பெண்ணுறுப்பு சிதைப்பு: 6 வயதில் இழைக்கப்பட்ட கொடூரம் - மீண்டு வந்த சோமாலிய பெண் செய்தது என்ன?

- எழுதியவர், புஷ்ரா முகமது
- பதவி, பிபிசி நியூஸ்
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் பெண் பிறப்புறுப்பை சிதைக்கப் பயன்படுத்தப்படும் முறைகள் குறித்த, உங்களை சங்கடப்படுத்தக்கூடிய விரிவான விளக்கங்கள் இருக்கின்றன.
எஃப்ஜிஎம் எனப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராகப் பேசியதற்காக உலகம் முழுவதும் உள்ள சோமாலி சமூகத்தினர் மத்தியில் ஷம்சா ஷராவே இழிவானவராகவே பார்க்கப்படுகிறார்.
அவருக்கு ஆறு வயது இருந்தபோது தனது கருவாய்க்கு என்ன நடந்தது என்பதை விளக்குவதற்காக அவர் வெளியிட்ட ஒரு காணொளியில் ஒரு ரோஜாப்பூவின் இதழ்களை பிளேடால் வெட்டி அந்தப் பூவில் எஞ்சியிருந்ததைத் தைத்திருந்தார்.
டிக்டோக்கில் இந்தப் பதிவு வைரலானது. 16 மாதங்களுக்கு முன்னர் இது பகிரப்பட்டது முதல் கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 லட்சம் பேர் இதைப் பார்த்துள்ளனர்.
பெண் பிறப்புறுப்பு சிதைவால் வலி மிகுந்த மாதவிடாய், சிறுநீர் கழிப்பதில் சிரமம், உடலுறவு கொள்வதில் வேதனை, ஒருவரின் கருவாய் (வெளிப்புறத்தில் உள்ள இதழ்கள் மற்றும் கிளிட்டோரிஸ்) வெட்டப்பட்டு, யோனிக் குழல் (vaginal opening) ஒரு சிறிய துளையாகக் குறுகிய நிலையில் இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் அபாயம் மற்றும் அதிர்ச்சி போன்ற விளைவுகள் இருந்தாலும், எந்த சோமாலியரும், அவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், பெண் பிறப்புறுப்பு சிதைப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை.
இன்ஃபிபுலேஷன் (infibulation) அல்லது "டைப் த்ரீ" என அறியப்படும் இந்த வகையான பெண் பிறப்புறுப்பு சிதைப்புதான் சோமாலியாவில் உள்ள பெரும்பாலான சிறுமிகளுக்கு நடைபெறுகிறது. பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தை வெட்டி விடுவது அவர்களது கன்னித்தன்மையை உறுதி செய்யும் என்ற நம்பிக்கை அங்கு நிலவுகிறது.
- பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்
- மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?
- பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
- மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?

பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்படுத்தப்படாத பெண்கள் மோசமான நடத்தையுள்ளவர்கள் அல்லது அதிக காம இச்சை கொண்டவர்கள் என்று சோமாலி சமூகத்தில் பலரும் கருதுகின்றனர். இது குடும்பத்தின் நற்பெயரைப் பாதிக்கும் அபாயம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
சோமாலியா உள்நாட்டு யுத்தத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் தப்பியபோது, பிரிட்டனில் 2001ஆம் ஆண்டு குடியேறிய இந்த 31 வயது டிக்டோக்கர் இதுபோன்ற பிரச்னைகளை, நகைச்சுவை உணர்வோடு, மக்கள் கவனத்தை ஈர்க்கும், சில நேரம் மனதை நொறுக்கும் நேர்மையோடு எதிர்கொள்ளத் தயங்குவதில்லை.
தான் 18 வயதை எட்டிய பிறகு சோமாலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, வன்புணர்வுக்கு ஆளான கொடூர நிகழ்வை அவர் டிக்டோக்கில் ஷம்சா அரவீலோ (Shamsa Araweelo) என்ற பெயரில் விவரித்துள்ளார். அதிலிருந்து தப்பி மீண்டும் பிரிட்டனுக்கு வருவதற்கு அவருக்கு ஆறு மாதங்கள் ஆனது.
ஆனால், தனது பெண்ணுறுப்பு தனக்குத் திரும்ப வேண்டும் என வெளிப்படையாகச் சொன்னதுதான் இவர் சந்திக்க வேண்டியதிலேயே பெரிய இழிவாக இருந்தது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கீழ் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை வராததால் அதற்கு அவரே பணம் செலுத்தியுள்ளார்.
