பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெச்-1பி விசா பெறும் இந்தியர்களின் முக்கிய கவலை என்பது அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் தான்
    • எழுதியவர், சிராஜ், பிபிசி தமிழ் & ஐயப்பன் கோதண்டராமன், வாஷிங்டனிலிருந்து பிபிசி தமிழுக்காக

கடந்த 25-30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களில், அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) வல்லுநர்கள் என எடுத்துக்கொண்டால், அதில் இந்தியர்கள் கணிசமாக உள்ளனர்.

அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே, குறிப்பாக ஹெச்1பி விசா வைத்துள்ள தொழிலாளர்கள் மற்றும் ஐடி வல்லுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, பெற்றோரின் குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.

அதே சமயம், டிரம்பின் புதிய கொள்கை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த மாதம் சியாட்டிலைச் சேர்ந்த ஒரு ஃபெடரல் நீதிபதி டிரம்பின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்தார். 14 நாட்களுக்கு, டிரம்ப் பிறப்பித்த செயலாக்க உத்தரவு நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த வாரம் மேரிலாந்து மாகாணத்தின் ஃபெடரல் நீதிபதி ஒருவரும் டிரம்பின் உத்தரவுக்குத் தடை விதித்தார்.

பிப்ரவரி 10 அன்று, நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் ஃபெடரல் நீதிபதி ஒருவர் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தடை விதித்துள்ளார்.

இதன் பொருள் என்னவென்றால், நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தீர்க்கப்படும் வரை, டிரம்பின் உத்தரவு நடைமுறைக்கு வராது. ஆனால், உச்ச நீதிமன்றம் நினைத்தால் எந்தவொரு முடிவையும் மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 4.78 கோடியை எட்டியது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 14.3 சதவிகிதம் ஆகும். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 28 லட்சம்.

இந்நிலையில், டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை எப்படி பாதிக்கும்?

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய சட்டத்தால் தங்கள் குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம் என, அமெரிக்கவாழ் தமிழர்கள் கூறுகின்றனர்

அமெரிக்கவாழ் தமிழர்கள் கூறுவது என்ன?

டிரம்பின் புதிய உத்தரவு, தங்கள் குழந்தைகளின் குடியுரிமை, குடும்ப நிலைமை, வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கலாம் என்று பிபிசி தமிழிடம் பேசிய அமெரிக்கவாழ் தமிழர்கள் கூறுகிறார்கள்.

ஐடி வல்லுநர்கள் பெரும்பாலும் ஹெச்1பி விசாவில் வேலை செய்கிறார்கள் என்பதையும், அவர்கள் நேரடியாக பெரிய நிறுவனங்களால் பணியமர்த்தப்படாமல், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விர்ஜினியா மாகாணத்தில் கடந்த பத்து வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஐடி துறையில் பணிபுரியும் இந்திய தமிழர் வினய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். இவர் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

"புதிய சட்டத்தால் எங்கள் குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது. இதனால், அவர்கள் ஹெச்-4 விசா வைத்திருக்கும் குழந்தைகளாக இருந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம்." என்று கவலையுடன் கூறுகிறார் வினய்.

ஹெச்-4 (H-4) விசா என்பது, ஹெச்1பி ஊழியர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு (திருமணமாகாத) வழங்கப்படும் ஒரு அமெரிக்க விசா.

தொடர்ந்து பேசிய வினய், "இதனால், கிரீன் கார்டு பெறும் வரை இவர்கள் அமெரிக்காவில் நிலையான குடியேற்ற வாழ்க்கையை அமைக்க முடியாது. அமெரிக்காவில் பிறந்த இந்திய குழந்தைகள் தற்போது குடியுரிமை பெற்றால், அவர்கள் நிதி உதவி, கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெறலாம்."

"இனி பிறப்பு அடிப்படையில் குடியுரிமை கிடைக்காமல் போனால், அமெரிக்க குடியுரிமை உள்ளவர்களுக்கான பல்வேறு கல்விச் சலுகைகளை இவர்கள் இழக்க நேரிடும்." என்கிறார்.

