'ரூ.40 லட்சம் செலவு, 6 மாத கடும் பயணம்' - அமெரிக்கா சென்ற 11 நாட்களில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்

பட மூலாதாரம், Kamal Saini/BBC
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பால் சிங். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இவரும் ஒருவர்.
தனது கனவு தேசமான அமெரிக்காவை எப்படியாவது சென்றடைந்திட வேண்டும் என்ற தீராத ஆசையும் வளமான வாழ்க்கைக்கான கனவுகளையும் கொண்டிருந்தார் அவர். அந்த ஆசை நிறைவேறியது என்று ஆசுவாசப்பட்ட 11 நாட்களில் மீண்டும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அரசு கொள்கை காரணமாக, பல மாதங்களாக மேற்கொண்ட கடுமையான பயணம், செலவு செய்த ரூ.40 லட்சம் பணம், அமெரிக்க மண்ணை தொட்டுவிட்டோம் என்ற ஆசுவாசம் எல்லாம் 11 நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் நகரில் ஃபத்தேகர் சுரியன் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜஸ்பால் சிங். லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்கால கனவுகளுடன் பஞ்சாப்பிலிருந்து கிளம்பினார்.

சட்டவிரோதமாக, உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறது அமெரிக்கா.
கொலம்பியா, பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் குடியேறிகள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இப்படி நாடு கடத்துவது வழக்கமான நடைமுறை என்றாலும், இந்த முறை நாடு கடத்தப்பட்டவர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டிருப்பது கொலம்பியா, இந்தியா என சில நாடுகளில் சர்ச்சையாகியுள்ளது.
ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்கள் நேரடியாக அமெரிக்காவுக்கு செல்லாமல், அருகில் உள்ள வேறு நாடுகளுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து அமெரிக்க எல்லையை வெவ்வேறு வழிகளில் கடக்க முயல்கின்றனர்.
முதலில் இங்கிலாந்து சென்ற ஜஸ்பால் சிங் , பிறகு வெவ்வேறு நாடுகள் வழியே 6 மாதங்கள் கடுமையான பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றடைந்துள்ளார். இதில் நான்கு நாட்கள் பனாமா காடுகள் வழியாக நடந்து சென்றுள்ளார். அவர் இது வரை 40 லட்சத்துக்கும் மேலாக செலவு செய்துள்ளதாக கூறுகிறார்.
"சுமார் இரண்டரை ஆண்டுகள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற வெறியுடன் இருந்தேன். இந்த பயணம் எனது உடல் நலத்தை மட்டுமல்ல, எனது மனதையும் மிகவும் பாதித்துள்ளது" என்று அவர் நாடு திரும்பிய பிறகு, பிபிசியிடம் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டு சுற்றுலா விசா பெற்று இங்கிலாந்து சென்றுள்ளார் ஜஸ்பால் சிங். அங்கிருந்த போது, அமெரிக்கா செல்வதற்காக 2024-ஆம் ஆண்டு ஒரு முகவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் மூலமாக, ஆறு மாதங்கள் காடு, மலை என கடுமையான பாதைகள் வழியாக, சரியான உணவு, உறங்குமிடம் இல்லாத மிக ஆபத்தான அமெரிக்கா பயணத்தை தொடங்கியுள்ளார் ஜஸ்பால் சிங்.
இத்தனை சிரமங்களை தாண்டி அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் போது, அவர் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்.
அவர் பயணம் மேற்கொண்ட ஆறு மாத காலத்தில், அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றிருந்தார். சட்டவிரோத குடியேறிகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை கடுமையாக எடுத்திருந்தார் அவர்.