சிறுமியாக இருந்தபோது, பிறந்த நாடான சியாரா லியோனுக்கு சென்றபோது பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்படுத்தப்பட்ட ஜெர்மன் குடிமகளான ஹஜா பில்கிசு, தம்மைத் தொடர்பு கொண்டபோதுதான் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை சாத்தியம் என்பதை ஷராவே தெரிந்துகொண்டார்.
ஷராவேயின் ரோஜாப்பூ காணொளிக்குப் பதிலளித்த பில்கிசு, ஜெர்மனியின் ஆசென்னில் உள்ள லுயிசென் மருத்துவனையின் மருத்துவர் டேன் மான் ஓடே தமது கிளிட்டோரிஸை சீரமைத்ததாக விளக்கம் அளித்தார்.
"மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும், அதுவும் இம்முறை எனது ஒப்புதலுடன் வெட்ட வேண்டும் என்ற எண்ணமே என்னை அச்சுறுத்தியது," என பிபிசியிடம் தெரிவித்தார் ஷராவே.
"ஆனால் இதை நான் எனது மனநலனுக்காக செய்ய வேண்டியிருந்தது. இனிமேல் எப்போதும் வலியை உணரக்கூடாது என விரும்பினேன்."
பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் மற்றும் லேபியா ஆகிய இரண்டையும் ஷராவேயின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களைக் கொண்டு சீரமைப்பது, வலியைக் குறைக்க நீர்க்கட்டிகள் மற்றும் வடுதிசுக்களை நீக்குவது, பாலியல் வாழ்வைச் சீர்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் இந்த அறுவை சிகிச்சை. சில நேரங்களில் யோனிக்குழல் இயல்பான நிலைக்கு வர அதை அகலப்படுத்துவதும் உண்டு.

பட மூலாதாரம், Shamsa Sharawe
பெண் பிறப்புறுப்பு சிதைப்பை ஒழிப்பது என்ற அவரது மன உறுதிக்காக பிபிசியின் சிறந்த நூறு பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற ஷராவே, தம்மைப் போன்ற பெண்கள் தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, பிரச்னையில் இருந்து மீண்டு வருவதற்காக ஜெர்மனிக்கு தாம் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ள முன்வந்தார்.
இருப்பினும், சோமாலிய சமுதாயத்துக்குள் இருக்கும் இந்த அமைப்பை எதிர்கொள்ளத் தேவையான மன உறுதியைப் பெற, பல ஆண்டுக்கால கொடுமைகளையும் தோற்றுப்போன இரண்டாம் திருமணத்தின் அதிர்ச்சியையும் அவர் கடக்க வேண்டியிருந்தது.
பத்து வயது மகளின் தாயான ஷராவே, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தம்மைக் கைவிட்டுவிட்டதாக உணர்கிறார்.
அது பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு ஆளானவர்களின் யோனிக் குழல் திறப்புக்கான அறுவை சிகிச்சையை மட்டுமே அளிக்கிறது. ஆனால், நீக்கப்பட்ட திசுக்களை மறுசீரமைக்கவோ, ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்யவோ உதவாது.
ஜெர்மனியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நிதியைச் சுயமாகவே தேடிக்கொள்ள ஷராவே முடிவு செய்தார்.
ஆன்லைனில் நிதி திரட்டுவதன் மூலம் அவர் 25,000 பவுண்டுகளை (32,000 டாலர்கள்) திரட்டி, டிசம்பரில் நான்கரை மணிநேர அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார்.
ஜெர்மனியில் அவர் மூன்று வாரங்கள் இருந்தார். அங்கிருந்து திரும்பிய பின்னர், கற்பித்தல் உதவியாளரும் (teaching assistant), பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பாளாருமான இவர், குணமடையும் வரை பல மாதங்கள் அவரது வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்தார்.
அறுவை சிகிச்சைகான செலவு தவிர குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கான செலவு மற்றும் பிற செலவுகள் காரணமாக அவர் இன்னமும் கடனில் இருக்கிறார். மருத்துவமனைக்கு சுமார் 3,000 பவுண்ட் தர வேண்டியுள்ளது.
"நமக்கு நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளாத அல்லது நாமே உருவாக்கிக் கொள்ளாத சேதங்களுக்காகச் செலவு செய்ய வேண்டியிருப்பது உண்மையிலேயே நியாயமற்றது," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
வெவ்வேறு அளவிலான தீவிரத்தன்மையுடன் நான்கு வகையான பெண்ணுறுப்பு சிதைப்புகள் உள்ளன.
