கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?

15 வயது மாணவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் இருக்கலாம்.

ஒரு உயர்தர பள்ளியில் பயின்ற 15 வயது மாணவர் ஒருவரின் உயிரிழப்பு கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதில் முரண்பாடுகள் இருக்கின்றன.

ஜிபிஎஸ் சர்வதேச பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வீடு திரும்பியதும் தற்கொலை செய்துகொண்டார்.

அன்று அவர் பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போது, "மகிழ்ச்சியாக இருந்ததாக" மாணவரின் நடத்தை குறித்து பள்ளி நிர்வாகம் விவரித்துள்ளது.

ஆனால், "தங்கள் மகன் தற்கொலை செய்துகொள்வதற்கான எந்தக் காரணமும் வீட்டில் இல்லை," என்று அவரது தாய்வழி மாமா ஷரீஃப் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு நீதி கேட்டு, அவர் இறந்த மறுநாள் வெளியிடப்பட்ட "சமூக ஊடக பதிவு" ஒன்பது நாட்களுக்குப் பிறகு திடீரென நீக்கப்பட்டது, அவரது குடும்பத்திற்குத் தெரிய வந்தபோது இந்தத் தற்கொலை தொடர்பான மர்மம் மேலும் தீவிரமடைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அந்தப் பதிவுகள் "தங்களையும் அதே அளவுக்கு அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக" குளோபல் பப்ளிக் பள்ளியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு நீக்கப்பட்ட அந்த சமூக ஊடக பதிவுதான் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிப்பதற்கு அடிப்படையாக இருந்தது. அதோடு, அதுதான் அந்த மாணவரின் தாய், ராஜ்னா ஒரு நீண்ட அறிக்கை வெளியிடக் காரணமாகவும் அமைந்தது. அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கேரளாவின் பொதுக் கல்வி அமைச்சர் கே.சிவன்குட்டி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

பொதுக் கல்வி இயக்குநரை பள்ளியில் விசாரணை நடத்த திங்கள் கிழமையன்று அனுப்பி வைத்த அமைச்சர், இயக்குநரிடம் இருந்து "அடுத்த இரண்டு நாட்களில்" அறிக்கை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

'கழிவறையில் நடந்த கொடூர ராகிங்'

15 வயது மாணவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

அன்று தனது பள்ளியில் இருந்து மதியம் 2:45 மணிக்கு வீடு திரும்பிய தனது மகன் அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் தற்கொலை செய்து கொண்டதால் 'தனது உலகமே நொறுங்கியதாக' ராஜ்னா தமது பதிவில் விவரித்துள்ளார்.

அவரது மரணத்திற்குப் பிறகு, தங்களது மகன் ஏன் இந்தக் கடுமையான முடிவை எடுத்தார் என்பது குறித்து ராஜ்னாவும் அவரது கணவரும், மகனின் நண்பர்கள், மற்றும் பள்ளித் தோழர்களிடம் இருந்து தகவல்களைச் சேகரித்ததுடன், சமூக ஊடக பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அதுகுறித்து விவரித்தவர், "பள்ளியிலும், பள்ளிப் பேருந்திலும் தனது மகன் மிகக் கொடூரமான ராகிங், மிரட்டல் மற்றும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக" தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் சேகரித்த ஆதாரங்கள் நடுங்கச் செய்யும் சம்வபங்களைப் பிரதிபலிக்கின்றன. அவன் அடிக்கப்பட்டான், கடுமையாகத் திட்டப்பட்டதுடன் அவனது வாழ்வின் கடைசி நாளிலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவமதிப்பை அவன் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

அவன் கழிவறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு கழிவறை இருக்கையை நக்க வைக்கப்பட்டான், கழிவறை ஃபிளஷ் செய்யப்படும்போது என் மகனின் தலை அதற்குள் அழுத்தப்பட்டது. நம்மால் கற்பனைகூடச் செய்திட முடியாத இந்தக் கொடூர செயல்கள் அவனை மனமுடையச் செய்தன," என்று தனது பதிவில் விவரித்துள்ளார் ராஜ்னா.

