி சித்தர்கள் 8 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஜெயின் துறவிகளுடன் சேர்ந்து, அபபிரம்சா கவிதையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். தோஹா, சௌபை மற்றும் பததாரி போன்ற புதிய கவிதை வடிவங்களுக்கு அவர்கள் பங்களித்தனர்.
வாய்மொழி மரபில் இருந்து எழுத்து மரபு

பட மூலாதாரம், REY Pictures/Alamy
கையெழுத்துப் பிரதி எழுதுதல், வரைதல், பாதுகாத்தல் மற்றும் நகலெடுக்கும் கலையை வளர்ப்பதில் நாளந்தா முக்கியப் பங்காற்றியது.
இவ்வகையில் நாளந்தாவில் கையெழுத்துப் பிரதி எழுதுதல், நகலெடுத்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் கலாசாரம் உலகெங்கிலும் வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபை விரைவாக மேம்படுத்தியது.
உலகின் முதல் வெளியிடப்பட்ட புத்தகம் 'பிரக்யாபார்மிதா சூத்ரா'வின் ஒரு பகுதியான 'தி டயமண்ட் சூத்ரா' ஆகும். நாகர்ஜுனா, நாளந்தாவில் இதை எழுதியதாக நம்பப்படுகிறது. புனித நூல்களை இயந்திரம் மூலமாக சுழல வைக்கும் தம்ம சக்கரம் நாளந்தாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
நாளந்தாவில் உள்ள மருத்துவ அறிவியல், கிழக்கு ஆசியாவின் குறிப்பாக சீனாவின் மருத்துவ மரபுகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாளந்தாவில் நடப்பில் இருந்த மேம்பட்ட கண் மருத்துவமும் இதில் அடங்கும். இது டாங் சீனாவை (டாங் பேரரசின் போது சீனா) அடைந்தது.
ஆரம்ப நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகார்ஜுனா எழுதிய 'ரஸ்ரத்னாகர்', இந்திய ரசாயன அறிவியலின் முதல் ஆய்வு நூலாக கருதப்படுகிறது.
திபெத், நேபாளம், சீனா, கொரியா, ஜப்பான், மங்கோலியா மற்றும் உலகின் பல பகுதிகளில் மருத்துவம், கண் மருத்துவம், வேதியியல் மற்றும் பிற உடல்நலம் தொடர்பான அறிவியல்களில் நாளந்தாவின் சிறந்த பாரம்பரியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு நாளந்தா மகாவிகாரையில் உருவாக்கப்பட்ட வஜ்ராயனா பள்ளியின் பௌத்த தாந்த்ரீக நூல்களில், ஹட் யோகாவின் ஆரம்பகால விளக்கங்கள் காணப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளாக ஹட் யோகாவின் வளர்ச்சி யோகாசனத்தை மக்களிடம் கொண்டு சேர்ந்தது. மத மற்றும் சடங்கு அம்சங்களில் இருந்து அதை விடுவித்தது. இதுவே உலகம் முழுவதும் அதன் வரவேற்பிற்கும் பிரபலத்திற்கும் காரணமாக அமைந்தது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் புத்தர் போதிசத்துவராக பிறந்து மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த கதைக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
நாகார்ஜுனா உருவாக்கிய நாளந்தா கல்வி மரபு, இந்த போதிசத்துவர்கள் வரலாற்று புத்தருக்கு சமமானவர்கள் என்ற கருத்தை பிரபலப்படுத்தியது.
கிறிஸ்தவத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் பௌத்தம் செல்வாக்கு செலுத்தியதற்கான உண்மையான வாய்ப்பு இருப்பதாக பல வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே நாளந்தா மகாவிஹாரம் செயல்படுவதை நிறுத்திவிட்ட போதிலும் அதன் புகழ் நீடித்தது. கூடவே அதன் பெயரில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மடங்களை நிறுவுவதற்கு ஊக்கமளித்தது.
உலகமெங்கிலும் நாளந்தாவுக்காக அர்பணிக்கப்பட்ட கல்வி அமைப்புகள்

பட மூலாதாரம், Sugato Mukherjee/BBC
1951 இல் பிகாரில் நவ நாளந்தா மகாவிகாரை நிறுவப்பட்டது. இங்கு சீனப் பயணி ஹியூன் சாங்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவு மண்டபம் 1984 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
கர்மா ஸ்ரீ நாளந்தா நிறுவனம் 1981 இல் சிக்கிமில் நிறுவப்பட்டது மற்றும் நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகம் 1987 இல் பிகாரின் நாளந்தாவில் நிறுவப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகம் 2010 இல் ராஜ்கிரில் நிறுவப்பட்டது.
