வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ், கோவை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் தாக்குதலால் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் வயநாட்டில் முழு நாள் கடையடைப்பு நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக கேரள வனத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்டுப்பாடற்ற சுற்றுலா வளர்ச்சி, நிலச்சரிவால் யானைகளின் வலசைப்பாதை பாதிப்பு, கேரள காடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் யானைகளின் மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்த பிரச்னை பெரிதாவதற்குக் காரணமென்று பலரும் கூறியுள்ள நிலையில், கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் இந்த பாதிப்புகள் குறைந்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கேரளா: கோவில் திருவிழா ஊர்வலத்தின்போது மதம் பிடித்து மிரண்டோடிய யானை
- நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி
- வயநாடு நிலச்சரிவு - குடும்பத்தையே இழந்த இளம்பெண் ஸ்ருதிக்கு மீதமுள்ள நம்பிக்கை என்ன?
- வயநாடு நிலச்சரிவு: செல்போன் இயங்காத போது பல உயிர்களை காப்பாற்றிய பொழுதுபோக்கு சாதனம் 'ஹாம் ரேடியோ'

வயநாடு மாவட்டமானது, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்கள் சந்திக்கும் பகுதியாகவும், 3 மாநில காடுகளை உள்ளடக்கிய நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.
இயற்கையாகவே காட்டுப்பகுதிகளை அதிகமாகக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தில் புலி, யானை, சிறுத்தை, கரடி மற்றும் காட்டுமாடுகள் என காட்டுயிர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது.

இருவர் பலி
காடுகள் அதிகமுள்ள வயநாடு மாவட்டம், கடந்த சில ஆண்டுகளில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகவும் மாறியுள்ளது.
குடியிருப்புகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, மனித–காட்டுயிர் மோதலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது, பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, நீலகிரி மாவட்டம் பந்தலுாரைச் சேர்ந்த மனு (வயது 45) என்பவர், வயநாடு மாவட்டத்தின் நுால்புழா என்ற பகுதிக்குச் சென்றிருந்தபோது காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
அதற்கு மறுநாள் அட்டமலை பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான பாலகிருஷ்ணன் (வயது 27), கடைவீதியிலிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது, காட்டு யானை தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த பகுதி கடந்த ஆண்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
அதற்கு முன்பாக ஒரு மாதத்தில் இருவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்தனர். இந்தநிலையில், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சார்பில், பிப்ரவரி 13 அன்று முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக வயநாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ், ''கேரளாவில் கடையடைப்புக்கு யார் அழைப்பு விடுத்தாலும் அதற்கு ஆதரவு கிடைக்கும். இந்த கடையடைப்பும் வெற்றிகரமாகவே நடந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை இந்த கடையடைப்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத்துவங்கியுள்ளன. வியாபாரிகள் அமைப்புகள் கடை திறப்பதற்கு பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு கொடுத்தன.'' என்றார்.
வயநாடு மாவட்டத்தின் தலைநகரான கல்பெட்டா, கோழிக்கோடு–வயநாடு எல்லைப்பகுதியான லக்கிடி ஆகிய பகுதிகளில் கடைகளை சிலர் திறந்து வைத்திருந்திருந்தனர். அந்த கடைகளை அடைக்கச் சொல்லி, காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சியினர் வலியுறுத்தியபோது, வாக்குவாதம் நடந்துள்ளது. அவர்களில் சிலரை போலீசார் கைது செய்ததாகவும் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டில் ஜூலை 30 அன்று வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசால் நிதி வழங்கப்படவில்லை என்று கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முற்போக்கு முன்னணி சார்பிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பிலும் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.
இப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, இந்த கடையடைப்பை நடத்தி முடித்துள்ளது.