- கிளிட்டோரைடெக்டோமி – உணர்திறன் அதிகமுள்ள கிளிட்டோரிஸை பகுதியாகவோ, முழுமையாகவோ அகற்றுவது
- எக்ஸிசன் - பகுதியாகவோ, முழுமையாகவோ கிளிட்டோரிஸை அகற்றுவதுடன், யோனியைச் சுற்றியுள்ள வெளிப்புறத் தோல் பகுதிகளை (லேபியா மைனோரா) நீக்குவது
- இன்ஃபிபுலேஷன் - யோனியைச் சுற்றியுள்ள வெளிப்புறத் தோல்களை வெட்டி மாற்றியமைப்பது (லேபியா மைனோரா மற்றும் லேபியா மெஜோரா). ஒரு சிறு துளையை மட்டும் விட்டுவிட்டு தைத்துவிடுவதும் பெரும்பாலும் உண்டு
- கிளிட்டோரிஸ் அல்லது பிறப்புறப்புப் பகுதியில் துளையிடுவது, குத்துவது, அறுப்பது, சுரண்டுவது, சுடுவது போன்ற ஊறு விளைவிக்கும் நடைமுறைகள் அனைத்தும் நான்காவது வகையில் சேரும்.
இந்த சேதத்தைச் சரிசெய்ய கடந்த 20 ஆண்டுகளில், பிரான்ஸ் அறுவை சிகிச்சை மருத்துவர் பியரி ஃபோல்டெஸ்ஸால் உருவாக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்ளன.
கிளிட்டோரிஸை மறுசீரமைக்கும் சிகிச்சை பெல்ஜியம், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் பொது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் கிடைக்கிறது.
அதேநேரம், பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளும் பெண்களும் அதிகம் வசிக்கும் ஆப்பிரிக்காவில், இந்த அறுவை சிகிச்சைக்கான வசதி கென்யா மற்றும் எகிப்தில் மட்டுமே கிடைக்கிறது. இதில், கென்யாவில் நோயாளிகள் சுமார் ஆயிரம் பவுண்டுகள் செலுத்த வேண்டும், எகிப்தில் அரசு-சாரா தொண்டு நிறுவனங்கள் செலவை ஏற்றுக்கொள்ளக்கூடும்.
"அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களாலும் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துவிட முடியாது. இது மிகவும் சிக்கலானது என்பதுடன் ஒவ்வொரு நோயாளியும் தனித்தன்மையுடையவர்," என்கிறார் கென்யாவில் உள்ள சிறப்பு மருத்துவரான ஆடன் அப்துல்லா.
ஆனால், எந்தவிதமான பெண்ணுறுப்பு சேதப்படுத்தலுக்கு ஆளான பெண்ணும் இந்த அறுவை சிகிச்சை மூலம் பலனடைய முடியும் என்கிறார் அவர். "அது குழந்தை பிறப்புக்குச் சாதகமான விளைவுகளைத் தரும், குறிப்பாக இது யோனிக் குழாய் குறுகல் தொடர்புடைய 'டைப் 3' பாதிப்பு உடையவர்களுக்குப் பலனளிக்கும்."
உடலுறவின்போது ஏற்படும் வலி போன்ற பிற பிரச்னைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்படலாம் அல்லது குணப்படுத்தப்படலாம் என்கிறார் அவர். தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சுயமரியாதை அதிகரிப்பதாகவும், அவர்கள் முழுமையாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
அவரது அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மேலும் முழுமையாக உணர்வதாக மில்கிசு கூறுகிறார். அவரது அறுவை சிகிச்சை ஜெர்மனிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது. "அறுவை சிகிச்சை செய்துகொண்டது உண்மையில் ஒரு வலுவான முடிவாக இருந்தது, எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழியாக உள்ளது," என்கிறார் அவர்.
முப்பது வயதான ஆட்சேர்ப்பு முகவரான அவர், மற்றவர்கள் முடிவெடுக்கும் முன் முழுமையாக ஆய்வு செய்ய ஊக்குவிக்கிறார். "மறுசீரமைப்பு என்பது கிளிட்டோரிஸை மட்டும் மறுசீரமைப்பது இல்லை. வெட்டப்பட்ட பெண்கள் பலருக்கு அடர்த்தியான வடுதிசுக்கள் உள்ளன. இதுகுறித்து நீங்கள் உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும், உங்களது கருவாயை எப்படி மேலும் நெகிழ்தன்மை கொண்டதாக ஆக்கலாம் என ஆலோசிக்க வேண்டும்" என்றார்.
"இயல்பான உடலுறவு அனுபவத்தைப் பெறுவதிலும்" தனது உடல் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதிலும் உறுதியாக இருந்த பில்கிசு, கடந்த மூன்று ஆண்டுகளில் 3 அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் சுமார் ஆறு மணிநேரம் நீடித்தது.