நாளந்தாவின் பெயரால் வெளிநாடுகளில் பல கல்வி ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டதற்கு அதன் புகழும் பெருமையுமே காரணம்.
இலங்கையின் நாளந்தா கெடிகே எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த நேரத்தில் நாளந்தா மகாவிகாரை இயங்கி வந்தது.
திபெத்தில் லாசாவின் வடகிழக்கில் உள்ள ஃபென்-யுல் பள்ளத்தாக்கில் துறவியும் அறிஞருமான ரோங்டன் ஷேசா குன்ரிக் (1347-1449) என்பவரால் 1435 இல் ஃபென்போ நளந்திரா என்ற திபெத்திய நாளந்தா மடாலயம் நிறுவப்பட்டது.
அதில் 700 பௌத்த துறவிகள் வாழ்ந்தனர். ஆயிரக்கணக்கான துறவிகள் இங்கு வருவார்கள். திபெத்தின் பல்வேறு பகுதிகளில் அதன் கிளைகள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
நாளந்தாவின் நினைவாக உருவான கல்வி அமைப்புகள்
ஐரோப்பாவில், பிரான்ஸின் துலூஸிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாவூரில் உள்ள நாளந்தா மடாலயம் 1981 இல் லாமா ஜோபா ரின்போச்சே மற்றும் லாமா துப்டன் யேஷே ஆகியோரால் நிறுவப்பட்டது.
நாளந்தா மகாவிகாரையின் நினைவாக 1989 ஆம் ஆண்டு பிரேசிலில் நாளந்தா பௌத்த மையம் நிறுவப்பட்டது. இங்கு அசல் மடத்தின் மரபுகளைப் பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
1999 ஆம் ஆண்டில், நளந்தாராம் ரிட்ரீட் சென்டர் பிரேசிலில் நிறுவப்பட்டது. இது தென் அமெரிக்காவில் வன தியானத்தை வழங்கும் முதல் தேர்வாத் (இரண்டு பெரிய பௌத்த மரபுகளில் ஒன்று) மையமாக மாறியது.
கனடாவின் டொரண்டோவில் நாளந்தா காலேஜ் ஆஃப் புத்திஸ்ட் ஸ்டடீஸ், 2000 ஆம் ஆண்டில் சுவாண்டா எச்.ஜே. சுகுணஸ்ரீ என்பவரால் நிறுவப்பட்டது.
தெற்கு தாய்லாந்தின் மிகப்பெரிய நகரமான ஹாத்யாயில் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேச பௌத்த கல்லூரி (IBC) பல்வேறு பௌத்த மரபுகளை ஒன்றிணைப்பதற்கும் அவற்றுக்கிடையே புரிதலை மேம்படுத்துவதற்கும் நாளந்தாவின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கோலாலம்பூரின் தெற்குப் புறநகரில் 2007இல் நிறுவப்பட்ட நாளந்தா கழகம், அந்த நாட்டில் பௌத்த ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக நாளந்தா மகாவிகாரையின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள மனநல மருத்துவர் ஜோ லோயிஸோ என்பவரால் 'நாளந்தா இன்ஸ்டிடியூட் ஃபார் கான்டெம்ப்லேடிவ் சயின்ஸ்', 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1996 இல் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் வெயில் கார்னெல் மருத்துவக் கல்லூரியில் சிந்தனை அறிவியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்த போது இதை உருவாக்கும் யோசனை அவருக்குள் ஏற்பட்டது.
ஆசியா, ஐரோப்பா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நாளந்தாவின் காலடித் தடம் வளர்ந்து வருவதற்கான இந்த எடுத்துக்காட்டுகள், இனிவரும் காலங்களில் நாளந்தாவின் புகழ் மேலும் வளரும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அறிவையும், ஞானத்தையும், கருணையையும் பரப்பும் நாளந்தாவின் பண்டைய பாரம்பரியமானது, மனித குலம் வெறுப்பு, கோபம், விரக்தி, பேராசை ஆகியவற்றைக் கடந்து உள்ளேயும் வெளியேயும் அமைதியை அடைய உதவும்.
(சமீபத்தில் வெளியான 'நாளந்தா: ஹவ் இட் சேஞ்ட் தி வேர்ல்ட்' புத்தகத்தின் ஆசிரியர் அபய் கே.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