வனத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை
முழு கடை அடைப்புக்கு முதல் நாள் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று, காஞ்சிரப்பள்ளியில் நடைபெற்ற இந்திய விவசாயிகள் இயக்கத்தின் (INFAM) மாநில மாநாட்டில் பேசிய தாமரச்சேரி பிஷப் ரெமிஜியோஸ், மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் மனித–காட்டுயிர் மோதலுக்கு கேரள வனத்துறையின் செயலற்ற தன்மையே காரணமென்று குற்றம்சாட்டினார்.
அதற்குப் பொறுப்பேற்று, அத்துறையின் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். காஞ்சிரப்பள்ளி பிஷப் ஜோஸ் புலிக்கலும் அதையே கூறினார்
கேரளாவில் கிறிஸ்தவ மதத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சிரோ மலபார் பிரிவைச் சேர்ந்த 2 பிஷப்கள், இப்படி கேரள வனத்துறை அமைச்சரை ராஜினாமா செய்யச்சொல்லி பகிரங்கமாக வலியுறுத்தியது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்கள், அமைச்சரின் ராஜினாமா தங்கள் கோரிக்கையில்லை என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கல்பெட்டா சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) சித்திக், ''மனித–காட்டுயிர் மோதல் என்பது நீண்டகாலப் பிரச்னைதான். ஆனால் இப்போது அது பல மடங்கு அதிகமாகியுள்ளது. இதற்கு தீர்வு காண தேவையான நிதியை இரு அரசுகளும் ஒதுக்கவில்லை; கேரள வனத்துறை செயல்பாடற்று இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தே கடையடைப்பை நடத்தினோம். அமைச்சர் ராஜினாமா செய்வது எங்கள் கோரிக்கையில்லை. தேவை தீர்வு மட்டுமே.'' என்றார்.
இந்த குற்றச்சாட்டை கேரள வனத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய வயநாடு வடக்கு மண்டல வன அலுவலர் மார்ட்டின் லோவல், ''இது நீண்ட காலப்பிரச்னை. சமீபமாக அளவுக்கு அதிகமாகிவிட்டது என்பது தவறான தகவல். இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. வனத்துறை நடவடிக்கைகளால் இது குறைந்து வருகிறது என்பதே உண்மை.'' என்றார்.
கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2023–2024 ஆம் ஆண்டில் 22 பேரும், 2021–2022 ஆம் ஆண்டில் 35 பேரும் காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் கடந்த பிப்ரவரி 11 வரை 16 பேர் மரணமடைந்துள்ளனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த எண்ணிக்கை, 2011–2012 ஆம் ஆண்டில் 26, அதற்கு அடுத்த ஆண்டில் 10 என இருந்துள்ளது. 2017–2018 ஆம் ஆண்டில் 23 ஆக இருந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டில் 13 ஆகக்குறைந்துள்ளது.

நிலச்சரிவால் யானை வழித்தடம் பாதிப்பு!
கடந்த ஆண்டில் நிலச்சரிவு ஏற்பட்டபின், புதிய அம்பராம்பாலம்–வயநாடு யானை வலசைப் பாதை கடுமையாக பாதிக்கப்பட்டதும் அவை வெளியில் வருவதற்கு ஒரு காரணமென்று கேரள வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2024 ஜூலை இறுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், 12 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் பேரிடர் பாதித்த பகுதிக்கு அருகில் தனித்து இருந்ததைக் கண்டறிந்து, அவற்றை நிலம்பூர் காட்டுக்குக் கொண்டு செல்வதற்கு ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகின்றனர்.
நிலச்சரிவுக்குப் பின், காலம் காலமாக யானைகள் கடந்து செல்லும் சாய்வுப் பகுதிகளில் மண்ணின் தன்மை இலகுவாக மாறிவிட்டதால், அவற்றில் யானைகள் நடக்க அச்சப்பட்டு தனித்து விட்டதாகச் சொல்கிறார் சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆய்வாளரான விஷ்ணுதாஸ். இவர் 'ஹியூம்' எனப்படும் ஓர் ஆய்வு அமைப்பின் (HUME Centre for Ecology and Wildlife Biology) இயக்குநராகவுள்ளார்.
''கடந்த 15 ஆண்டுகளில் வயநாட்டில் கட்டுப்பாடற்று சுற்றுலாத்தொழில் வளர்ந்துள்ளது. காடுகளை ஒட்டியிருந்த பட்டா நிலங்கள் அனைத்திலும் வீடுகள், விடுதிகள், சாலைகள் என யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த வழித்தடத்தில் யானைகள் இடையூறின்றி சென்று வந்தன. இப்போது மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து, கட்டுமானங்களால் வேறு வழியின்றி திசை திரும்புகின்றன.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் விஷ்ணுதாஸ்.

