அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களுடன், ராணுவ விமானம் ஒன்று நேற்று (பிப்ரவரி 5) இந்தியாவில் வந்திறங்கியது. அதில் பெரும்பாலானோர் பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகள் மீது பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதே வேளையில் தற்போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு முதல் முறையாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
"இந்த நபர்கள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை அல்லது அமெரிக்கா-கனடா எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர்கள்," என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்த இவர்கள் கூறுவது என்ன? இது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவை பாதிக்குமா?

நடந்தது என்ன?
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட 104 நபர்கள் நேற்று இந்தியா வந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் சி17 போர் விமானத்தில் அவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கினர்.
இவர்கள் உரிய சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்று கூறப்பட்டது.
உரிய அரசு ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு கடத்துவதே புதிதாகப் பொறுப்பேற்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கியக் கொள்கையாக இருக்கின்றது. அமெரிக்காவில சட்ட விரோதமாக நுழைந்த 18,000 இந்தியர்களை அந்நாடு அடையாளம் கண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்கள்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர். அதில் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள். அதில் பலர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தக் கடுமையான நடவடிக்கையால் தற்போது மிகவும் பதற்றமான சூழ்நிலையில் இருக்கின்றனர்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2018 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையால் மொத்தம் 5,477 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளின் கருத்து

பட மூலாதாரம், Getty Images
"அமெரிக்காவில் ஆவணங்களின்றி வசிக்கும் இந்தியர்கள் குறித்து இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனத் தாங்கள் நம்புவதாக" அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியபோது, நாடு கடத்தப்பட்டவர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை உரிய ஆவண சோதனைகளுக்குப் பிறகு திரும்பப் பெறுவதற்கு முற்றிலும் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்திருந்தது.
அதே வேளையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், "தற்போது நாடு கடத்தப்பட்டவர்கள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை அல்லது அமெரிக்கா-கனடா எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களிடம் அமெரிக்காவில் தங்குவதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை," என்று தெரிவித்தது.
மேலும் ஒரு நீண்ட மற்றும் விரிவான சோதனை செயல்முறைக்குப் பிறகே இவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ராணுவ விமானத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து, அமெரிக்கா கூறுகையில், "உலகளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான அமெரிக்க நிர்வாகத்தின் முயற்சிகளை அமெரிக்க ராணுவம் ஆதரிக்கிறது" என்றது.
உறவினர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Reuters
சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்ற ஒருவர் தற்போது நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
பிபிசி பஞ்சாபி சேவையிடம் பேசிய அவரது உறவினர் ஒருவர், "தனது குடும்பத்தின் கடினமான நிதி நிலைமை மற்றும் அதன் எதிர்காலத்திற்காக அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்கு சென்றதாக" கூறினார். தனது மகன் உயிருடன் இருப்பதற்கும், பாதுகாப்பாக இந்தியா திரும்பி வந்ததற்கும் நன்றியுடன் இருப்பதாக அவரது தாய் தெரிவித்தார்.
ஹரியாணா மாநிலம் அம்பாலா அருகே உள்ள ஜடோட்டை சேர்ந்த ஒருவரும் நேற்று நாடு கடத்தப்பட்டார்.
பிபிசி பஞ்சாபியிடம் பேசிய அவரது தாய், "எனது மகன் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே அமெரிக்கா சென்றார். அதற்காக நாங்கள் 4.1 மில்லியன் ரூபாய் கடன் வாங்கியுள்ளோம். கடந்த 10-15 நாட்களாக என்னுடைய மகனைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
அவர் நாடுகடத்தப்பட்டதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டேன். அவர் பாதுகாப்பாக நாடு திரும்பியது மகிழ்ச்சியாக இருந்தாலும், எனது மகனுக்காக நாங்கள் பெற்ற கடனை திரும்பிச் செலுத்துவது பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்" என்றார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் என்ன கூறுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
இதுதவிர அமெரிக்காவில் வாழும் மற்ற இந்திய குடியேறிகளும் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர்.
"ஒவ்வொரு நாளும் நாடு கடத்தப்படுவது குறித்த தொலைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பெற்று வருகிறோம். மக்கள் கலக்கமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.
அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாததால், கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு முன்னதாக, தாங்களாகவே வெளியேற வேண்டுமா என்ற கேள்வியும் அவர்களிடம் இருக்கின்றது" என்று அமெரிக்காவில் வசிக்கும் ஷிவானா ஜோராவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதோடு, இந்தச் சூழ்நிலையில் அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாததால் சம்பாதிக்க முடியவில்லை என்றும் இதனால் சிறுதொழில் செய்வோர் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வந்த மேலும் ஒருவர் பேசியபோது, "நான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வருகிறேன். மெக்ஸிகோ எல்லையைக் கடந்து அமெரிக்காவில் நுழைந்து கடந்த ஓராண்டாக இங்கே வாழ்ந்து வருகிறேன். வீட்டைவிட்டு வெகுதொலைவில் இருந்து வருவாய் ஈட்டவும், கல்வி கற்கவும் இங்கு வந்தவர்களுக்கு ஆதரவு வழங்க அதிபரிடம் வேண்டுகோள் வைக்கிறேன். அரசு இதுபோன்றவர்களைக் கைது செய்து வருகிறது. அதனால் நான் அச்சத்துடன் வாழ்கிறேன்," என்று கூறினார்.
இந்தியா- அமெரிக்கா உறவுகள் இனி எப்படி இருக்கும்?

"டிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே குடியேற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதனால் தற்போது அவரது அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அதிர்ச்சியூட்டும் ஒன்றாக இருக்காது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதை எதிர்ப்பார்த்து இருந்தனர். அதனால் இது பெரிய அளவில் இரு நாட்டு உறவுகளில் எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது" என்று குறிப்பிடுகிறார் லயோலா கல்லூரியின் சமூகப்பணித் துறை பேராசிரியரான கிளாட்ஸன் சேவியர்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வரும் நாட்களில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்லக்கூடும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.
அதுகுறித்துப் பேசிய அவர், "அவர்களுக்குள் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைகளில் குடியேற்றம் பற்றிப் பெரும்பாலும் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இது முன்கூட்டியே இரு நாட்டின் தலைவர்கள் சமீபத்தில் தொலைபேசி வாயிலாகப் பேசி எடுத்த முடிவுதான்," என்றார்.
"தற்போது நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மட்டுமேதான் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. அவர்கள் அனைத்து அரசாங்க ஆவண சரிபார்ப்புக்கும் இணங்கிச் செயல்பட வேண்டும். அவர்கள் அதிகளவில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும், குறிப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள் இந்தியாவில் தங்களுக்கென வாழ்வதற்கான இடங்களை இழந்திருப்பார்கள். இதற்கு அரசு எந்தவிதத்திலும் உதவ முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












