விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்; 'வருங்கால சந்ததிக்கு ஆபத்து' - எச்சரிக்கும் ஆர்வலர்கள்

பொது பயன்பாட்டு நிலங்கள், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் 10 சதவிகித இடங்களை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

'தமிழகத்தில் நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவதைத் தடுப்பதற்கு, பொது ஒதுக்கீட்டு இடங்களை அரசே விற்கும் விதிமுறையை மாற்ற வேண்டும்' என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதித் துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நகர ஊரமைப்புச் சட்டம் 1971ன்படி, தமிழகத்தில் புதிதாக மனைப்பிரிவு (Lay out) அமைப்பதற்கான தொழில்நுட்ப அனுமதி பெறுவதற்கு, சாலைகளுக்கான இடங்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய (OSR-Open Space Reserves) 10 சதவிகித திறந்தவெளி இடங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தானப்பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளின்படி 2,500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில், மக்கள் பயன்பாட்டுக்குரிய பொது ஒதுக்கீட்டு இடங்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பது கட்டாயமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த விதிமுறை மாற்றப்பட்டது. இதற்கு எதிராக பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முன்பு இருந்த நடைமுறை என்ன?

ரிசர்வ் சைட், பொது பயன்பாட்டு இடங்கள், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Joseph

படக்குறிப்பு, பேச்சு வழக்கில் ஓஎஸ்ஆர் அல்லது ரிசர்வ் சைட் என்று இந்த இடங்கள் அழைக்கப்படுகின்றன

திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, 10 சதவிகித பொது ஒதுக்கீட்டு இடத்தை என்ன பயன்பாட்டுக்கு, எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வரைபடத்தில் குறிப்பிடுவது அவசியம்.

பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இந்த 10 சதவிகித இடங்களை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.

பேச்சு வழக்கில் ஓஎஸ்ஆர் அல்லது ரிசர்வ் சைட் என்று கூறப்படும் இந்த இடங்களை, பூங்கா, விளையாட்டுத் திடல் போன்று அதற்குரிய வகையில் மேம்படுத்த வேண்டியது, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்பாகும்.

இதன் அடிப்படையில்தான், நகரங்களில் பூங்காக்கள், சிறுவர் விளையாட்டுத் திடல்கள், சமுதாயக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில்தான், மரங்களும் அதிகளவில் வளர்க்கப்பட்டுள்ளன.

நகரமயமாதல் மிகவும் குறைவாக இருந்த 1971 ஆம் ஆண்டிலேயே, உருவாக்கப்பட்ட இந்த விதிமுறைகள், அதன்பின் பல்வேறு அரசாணைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதே நகர ஊரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், கடந்த 1992 ஆம் ஆண்டில் நகர ஊரமைப்புத் துறையால் போடப்பட்ட அரசாணையில் (எண்:222) 2500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பிலான அனைத்து மனைப்பிரிவுகளிலும் 10 சதவிகித பரப்பை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டது.

அப்போதிலிருந்து இந்த விதிமுறை, மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதை மீறி அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டபோது, விற்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் போராடி, சட்டரீதியாக வெற்றி பெற்று அந்த இடங்களையும் மீட்டுள்ளனர்.

இந்த இடங்களை எவ்விதத்திலும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகளில் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

பொது பயன்பாட்டு இடங்கள், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC

படக்குறிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இந்த 10 சதவிகித இடங்களை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது

விதிமுறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றம்

இந்த நிலையில்தான், கடந்த 2019ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டன.

சட்டத்திருத்தம் எதுவும் செய்யாமல் மாற்றப்பட்ட இந்த விதிமுறைகளின்படி, 2500 சதுர மீட்டர் பரப்பு (27 ஆயிரம் சதுர அடி) வரையிலான மனைப்பிரிவுகளில், பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்க வேண்டியதில்லை என்ற விலக்கு, 3000 சதுர மீட்டர் (32294 சதுர அடி) பரப்பு வரை உயர்த்தப்பட்டது.

அத்துடன் 10 ஆயிரம் சதுர மீட்டர் (107639 சதுர அடி) வரையுள்ள மனைப்பிரிவுகளில் 10 சதவிகித இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கலாம் அல்லது அதற்குப் பதிலாக அந்த பரப்புக்கான வழிகாட்டி மதிப்பை அரசுக்குச் செலுத்தினால் போதும் என்று புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டது.