15 வயது மாணவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

"என் மகன் அவனது நிறத்திற்காக மிரட்டப்பட்டான். அவனுக்கு எதிரான கொடுமையை அவன் இறந்த பின்னரும் அவர்கள் நிறுத்தவில்லை. ஒரு அதிர்ச்சியளிக்கும் ஸ்கீரின்ஷாட் அவர்களது கொடூரத்தின் அளவைக் காட்டுகிறது. அவர்கள் 'அந்த **** கருப்பன் உண்மையில் இறந்துவிட்டான்' என்ற குறுஞ்செய்தியைப் பகிர்ந்து அவனது இறப்பைக் கொண்டாடியுள்ளனர்," என்று தற்கொலை செய்துகொண்ட மகனின் தாய் தனது பதிவில் விவரித்துள்ளார்.

இந்தச் சம்பவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக ஒரு சமூக ஊடக பதிவு இறந்த மாணவரின் நண்பர்களால் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, "உண்மையை மறைக்கும்படி மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் அச்சுறுத்துவதால்" அந்தப் பதிவு நீக்கப்பட்டு இருக்கலாம் எனத் தான் சந்தேகிப்பதாகவும் உயிரிழந்த மாணவரின் தாய் கூறியுள்ளார்.

"பள்ளியில் தனக்கு நடப்பது தனது குடும்பத்திற்குத் தெரியக்கூடாது" என்று அவர் நினைத்ததை அவரது நண்பர்கள் மூலம் அவரது குடும்பம் தெரிந்துகொண்டதாக ஷரீஃப் கூறினார்.

"இதில் எவ்வளவு பேருக்குத் தொடர்பு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். எங்களுக்குக் கிடைத்த பெயர்களை காவல்துறையிடம் பகிர்ந்துள்ளோம். அந்தப் பிற சிறார்கள் யாரென்று நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்கள் மகனுக்கு நீதி வேண்டும்," என்றார் ஷரீஃப்.

பள்ளி நிர்வாகம் சொல்வது என்ன?

15 வயது மாணவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

"எங்கள் விசாரணை இப்போது எதையும் காட்டவில்லை. நாங்கள் தற்கொலை செய்துகொண்ட மாணவர் உள்ளிட்ட சிறார்களுடன் பழகிய ஆசிரியர்களிடமும் அவருடன் பழகிய சிறார்களுடனும் பேசியுள்ளோம்," என்று பள்ளியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"அந்த மாணவர் எங்களுடன் 39 நாட்கள்தான் இருந்தார். அந்த நாட்களில், அவர் விரும்பத்தகாத எதையும் அனுபவிக்கவில்லை. மன அழுத்தம் அல்லது வேறு பிரச்னைகளை அவரது உடல்மொழி மற்றும் பேச்சு காட்டியிருக்கும். அதுபோன்ற அறிகுறிகள் ஏதும் இருக்கவில்லை," என்றார் அவர்.

"எங்களுக்குத் தெரிந்தவரை, அவரது முந்தைய பள்ளியில் இருந்து சில பிரச்னைகளுடன் வந்திருந்தாலும், அவர் எங்களிடையே ஒரு மகிழ்ச்சியான மாணவராகத்தான் இருந்தார்" என்று கூறினார்.

பள்ளியில் சேர்ந்த உடனே, "பள்ளி ஆலோசகர் அவருடைய வகுப்பில் ஒரு ஆலோசனை வகுப்பை நடத்தினார். அதற்குப் பிறகு அந்த மாணவர், பள்ளி செயல்பாட்டில் இயல்பாக இணைந்துகொண்டார். அடிப்படையில் அவர் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார்."

ராகிங் நடந்ததாகக் குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை செய்தித்தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.

"எங்களது பாதுகாப்பு அமைப்புகளைப் பொருத்தவரை, வகுப்பறைகளில், நடைபாதைகளில் கேமராக்கள் உள்ளன. ஒவ்வொரு கழிவறைக்கு வெளியேயும் பராமரிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறுவர், சிறுமியருக்கான கழிவறை வெவ்வேறு தளங்களில் உள்ளன, ஒரே தளத்தில் இல்லை," என்றார்.