காலநிலை மாற்றத்தால் மார்ச் மாதத்தில் வரும் வறட்சி, இப்போது பிப்ரவரி மாதத்திலேயே வந்து விட்டதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு, யானைகள் காட்டுப்பகுதிகளை விட்டு வெளியில் வருவதற்கு ஒரு முக்கியக் காரணமென்றும் விஷ்ணுதாஸ் தெரிவித்தார்.
கேரளாவில் வளர்ப்பு யானைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், காட்டு யானைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் இதற்குத் தீர்வு காண்பதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்கிறார் அவர்.
நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உட்பட்ட வயநாட்டிலிருந்து தமிழகத்தின் கூடலுார் பகுதிக்கு யானைகள் இடம் பெயரும் என்று கூறும் காட்டுயிர் ஆய்வாளர்கள், இந்த பாதையில் ஒவ்வொரு ஆண்டுகள் தடைகள் அதிகரித்து வருவதாகச் சொல்கின்றனர்.
''காட்டுக்குள் புல்வெளிகளாக இருந்த இடங்களில் யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் நடப்பட்டுள்ளன. அந்நிய களைச்செடிகள் அதிகரித்துவிட்டன. காட்டையொட்டியிருந்த யானைகளின் மேய்ச்சல் நிலப்பகுதிகளில் குடியிருப்புகள், சுற்றுலா சார்ந்த கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன. காட்டையொட்டியுள்ள பட்டா நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் விடிய விடிய இரைச்சல், அதீத ஒளி என்று யானையின் வழித்தடங்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டின் தரத்தை அதிகப்படுத்தும் அதே வேளையில் மேய்ச்சல் பகுதிகளை மீட்க வேண்டிய கட்டாயம் உள்ளது.'' என்றார் வயநாடு பிரக்ருதி சம்ரக்சன சமிதி (வயநாடு இயற்கை பாதுகாப்புக்குழு) தலைவர் பாதுஷா.

மனித–யானை மோதலுக்கு முன் வைக்கப்படும் தீர்வுகள்!
கிராம ஊராட்சி, பொது மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்களையும் ஈடுபடுத்தி, யானைகளின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தும் விஷ்ணுதாஸ், இதற்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கேரள வனத்துறை பயன்படுத்த வேண்டுமென்கிறார்.
அத்துடன், ''அந்தந்தப் பகுதிக்கேற்ப அகழி, தடுப்புச்சுவர்கள் போன்ற நடவடிக்கைகளே எடுப்பதோடு, சில யானைகளின் நடமாட்டம், தன்மையை கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அவற்றை இடம் மாற்றவும் முயற்சி எடுக்க வேண்டும்'' என்கிறார் அவர்.
இந்த பிரச்னை அதிகமாகி வருவதற்கு, யானை வழித்தடங்கள் துண்டாடப்பட்டு இருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளும் கேரள வனத்துறை அதிகாரி மார்ட்டின் லோவல், ''ஜனவரி–மார்ச் இந்த பிரச்னை அதிகரிக்கும்; அதன்பின் படிப்படியாகக் குறைந்துவிடும். யானை தாக்குதல் மற்றும் ஊடுருவல்களைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைப்பது, அகழி வெட்டுவது, சூரிய மின்வேலி அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றைக் கண்காணிக்கவும், ஊடுருவல்களைத் தடுக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
வயநாடு மனித–காட்டுயிர் மோதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டமே நடத்திய நிலையில், இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறுகிறார்

இப்பிரச்னைக்குத் தீர்வு காண கேரள அரசு 10 செயல்பாடுகள் கொண்ட ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சசீந்திரன், ''இரு ஆண்டுகளாக இந்த பிரச்னை அதிகரித்துள்ளது. அதற்கு முன் இந்த பிரச்னையே இல்லை என்று அர்த்தமில்லை. மனித–காட்டுயிர் மோதலுக்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் வனத்துறை அமைச்சரை அணுகி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வனத்துறை சட்டங்களில் போதிய திருத்தங்கள் செய்யாமல் மாநில அரசால் சில நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. ஆனால் அதைச் செய்வதற்கு மத்திய அரசு தயாராகயில்லை. இருப்பினும் கேரள அரசு இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்.'' என்று தெரிவித்துள்ளார்.
கேரள வனத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கை குறித்தும் பேசியுள்ள அவர், ''மக்களை நேசிக்கவும், ஆறுதல் படுத்தவும் பயிற்சி பெற்ற பிஷப்கள், அந்த வழியிலிருந்து சில நேரங்களில் விலகிச் செல்கின்றனர்'' என விமர்சித்துள்ளார். ''பிரச்னைக்கு தீர்வு காணாமல் நான் ராஜினாமா செய்வதால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமா?'' என்றும் சசீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












