அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? அவர்களை நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் அமெரிக்கா, இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை

பட மூலாதாரம், ANI

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33 குஜராத்திகள் வியாழனன்று மாலையில் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வசிக்கும் சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் எதிர் விளைவாகத்தான் ஆமதாபாத் விமான நிலையத்தில் வியாழக்கிழமை பார்த்த காட்சி இருந்தது.

டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவுகளை நாம் காண்கிறோம். ஆனால், இதிலிருக்கும் கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் வசிப்பவர்களில் யார் திருப்பி அனுப்பப்படுவார்கள், யார் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதுதான்.

அமெரிக்காவில் இருந்து யார் திருப்பி அனுப்பப்படுவார்கள்?

migrationpolicy.org என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள அறிக்கை அமெரிக்காவில் இருந்து யாரெல்லாம் நாடு கடத்தப்படுவார்கள் என்பதை விவரிக்கிறது.

நாடு கடத்தல் நடவடிக்கை சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய நிலையில் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.

சில சூழல்களில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறியிருந்தாலும், குடிமக்களாக இல்லாதவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாரப்பூர்வமற்ற குடியேறிகளைத் தவிர, அமெரிக்காவின் எல்லையை சட்டவிரோதமாகக் கடந்து சென்றவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்தவர்களும் நாடு கடத்தப்படக்கூடும்.

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் அமெரிக்கா, இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை
படக்குறிப்பு, அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 1.69 லட்சம் மக்கள் 2023ஆம் ஆண்டு ஈஆர்ஓ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்

தற்காலிக விசாவில் அமெரிக்காவுக்கு வந்து, விசா நிபந்தனைகளை மீறியவர்களும் நாடு கடத்தப்படுவார்கள்.

குடியேறிகள் தவிர்த்து சட்டப்பூர்வமான வழிகளில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உதாரணத்திற்கு கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் தற்காலிக விசாவில் தங்கிருப்போர்கூட நாடு கடத்தப்படலாம்.

இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டிருந்தால், அவர்கள் நாடு கடத்தப்படலாம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஆயுதங்கள் அல்லது போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பது, திருட்டு அல்லது வன்முறைகளில் ஈடுபடுபவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்.

Nolo.com-இன் அறிக்கைப்படி, நெறிகேடான (moral turpitude) குற்றங்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்த இரண்டு வழிகளில் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இதன்கீழ் நாடு கடத்தப்படுவோர், முதலாவதாக அமெரிக்காவில் குடியேறிய முதல் 5 ஆண்டுகளில் நெறிகேடான குற்றங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக நெறி கேடான குற்றங்களாக வகைப்படுத்தப்படும் குற்றங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களைச் செய்திருக்க வேண்டும்.

இருப்பினும் நெறிகேடான குற்றம் என எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதற்குத் தெளிவான வரையறை இல்லை. இதில் ஏமாற்றுதல், பிறருக்கு உள்நோக்குடன் தீங்கு விளைவித்தல், கொலை அல்லது கொள்ளை நோக்குடன் காயம் ஏற்படுத்துதல், கணவர் அல்லது மனைவிக்கு எதிரான குடும்ப வன்முறையில் ஈடுபடுதல் போன்றவை அடங்கும்.

கைது செய்யும் முடிவு எப்படி எடுக்கப்படுகிறது?

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் அமெரிக்கா, இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை
படக்குறிப்பு, குடியேறிகள் தவிர்த்து சட்டப்பூர்வமான வழிகளில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்போர்கூட நாடு கடத்தல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

அமெரிக்க குடியேற்றம், சுங்க அமலாக்கத் துறை (US Immigration and Customs Enforcement) மற்றும் வெளியேற்ற செயல்களுக்கான அமலாக்கத் துறை (Enforcement and Removal Operations) போன்றவை குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனுக்கு பொறுப்பானவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த அதிகாரிகளின் பணிகளாக சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காணுதல், கைது செய்தல், காவலில் எடுத்தல் மற்றும் தேவைப்பட்டால் நாடு கடத்துதல் உள்ளிட்டவை உள்ளன.

இந்த அதிகாரிகள் கைது நடவடிக்கைக்காக சட்டம் ஒழுங்கு அமலாக்க அதிகாரிகளைச் சார்ந்திருக்கின்றனர். குடியேற்றம் சார்ந்த விவகாரங்களில், குற்றப் பிடியாணை பிறப்பித்தல் மற்றும் வழக்குகளைப் பதிவு செய்வது போன்ற அதிகாரங்களை ஈஆர்ஓ அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

ஈஆர்ஓ அதிகாரிகளால் கைது செய்யப்படுபவர்கள் இரண்டு வகைகளுக்குள் வருகின்றனர். அமெரிக்க குடியுரிமை மற்றும் அமெரிக்காவில் குற்றப் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றனர்.

குற்றப் பின்னணியைப் பொறுத்தவரை, மேலும் மூன்று பிரிவுகளுக்குள் வகைப்படுத்தப்படுகின்றனர்.

அதில், முதல் வகை அமெரிக்காவில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டவர்கள்.

இரண்டாவது, அமெரிக்காவில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்

மூன்றாவது, அமெரிக்க சட்டங்கள் எதன் கீழும் குற்றவாளிகளாக இல்லாதோராக இருந்தாலும், அமெரிக்காவின் குடியேற்ற சட்டத்தை மீறியவர்கள்.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 1.69 லட்சம் மக்கள் 2023ஆம் ஆண்டு ஈஆர்ஓ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட பிறகு என்ன நடக்கும்?

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் அமெரிக்கா, இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை
படக்குறிப்பு, ஒருவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டால், அவர் அங்கு மீண்டும் செல்வது சில ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படும்

ஒருவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டால், அவர் மீண்டும் அங்கு செல்வது சில ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படும். இவ்வாறான தடை அந்த நபர் எவ்வாறு நாடு கடத்தப்படுகிறார் என்பதைப் பொறுத்து வேறுபடும்.

விரைவான நாடு கடத்தல் (speedy deportation) நடைமுறையின் மூலம் ஒருவர் வெளியேற்றப்பட்டால் அவர் மீண்டும் அமெரிக்காவினுள் வருவதற்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.

குடிமகன் அல்லாத ஒருவரை நாடு கடத்த குடியேற்ற நீதிபதி உத்தரவிட்டால், அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமெரிக்காவுக்கு திரும்ப முடியாது.

இரண்டாவது முறையாக நாடு கடத்தும் நடவடிக்கைக்கு ஒருவர் உள்ளானால், அவர் 20 ஆண்டுகளுக்கு அமெரிக்காவுக்கு செல்ல முடியாது.

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் அமெரிக்கா, இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை

பட மூலாதாரம், US Govt/Representative

படக்குறிப்பு, தொடர்ச்சியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அமெரிக்காவில் குடியேற வாழ்நாள் தடை விதிக்கப்படும்

சில குறிப்பிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்கள் மற்றும் தொடர்ச்சியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அமெரிக்காவில் குடியேற வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நாடு கடத்தல் உத்தரவுகள் அனைத்தும் செயலாக்கப்படுவதில்லை. ஏனெனில் நிர்வாக ரீதியான நடைமுறைகளுக்குப் பின்னரே நாடு கடத்தல் தொடர்பான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவற்றோடு, நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவு இருந்தும், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க முடியாத சூழல் மற்றும் சொந்த நாடே ஏற்றுக் கொள்ளாத நபர் ஆகியோரை நாடு கடத்துவதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)