பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?

பாம்பு – கீரி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

கீரி என்று சொன்னாலே, பாம்பு குறித்த நினைவு நமக்கு வந்துவிடும் அளவுக்கு, இந்த இரண்டு உயிரினங்கள் பற்றிய கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

கீரி - பாம்பு இடையே நிகழும் ஆக்ரோஷமான சண்டைகள் இயற்கைச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகள், பரிணாம தகவமைப்புகள், சூழலியல் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையிலான பகையுணர்வு சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானது.

ஆனால், அடிப்படையில் இவையிரண்டுக்கும் இடையே இருக்கும் இயற்கையான பகை மக்களிடையே பிரபலமான அளவுக்கு, அதற்கான காரணம் அதிகமாகப் பிரபலமடையவில்லை.

பாம்பு - கீரி இரண்டும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? அதில் கீரியே பெரும்பாலும் வெற்றி பெறுவது ஏன்? பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? இவையிரண்டும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பாம்பு – கீரி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கீரிகள் - அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகள்

கீரிகள், குறிப்பாக இந்திய சாம்பல் நிற கீரிகள், அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகளாக அறியப்படுகின்றன.

இவை நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட நச்சுப் பாம்புகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை. ஒரு சில பாம்புகளின் நஞ்சை தாங்கிக் கொள்ளும் எதிர்ப்பாற்றலும் இவற்றுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கீரிகளின் சுறுசுறுப்பு, வேகம் ஆகியவை, பாம்புகளின் தாக்குதல்களில் இருந்து விரைந்து தப்பித்து, எதிர்த் தாக்குதல் தொடுக்கும் திறனை அவற்றுக்கு வழங்குவதாகக் கூறுகிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தைச் சேர்ந்த உயிரியலாளர் முனைவர் தணிகைவேல்.

அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "கீரி அடிப்படையில், எலி, அணில் போன்ற சிறிய வகை பாலூட்டிகளில் ஒன்று. அவற்றின் உடலமைப்பு கிட்டத்தட்ட அணில்களை ஒத்திருக்கும். இருந்தாலும், அளவில் பெரிதாக இருப்பதால், அவற்றால் பாம்புகளை எதிர்த்துச் சண்டையிட முடிகிறது," என்று விவரித்தார்.

அவரது கூற்றுப்படி, ஒரு பாம்பு தாக்கும் போது, கடிபடாமல் உடலை வளைத்து தப்பிக்கவும், துரிதமாகத் திருப்பித் தாக்கவும் கீரிகளின் உடல் அமைப்பு அவற்றுக்கு ஒத்துழைக்கிறது.

பாம்பு - கீரி இடையே சண்டை ஏற்படுவது ஏன்?

பாம்பு – கீரி

பட மூலாதாரம், Getty Images

பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டைக்கு அடிப்படைக் காரணம், உயிர் பிழைத்தலுக்கான நிர்பந்தமே என்கிறார் ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் குறித்து இவர் ஆய்வு செய்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவை இரண்டுமே வேட்டையாடி உண்ணக் கூடியவை. அதோடு, இரண்டுமே நிலவாழ் உயிரினங்களாகவும் இருப்பதால் அடிக்கடி வாழ்விட மோதல்கள் நிகழ்கின்றன. ஆகவே, அவை ஒன்றையொன்று தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன," என்றார்.

அதாவது, ஓரே நிலப்பரப்பில் பாம்பு, கீரி இரண்டுமே வாழ்கின்றன. அதில் வாழும் பூச்சிகள், எலிகள், பல்லி ஆகியவற்றை உணவாகக் கொண்டாலும், கீரிகள் பாம்புகளையும் உணவாகக் கொள்கின்றன. ஆகவே, பாம்புகள் தமது இருப்புக்கு கீரிகளை அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.

பாம்பைக் கண்டாலே கீரி தாக்கும் என்ற கருதுகோள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, "பாம்புகள் கீரிகளின் உணவுப் பட்டியலில் இருக்கக் கூடிய ஓர் உயிரினம். அப்படியிருக்கும் போது, ஒரு வேட்டையாடியான கீரி, அதை எதிர்கொண்டால் உணவை விட்டுவிட்டுச் செல்லாதல்லவா!" என்கிறார் முனைவர் தணிகைவேல்.

நன்கு வளர்ந்த கீரிகளுடன் சண்டையிடுவது ஒரு பாம்புக்கு சவாலாக இருந்தாலும், கீரி குட்டிகளை சில பாம்புகளால் உணவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக பாம்புகளை கீரிகள் கருதுகின்றன.