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, வேறு நாட்டிலிருந்து பெற்றோர் தனது குழந்தையுடன் அமெரிக்காவுக்கு வந்தால், பிள்ளைக்கு 21 வயதாகும்போது பெற்றோரிடம் கிரீன் கார்டு இருக்க வேண்டும்

கிரீன் கார்டு - பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது சுலபமல்ல.

அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் 1,40,000 கிரீன் கார்டுகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவிகித ஒதுக்கீடு என்ற வரம்பு உள்ளது. இது, இந்திய மற்றும் சீன தொழில் வல்லுநர்களுக்குப் பாதகமாக உள்ளது. ஏனெனில், மற்ற நாடுகளில் இருந்து வரும் வல்லுநர்களைவிட இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

"இந்தியர்களுக்கான கிரீன் கார்டு பெறுவதற்கான 'காத்திருப்பு காலம்' என்பது ஏற்கெனவே 10-20 ஆண்டுகளாக உள்ளது. புதிய குடியுரிமை சட்டங்களால் சில விசா விதிகளில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், இந்த காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கலாம்." என்கிறார் வினய்.

மேரிலாந்து மாகாணத்தில் வசிக்கும் இந்திய தமிழரான அனுஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கிரீன் கார்டு பெறுவதற்காக சுமார் ஒன்பது வருடங்களாக காத்திருக்கிறார்.

"எனது மகன் விரைவில் கல்லூரியில் சேர உள்ளான். கிரீன் கார்டு பெறும் வரை, எங்கள் பிள்ளைகள் சர்வதேச மாணவர்கள் (International Students) போல கருதப்படலாம். இதனால் அதிக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்."

"நாங்கள் கிரீன் கார்டு பெற காத்திருக்கும்போது, எங்கள் பிள்ளைகள் 21 வயதைக் கடந்தால், அவர்கள் எங்களது கிரீன் கார்டு அப்ளிகேஷனில் இருக்க முடியாது. அவர்கள் தனியாக விசா அல்லது கிரீன் கார்டு பெற வேண்டிய நிலை ஏற்படும்." என்கிறார் அனுஷா.

அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, வேறு நாட்டிலிருந்து பெற்றோர் தனது குழந்தையுடன் அமெரிக்காவுக்கு வந்தால், பிள்ளைக்கு 21 வயதாகும் போது பெற்றோரிடம் கிரீன் கார்டு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்தக் குழந்தை தனது பெற்றோரின் விசாவை சார்ந்து வாழ முடியாது. அவருக்கென தனி விசா தேவை.

பிப்ரவரி 19-க்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் நிலை

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்
படக்குறிப்பு, அக்ஷய் மற்றும் நேஹா, தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகக் கூறுகின்றனர்

நேஹா சத்புடே மற்றும் அக்ஷய் பைஸ், அமெரிக்காவில் பத்து வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் இந்தியத் தம்பதியினர். ஹெச்1பி விசா மூலம், கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருவரும் பணியாற்றி வருகிறார்கள்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பிப்ரவரி 26ஆம் தேதி, தங்களது முதல் குழந்தையை அமெரிக்க மண்ணில் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்.

தங்களது குழந்தைக்கு பிறப்பின் அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு, அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"இது எங்களை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால், அடுத்து என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலை. மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், எங்கள் குழந்தையின் குடியுரிமை நிலை என்னவாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்புகிறார் அக்ஷய்.

அவர்களின் கவலை நியாயமானது என்று கூறுகிறார் நியூயார்க்கைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் சைரஸ் மேத்தா.

"இங்கு பிறந்த ஒரு நபருக்கு குடியேறியவர் அல்லாத அந்தஸ்தை வழங்க அமெரிக்க சட்டத்தில் எந்த வசதியும் இல்லை." என்கிறார் அவர்.