"அது எனது உடல் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் மயக்க மருந்தின் தாக்கத்தில் வைக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னரும் நான் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது," என்கிறார் பில்கிசு.

இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் உடல் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக இருப்பதால் எகிப்தை சேர்ந்த மருத்துவர் ரெஹம் ஆவத் போன்ற சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சையற்ற முறைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
ரெஸ்டோர் கிளினிக் என்ற மருத்துவமனையின் இணை நிறுவனரான இவர், "மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிவாரணம் அளிக்கலாம், ஆனால் சில நேரங்களில், மிக முன்னேறிய அறுவை சிகிச்சை நுட்பங்கள்கூட பாலியல் செயல்பாட்டைச் சரி செய்ய முடியாத அளவுக்கு பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வெட்டு மிக மோசமாக இருப்பதுண்டு," என்று கூறுகிறார்.
"அனைவருக்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 2020இல் தொடங்கப்பட்ட அவரது மருத்துவமனையில் பாதிப் பேருக்கு திசு உற்பத்தியை ஊக்குவிக்கும் பிளேட்லெட்கள் அதிகமுள்ள பிளாஸ்மா ஊசி செலுத்துவது போன்ற அறுவை சிகிச்சையற்ற மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
"பிளாஸ்மா செலுத்தப்படும் இடங்களில், திசுக்கள் மீளாக்கம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரித்து வீக்கத்தைக் குறைக்கலாம்," என்கிறார் அவர்.
அதேநேரம், அதிக பொருட்செலவு காரணமாக இதுபோன்ற சிகிச்சைகள் பலருக்கும் எட்டாததாகவே இருப்பதாக எச்சரிக்கிறார் அவர்.
தாங்கள் வெட்டப்பட்ட அனுபவம் நினைவில் உள்ள பெண்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள உதவும் மனநல சிகிச்சைகளும் அவரது மருத்துவமனையில் அளிக்கப்படுகின்றன.
மறுசீரைமைப்பு அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்வோருக்கு அதன் விளைவுகள் உணர்ச்சிகரமானதாக இருக்கலாம்.
"முதல் முறையாக நான் என் கிளிட்டோரிஸை பார்த்தபோது திடுக்கிட்டுப் போனேன், ஏனென்றால் இது எனக்குச் சொந்தமானதல்ல எனத் தோன்றியது," என்கிறார் பில்கிசு. அவருக்கு 'டைப் 2' பெண் பிறப்புறுப்பு சிதைப்பு மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு எட்டு வயது.
மாற்றத்துக்குப் பழக காலம் எடுக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஷராவே, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இயல்பான ரத்தப் போக்கை எப்படிச் சமாளிப்பது எனவும் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் முழுமையாகக் குணமடைய ஆறு மாதங்கள் ஆகும். ஒரு பரிசோதனைக்காக ஜெர்மனிக்கு செல்ல வசதி இருக்கவில்லை என்பது அவரைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"ஆனால், ஒரு முழுமையான பெண்ணாக இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்கு இப்போது தெரிகிறது. இப்போது நான் ஒரு மகிழ்ச்சியான பெண்," என்கிறார் அவர்.
"என்னால் வலி அல்லது அசெளகரியம் இல்லாமல் உள்ளாடை அணிய முடிகிறது. என்னால் பேண்ட் அணிய முடிகிறது. நான் இயல்பாக உணர்கிறேன்."
சமூக ஊடகங்களில் சில சோமாலியர்களிடம் இருந்து அவர் எதிர்ப்பைச் சந்தித்தாலும், அவரது குடும்பதினர் சிலர் தங்களது ஆதரவால் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
அவரது உறவினர்களில் ஒருவர், அவரது மனைவிக்கு இந்த சிகிச்சை பிரிட்டனில் கிடைக்குமா என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.
"அவர் மனைவிக்கு செய்யப்பட்ட பெண் பிறப்புறுப்பு சிதைப்பு 50க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அவரை பாதிக்கிறது எனத் தெரிந்ததால், அவர் சங்கடமடைந்தார். அவரது மனைவியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரும்பினார், எனென்றால் தரமான நல்ல வாழ்க்கையை வாழ நாம் அனைவரும் தகுதியானவர்கள்."
இந்தச் செய்தியில் உள்ள பிரச்னைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்குத் தேவைப்படும் ஆதரவு பற்றிய விவரங்களை பிபிசி ஆக்ஷன் தொலைபேசி வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