அதிலும் 10 ஆயிரம் சதுர மீட்டரில், முதல் 3 ஆயிரம் சதுர மீட்டர் இடத்தைக் கழித்து, மீதமுள்ள 7 ஆயிரம் சதுர மீட்டரில் 10 சதவிகித இடத்துக்கான வழிகாட்டி மதிப்பை மட்டும் செலுத்தினால் போதுமென்று அரசு சலுகை காட்டியது.

இதற்கு அப்போதே சூழல் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பினர் பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் தியாகராஜன், ''கடந்த 1992 அரசாணையின்படி, சாலை இடங்கள், 10 சதவிகிதம் ரிசர்வ் சைட் என 40 சதவிகித இடங்கள் அந்தந்த உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 10 ஏக்கருக்கு மேற்பட்ட மனைப்பிரிவாக இருந்தால் அங்கு சமுதாயக்கூடத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்."

"வீட்டு வசதித் திட்டம் போன்ற பெரிய திட்டமாக இருந்தால் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மார்க்கெட் உள்ளிட்டவற்றுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் அவற்றை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல நுாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன." என்று குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய தியாகராஜன், "கடந்த அதிமுக ஆட்சியில் இடத்துக்குப் பதிலாக பணத்தை அரசுக்குச் செலுத்தலாம் என்ற விதிமுறை போடப்பட்டது. அதை அப்போது எதிர்த்த திமுக, இப்போது ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் விலக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. இதனால் நகரங்களின் பசுமைப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இனியாவது அந்த விதிமுறையை விலக்க வேண்டியது அவசியம்.'" என்றார்.

கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து, கோவை மாநகராட்சியில் ரிசர்வ் சைட் இடங்களை மீட்பதற்கு, தனிப்பட்ட முறையிலும், குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் இணைந்தும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறுகிறார் தியாகராஜன்.

இதுவரை 65 ரிசர்வ் சைட்களை மீட்டுள்ளதாகக் கூறும் தியாகராஜன், அதன் மொத்தப்பரப்பு 45 ஏக்கர் என்றும், அவற்றின் மதிப்பு 500 கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.

பொது பயன்பாட்டு இடங்கள், தமிழ்நாடு அரசு
படக்குறிப்பு, நகரங்களின் பசுமைப் பரப்பு குறைந்து கொண்டே வருவதாக கூறுகிறார் தியாகராஜன்

ஆக்கிரமிப்பு கட்டடம் இருந்த இடத்தில் பூங்கா

''காந்திபுரம் அருகேயுள்ள அலமு நகரில் 51 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில், சிறப்பு அரசாணை பெற்று மனையாக மாற்றிய இடத்தில் கட்டப்பட்ட கட்டடம் நீதிமன்ற உத்தரவால் இடித்து அகற்றப்பட்டு, அங்கு தற்போது செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்று தியாகராஜன் கூறுகிறார்.

அதேபோல, வடவள்ளி விஎன்ஆர் நகர் பகுதியில், 12 பொது ஒதுக்கீட்டு இடங்களின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சட்டப்போராட்டம் நடத்தி, கடந்த மாதத்தில் அனைத்து இடங்களையும் மீட்டெடுத்துள்ளதாக வி.என்.ஆர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜோசப் கூறுகிறார்.

ஆனால் இத்தகைய பொது ஒதுக்கீட்டு இடங்களை ஒதுக்காமல், அரசே பணத்தை வாங்கிக் கொண்டு, அவற்றை விற்பதற்கு அனுமதிப்பது சட்டப்படி தவறு என்கிறார் கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன்.

இந்த விதிமுறையை ரத்து செய்யக்கோரி, இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனு (வழக்கு எண்: 35698/2024) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் இதுவரையிலும், அரசு தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