குழந்தை பிறப்புக்கு மருத்துவர் குறித்த தேதி நெருங்கி வருவதால், அதற்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என அவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு மருத்துவர் அளித்த பதில், 'எல்லாம் சரியாக நடந்தால், 40வது வாரத்தில் பிரசவ வலியைத் தூண்டி, குழந்தை பெறலாம்' என்பது.

ஆனால், நேஹா மற்றும் அக்ஷய் காத்திருக்க முடிவு செய்துள்ளார்கள்.

"அனைத்தும் இயற்கையாகவே நடக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்." என நேஹா கூறுகிறார்.

"பாதுகாப்பான பிரசவமும் என் மனைவியின் உடல்நலமும் தான் எனது முன்னுரிமை. குடியுரிமை இரண்டாவது பட்சம் தான்." என அக்ஷய் கூறுகிறார்.

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் உள்ள பல மருத்துவர்கள் டிரம்பின் உத்தரவை எதிர்க்கின்றனர்

டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக குழந்தைகளை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு முன்னதாகவே பெற்றுக்கொள்ள புலம்பெயர்ந்த குடும்பங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள் சங்கத்தின் (ஏஏபிஐ) தலைவர், மருத்துவர் சதீஷ் கதுலா, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்களை அணுகி, விசாரித்தார்.

'நியூ ஜெர்சியில் ஒரு சில நிகழ்வுகளை' தவிர, பெரும்பாலான மருத்துவர்கள் அத்தகைய குடும்பங்களை எதிர்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

"குடியுரிமைக்காக குழந்தைகளை முன்னரே சிசேரியன் மூலம் பெற்றுக்கொள்வதை நான் எதிர்க்கிறேன். எங்கள் மருத்துவர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள், மருத்துவ ரீதியிலான அவசரச் சூழல் ஏற்பட்டால் ஒழிய அதைச் செய்ய மாட்டார்கள்." என்கிறார் மருத்துவர் சதீஷ் கதுலா.

ஹெச்-1பி விசா வைத்துள்ள இந்தியர்களின் கவலை

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் 72% ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. கேட்டோ இன்ஸ்டிடியூட் (Cato Institute) தகவலின்படி, கிரீன் கார்டு பெற காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 11 லட்சம் (2023ஆம் ஆண்டில்).

தற்போது வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு பெறும் இந்தியர்கள், 2012இல் விண்ணப்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்டோவின் குடியேற்ற ஆய்வுகளுக்கான இயக்குநர் டேவிட் பியர் தனது அறிக்கையில், "கிரீன் கார்டுகளுக்காக புதிய இந்திய விண்ணப்பதாரர்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருக்கும். அதில் 4,00,000 பேர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்பே கூட இறக்க நேரலாம்" என்று எச்சரிக்கிறார்.

இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான பிற நாடுகளின் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு வருடத்துக்குள்ளாகவே கிரீன் கார்டு (Permanent residency) கிடைக்கிறது. இது, குடியுரிமைக்கான அவர்களின் பாதையை எளிதாக்குகிறது.

ஹெச்-1பி விசா பெறும் இந்தியர்களின் முக்கிய கவலை என்பது அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் தான்.

அத்தகைய விசா வைத்திருப்பவர்கள் அவ்வப்போது அமெரிக்காவை விட்டு வெளியேறி, தங்கள் விசாக்களில் வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முத்திரை (Visa stamping) பெற வேண்டும்.

இந்த நோக்கத்துக்காக இந்தியா திரும்புபவர்கள், அதற்கான நியமனம் பெறுவதில் (அமெரிக்க தூதரகங்களிடம்) பெரும்பாலும் தாமதத்தை எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்காவில் பிறந்த தங்கள் குழந்தைகளும், இதே மாதிரியான போராட்டங்களை எதிர்கொள்வதை இவர்கள் விரும்பவில்லை.