அவர் கடைசி நாளில் பள்ளியில் இருந்து சென்றபோது, "காலையில் அவர் தனது கூடைப்பந்து பயிற்சிக்குச் சரியாக வந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவர் பள்ளியின் ஐக்கிய நாடுகள் சபை மாதிரி குழுவில் இடம் பெற்றிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு ஐஐஎம்-ஐநா மாநாட்டில் அவர் பங்கேற்றார்" என்றும் பள்ளியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

15 வயது மாணவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பள்ளியில் ஜனவரி14ஆம் தேதி ஒரு சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"ஒருவரை குத்தும்படி மற்றொரு மாணவருக்கு தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஒரு சவால் விடுத்தார். இது அவர்களைப் பொருத்தவரை விளையாட்டான ஒரு செயல். ஆனால் கெடுவாய்ப்பாக, குத்து வாங்கிய சிறுவனுக்கு மூக்கில் சிறிது ரத்தம் வழிந்ததால் மற்ற இருவர் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்," என அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வழக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு பள்ளி தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த நான்கு பேரின் பெற்றோரை அடுத்த நாள் பள்ளிக்கு வரும்படி ஆசிரியர் அழைத்தார்.

"அந்த மாணவரின் தந்தையும் வந்திருந்தார். இது உனக்கு இரண்டாவது வாய்ப்பு, நீ இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தப்படக்கூடாது என அவர் கூறியிருக்கலாம். எனவே கடந்த காலம் குறித்துப் பேச வேண்டாம் என்று பள்ளித் தலைவர் தந்தையிடம் தெரிவித்தார். மாணவரின் தந்தை சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பள்ளியை விட்டுச் சென்றுவிட்டார்," என்று அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"பின்னர், அடுத்த நாளுக்குத் தேவையான ஆங்கில புத்தகத்தைக்கூட அந்த மாணவர் விட்டுச் சென்றதாக அவர் கூறினார். அதை அடுத்த நாள் எடுத்துக் கொள்வதாக அவர் ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர் தனது நண்பர்களிடம் விடைபெற்ற பின்னர் பள்ளிப் பேருந்தில் சென்றார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராகிங் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன?

15 வயது மாணவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சாட் மருத்துவமனையில் குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் மனநலன் பேராசிரியராக இருக்கும் மருத்துவர் ஜெயபிரகாஷ் ஆர், உலகம் முழுவதுமே ராகிங் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது இந்தியா அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பிரச்னை அல்ல என்றும் கூறுகிறார்.

"ராகிங் என்பது அடிப்படையில் ஒரு மாணவர், ஜூனியர் மாணவர் மீது தனது ஆளுமையை நிறுவும் முயற்சி. இந்த நடத்தை அடிப்படை மனித இயல்பு. ஆனால் இந்த இயல்பு வீடியோ கேம் போன்றவற்றால் தீவிரமடைகிறது. இந்த விளையாட்டுகளின் அடிப்படையில் இருப்பது வன்முறையும், ஆக்ரோஷமும்தான்" என்று மருத்துவர் ஜெயபிரகாஷ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

"ஆனால் இத்தகைய சிறார்களிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால் அவர்களுக்குப் பேச்சுத்திறன் அல்லது மற்றவர்களுக்கு தங்களது கருத்தைப் புரியவைக்கும் பேச்சுவார்த்தை திறன் போன்றவற்றில் சிக்கல்கள் இருக்கும். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிட்டு அவர்கள் நன்கு பேசக் கற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும்," என்றார்.

இதைப் போன்ற திறன்கள், சிறார்கள் தங்களது உணர்வுகளை பெற்றோர்களிடம் அல்லது அவர்களில் ஒருவரிடம் வெளிப்படுத்த உதவும். "வழக்கமாக வளரிளம் பருவத்தினர் தங்களது அழுத்தம் அல்லது மன அழுத்தம் குறித்து தங்களது பெற்றோரிடமோ, சகோதர, சகோதரிகளிடமோ பகிர்ந்துகொள்வதில்லை. பெற்றோரில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ நெருக்கம் நன்றாக இருந்தால், அவர்கள் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பார்கள்," என்றார் அவர்.

"இத்தகைய வாய்ப்புகள் இல்லாதபோது, சிறார்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுவும் அவர்கள் திடீரென செய்துகொள்கிறார்கள். வயது வந்தவர்களைப் போல் அது நன்கு திட்டமிடப்படும் தற்கொலைகள் அல்ல," என மருத்துவர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

சிறார்கள் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுவதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மாணவரின் தற்கொலை மரணம் குறித்து மூன்று விசாரணைகள் நடந்து வருகின்றன. உதவி ஆணையர் தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளது. பொது கல்விக்கான இயக்குநர் நடத்தும் விசாரணையோடு, கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து இந்தச் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)