தன்னுடைய மனுவின் கோரிக்கை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கதிர்மதியோன், ''கடந்த 2019ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த விதிமுறையின் தாக்கம் இப்போதுதான் தெரிய ஆரம்பித்துள்ளது. விவசாய நிலமாகவுள்ள ஓரிடத்தின் வழிகாட்டி மதிப்பின்படி, 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புக்கு தொகையைச் செலுத்திவிட்டு, 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புக்கான 10 சதவீத இடமான ஆயிரம் சதுர மீட்டர் இடத்தை மனையிடமாக மாற்றி, சந்தை விலைக்கு விற்க இந்த விதிமுறை வழிவகுத்துள்ளது. மக்களுக்கு பயன் அளிக்க வேண்டிய இடத்தை விற்க அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது?'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ''நகரங்கள் கான்கிரீட் காடாகிவிடக்கூடாது; ஒவ்வொரு பகுதியிலும் ஒரு காற்றோட்டப் பகுதி (Lung Space) இருக்க வேண்டுமென்றே 10 சதவிகித இடத்தை ஒதுக்குமாறு 1971 ஆம் ஆண்டில் போட்ட சட்டத்தை, இப்போதுள்ள நகரமயமாதலுக்கேற்ப 15 சதவிகிமாக அதிகரித்திருக்க வேண்டும்."

"மாறாக அதைக் குறைத்து, இறுதியில் அந்த இடமே வேண்டாம்; பணம் போதுமென்று சொல்வது எதிர்கால சந்ததிக்குச் செய்யும் துரோகம். இதை ரத்து செய்ய இறுதி வரை போராடுவோம்.'' என்றார்.

அலமு நகரில் 51 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் கட்டப்பட்ட கட்டடம் நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டு, அங்கு தற்போது செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Thiyagarajan

படக்குறிப்பு, அலமு நகரில் 51 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் கட்டப்பட்ட கட்டடம் நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டு, அங்கு தற்போது செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று தியாகராஜன் கூறுகிறார்

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல தகவல்களை வாங்கியுள்ள தியாகராஜன், அந்த இடங்களுக்கு அரசுக்குச் செலுத்தும் மதிப்பை விட 10 மடங்கு அதிக விலைக்கு அந்த இடத்தை புரமோட்டர்கள் விற்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.

தேனியில் 4 சென்ட் இடத்துக்கு வழிகாட்டி மதிப்பாக 1500 ரூபாய் மட்டுமே, அரசுக்குச் செலுத்திவிட்டு, அதே இடம் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டதற்கான ஆவணத்தை அவர் காண்பித்தார்.

பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான வழக்குகளில் வாதாடிவரும் வழக்கறிஞர் மகேஷ் பிபிசி தமிழிடம் பேசிய போது, ''அரசிடம் பணம் இருந்தால், நகரங்களில் மக்கள் சுவாசிப்பதற்கான திறந்தவெளி இடம் கிடைத்து விடுமா? பொது ஒதுக்கீட்டு இடம் வேண்டாம் என்பது நகர ஊரமைப்புச்சட்டம், மாநகராட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாகவே அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது நகரங்களில் சூழலியல் பாதிப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கை.'' என்று வழக்கறிஞர் மகேஷ் கூறுகிறார்.

கதிர்மதியோன்
படக்குறிப்பு, பொது ஒதுக்கீட்டு இடங்களை ஒதுக்காமல், அரசே பணத்தை வாங்கிக் கொண்டு அவற்றை விற்பதற்கு அனுமதிப்பது சட்டப்படி தவறு என்கிறார் கதிர்மதியோன்

தமிழக அரசின் பதில் என்ன?

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறை தவறு என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இதை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அரசு தரப்பில் என்ன பதில் அளிக்கப்படும் என்பது பற்றி அமைச்சர், துறை செயலாளர் காகர்லா உஷா ஆகியோரை தொடர்பு கொண்டபோது, பதில் பெற முடியவில்லை.

''வழக்கின் விபரம் தெரிந்தபின், இதுபற்றி கலந்தாலோசித்து உயர்நீதிமன்றத்தில் பதில் சமர்ப்பிக்கப்படும். பணம் வாங்காமல் இடத்தை ஒதுக்க வேண்டுமென்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அதன்படி விதிமுறை மாற்றப்படும்.'' என்று நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசன் பிபிசி தமிழிடம் கூறினார்

மேலும், ''ஒரே இடத்தை சிறுசிறு மனைப்பிரிவுகளாகப் பிரித்து விற்பது குறித்து நிறைய புகார்கள் வந்ததால், முதல் இரண்டரை ஏக்கர் தவிர்த்து, அடுத்து வரும் விண்ணப்பத்துக்கு பணம் பெறாமல் இடத்தை ஒப்படைக்க வேண்டுமென்று ஏற்கெனவே சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. கண்டிப்பாக அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.'' என்றும் கணேசன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)