பட மூலாதாரம், Gurpreet Singh Chawla
ஜஸ்பால் சிங், அமெரிக்க மண்ணில் நுழைந்தவுடன் அங்கிருந்த முகாமில் தங்க வைக்கப்பட்டார். விண்ணை தொடும் கட்டடங்கள், கார்கள், இரவெல்லாம் ஜொலிக்கும் நகரம் என்று அமெரிக்கா குறித்து பொதுவாக கற்பனையில் இருக்கும் எந்த காட்சியையும் பார்க்காத அவர், முகாமிலிருந்தே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரை கூட்டி வந்த விமானம் பஞ்சாபில் வந்து தரையிறங்கும் வரை அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளோம் என்பதை உணரவில்லை.
"எனக்கு கைவிலங்குகள் போடப்பட்டிருந்தது. எனது கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன. அங்கிருந்து என்னை கூட்டி செல்வதாக சொன்ன போது, மற்றொரு முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று தான் நினைத்தேன். பஞ்சாபில் நிலையத்தில் இறங்கிய பிறகுதான், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்கள் என்று தெரிய வந்தது" என்று அவர் கூறுகிறார்.
'நான் இருந்தது முகாம் அல்ல, சிறை'
பிப்ரவரி 2-ஆம் தேதி அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்ட அவர், பிப்ரவரி 5-ஆம்தேதி நாடு திரும்பினார்.
"நான் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து புறப்பட்டேனோ, அங்கு சேர முடியவில்லை. பனாமா வழியாக, பல்வேறு நாடுகளை கடந்து அமெரிக்கா சென்று சேர்ந்தேன். அங்கு 11 நாட்கள் இருந்தேன். எல்லையை தாண்டியதாக என்னை கைது செய்தனர். கலிஃபோர்னியாவில் உள்ள முகாமுக்கு அனுப்பினர். வேன், பேருந்து என வெவ்வேறு வாகனங்கள் மூலம் என்னை கூட்டிச் சென்றனர். இந்த பயணங்கள் முழுவதும் எனது கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. அதன் பிறகு என்னை வேறு ஒரு முகாமுக்கு கூட்டிச் செல்கின்றனர் என்று நினைத்தேன். ஆனால் என்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்" என்கிறார்.
"அது ஒரு சிறை, ஆனால் அவர்கள் அதை முகாம் என்று கூறுகின்றனர். அங்கு படைவீரர்கள் தங்கும் குடியிருப்புகள் இருந்தன. இந்த இடத்தில் சுமார் 400 முதல் 500 பேர் தங்கியிருந்ததாக தெரிந்தது. அதில் குழந்தைகளும் பெண்களும் கூட இருந்தனர். அவர்களும் எங்களுடன் அதே விமானத்தில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்."
"பயணம் தொடங்கியதிலிருந்து இரண்டு இடங்களில் ராணுவ விமானம் தரையிறங்கியது. ஆனால் நாங்கள் வெளியே அனுமதிக்கப்படவில்லை. கைவிலங்கிட்டு, விமானத்திலேயே இருந்தோம். எங்களுக்கு ரொட்டி மற்றும் பிஸ்கட்கள் சாப்பிட கொடுத்தனர்." என்கிறார் அவர்

பட மூலாதாரம், Getty Images
'மாஃபியா கும்பலால் தாக்கப்பட்டேன்'
அமெரிக்காவுக்கு சென்ற பயண அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட ஜஸ்பால் சிங், "நான் பிரேசிலுக்கு விமானம் மூலம் சென்றேன், அங்கிருந்து கால்நடையாகவே செல்ல வேண்டியிருந்தது. நான்கு நாட்கள் காடுகள் வழியாக நடந்து சென்றேன். வழியில் நிறைய பாம்புகள் இருந்தன. மிகவும் ஆபத்தான பயணம் அது. நிறைய பிணங்களை பார்த்தேன். நிறைய எலும்புகூடுகளும் இருந்தன. கைகளில் பஞ்சாபிகள் அணிந்திருப்பது போன்ற வளையங்கள் இருந்தன" என்கிறார்.
"பனாமா காடுகள் வழியாக சென்ற போது, ஒரு மாஃபியா கும்பல் என்னை தாக்கியது, என்னிடமிருந்த பணத்தை பறித்துவிட்டனர். நான் கொண்டு சென்ற பையில் இருந்த துணிகளையும் எடுத்துக் கொண்டனர். என்னை தாக்கவும் செய்தனர்." என்று விவரிக்கிறார்.
ஜஸ்பால் சிங் திரும்பி வந்ததற்காக அவரது தாய் ஷிண்டர் கவுர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"எனது மகன் திரும்பி வந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவனுக்கு சின்ன குழந்தைகள் இருக்கின்றனர். அவன் தனது குடும்பத்திடம் திரும்பி வந்தது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. நாங்கள் இந்த பயணத்துக்காக நிறைய செலவு செய்துள்ளோம், அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