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில், இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் 72% ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது (கோப்புப் படம்)

பல ஆண்டுகளாக கிரீன் கார்டுக்காக வரிசையில் காத்திருக்கும் அக்ஷய், அமெரிக்க குடியுரிமை கொடுக்கும் ஒரு ஆறுதல் உணர்வைப் பற்றி நன்றாகவே அறிந்திருக்கிறார்.

"நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறோம். எனது பெற்றோரின் வயதைக் கணக்கில் கொண்டால், குடியுரிமை பெறுவது எனக்கு மிகவும் முக்கியம். விசா ஸ்டாம்பிங் முறைக்காக பயணங்களை திட்டமிடுவது மிகவும் சிரமமாக உள்ளது. இப்போது குழந்தை பிறந்த பிறகு, அது இன்னும் கஷ்டமாக இருக்கும், " என்று அக்ஷய் கூறுகிறார்.

அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு

அமெரிக்காவில் உள்ள பல மருத்துவர்கள் டிரம்பின் உத்தரவை எதிர்க்கின்றனர். அமெரிக்காவின் முக்கிய சேவைகளை வழங்குவதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வகிக்கும் பங்கை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா போன்ற கிராமப்புறங்களில் உள்ள இந்திய மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று மருத்துவர் கதுலா கூறுகிறார்.

"அவர்கள் இல்லாமல், சுகாதாரச் சேவை சரிந்துவிடும். இப்போது அந்த மருத்துவர்கள், திருமணம் செய்வது அல்லது பிள்ளைகள் பெற்றுக்கொள்வது குறித்து குழப்பத்தில் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

கிரீன் கார்டு பெறும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கை கருத்தில் கொண்டு, அவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

டிரம்ப், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை, அமெரிக்க வாழ் தமிழர்கள்
படக்குறிப்பு, இந்த புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்கிறார், வழக்கறிஞர் மற்றும் குடிவரவு சட்ட நிபுணர் அச்யுதன்

டிரம்பின் புதிய உத்தரவு குறித்துப் பேசிய வழக்கறிஞர் மற்றும் குடிவரவு சட்ட நிபுணர் அச்யுதன் ஸ்ரீ சிக்கந்தராஜா, "இந்த புதிய கொள்கைக்கு அரசியலமைப்பு திருத்தம் தேவை. இதில் வாக்களிக்க கணிசமான பெரும்பான்மை தேவைப்படும். எனவே, இது நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை." என்கிறார்.

"நீங்கள் ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரப் போகிறீர்கள் என்றால், அல்லது ஹெச்-1பி விசாவில் இங்கு வசிக்கும் ஒரு இந்தியராக கிரீன் கார்டு பெற அல்லது கிரீன் கார்டுக்குப் பிறகு குடியுரிமை பெறுவதற்கு நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், கவலைப்படத் தேவையில்லை" என்கிறார் அச்யுதன்.

திருநெல்வேலியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இன்னும் சில வாரங்களில் ஹெச்-1பி விசாவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

"அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்று, குடியுரிமை பெற்று அங்கேயே வாழ வேண்டும் என்ற 'அமெரிக்க கனவு' எனக்கும் முதலில் இருந்தது. ஆனால், இப்போது அங்கே போய் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு இந்தியா திரும்பிவிடலாம் என்று தான் நினைக்கிறேன்." என்கிறார் அவர்.

"இதை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கல்வி அல்லது வேலைக்காகச் சென்று, அங்கேயே 'செட்டில் ஆக வேண்டும்' என்ற எண்ணம் அடுத்து வரக்கூடிய தலைமுறையினரிடையே படிப்படியாகக் குறையும்."

"இதேபோல, பிற நாடுகளுக்குச் செல்பவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் மீண்டும் இந்தியாவுக்கு திருப்புகிறார்கள் அல்லது அவ்வப்போது வந்து செல்கிறார்கள் அல்லவா? எனவே, இத்தகைய மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்." என்கிறார் விக்னேஷ்.

அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் சவீதா படேல் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)