பாம்பு – கீரி

பட மூலாதாரம், Getty Images

"நிலத்தில் குழி பறித்து வாழக்கூடிய உயிரினம் என்பதால், கீரிகளின் குட்டிகளை வேட்டையாடுவது பறவை போன்ற வேட்டையாடிகளுக்கு அவ்வளவு எளிதல்ல. ஆனால், நிலவாழ் ஊர்வன உயிரியான பாம்புகளுக்கு அது எளிதான காரியம். ஆகவே, கீரிகளுக்கு பாம்புகள் இயற்கை எதிரிகளாகி விடுகின்றன," என்று விளக்கினார் ரமேஸ்வரன்.

இப்படியாக, பாம்பின் இருப்புக்கு கீரியும், கீரியின் இருப்புக்கு பாம்பும் ஆபத்தை விளைவிப்பதால், அந்த அபாயத்தை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவை சண்டையிடுகின்றன.

"பரிணாம வளர்ச்சியில் ஒவ்வோர் உயிரினமும் தத்தம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினத்தைக் கண்டால், உடனடியாக எதிர்செயலாற்றும் தன்மையைப் பெற்றுள்ளன. ஒரு மானுக்கு புலியைக் கண்டால் ஓட வேண்டும் எனத் தெரிகிறது, எலிக்கு பாம்பைக் கண்டால் தப்பிக்க வேண்டும் எனத் தெரிகிறது.

இந்த நடத்தைகளை அவற்றுக்கு யாரும் பயிற்றுவிப்பதில்லை. பரிணாமப் பாதையில் அவற்றுக்கு உள்ளுணர்வாகப் பதிவாகியுள்ளன. கீரி, பாம்பு இடையிலான சண்டையும் அப்படிப்பட்டதே. இரண்டுமே வேட்டையாடி உயிரினங்கள். ஒரே வகையான நிலப்பரப்பில் இரண்டுமே வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று ஆபத்தை விளைவிக்க கூடிய திறனுள்ளது. ஆகவே, அவற்றுக்கு இடையே சண்டை நிகழ்வது இயற்கையானதுதான்," என்கிறார் ரமேஸ்வரன்.

பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா?

பாம்பு – கீரி

பட மூலாதாரம், Getty Images

பாம்பு வகைகளில் கீரிகள் சண்டையிடுவது நாகங்களுடன் மட்டுமே அல்ல என்று கூறிய தணிகைவேல், ஒருவேளை நாகப் பாம்புகள் படமெடுத்து நின்று சண்டையிடுவதால் அவற்றுடனான கீரிகளின் சண்டை எளிதில் தென்படுகிறது என்றார்.

கீரிகள், நாகம் போன்ற நஞ்சுள்ள பாம்புகளை உணவாக உண்ணக் கூடியவை. அவற்றின் நெகிழ்வுத்தன்மை மிக்க உடலமைப்பு, அதிவேகமாகச் செயல்படும் திறன் ஆகியவை பாம்புகளை ஆக்ரோஷமாக வேட்டையாட உதவுகின்றன.

அதேவேளையில், கீரிகளின் தற்காப்பு அமைப்பும் பாம்புக் கடி அவற்றின் உடலில் நேரடியாக படுவதைத் தவிர்க்கும் வகையில் இருக்கின்றது. பாம்புடன் சண்டையிடும் போது, தனது ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டு உடலைச் சற்றுப் பருமனாகக் காட்டிக் கொள்வதன் மூலம், அவை பாம்புகளை ஏமாற்றுகின்றன. இதன்மூலம், ஒருவேளை பாம்பு தாக்கினால்கூட, அதன் கடி கீரியின் உடலில் நேரடியாக படுவதில்லை.

இந்த உத்திகளின் மூலம், கீரியால் பாம்பை நெருங்கவும், அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் முடிகிறது.

பாம்பு - கீரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
பாம்பு – கீரி

பட மூலாதாரம், Getty Images

இவற்றோடு, கீரிகளின் உடலில், பாம்பின் நஞ்சை எதிர்க்கக் கூடிய தன்மை இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 1872ஆம் ஆண்டில் மூன்று கீரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இரண்டு கீரிகளுக்கு பாம்புக்கடியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில ஆய்வுகள், கீரியின் உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய சில பாம்பு நஞ்சுகளின் வீரியத்தை எதிர்க்கும் திறன் கொண்ட அசிடைல்கோலின் ஏற்பி இருப்பதாகக் கூறுகின்றன.

'பாம்பு, கீரியைப் போல் சண்டையிடுகிறார்கள்' என்று ஊர்ப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு. உண்மையில், பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க இதுவே காரணம்.

இது உயிர் பிழைத்தலுக்கான சண்டையின் அடிப்படையில் வேரூன்றிய பகை. இந்தத் தொடர்ச்சியான மோதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதிலும், முக்கியப் பங்கு வகிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)